பதிப்புகளில்

கடலின் ஒரு துளியாலும் மாற்றம் சாத்தியமே: ஏஞ்சலின் எழுச்சி கதை

YS TEAM TAMIL
30th Nov 2015
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
"மும்பையின் பார்க்சைட் என்று அழைக்கப்படும் விக்ரோலியில் பிறந்து வளர்ந்தேன். அது, 20 - 30 அபார்ட்மென்ட்கள் கொண்ட ஒரு சிறிய குடியிருப்பு சமூகம். எளிமைக்கும் மதிப்புக்கும் மட்டுமே என் பெற்றோர் முக்கியத்துவம் அளித்து என்னை வளர்த்தனர். எனவேதான், எல்லாவற்றையும் விட எனக்கு மதிப்பு ஒன்றின் மீதுதான் இருந்து. இதனால், ஒவ்வொரு நாளுமே என் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்புக் கல்வியை மிகச் சிறப்பாக அளிக்க முடிகிறது. எது சரி, எது தவறு என்பதை மாணவர்களையே பகுத்தறிய வைத்து, அதற்கேற்றபடி செயல்படுவதற்கான திறமையை வளர்ப்பதில் முன்னுரிமை தருகிறேன்."

பொருளாதாரத்தின் பின்தங்கிய சமூகம் ஒன்றில் வளர்ந்த ஏஞ்சலின் டயஸ், அதிகப்படியான திறமைகள் இருந்தும் தரமான கல்வி இல்லாததால் ஏற்படும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டுள்ளார். இந்த இடைவெளியை சரிசெய்வதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் எப்போதும் இருந்தது. தன் எண்ணத்தை செயல்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்புகள் குறித்து பகிர்கிறார் ஏஞ்சலின். "நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, அதாவது 2009 வாக்கில் மும்பையில் டி.எஃப்.ஐ. செயல்படத் தொடங்கியது. (டி.எஃப்.ஐ. என்பது ஏழைக் குழந்தைகள் நலனில் அக்கறை மிகுந்த 'டீச் ஃபார் இந்தியா' (Teach For India) கல்வி இயக்கத்தின் சுருக்கப் பெயர்.) ஒருநாள் கல்லூரியில் இருந்து திரும்பிய என் அண்ணன் கையில் ஒரு நாளிதழ் விளம்பரத்தை எடுத்து வந்து காண்பித்தார். அப்போதே ஃபெல்லோஷிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விருப்பம் வந்தது. பின்னர், சில ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பை சேவியர் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது சக மாணவர்கள் கேரியர், ஃபெல்லோஷிப் குறித்து அதிகம் விவாதிக்கத் தொடங்கினர். என்னுடைய தருணம் நெருங்குவதை உணர்ந்தேன்."

2015-க்கு வேகமாக காலத்தை ஓட்டிப் பார்த்தோமானால், ஏஞ்சலினுக்கு இப்போது வயது 22. டீச் ஃபார் இந்தியா (டி.எஃப்.ஐ.) திட்ட மேலாளராக வலம் வருகிறார். தனது ஃபெல்லோஷிப் முடிந்த கையோடு டி.எஃப்.ஐ. குழுவோடு இணைந்த ஏஞ்சலின் கல்வியில் மாற்றம் நோக்கி பயணித்து வருகிறார். அவருடனான நேர்காணல் விவரம்:

உங்கள் ஃபெல்லோஷிப் பற்றி சொல்லுங்கள்.

ஏஞ்சலின்: ஃபெல்லோஷிப் மூலம் எனக்குக் கிடைத்த நன்மைகள் ஏராளம். முதலில் இன்ஸ்டிட்யூட் சென்றோம். பின்னர் நகங்கள், பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளுக்கு பணிக்கப்பட்டோம். ஐந்து வாரங்களுக்கு முழுவீச்சில் பயிற்சிகள் அளிக்கப்பட்ட அந்த இன்ஸ்டிட்யூட்டில் காலடி எடுத்து வைத்தேன். இரண்டு நாள் பயிற்சி முடிந்த நிலையில்தான், எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். பள்ளி வகுப்பறையில்தான் எனக்கு மிகப் பெரிய சாவல் காத்திருந்தது.

எனக்கு முன்னால் ஃபெல்லோஷிப் செய்தவருடன் அதிக நெருக்கமாக இருந்ததால், அந்த அளவுக்கு என் வகுப்பு மாணவர்களுடன் என்னால் பழக முடியாமல் போனது. நான் நடத்தும் பாடங்களை கவனிக்க வைப்பதற்கு கடுமையாக முயற்சி செய்ய வேண்டியதாயிற்று. என்னிடம் சரியான திட்டமிடல் இல்லாததால், ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பிறகு கண்ணீர்விடுவேன். அரையாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியானது. என் வகுப்பு மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. என்னால் நூறு சதவீதம் முழுமையாக செயல்பட முடியாத சூழலிலும், என் மாணவர்கள் தங்கள் உழைப்பால் சாதித்ததைக் கண்டு வியந்தேன். நான் திருப்திகரமாக செயல்படாதபோதே இவர்கள் இப்படி அசத்துகிறார்கள் என்றால், நான் தினமும் 120 சதவீதம் செயல்பட்டால், எந்த மாதிரியான விளைவு கிடைத்திடும் என்று சிந்தித்தேன். உத்வேகம் பல மடங்கு ஆனது.

வெளியில் இருந்து பார்க்கும்போது டி.எஃப்.ஐ. எப்படி இருந்தது? அதுவே அதில் ஒருவராக அங்கம் வகித்த பின்னர் எப்படிப்பட்ட வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

ஏஞ்சலின்: மக்கள் வெளியில் இருந்து மேலோட்டமாகப் பார்ககும்போது, இதை ஒற்றை நபரின் இயக்கமாகவே கருதுகிறார்கள். இது டிஎஃப்ஐ-யின் பிரச்சினை மட்டுமல்ல; ஒட்டுமொத்த கல்வி நிலையின் தன்மையைக் காட்டுகிறது. கல்வியில் சமஉரிமை என்ற நிலையை எட்டுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு சிலர் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கிட முடியாது; ஆனால், ஒவ்வொருவரும் கைகோக்கும் பட்சத்தில் எந்த மாற்றமும் சாத்தியம்தான். எனினும், தன்னம்பிக்கையை இழப்பது என்ற கேள்விக்கே இடமில்லை.

நான் விண்ணப்பித்த நேரத்தில், இந்த ஃபெல்லோஷிப் மூலம் பின்னாளில் பொருளாதார ரீதியில் பலன் பெற வாய்ப்பு உள்ளது என்று கருத்துகளைத் தெளித்தனர். நானும் அந்த மாதிரியான நோக்கத்தில்தான் செயல்படுகிறேன் என்று சிலர் கருதினர். ஆனால், எல்லாமே தலைகீழ். நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பணம் என்பது எனக்கு ஒரு பொருட்டே அல்ல. அதற்கேற்றாற்போல் வெளிப்படையானதும் நேர்மையானதுமான தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது; என் பணிகள் குறித்த சரியான மதிப்பீடுகளைப் பெற முடிந்தது; சுய மதிப்பீடு செய்து தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ளவும் முடிந்தது.

image


உங்கள் ஃபெல்லோஷிப்பை முடித்தவுடன் டி.எஃப்.ஐ.-யில் திட்ட மேலாளராக சேர்ந்தீர்கள். உங்களுடைய முடிவை உங்களது குடும்பத்தினரும், நண்பர்களும் எப்படிப் பார்த்தார்கள்?

ஏஞ்சலின்: டி.எஃப்.ஐ. ஃபெல்லோ ஆவது என்ற முடிவை ஆதரித்த என் குடும்பத்தினரும் நண்பர்களும், அங்கு திட்ட மேலாளராக சேரும் முடிவையும் ஆதரித்தனர். மேல் படிப்பு திட்டம் குறித்தும் என்னிடம் பலர் கேட்பதுண்டு. ஆனால், என் வகுப்பறையின் 36 குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி அறிந்ததும் அவர்கள் எதுவும் கேட்பதில்லை. தன் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி நிலையில் என் மூலம் மாற்றம் ஏற்படுவதை அவர்கள் நேரடியாகவே பார்த்தனர். அப்படி ஒரு சிறுவன் இஷ்ரத் என் வகுப்பு மாணவன். அருகில் இருந்து வரும் அந்தச் சிறுவன், அடிப்படைக் கல்வி வாசம் அறியாத நிலையில் இருந்து ஆறாம் வகுப்பு அளவுக்கு மேம்பட்டதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது, திட்ட மேலாளராக 16 ஃபெல்லோக்களை நிர்வகிக்கிறேன். இதன் மூலம் 640 குழந்தைகளின் தரமான கல்விக்கு மறைமுகமாக தாக்கத்தை உருவாக்குகிறேன். இது சற்றே கடினமான பணிதான், ஆனாலும் நிறைவானது.

உங்கள் நண்பர்களைப் போல கவர்ச்சிகர வாழ்க்கை, கைநிறைய சம்பளம் முதலானவற்றை தவறவிடுவதாக நினைக்கவில்லையா?

ஏஞ்சலின்: இல்லை. கவர்ச்சிகரமான வாழ்க்கை என்றழைக்கப்படும் அந்த முறையை நான் கண்டுகொள்வதே இல்லை. ஏனெனில், எனக்கு எது நேர்மை என்று படுகிறதோ அதைத் தயங்காமல் பின்பற்றுகிறேன். அதுபோன்ற ஆடம்பர வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளும் விருப்பம் கூட என்னிடம் இல்லை. என் பெற்றோர் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் எனக்கு அவர்கள் எளிமையான வாழ்க்கையைச் சொல்லித் தந்திருக்கிறார்கள். இந்த பூமியில் எனக்கு மகிழ்ச்சி தரும் இடங்கள் என்று நான் தேடிப் பார்த்தால், அவை என் வீடு, சமூகம், என் மாணவர்களாகத்தான் இருக்கும்.

மாணவர்களைப் பற்றியும், அவர்கள் கடந்து வரும் கடினமான சூழல்கள் பற்றியும் சொல்லுங்களேன். அவர்கள் தங்கள் தனிப்பட்ட விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வார்களா?

ஏஞ்சலின்: என் பிள்ளைகள்தான் எனக்கு நண்பர்கள். தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே வந்து என்னிடம் சொல்ல அவர்கள் தயங்குவதில்லை. தங்களது பிரச்சினையைக் கேட்டு சரியான தீர்வுக்கு வழிவகுப்பது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியும். என்னிடம் ஆர்வத்துடன் நிறைய விஷயங்களைப் பகிர்வார்கள். நான் கூறும் கருத்துகளை ஏற்று, அதன்படி உடனே நடக்கத் தொடங்கிவிடுவார்கள். அந்தச் சின்னஞ்சிறு மனிதர்கள் என்னிடம் பழகும் விதத்தை ஒருபோதும் மறக்க முடியாது. சமூகம், வகுப்பறை மற்றும் எல்லாவிதமான விவகாரங்கள் குறித்தும் தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ கலந்துரையாடுவதும் வழக்கம். என் மாணவர்கள் ஒவ்வொரு அசைவிலும் மன உறுதியை வெளிக்காட்டுவார்கள்.

உதாரணமாக, என் வகுப்பு மாணவன் அதுல் தன் கருப்பான தேகத்தால் சிறு வயது முதல் கேளிக்கு ஆளானவன். அதுவே குழந்தைப் பருவத்தில் இருந்து மிகப் பெரிய கோபக்காரனாக அவனை மாற்றியது. தன் சக மாணவர்களை கண்டபடி அடிக்கத் தொடங்கினான். அவனை கவனிக்க வைப்பதும் சவாலாக இருந்தது. பிறகு, தனியாகவும் வகுப்பறையிலும் இனவாதம் குறித்து நிறைய விவாதித்தோம். சக மாணவர்களுடன் உண்மையாகப் பேசிப் பழகும்படி அதுலிடம் சொன்னேன். அதுலும் நான் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தான். காட்சிகள் மாறின. அதுல் இயல்பு நிலைக்குத் திரும்பினான். இப்போது, எந்த இக்கட்டான சூழலிலும் அங்கு நகைச்சுவையை அரங்கேற்றி அலப்பறை செய்வதில் வல்லவனாகவே அதுல் மாறிவிட்டான்.

அதேபோல் மற்றொரு மாணவன் ஆமீர். வகுப்பறையில் திடீரென கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிடுவான். அவனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்றே ஆரம்பத்தில் தெரியவில்லை. பிறகு, விசாரித்தபோதுதான் உண்மை தெரிந்தது. அவன் வீட்டுக்கு அருகே பழகும் சகாக்கள் அனைவரின் மூலமாகவே இந்தக் கெட்டவார்த்தைப் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆமீரிடம் தனிப்பட்ட முறையில் நிறைய பேசினேன். கெட்டவார்த்தையைப் பேசுவதால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை பற்றி பேசினேன். அதில் இருந்து மீள்வது குறித்து எடுத்துச் சொன்னேன். எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டுக்கொண்ட ஆமீர் இப்போது அனைத்து கெட்டவார்த்தைகளையும் மறந்துவிட்டான்.

ஒரு பெண் என்ற முறையில், பெண் குழந்தைகள் மீது டி.எஃப்.ஐ. தாக்கத்தை உருவாக்குகிறது என்று நினைக்கிறீர்களா? உங்கள் உள்ளத்துக்கு நெருக்கமான சூழலை உணர்ந்திருக்கிறீர்களா?

ஏஞ்சலின்: பாலின பாகுபாடின்றி அனைத்து குழந்தைகள் மீதும் டி.எஃப்.ஐ. தாக்கத்தை உருவாக்கி வருகிறது. என் வகுப்பறையில் 18 சிறுவர்களும், 18 சிறுமிகளும் இருந்தனர். இந்த விகிதாச்சாரம் மட்டுமல்ல; பாலின சமத்துவத்துக்கான சூழலைத் தக்கவைத்ததே நம்பிக்கையை வலுப்படுத்தியது. வகுப்பறை விவாதங்கள் மூலம் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணரச் செய்கிறோம். குறிப்பாக, பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பெற்றோர்கள் மூலம் வலியுறுத்தி விழிப்புணர்வூட்டுகிறோம்.

இதுவரை நீங்கள் கற்றுக்கொண்டவற்றில் மிகப் பெரிதெனக் கருதுபவை?

ஏஞ்சலின்: எது எப்படி நடந்தாலும் நம்பிக்கையைக் கைவிடக் கூடாது என்பதைக் கற்றேன். என் மாணவர்களை நம்புகிறேன்; என்னை நம்புகிறேன்; எங்கள் இலக்கை நம்புகிறேன்... ஆம், நிச்சயம் ஒருநாள் எல்லா குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வி கிடைத்திடும். முடியாது என்பது எதுவும் கிடையாது. எல்லா பிரச்சினைகளுக்குமே அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அன்பு ஆகியவற்றின் மூலம் தீர்வு காண முடியும். நான் பொறுமைசாலியாக மாறுவதற்கும் இந்த அனுபவங்களே துணைபுரிந்தன. ஒவ்வொரு குழந்தையிடமும் கவனம் செலுத்தி, அவர்களை மேம்படுத்த இந்தப் பொறுமைதான் கைகொடுத்து வருகிறது.

எனது மாணவர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய வெற்றி. என் வகுப்புப் பிள்ளைகளில் ஒருவரான இஞ்சாமூல், ஸ்காலர்ஷிப் தேர்வில் மிகச் சிறப்பான வெற்றி பெற்று, அவரது பட்டப் படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் நிலையை எட்டியது என்னை உத்வேகத்தின் உச்சிக்கே கொண்டு சேர்த்தது.

நம் கல்வி அமைப்பில் உள்ள முக்கியப் பிரச்சினைகளாக எதைப் பார்க்கிறீர்கள்?

ஏஞ்சலின்: ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைத்திடவே கல்வி உரிமைச் சட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், அது முறையாக நடைமுறைப்படுத்துவது இல்லை என்பது தெளிவு. அதேபோல், எழுத்தறிவு விகிதத்தை உயர்த்துவதற்காக சரியாக படிக்க இயலாத மாணவர்களைத் தேர்ச்சியளிக்கும் உத்தியும் மோசமானது. குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியாத அளவுக்கு ஆசிரியர்களிடம் நிர்வாக ரீதியிலான பணிகளைச் சுமக்கவைப்பதும் சரியல்ல. இதுபோன்ற காரணங்களால், ஒன்பதாம் வகுப்புக்குள் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வேகுவாக கூடுகிறது. ஆரம்பக் கல்வி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

நம் கல்வி அமைப்பில் பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானது. என் ஃபெல்லோஷிப்பின்போது இரண்டு மாத காலம் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்ற அனுபவம் உள்ளது. பி.ஏ. படித்த 20 வயது பெண்ணை நம்பி குழந்தையை அனுப்பலாமா என்று பெற்றோர்களிடையே சந்தேகம் எழும். தன் பிள்ளைகளின் கல்வி மீது பெற்றோருக்கு அக்கறை இல்லாத பட்சத்தில், குழந்தைகளுக்குப் படிப்பு மீது ஆர்வம் ஏற்படாது என்பதை உணர்ந்தேன். முதலில் பெற்றோருக்கு என் மீது நம்பிக்கையை உருவாக்கினேன். அதன்மூலம் பிள்ளைகளுக்கு நம்பிக்கை பரவியது. என் வகுப்பு எப்போதும் நிரம்பி வழிந்தது.

உங்கள் எதிர்காலத் திட்டம்...

ஏஞ்சலின்: இப்போதைக்கு டி.எஃப்.ஐ. திட்ட மேலாளராக அனைத்தையும் சரியாகச் செய்வது ஒன்றிலேயே முழு கவனத்தைச் செலுத்தி வருகிறேன். இந்தப் பணியில் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. நானே தனியாக ஒரு பள்ளியை நிறுவ வேண்டும் என்று நினைத்த காலமும் உண்டு. ஆனால், இப்போது பள்ளிகள் நிறையவே இருப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே, சரியான டீச்சிங் பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி, கற்பித்தலில் சிறந்த முறையை பின்பற்ற வழிவகுப்பதே விருப்பமாக இருக்கிறது. உணவு மீது ஆர்வம் மிகுதி என்ற வகையில், மதிய உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு சைவத்துடன் அசைவ உணவு வகைகளையும் தருவது குறித்து சிந்திக்கிறேன்.

நம்மில் எத்தனை பேர் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறோம்? ஏறத்தாழ எல்லாருமேதான். ஆனால், சமூக மாற்றத்தை நிகழ்த்திட நம்மில் எத்தனை பேர் முன்வருகிறோம்? நம்மில் சிலர் தான். நம்மில் எத்தனை பேர் நேர்மறை சிந்தனையுடன் பிரச்சினைகளை அணுகி இலக்கை அடைவதற்காக தொடர்ந்து பயணிக்கிறோம்? நம்மில் அரிதாக மிகச் சிலர் தான். அந்த அரிதான மிகச் சிலரில் ஒருவர் ஏஞ்சலின். தன் கனவுக்காகவும், மாற்றத்துக்காகவும் செயலாற்றும் இவர், தன் மாணவர்களின் வெற்றியையே தனதாகக் கொண்டாடுகிறார்.

தன் கல்விச் சேவையின் நோக்கம் குறித்து ஏஞ்சலின் உதிர்த்த முத்துக்கள் இவை...

'நம் சமூகத்துக்குள் கல்வி சார்ந்த இடைவெளிக்கு பாலம் அமைக்கும் கனவைக் கொண்டுள்ளேன்; மக்கள் தங்கள் உரிமையைப் பெற்றிட வழிவகுக்க வேண்டும். அமைப்பு ரீதியில் படிப்படியாக மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக, கல்விக் கொள்கைகளை முழுமையாகப் படித்து வருகிறேன். நான் மிகப் பெரிய அலையாக இருக்க விரும்பவில்லை; கடலில் ஒரு துளியாக இருந்தாலும், என்னால் மாற்றத்தில் பங்கு வகித்து, அதைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது எனக்குத் தெரியும்.'

ஆக்கம்: ஸ்னிக்தா சின்ஹா | தமிழில்: கீட்சவன்

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக