8 லட்சத்தில் தொடங்கி 2 ஆண்டில் 2.4 கோடி மதிப்பு வணிகத்தை உருவாக்கிய பெண் தொழில்முனைவர்!
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த உப்மா கபூர், தனியாகவே தனது குழந்தையை வளர்த்து வருகிறார். 2017-ம் ஆண்டு தொடங்கிய ஆர்கானிக் அழகுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 2.4 கோடி ரூபாய்.
பல்வேறு இடங்களில் அன்றாடம் புதிய ஸ்டார்ட் அப் முளைத்து வருவதைப் பார்க்கலாம். ஆனால் தொழில்முனைவு என்பது கடினமான தனிமையான பயணம். நிதி ஏற்பாடு, வாடிக்கையாளர்களை நிர்ணயிப்பது, மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது போன்றவற்றைக் கையாள வலிமை அவசியம்.
2017-ம் ஆண்டு உப்மா கபூர், குருகிராமைச் சேர்ந்த Teal & Terra என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவில் இயற்கை அழகு சாதனப் பொருட்கள் துறையில் செயல்படவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த முயற்சியைத் தொடங்கினார். இதற்காக இவரது சொந்த சேமிப்பில் இருந்தும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து கடனாக பெற்றுக்கொண்டும் 8 லட்ச ரூபாய் சேகரித்து நிறுவனம் தொடங்கினார்.
2018-ம் ஆண்டு இந்நிறுவனம் 2.4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. தொடர்ந்து சுயநிதியில் இயங்கி வருகிறது.
உப்மா தனது பயணத்தில் பல சவால்களைக் கடந்த பிறகே இன்றைய நிலையை எட்டியுள்ளார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த 40 வயதான இவர், தனியாகவே தனது குழந்தையை வளர்த்து வருகிறார். தனது பாதையில் சந்தித்த தடங்கல்கள் ஒவ்வொன்றையும் மன உறுதியுடன் எதிர்கொண்டுள்ளார்.
உப்மா ஹெர்ஸ்டோரி உடனான உரையாடலில் தனது பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
ஆரம்ப நாட்கள்
இவரது குழந்தைப் பருவம் மகிழ்ச்சி நிறைந்ததாகவே இருந்தது. ஆனால் ஒரு விபத்தில் பெற்றோரை இழந்தபோது அவரது வாழ்க்கையே நிலைகுலைந்து போனது. 12 வயதான உப்மாவை அவரது அக்காவும் மாமாவும் வளர்த்துள்ளனர்.
”மகிழ்ச்சி நிறைந்த என் உலகம் திடீரென்று ஒரு மிகப்பெரிய வெற்றிடமாக மாறியது. அந்த வயதில் அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. என் சம வயதுடைய குழந்தைகள் தங்களது பெற்றோருடன் இருக்கும்போது என் நிலையை கண்டு வருந்துவேன்,” என்றார்.
ஆனால் காலம் செல்லச் செல்ல வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டும் என்றும் தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அந்த இலக்கை எட்ட முனைப்புடன் பணியாற்றவேண்டும் என்பதையும் உணர்ந்தார். அவரது பெற்றோர் உயிரிழந்தது மிகப்பெரிய இழப்பாக இருப்பினும் அந்தச் சூழலே அவரை சுயாதீனமாக செயல்படவைத்தது.
நிதிப்பிரிவில் எம்பிஏ முடித்த உப்மா 15 ஆண்டுகள் கார்ப்பரேட் பணியில் இருந்தார். இவரது மகன் கபீர் பிறந்தபோது பணியை விட்டு விலகினார். கபீருக்கு நான்கு வயதிருக்கும்போது சில தனிப்பட்ட காரணங்களால் திருமண பந்தத்தில் இருந்து விலகவேண்டிய சூழல் ஏற்பட்டது. சுமார் ஆறாண்டுகள் வணிகம் மற்றும் மனிதவளப் பிரிவில் தனிப்பட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இறுதியில் 2017-ம் ஆண்டு Teal & Terra தொடங்க தீர்மானித்தார்.
உப்மா தனது மகன் எப்போதும் மிகப்பெரிய ஆதரவாகவும் உந்துதலாகவும் இருப்பதாகத் தெரிவிக்கிறார். கபீரைத் தனிமையில் விட்டுச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டாலும் அவரைப் பெருமைப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளார்.
“கபீர் வளர்வதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளித்தது. அவரது நலனில் எப்போதும் கவனம் செலுத்தியதால் அவரது தேவைகளைப் புரிந்துகொண்டு அவர் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தேன். அதேநேரம் நான் மட்டுமே குழந்தையை வளர்ப்பதால் என்னுடைய பொறுப்புகள் முறையாக நிறைவேற்றப் படுவதையும் உறுதிசெய்ய வேண்டியிருந்தது. அதிர்ஷ்ட்டவசமாக கபீர் சிறு வயதிலேயே சூழலை சிறப்பாக புரிந்துகொண்டு எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். நாங்கள் பரஸ்பரம் தூய்மையான அன்பைப் பகிர்ந்துகொள்கிறோம்,” என்றார்.
ஆர்கானிக் அழகுச் சாதனப் பொருட்கள் பிரிவு
Teal & Terra ஆர்கானிக் அழகுச் சாதன பொருட்கள் சார்ந்த ஸ்டார்ட் அப். இந்த ஸ்டார்ட் அப் ரசாயனங்களை முற்றிலுமாகத் தவிர்த்து இயற்கையான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள அழகு சாதனப் பொருட்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் பொருட்களுக்கு இணையாக இல்லை என்பதை உணர்ந்தபோதே நிறுவனத்தைத் தொடங்கத் தீர்மானித்துள்ளார்.
”அழகு சாதனப் பொருட்களின் மூலப்பொருட்கள் மாறுபடுவதைத் தெரிந்துகொண்டேன். எனவே நம்பகமான வகையில் செயல்படவும் வாடிக்கையாளர்கள் விலையுயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்ளூரிலேயெ அதற்கு சிறந்த மாற்றுப்பொருளை வழங்கவும் தீர்மானித்தேன்,” என்றார்.
Teal & Terra பயன்படுத்தும் மூலப்பொருட்கள் பஞ்ச்குலா, குருகிராம், டெல்லி போன்ற நகரங்களில் இருந்து வாங்கப்படுகிறது. தயாரிப்பின் பதம், வாசனை, தரம் போன்றவை சிறப்பாக இருக்க ஒவ்வொரு ஃபார்முலாவும் விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இவர்களின் தயாரிப்புகள் அதன் வலைதளத்திலும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற மின்வணிக தளங்களிலும் கிடைக்கிறது. இதன் விலை 900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
தனித்துவமான சூத்திரங்களைப் பயன்படுத்துவதாகவும் தயாரிப்புகளில் வெங்காய எண்ணெயைப் பயன்படுத்தும் முதல் பிராண்ட் Teal & Terra என்றும் உப்மா குறிப்பிடுகிறார். ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பயோடெக்னாலஜிஸ்ட் உதவியுடன் வெங்காய எண்ணெயிலிருந்து கிடைக்கக்கூடிய பலனையும் வாசனையையும் பாதுகாக்கும் வகையிலான ஃபார்முலாவை இவர் உருவாக்கியுள்ளார்.
அனைத்தும் பெண்களே அடங்கிய 20 பேர் கொண்ட குழு வீட்டிலிருந்தே பணிபுரிவது இந்நிறுவனத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். வரும் நாட்களில் கூடுதல் பெண்களை இணைத்துக்கொள்ள உப்மா திட்டமிட்டுள்ளார்.
”இந்தப் பெண்கள் அனைவருமே பட்டதாரிகள். இவர்களுக்கென குடும்பம் உள்ளது. இவர்கள் வெளியே சென்று பணிபுரிய விரும்புகின்றனர். ஆனால் இவர்களால் குடும்பத்தை விட்டு வெளியே பணி தேட முடியவில்லை. என்னுடைய மகன் வளரும்போது நானும் இதே நிலையை கடந்து வந்துள்ளேன் என்பதால் இந்த நோக்கத்தில் தீவிரம் காட்டுகிறேன்,” என்றார்.
ஸ்டார்ட் அப் சந்தித்த சவால்கள்
உப்மா தனது தொழில்முனைவுப் பயணத்தின் ஆரம்ப நாட்களில் இரண்டு முக்கிய சவால்களைச் சந்தித்தார். அதில் ஒன்று நிதி. ஏற்கெனவே பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வரும் துறையில் தனக்கான பாதையை அமைத்துக்கொண்டது மற்றொரு சவாலாகும்.
ஆரம்பத்தில் ஸ்டார்ட் அப் துவங்கத் தேவையான நிதியை தனியாக ஏற்பாடு செய்வதில் சிரமத்தை சந்தித்தார். அதிர்ஷ்ட்டவசமாக இவரது நண்பர்களும் குடும்பத்தினரும் இவரது உறுதியான கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து Teal & Terra தொடங்க வட்டியில்லா கடன் வழங்கினார்கள்.
அடுத்ததாக இந்தத் துறையில் இவரது முயற்சியின் வெற்றி கேள்விக்குட்படுத்தப்பட்டது. தயாரிப்புகள் அனைத்திற்கும் அதற்கே உரிய சந்தை இருக்கும் என்பதும் மிகப்பெரிய அளவில் செயல்படமுடியும் என்பதுமே இவரது நம்பிக்கையாக இருந்ததாகவும் உப்மா தெரிவிக்கிறார்.
"சந்தையில் பல்வேறு தயாரிப்புகள் இருப்பதால் மக்கள் தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது. ரசாயனங்கள் இல்லாத தயாரிப்பு என்று விளம்பரப்படுத்தும் பிராண்டுகள் மீது மக்கள் மெல்ல நம்பிக்கை இழந்து வருகின்றனர். மக்களின் உண்மையான விருப்பத்திற்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்கவே நான் இந்தச் சந்தையில் செயல்படுகிறேன். ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்திய பிறகே மக்களுக்கு அதன் மீது நம்பிக்கை வரும். Teal & Terra பெரும்பாலும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே செயல்படுகிறது,” என்றார் உப்மா.
வருங்கால திட்டம்
தற்சமயம் Teal & Terra குளிர்கால பராமரிப்பு பொருட்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் ஸ்டார்ட் அப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று 15 கோடி ரூபாய் விற்றுமுதல் எட்ட விரும்புகிறார் உப்மா.
தொடர்ந்து சவால்களை சந்தித்து அதில் சிக்கித் தவிக்கும் வளர்ந்து வரும் பெண் தொழில்முனைவோர்களுக்கு உப்மா ஆலோசனை வழங்கும் விதமாக,
”தன்னம்பிக்கை, தீவிர விருப்பம், பகுத்தறிவு ஆகியவை சரியான கலவையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். முயற்சியில் கவனமாக ஈடுபடவேண்டும். அணுகுமுறை முறையாக இருக்கவேண்டும். சரியாக கணக்கிட்டு ரிஸ்க் எடுக்கவேண்டும். கடினமாகவும் அதேசமயம் புத்திசாலித்தனமாகவும் உழைக்கவேண்டும். இவற்றை பின்பற்றினால் உங்களது இலக்கை எட்டமுடியும். ஒரேமாதிரியான சிந்தனையைக் கண்டு அஞ்சவேண்டும். மாறுபட்ட சிந்தனை அவசியம். இலக்கை நோக்கி முழுமையான ஈடுபாட்டுடன் பயணிக்கவும்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: சஷா ஆர் | தமிழில்: ஸ்ரீவித்யா