பதிப்புகளில்

உத்வேக 'வெள்ளி'த்திரை | பணத்தின் மேன்மை சொல்லும் 'வானம்'!

கீட்சவன்
30th Apr 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
"என்ன வாழ்க்கைடா இது?!"

சென்னையில் நண்பர்களின் அறைகளை பகிர்ந்துகொண்டு அரசுக் கல்லூரியில் படித்து வருபவன் சிவா. அவனது முழுமையான பின்னணி இப்போதைக்கு நமக்குத் தேவையில்லை. அவனுக்கு நாளை செமஸ்டர் தேர்வு தொடங்குகிறது. இன்று இரவு புத்தகத்தைப் புரட்ட வேண்டும் என்ற யோசனை கூட இல்லாமல் தன் நண்பன் பிரவீணைப் பார்க்கச் சென்றான். இரவு 7 மணிக்குத் தொடங்கியது அரட்டை. உலக இலக்கியம் முதல் உள்ளூர் சிலிர்ப்பிலக்கியம் வரை நீண்டது பேச்சு. அப்படி இப்படி சுமார் 3 மணி நேரம் இருவரும் மொட்டை மாட்டியில் கும்மாளமாக பேசி மகிழ்ந்தனர். சிவா கிளம்பத் தயாரானான்.

"மச்சி..."

"சொல்றா..."

"ஒண்ணும் இல்லை... ஒரு டூ ஹண்ரட் ருப்பீஸ் இருக்குமாடா?"

"அதுக்கு ஏன்டா இவ்ளோ நெளியிற?" என்று சொன்னபடியே பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து தந்தான் பிரவீண்.

சிவா நன்றி சொல்லிவிட்டு சட்டென புறப்பட்டான்.

நாளை தேர்வு எழுதுவதைவிட அடுத்த இரண்டு நாட்களைக் கடத்த - போக்குவரத்து, சாப்பாட்டுக்கு காசு சேர்ப்பதுதான் முக்கியம்.

இயல்பிலேயே அதிகம் பேச விரும்பாத - பேசாத சிவா 200 ரூபாய்க்காகத்தான் தன் பண்பையே தலைகீழாக்கினான். பிரவீண் போட்ட மொக்கைகளை ரசித்து சிரிக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளானான்.

சிவா என்ற பெயர், 200 ரூபாய் என்ற தொகை, அந்தப் பணத்தின் தேவை, கடன் கேட்ட விதம் ஆகியவை வெவ்வேறாக இருக்கலாம்; ஆனால் நானோ, உங்களில் பலரோ பணத்துக்காக இதுபோன்றதொரு சுயத்தை இழக்கும் சூழலை கடந்து கொண்டிருப்போம் - கடந்து வந்திருப்போம். அப்போதெல்லாம் சொல்லிக்கொள்ளத் தோணும்...

"என்ன வாழ்க்கைடா இது?"

image


"என்ன வாழ்க்கைடா இது?"

இந்த ஒற்றைச் சிறு வாக்கியத்துக்காக மட்டும் அல்ல... ஒட்டுமொத்தமாகவே என்னை மிகவும் கவர்ந்த படங்களுள் ஒன்று 'வானம்'. தெலுங்கில் தனது இயக்கத்தில் வெளியாகி கவனம் பெற்ற 'வேதம்' படத்தை 'வானம்' ஆக தமிழுக்குத் தந்திருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.

வெவ்வேறு கிளைக்கதைகளைக் கொண்ட திரைக்கதை இறுதியில் ஒரு புள்ளியில் தொடர்புகொள்ளும் 'ஹைபர்லிங் சினிமா' வகை படம் இது. இந்திய சினிமாவில் அரிதாக கையாளப்படும் வகைகளில் இதுவும் ஒன்று. இந்த வகையை மிகச் சிறப்பாக கையாண்ட தமிழ்ப் படம் 'வானம்'.

என்னால் தவிர்க்க முடியாத படம். சமகால சமூக அரசியலை மிக நுணுக்கமாக பேசியது ஒரு பக்கம் என்றாலும், 'பணம்' பற்றி மிக அழுத்தமாக கதைகள், கதாபாத்திரங்கள் வழியாக பதிவு செய்தது தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் ஈர்த்தது. அதையொட்டி மட்டுமே இப்போது பேச விரும்புகிறேன்.

இறுதிக் காட்சி அமைப்புகளில் கொஞ்சம் சறுக்கல் முதலான பின்னடைவுகள் இருந்தாலும் அவை பெரிதாகத் தெரியாது. தேவையற்ற பாடல்கள் போன்ற வணிகத்தன்மைகள் இடம்பெற்றிருந்தாலும்கூட, இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி வணிக வெற்றி பெறவில்லை. இன்னும் கொஞ்சம் கமர்ஷியல் மேட்டர்கள் சேர்க்கப்பட்டு, அதன் மூலமாகவேனும் இந்தப் படம் பெரிய அளவிலான பார்வையாளர்களுக்குக் கொண்டு போயிருக்கலாமே என்ற மொக்கை எண்ணங்களும் உதிர்த்து உண்டு. ஏனென்றால், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அளவுக்கு பல்வேறு அரசியலை அழுத்தமாகச் சொன்ன மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று.

சினிமாவுக்கு வசனமும் மிக முக்கியம். ஆனால், எந்த இடத்திலும் அந்த வசனம் தனியாகத் துருத்திக்கொண்டிருக்கக் கூடாது. தனித்துவம் காட்டுகிறேன் என்ற பெயரில் சில வசன எழுத்தாளர்கள் ஈர்ப்பு முலாம் பூசுவது உண்டு. அது அந்த நேரத்துக்கு மட்டுமே எடுபடும். அதேவேளையில், கதைக்கும் கதாபாத்திரங்களும் கச்சிதமாக பொருந்தத்தக்க வகையில் தெறிப்பு வசனங்களைத் தெளித்து தனித்துவம் காட்டி, ஒரு படைப்புக்கு மிகச் சிறந்த முறையில் பங்கு வகிக்க முடியும் என்பதை தன் இயல்பான வசனங்கள் மூலம் இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார் எஸ்.ஞானகிரி.

ஆரண்ய காண்டம் படம் போலவே வானம் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அவ்வளவு பிடிக்கும். இதில், கொஞ்சம் அதிகமாகவே கலங்கடிக்கும். 'தெய்வம் வாழ்வது எங்கே?' என்ற கேள்விக்கு இப்படத்தின் காட்சிகள் மட்டுமல்ல... இசையும் பதில் சொல்லும்!

எல்லாவற்றையும் தாண்டி, என்னைப் பொறுத்தவரையில் பணத்தைப் பற்றியும், பணம் சார்ந்த மனித மனத்தைப் பற்றியும் மிகத் தெளிவாக சொன்னது, ஐந்து வெவ்வேறு கிளைக்கதைகளை ஒரு புள்ளியில் சேர்த்த 'வானம்'.

image


சொகுசான வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றிய குடிசைவாழ் இளைஞன் கேபிள் ராஜாவைப் போல இன்னமும் பல்லாயிரம் இளைஞர்கள் நம் சமூகத்தில் வாழ்கிறார்கள். அவர்களது எண்ணம் தவறானது அல்ல; மிகவும் சாதாரணமானது. ஆனால், அந்த சொகுசு வாழ்க்கையை இந்த ஜென்மத்திலும் அடைய முடியாத ஆதங்கம்தான் அவர்களை நெகட்டிவான எக்ஸ்ட்ரீமுக்குப் போகக் கூடிய தவறான உந்துதலைத் தந்துவிடுகிறது. கொஞ்சம் நேரடி அனுபவத்தில் உணர்ந்துவிட்டால், இயல்பு வாழ்க்கைக்கு எளிதில் திரும்பக் கூடிய அற்புத மனிதர்களான அவர்களின் பிரதிநிதிதான் கேபிள் ராஜா. எனக்குத் தெரிந்து சிம்பு எனும் அபார நடிகனை அடையாளம் காட்டிய படமும் இதுதான். அவருக்குள் ஒளிந்திருக்கும் நடிப்பாற்றலை வெளிப்படுத்த போதுமான ஸ்பேஸ் அளித்த மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று.

ந்து வட்டிக்கு பலிகடா ஆன தன் பிள்ளையை மீட்டு நல்லக் கல்வியை அளிப்பதற்காக தன் உறுப்புகள் அனைத்தையும் விற்கத் துடிக்கும் அந்த அம்மா (சரண்யா கதாபாத்திரம்) மூலம் உண்மையானதும் கட்டாயமானதுமான தேவைகளுக்காக எதையும் செய்யத் துணியும் சாமானியர்களின் பிரதிநிதி. செய்தித்தாள்களில் பதிவு ஆகாத லட்சக்கணக்கான ஏமாளிகளில் அவரும் ஒருவர். எல்லாமும் பணத்துக்காகத்தான்.

யிற்றுக்கு சோறிடும் பணத்துக்காக தொழில்முறை கும்பலிடம் சிக்கி, அங்கிருந்து மீண்டு பணம் ஈட்டும் முயற்சியில் இறங்கும் பாலியல் தொழிலாளியான அந்தப் பெண்ணும், அவரது திருநங்கைத் தோழரும் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டவர்களின் பிரதிநிதி. கேபிள் ராஜாவிடம் ஏக்கத்துடன் 'உண்மையிலேயே லவ்வா?' என்று கேட்கும் ஒற்றை கேள்வி போதும், அவர்களின் உண்மைத் தேவை என்ன என்றுச் சொல்வதற்கு.

"பணத்துக்கு விலை போறவ... எங்கிட்டயே எதிர்த்துப் பேசுறியா?" என்று கேட்கும் கையறிப்பு இன்ஸ்பெக்டரிடம்,

"ஆமா சார்... நாங்க பணத்துக்காகத்தான் விலை போறோம். எங்களுக்குப் படிப்பு இல்லை, வேலை இல்லை. உங்களுக்கு என்ன சார் குறை? படிப்பு இருக்கு, வேலை இருக்கு, போடுறதுக்கு யூனிஃபார்ம் இருக்கு... எல்லாம் இருந்தாலும் நீங்களும்தான் விலை போறீங்க, எங்கள மாதிரியே" 

- என்று அந்தப் பாலியல் தொழிலாளி (அனுஷ்கா கதாபாத்திரம்) கேட்கும் இடம் உண்மைத் தெறிப்பு.

பிறந்ததில் இருந்தே எளிதில் நிறையவே கிடைத்துவிட்டதால் பணத்தின் உண்மை அருமை தெரியாமல், அதன் பலனாக வளரும் திமிரும், பணத்தால் எல்லாமே சாத்தியமில்லை என்று உணரும்போது தரையில் நிற்கத் தொடங்குவதுமான புரிதலையும் அந்த இளம் இசைக் கலைஞன் மூலம் அழுத்தமாகக் காட்டியிருக்கும் 'வானம்'. சாலைப் பயணத்தில் சிங் ஒருவரிடம் தன் ஈகோவைக் காட்டுவார் அந்த இளைஞன் (பரத் கதாபாத்திரம்). அந்த ஈகோவால் டிராக்டரில் இருந்து தூக்கியடிக்கப்பட்டவர்களை கண்டுகொள்ளாமல் ஹாயாக செல்வார்கள் அந்த இளைஞனின் குரூப். ஆனால், காவி கும்பலிடம் சிக்கிய அந்த இளைஞனையும், அவனது தோழியையும் அதே சிங் தான் காப்பாற்றுவார்.

அதன்பின், "டிராக்டர் கவுந்தப்ப அவங்கள நாம விட்டுட்டு வந்த மாதிரியே சிங்கும் நம்மள விட்டுட்டு வந்தா என்ன ஆயிருக்கும்?" என்று அந்த தோழி கேட்பாள். அடுத்தக் காட்சியில் அவன் தன் தலையில் தண்ணீர் ஊற்றிக்கொள்வான். தன்னைத் தானே கழுவிக்கொள்வான்.

பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம். ஏழை, நடுத்தர இஸ்லாமிய குடும்பங்களின் பிரதிநிதி. அவருக்கு சமூகத்தாலும் அதிகாரத்தாலும் நேரும் கொடுமைகள்... கொஞ்சம் மாற்றி யோசிப்போம், அவர் மட்டும் பெரும் பணக்கார முஸ்லிமாக இருந்திருந்தால் அப்படியெல்லாம் அவலத்தைச் சந்தித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா? இங்குதான் கேபிள் ராஜா சொல்லும் தத்துவம் நடைமுறையில் நிஜம் ஆகிறது... "உலகத்துல இரண்டே ஜாதிதான்... ஒண்ணு ஏழை, இன்னொன்னு பணக்காரன்!"

நம் வாழ்க்கையில் பணம் வேண்டும். ஏன் வேண்டும்? அது ஏன் அவசியம்?

இத்தகைய கேள்விகளுக்கு ஒற்றைக் காட்சியில் 'வானம்' பதில் சொல்லும். திருடிய பணத்துடன் தன் கையிலும் பையிலும் இருந்த பணத்தை எடுத்துச் சேர்த்து, பதற்றத்துடன் துண்டில் கட்டும் தில்லை ராஜாவின் அந்தச் செயலும், அந்தச் செயலின் பின்னால் உள்ள உணர்தலும்தான் அது!

image


பாரதி ஆனந்த் ஒரு பத்திரிகையாளர். தன் கணவருடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அவரது ஸ்கூட்டியைப் பார்த்துவிட்டு ஒருவர் ஓடோடி வந்தார். அந்த நபர் கேரளத்தைச் சேர்ந்தவர். அவர் அருகே அவரது பெண்ணும், மனைவியும் இருந்தனர்.

"உங்க வண்டியில் பிரஸ் என்ற ஸ்டிக்கரைப் பார்த்தேன். என் பெயர் பஷீர், இவர் என் மனைவி ஷைலா, இவள் எங்கள் மகள் அம்பிலி பாத்திமா. இவளுக்காகத்தான் மருத்துவமனை வந்திருந்தோம். இவளுக்கு மிகவும் அரிதான இதய பாதிப்பு. அதன் காரணமாக நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். குறைந்தது ரூ.40 லட்சம் செலவாகும் எனச் சொல்லியிருக்கிறார்கள். மீண்டும்.. உங்கள் வண்டியில் பிரஸ் என்ற ஸ்டிக்கரைப் பார்த்தேன். அதான் உங்கள் மீடியா மூலம் ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்று வேகமாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்.

கலங்கிப்போன அந்தப் பெண் பத்திரிகையாளர் நம்பிக்கையும் ஆறுதலும் அளித்துவிட்டுப் புறப்பட்டார். தன்னால் ஆன முயற்சி செய்தார்.

அந்த அப்பாவின் முயற்சிகளால் அவ்வப்போது மலையாள ஊடகங்களில் அம்பிலி குறித்த செய்திகள் வெளியானது. நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நேரடியாக உதவினர். கிரவுட் ஃபண்டிங் மூலமும் நிதி கிடைத்தது.

ஆனால், மனிதநேயமும் மருத்துவமும் தோற்றது. அம்பிலி எனும் தேவதையை மண்ணுலகை விட்டுச் சென்றுவிட்டாள். அந்தத் தகவல் அறிந்த அந்தப் பெண் பத்திரிகையாளர் உடைந்துபோனார். அம்பிலி குடும்பத்துடனான சந்திப்பு குறித்தும், தன்னால் தனிப்பட்ட முறையில் உரிய உதவிகளைச் செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற இயலாமை குறித்தும் எழுதிய ஒரு பதிவை பிரஸ் ஸ்டிக்கரும் என்னை கலங்கவைத்த பேரழகியும்! என்ற தலைப்பில் படிக்க நேர்ந்தது.

எனக்கு இரண்டே விஷயங்கள்தான் பாதிப்பை ஏற்படுத்தின. அந்த அப்பாவின் முயற்சிகளை எண்ணிப் பார்த்தேன். தன் மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஊர் பேர் தெரியாதவர்களிடம் கூட தன் சுயம் பற்றி துளியும் கவலையின்றி, கண்கலங்கி உதவி கேட்டுத் தீர்த்த அந்த அப்பாதான் உண்மையிலேயே அப்பா. ஒரு நடத்தர குடும்பத் தலைவன், தன் இளம் பெண், மனைவியை அருகில் வைத்துக்கொண்டு முன்பின் தெரியாதவரிடம் மண்டியிடும் நிலை இருக்கிறதே... தான் ஒரு மனிதன் என்ற எண்ணத்தையே தூக்கிக் கிடாசிப் போட்ட மேன்மையானவர்களுக்குத்தான் அதைப்போன்ற அணுகுமுறை சாத்தியம். அப்படி ஒரு நிலைக்குத் தள்ளக்கூடிய வல்லமை படைத்த பொருளுக்குப் பெயர் 'பணம்'.

பொருளுதவி கோருவது மட்டுமல்ல... தன்னிடம் கோரப்படும் அத்தகைய உதவிகளை மனமிருந்தும் செய்ய முடியாத வகையில் கையில் பணம் இல்லாத நிலையும் நம் மனத்தைப் புரட்டிப்போடும் அவலச் சூழல்தான். இதற்கு மிகச் சிறந்த உதாரணம், அந்தப் பத்திரிகையாளர் பாரதி ஆனந்த்.

இதுபோன்ற நிலைகளைக் கடக்கும்போதெல்லாம் சொல்லத் தோணுவது ஒன்றே ஒன்றுதான்...

"என்ன வாழ்க்கைடா இது?!"

பின் இணைப்பு: 'வானம்' படம் பேசிய அரசியலை உள்ளடக்கிய அபாரமான விமர்சனப் பார்வை > வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்! 

உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...

முந்தைய பதிவு: உத்வேக 'வெள்ளி'த்திரை |ஃபான்றி - இது தலித் சினிமா மட்டும் அல்ல!

'ஆரண்ய காண்டம்' எனும் பெருமித சினிமாவும் தமிழக தேர்தலும்!

விடையற்ற ஒற்றை பதிலுடன் '101 கேள்விகள்'

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக