பதிப்புகளில்

பெண்களுக்கு டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொடுத்து தொழில் முனைவர் ஆன இல்லத்தரசி துர்கா!

14th Apr 2018
Add to
Shares
705
Comments
Share This
Add to
Shares
705
Comments
Share

துர்கா சந்திரசேகரன் சென்னையில் பிரபலமானவர். நீங்கள் 90-களை சேர்ந்தவராக இருந்து உங்களது சன்னி வாகனத்தில் வலம் வர உரிமம் பெற வேண்டியிருந்தாலோ அல்லது உங்களது அப்பாவின் மாருதி 800 வாகனத்தை ஓட்ட உங்களுக்கு பயிற்சி தேவைப்பட்டாலோ இவரது பயிற்சிப் பள்ளியைதான் உங்களுக்கு பலர் பரிந்துரைத்திருப்பார்கள்.

துர்கா 1995-ம் ஆண்டு பயிற்சிப் பள்ளியை அமைத்தது முதல் பல தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பரபரப்பான நகர சாலைகளில் வாகனத்தை ஓட்டிச் செல்ல நம்பிக்கை அளித்துள்ளார். இவரது இந்த முயற்சியின் மூலம் ஒரு வல்லமைமிக்க தொழிலதிபராக, பெண்களுக்கு அதிகாரமளிப்பவராக, சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துபவராக பலருக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். ஆனால் இவர் நாற்பதாண்டுகளுக்கு முன்பு சிறு நகரைச் சேர்ந்த 17 வயது பெண்ணாக திருமணமாகி பெரிய சென்னை மாநகரில் அடியெடுத்து வைத்து குடும்பத்தை நிர்வகிக்கத் துவங்கினார்.

image


”நான் கும்பகோணத்தைச் சேர்ந்தவள். விளக்குகள், ரயில்கள், பெரிய கட்டிடங்கள் என சென்னை எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது,” என்று 60 வயதான துர்கா நினைவுகூர்ந்தார். 

அவரது பதின்பருவத்திலேயே அவருக்கு முதல் குழந்தை பிறந்தது. 22 வயதிருக்கையில் இரண்டாவது குழந்தை பிறந்தது. துர்காவின் கணவர் பணி நிமித்தமாக கல்ஃப் பகுதிக்குச் சென்றார். இளம் வயதிலேயே தன் இரு குழந்தைகளையும் புகுந்த வீட்டினரையும் தனியாகவே பராமரித்தார். அத்துடன் வீடு கட்டும் பணியை மேற்பார்வையிட வேண்டிய பணியையும் மேற்கொண்டார்.

”அந்த காலகட்டத்தில் எனக்கு சைக்கிள் ஓட்டக்கூடத் தெரியாது,” என்று கூறி சிரித்தார். அவரது கணவர் இந்தியா திரும்பியதும் முதலில் அவருக்கு ஒரு டிவிஎஸ் சாம்ப் வாங்கிக் கொடுத்தார். அதை ஓட்டவும் கற்றுக்கொடுத்தார். முழுமையாக பயிற்சியெடுக்க 20 நாட்கள் எடுத்துக்கொண்டார். அப்போதுதிருந்து அவரது பயணம் துவங்கியது.

பயிற்சியளித்தல்

வீட்டுத் தேவைக்காக வாகனத்தில் வெளியே சென்று திரும்பும்போது அவருக்கு இடப்பட்டிருந்த திரை விலகி சுதந்திரமாக பறப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அவர் அறியாமலேயே அருகாமையில் இருந்த பெண்களுக்கு உந்துதலளித்துள்ளார். 

“எனக்குத் தெரிந்த மூன்று பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். ஆனால் அவர்கள் தங்களது கணவரிடம் கற்றுக்கொள்ள பயந்தனர். நான் பயிற்சி அளிப்பதாக அவர்களிடம் கூறினேன். விரைவிலேயே அவர்களும் வாகனம் ஓட்டினர்,” என்றார் துர்கா. 

இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் இரு சக்கர வாகனம் ஓட்டுவது அரிதல்ல. ஆனால் 80-களில் பெண்கள் ஒரு தாயாக தங்களது கடமைகளை நிறைவேற்றி இல்லத்தரசியாக இருக்கவேண்டும் என்கிற கண்ணோட்டமே இருந்தது. அப்போது பணிக்குச் சென்ற ஒரு சிலரும் பொது போக்குவரத்தையே சார்ந்திருந்தனர். எனவே துர்கா பயிற்சியளிக்க முன்வந்ததும் இந்தப் பெண்கள் சுதந்திரமாக பயணம் செய்ய வாய்ப்புகள் உருவானது.

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த உலகில் துர்கா ஆரம்ப கட்டத்தில் அதிக சவால்களை சந்தித்தார். “நான் ஓரிரு பெண்களுக்கு சாலையில் பயிற்சியளிப்பதைக் கண்டு ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த சிலர் நான் உரிமம் இன்றி நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வாகனம் ஓட்ட பயிற்சியளிப்பதாக சாலை போக்குவரத்து அலுவலகத்தில் புகாரளித்தனர். நான் இதையே எனக்கு சாதகமாக மாற்றி என்னுடைய வணிகத்தை நிறுவினேன்,” என்றார். 

மேலும் 1995-ம் ஆண்டு தனது ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு உரிமம் பெற்றார். ஆனால் அவரது பயிற்சிப் பள்ளி தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. மக்களுக்கு கார் ஓட்டுவதற்கு பயிற்சியளிக்கும் பள்ளியாக இல்லாமல் பெருமளவு பெண்களுக்கு இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் பள்ளியாக அமைக்கப்பட்டது. இது குறித்து துர்கா நினைவுகூறுகையில்,

உலகிலேயே இருசக்கர வாகனத்தை ஓட்ட கற்றுக்கொடுக்கும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை அமைத்த முதல் நபர் நான் தான். உள்ளூர் செய்தித்தாளில் நாங்கள் வெளியிட்ட விளம்பரம் இன்றும் என் நினைவில் உள்ளது. ‘வாகனம் ஓட்டுவது ஆண்களுக்கே உரித்தான செயல் அல்ல’ என்கிற வாசகத்தை விளம்பரப்படுத்தினோம். முதல் வாரத்தில் எனக்கு 60 அழைப்புகள் வந்தன.

துர்கா தனது நகையை அடமானம் வைத்து பயிற்சி நிறுவனத்திற்கான முதல் ’சன்னி’ வாகனத்தை வாங்கினார். அவர் முதன் முதலில் பயிற்சியளித்த பெண் சாலைவிபத்தில் கணவரை இழந்தவர். அவருக்கு பயிற்சியளித்ததால் சாலைப் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது,” என்றார்.

image


பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சியை அவர்களது கணவர் பொறுமையாக அளிப்பதில்லை. எனவே விரைவிலேயே அவர்களிடம் பயிற்சி பெற பயந்த பெண்கள் துர்கா ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஒன்று கூடினர். 

“இதுவரை எங்களிடம் சுமார் 50 ஆயிரம் பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டு சுதந்திரம் பெற்றுள்ளனர்,” என்றார் துர்கா.

1999-ம் ஆண்டு பயிற்சியளிக்கத் துவங்கி ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட அளவில் பயிற்சியளித்து பிரபலமானார்.

தடைகளைத் தகர்த்தல்

கடுமையாக நடந்துகொள்ளும் அதிகாரிகள், பொறுமையற்ற பயிற்சியாளர்கள், பயிற்சியாளர் ஓட்டுநர் உரிமம் மற்றும் நிரந்தர ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் கையெழுத்திடும் அதிகாரியின் கவனத்தை ஈர்க்க திரண்டிருக்கும் மக்கள் என காணப்படும் உள்ளூர் சாலை போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஒருவர் தனது வாகனத்திற்கு உரிமம் வாங்குவது கடினமாக செயலாகும். சென்னை சாலை போக்குவரத்து அலுவலகத்தில் உரிமம் பெற நீங்கள் துர்காவை அணுகினால் உங்கள் பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வுகிடைக்கும். 

”இந்த நிலையை எட்டுவது எளிதான செயலாக இருக்கவில்லை. நான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சுய தொழிலைத் துவங்கி மற்ற பெண்களும் பெரிதாக கனவு காண கற்றுக்கொடுத்ததால் பலர் என் வளர்ச்சிப் பாதையில் குறுக்கிட்டனர். என்னுடைய ஊழியரேகூட என்னை ஏமாற்றினார். சிறப்பாக பயிற்சிபெற்ற பயிற்சியாளார்கள் எந்த தகவலும் இன்றி பயிற்சிப் பள்ளியை விட்டு வெளியேறினர். ஆனால் அனைத்து கடினமான சூழல்களை துணிந்து எதிர்கொண்டேன்,” என்று துர்கா விவரித்தார்.

இந்த மன உறுதியையும் தைரியத்தையும் தனது ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு வரும் பல பெண்கள் மனதிலும் விதைத்தார். இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்வதால் பல பெண்கள் கூடுதல் திறன் ஒன்றைப் பெறுவதுடன் தங்களது கனவையும் சுயசார்பையும் எளிதாக அடைய முடியும்.

”நம் மனதில் உறுதி இருந்தால் நம்மாலும் அனைத்தையும் சாதிக்கமுடியும் என்பதை இந்தப் பெண்களுக்கு காட்டுவதற்காக ஆண்கள் ஓட்டும் மோட்டார்சைக்கிளை ஓட்டி அவர்களுக்கு நம்பிக்கை அளித்தேன்,” என்றார் துர்கா.

33 வயதான சாந்தி ஒரு இல்லத்தரசி. இவர் தற்போது தனது வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதில்லை. “துர்கா ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கற்றுக்கொண்டது எனக்கு அதிக நம்பிக்கை அளித்தது. எனது மகளும் இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டு சுயசார்புடன் இருக்க விரும்புகிறேன்,” என்றார் சாந்தி.

அவரது வெற்றிப் பாதையில் மறக்கமுடியாத விஷயம் குறித்து துர்காவிடம் கேட்கையில், 

“பல பெண்கள் மனதில் சுதந்திர உணர்வையும் லட்சியத்தையும் விதைத்ததே என்னால் மறக்கமுடியாத விஷயமாகும். அவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டதும் தங்களது கனவை நனவாக்கும் முயற்சியையும் மேற்கொண்டனர்,” என்றார் துர்கா.

ஆங்கில கட்டுரையாளர் : எவிலின் ரத்னகுமார் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
705
Comments
Share This
Add to
Shares
705
Comments
Share
Report an issue
Authors

Related Tags