பதிப்புகளில்

திண்டுக்கல் டூ ஃபிபா: சர்வதேச கால்பந்தில் 'ரெஃப்பரி' ஆகி கோல் அடித்துள்ள முதல் தமிழச்சி!

7th Jan 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கே கிரிக்கெட் அளவிற்கு பெரிதாக ஆதரவில்லாத நிலையில், பெண்கள் கால்பந்து ஆடுவதை நீங்கள் யோசித்து பார்த்ததுண்டா? பெண்கள் எப்படி கால்பந்து விளையாடமுடியும்? என ஏளனம் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த கால்பந்து வீராங்கணை ரூபா தேவி. தனது விடாமுயற்சியால் சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராகச் செயல்பட ரூபாதேவியை ஃபிபா(FIFA) தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் தென்இந்தியாவில் இருந்து நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் அவர்.

image


புதிய ஆண்டில் ஃபிபா அளித்துள்ள பரிசால் மனமகிழ்ந்துள்ள ரூபா தேவியிடம் கலந்துரையாடியது தமிழ் யுவர்ஸ்டோரி:

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெறும் சீனியர் தேசிய அளவிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் 26 வயது ரூபா தேவியை மூன்று நாள் தொடர் முயற்சிக்குப் பின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேர்காணலைத் தொடங்கிய போது, பேச வார்த்தைகள் இல்லாமல் தடுமாறினார். 

“ஜபல்பூரில் நடந்து வரும் போட்டிக்கு நடுவராகப் பணியாற்ற வேண்டி இருந்ததால் 2015 டிசம்பர் 31ஆம்தேதி நண்பகலே ரயிலில் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். ரயில் பயணத்தில் தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டதால் 1ஆம்தேதி ஃபிபா வெளியிட்ட அறிவிப்புப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது” என்கிறார் ரூபா தேவி. 

மறுநாள் ஜபல்பூர் அடைந்த உடன் தங்குமிடம் குறித்த விவரம் கேட்க தொலைபேசியை ஆன் செய்தபோது தான் அவர்கள் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாகக் கூறினர். நானும் புத்தாண்டு பற்றி தான் கூறுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன், ஆனால் நேரில் சென்ற போது நடுவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், நான் சர்வதேசப் போட்டிக்கு நடுவராகத் தேர்வான செய்தியைக் கூறி வாழ்த்திய தருணத்தை மறக்கவே முடியாது” என்று மகிழ்ச்சிப் பொங்கக் கூறுகிறார் ரூபா.

image


வசதி வாய்ப்புகள், அதிகாரப் பின்னணி என்று எதுவுமே இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் பெண் இனத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் ரூபா தேவியின் வாழ்க்கை மற்ற பெண்களுக்கு ஒரு நல்ல படிப்பினையையே தரும். ரூபா தேவியின் தந்தை குருசாமி கூலித்தொழிலாளி என்பதால் பள்ளிப் படிப்பிற்கு அரசுப் பள்ளியை சார்ந்திருந்தார் இவர். ஆறாம் வகுப்பு முதலே கால்பந்து விளையாட்டு இந்தக் குழந்தையை அரவணைத்துக் கொண்டது.

"சின்ன வயசுல கிரவுண்டை வேடிக்கை பார்க்கப் போவேன், அப்போது பந்தை எட்டி உதைத்து உற்சாகமாக விளையாடிய மூத்த வீரர்களே எனக்கு உத்வேகம் தந்தார்கள். என்னுடைய குடும்பச் சூழலையும், ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு, கால்பந்தில் எனக்கு உத்வேகம் தந்தவர் பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ்தான்" என்கிறார் ரூபா. 

எட்டாம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான ஜுனியர் கால்பந்து போட்டிகளில் பங்கேற்ற ரூபா, 10ம் வகுப்பின் போதே தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி உள்ளார். அதைத் தொடர்ந்து கல்லூரியில் இளநிலை வேதியியல் படித்த போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார் அவர்.

ஆசிய நடுவர்

“2006 முதல் 2009 வரை என்னுடைய கல்லூரி படிப்பு போய்க்கொண்டிருந்த சமயத்திலேயே 2007ல்திண்டுக்கல் கால்பந்து கழகம் என்னை நடுவர் (REFREE) தேர்வு எழுத வைத்தது. ரெஃப்பரிக்கான 3-ம் பிரிவுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றாலும், அதைத் தொடர வேண்டும் என்ற ஆர்வம் மூன்று வருடங்கள் கழித்தே ரூபாவுக்கு வந்தது. அடுத்த நிலையான 2-ம் பிரிவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். 

2010-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடல்நலக் கல்வியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஏர்காட்டில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கால்பந்து நடுவராகும் வாய்ப்பு இவரை தேடி வந்தது. "2010ம் ஆண்டில் சில சர்ச்சைகள் காரணமாக பெண்கள் கால்பந்து போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்ட போது நடுவர் பணி என்னை இந்த விளையாட்டோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க உதவியது” என்கிறார் அவர்.

image


முதலில் இலங்கையில் நடந்த தெற்கு, மத்திய ஆசிய 14 வயதுக்கு உட்பட்டோர் சிறுமிகளுக்கான கால்பந்து போட்டியில் நடுவராகப் பணியாற்றினார். 

"ஆறு நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டித் தொடரில் முதல் போட்டிக்கே நடுவர் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமைதான்" என்கிறார். 

அந்தப் போட்டித் தொடரில் தன் திறமையை நிரூபிக்க அவர் போராடியதன் காரணமாக, அடுத்துத் தோஹாவில் நடந்த பெஸ்ட் அண்டர் 14 போட்டியிலும் நடுவர் பணியாற்றும் வாய்ப்பு ரூபாவுக்குக் கிடைத்தது.

மதிப்புமிக்க ‘பியூச்சர் ரெஃப்பரி' திட்டத்துக்காகத் தமிழகத்தில் இருந்து 2012ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் ரூபா தேவி. இதன்கீழ் ஆசியக் கால்பந்து சம்மேளனம் அவருக்குப் பயிற்சியளித்தது.

அடுத்தடுத்து அசராமல் 100 போட்டிகளுக்கும் மேல் நடுவராக பணியாற்றியதன் பயனாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தன்னை சர்வதேசப் போட்டிகளுக்கு ஃபிபாவிடம் பரிந்துரைத்ததாக சொல்கிறார் ரூபா தேவி.

சவாலான பணி

"நடுவர் பணி அவ்வளவு எளிதானதல்ல. ஏனென்றால் கால்பந்தில் வீராங்கனைகள் ஓடுவதைவிட, மிக அதிகமாக நடுவர்கள் ஓடியாக வேண்டும். அதனால் ஒவ்வொரு போட்டித் தொடருக்கு முன்னாலும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அத்துடன் களத்தில் நடுவர் செய்யும் சிறு தவறும் விளையாடுபவர்களைச் சோர்வடையச் செய்துவிடும். இதனால் விளையாடும்போது உளவியல் நெருக்கடி அதிகரித்துவிடும்" 

என்கிறார் ரூபா தேவி.

களத்தில் நடுவர் யாராக இருந்தாலும் சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் நடுவர் ஒரு பெண் என்றால் வீரர்கள் கூடுதலாக சண்டைக்கு வருகிறார்கள். நடுவராக முதலில் 2010ம் ஆண்டு போட்டிகளில் பங்கேற்ற போது சிறிது அச்சம் இருந்தது. ஒரு பெண் நீ ஏன் இந்தத் துறையை தேர்வு செய்தாய் என்று பலரும் என்னைக் கேட்டனர், ஆனால் இவற்றை எல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை என்கிறார் ரூபா தேவி மன உறுதியோடு. 

நாளாக நாளாக என்னுடைய பொறுப்பை உணர்ந்து நான் செயல்படுவதைக் கண்டு சக ஆண் நடுவர்களே முழு ஒத்துழைப்புத் தரத்துவங்கினர் என்று சொல்கிறார் அவர். பல திறமையான ஆண் விளையாட்டு வீரர்களுக்கே நடுவர் வாய்ப்பு கிடைக்காத நிலையில் எனக்கு இது கிடைத்திருப்பது பலரையும் புருவத்தை உயர்த்த செய்துள்ளது. ஆனால், எனது வாழ்க்கை ஓட்டத்தை சிறப்பாக்குவேன் என்று உறுதியோடு பேசுகிறார் ரூபாதேவி.

தமிழகத்திலிருந்து வந்திருக்கும் மற்ற வீரர்களைப்போல் எனக்கும் இந்தி மொழிப்பிரச்சனை உள்ளது. வடமாநிலங்களில் போட்டி நடைபெறும் போதும் போட்டி முடிவில் நடுவர்கள் நடுவில் நடக்கும் கலந்துரையாடலின் போதும் இந்தியில் பேசினால், அதை புரிந்துகொண்டு மறுகணமே பதிலளிப்பது சவாலாக இருந்தது. ஆனாலும் இவற்றைக்கண்டு நான் அஞ்சிவிடவில்லை அவர்கள் பேசுவதை புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதிலளித்துவிடுவேன் என்று சொல்கிறார்.

நடுவர் என்பது நிலையான பணியில்லை. அதனால், அரசுகள், அமைப்புகள் உதவ முன்வரவேண்டும். போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்ற திடீரென வெளியூர் செல்லவேண்டும் என்பதால், நிரந்தரமான பணியில் இணைத்துக்கொள்ளவும் வாய்ப்பில்லை. இதன் காரணமாகவே இரண்டு முறை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியை தொடர முடியவில்லை, ஏனெனில் மாதத்தில் 20 நாட்கள் விடுமுறை என்றால் அதற்கு வேலை கொடுக்க நிறுவனம் தயாராக இல்லை. ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு உதவ இந்த சமுதாயம் தயாராக இல்லை என்றே நான் நினைத்தேன் என்று வருத்தப்படுகிறார் ரூபா தேவி. 

ஆறுமாத கால நடுவர் பணியின் போது கிடைக்கும் சம்பாத்தியத்தைக் கொண்டு மீதமுள்ள ஆறுமாத காலத்தை ஓட்டவேண்டும் என்ற நெருக்கடி இருக்கிறது. இப்போதும் சுகாதார ஆய்வாளர் பயிற்சியை முடித்துவிட்டு அரசுப்பணிக்காக காத்திருக்கிறார் அவர்.

அடுத்த இலக்கு

"ஒரு வீராங்கனையாக விளையாடும்போது, நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற பெருமை இருக்கும். அதேநேரம், நடுவராகிவிட்டால் தொழில்முறையில் பெரிய மதிப்பிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. ஒலிம்பிக் போட்டியில் நடுவராகப் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்" 
image


என்கிறார் ரூபாதேவி. ஆனால், இந்தாண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. அடுத்த ஒலிம்பிக்கில் நடுவராகப் பணியாற்றும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.

கால்பந்தில் இந்தியா பெரியளவில் சோபிக்கமல் இருக்க என்ன காரணம்? என்று கேட்டதற்கு தன் அனுபவத்தில் இருந்தே பதிலளித்தார் ரூபா தேவி. 

"கால்பந்தில் பல பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும், இடையில் ஏற்படும் சில ஏமாற்றங்களால் அதைவிட்டு விலகி விடுகிறார்கள். வெளிநாடுகளில் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடுமையான பயிற்சி, முழுமையான ஒத்துழைப்பே அவர்களின் வெற்றிக்குக் காரணம். இந்தியாவில் இது போன்ற பயிற்சி முறைகள் அறிமுகப்படுத்தவேண்டும்". 

நமது நாட்டில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் ஆனால், அவர்களை முதன்மை வீரர்களாக மாற்ற நவீன பயிற்சிகள் தேவைப்படுகிறது என்கிறார் அவர். இது போன்ற விஷயங்கள் களையப்பட்டு, உணவு, படிப்பு, நிரந்தர வேலை ஆகியவற்றுடன் உத்வேகமும் அளித்தால், உலகக் கால்பந்து களத்தில் தமிழகப் பெண்கள் சாதிக்கும் நாள் நிச்ச்சயம் வரும் என்கிறார் ரூபாதேவி.

சிறுவயதிலிருந்து காதலித்துவரும் கால்பந்தை, திருமணத்திற்கு பிறகும் தொடர வேண்டும் என்று விரும்புகிறார் அவர். தாய், தந்தையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இழந்துவிட்ட ரூபா தேவி தற்போது சகோதரியின் அரவணைப்பில் இருக்கிறார். தன் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தால் மட்டுமே உரிய இலக்கை அடைய முடியும் என்பதற்கு அடையாளமாக மாறியுள்ள ரூபா தேவியை பெற்றதில் பெருமையடைகிறது தமிழ்நாடு.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags