பதிப்புகளில்

சென்னை எண்ணெய் கசிவு சம்பவம் நமக்கு மீண்டும் உணர்த்தியது என்ன?

4th Feb 2017
Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share

எம்.டி. பி.டபிள்யூ மேப்பிள் (M.T. BW MAPLE) மற்றும் எம்.டி. டாண் காஞ்சீபுரம் (M.T. DAWN KANCHIPURAM) என்ற பெயர்கள் உடைய இரு கப்பல்கள் 2017 ஜனவரி 28ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்துக்கு வெளியே கடந்து செல்லும் போது மோதிக் கொண்டன. ஆனால் இது பற்றிய தகவலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவே அரசிற்கு ஐந்து நாட்கள் ஆனது. 32813 டன்கள் அளவுக்கு POL எடுத்துச் சென்ற எம்.டி. டாண் காஞ்சீபுரம் என்ற கப்பலில் சேதம் ஏற்பட்டதால் அதிலிருந்த எண்ணெய்க் கடலில் கசியத் தொடங்கியது.

image


கடந்த ஒரு வாரமாக கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய், கடல் பரப்பில் பரவி, சென்னை மெரினா கடற்கரை வரை அடைந்தது. இதைப்பற்றிய செய்தி பரவியதில் இருந்தே தன்னார்வலர்கள் பலர் கடலில் கலந்துள்ள எண்ணெயால் ஏற்பட்டுள்ள சேறு போன்ற குவியல்களை தங்களால் முடிந்தவரை சுத்தப்படுத்தி வந்தனர். பலரும் தங்களின் வெறுங்கைகள் கொண்டு இந்த சேற்றை அப்புறப்படுத்தியதால் அவர்களின் தோலுக்கு ஏதுனும் பிரச்சனை வந்துவிடுமென பலரும் கவலை தெரிவித்தனர். மேலும் அப்புறப்படுத்திய சேற்றை வாளிகளில் அள்ளி லாரிகள் மூலம் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றியது, நம் நாட்டில் இதுபோன்ற அவசர ஆபத்தான நிலைகளில் உள்ள கட்டமைப்பு, உபகரணம் மற்றும் சரியான இயந்திரங்கள் இல்லாததை வெளிச்சம் போட்டு காட்டியது. 

இது போன்ற எண்ணெய் கசிவு சம்பவங்கள் அரிது என்றாலும், அதன் தாக்கத்தை உடனடியாக அறியாமல் இருந்தது நமது அரசுகளின் அறியாமையையும், கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. சுமார் 30 கிமி தூரம் வரை பரவிய இந்த எண்ணெய் கசிவு கடலோர உயிரினங்களின் உயிருக்கும் ஆபத்தாக மாறியுள்ளது. குறிப்பாக முட்டை இட நம் கடலோரத்துக்கு வரும் ஆமைகள் பல எண்ணெய் சேற்றில் சிக்கி கரையை அடைய முடியாமல் தவித்த காட்சிகளும் மனதை பாதித்தது. அவற்றையும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதுகாப்பாக கரையில் கொண்டு விட்டது பாராட்டுக்குரியது. ஆனால் இத்தனை விளைவுகளை ஏற்படுத்தியுள்ள எண்ணெய் கசிவை அடுத்து தமிழக அரசும், மத்திய அரசும் மெத்தனம் காட்டியதாகவே பலரும் நோக்குகின்றனர். 

இதனிடையே மத்திய அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையின் படி, கசிவு எண்ணெய் பரவாமல் தடுப்பதற்கு உடனடியாக காமராஜர் துறைமுக நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. சம்பவம் நடந்த தேதியில் இருந்தே துறைமுக உயர் அதிகாரிகள், நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும், இரு கப்பல்களுக்கும் தேவையான உதவிகளை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சேதமடைந்த கப்பல் ஜனவரி 30-ம் தேதி பத்திரமாக இழுத்துவரப்பட்டு காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர். அந்தக் கப்பலில் இருந்த எண்ணைய் ( POL) முழுமையாக 3.2.2017 அன்று வெளியே எடுக்கப்பட்டது என்றும் மேலும் எண்ணெய்க் கசிவு ஏற்படும் ஆபத்து தொடராமல் இந்த நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பாதிப்பின் அளவு 

கடலோரக் காவல் படை அறிவித்துள்ளதுபடி, எண்ணெய் கசிவு சுமார் 32 கிமி தூரம் பரவி கிழக்கு கடற்கரைச் சாலை வரை நீண்டுள்ளது. இதுவரை 70 டன்கள் எண்ணெய் சேறு மற்றும் 44 டன்கள் என்ணெயுடன் கலந்த மணல் சேறு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 2-ஆம் தேதி மட்டும் 40 டன்கள் எண்ணெய் சேறும், 27 டன்கள் எண்ணெயுடன் கலந்து மணல் சேறு அகற்றப்பட்டதாக தெரிவித்தனர். கடலோரக் காவல் படையினர் தவிர தமிழக கடலோரப் பாதுகாப்பு படையினரும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீ மற்றும் பாதுகாப்புத் துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை, துறைமுகம், உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் தன்னார்வலர்கள், மாணவர்கள் என்று எல்லாரும் இணைந்து இந்த மாபெரும் சுத்தப்படுத்தும் பணியை ஒரு வாரமாக மேற்கொண்டனர். 

அதிகபட்ச எண்ணெய்க் கழிவு கரை ஒதுங்கியுள்ள எர்ணாவூரில், எண்ணெய்ப் படலம் பரவாமல் தடுப்பற்கு கரையோரத்தில் தடுப்புகள் வைக்கப் பட்டுள்ளன. கரையோரப் பகுதியை சுத்தம் செய்வதற்கு, கையில் எடுத்துச் செல்லும் மாசு நீக்க சாதனத்தின் உதவியுடன் 1000 -க்கும் மேற்பட்ட மக்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தேவையான சாதனங்கள் மற்றும் கருவிகளை சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் அளித்து வருகின்றன. ஆட்கள் மூலம் சுத்தம் செய்யும் பணியை தொடர்வதற்கு, போதிய அளவுக்கு மூடிய காலணிகள், கையுறைகள், வாளிகள், கோப்பைகள், கை கழுவுவதற்கான திரவங்கள் மற்றும் பேரல்கள் அளிக்கப் பட்டுள்ளன. கூடுதலாக, எண்ணெய்ப் படலத்தை அகற்றுவதற்கு 3 உறிஞ்சு கருவிகள் மற்றும் நீரில் மூழ்கி செயல்படக் கூடிய பம்ப்புகளும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. எண்ணெய்ப் படலத்தை அகற்றுவதற்கு, எண்ணெய்ப் படலம் அகற்றும் ரசாயனத்தை கடலோரக் காவல் படை தெளித்துள்ளது. TC -3 மற்றும் 2000 லிட்டர் எண்ணெய்க் கசிவு அகற்றும் (OSD) திறன் கொண்ட கடலோரக் காவல் படையின் கப்பல் ஐ.சி.ஜி.எஸ். வரத், வந்து சென்னை கலங்கரை விளக்கம் அருகே மீதியுள்ள எண்ணெய் படலத்தை நீர்த்துப் போகச் செய்து, சமன் செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். 

மெரினா, பெசண்ட்நகர் கடற்கரை, சென்னை மக்களின் பொழுதுபோக்கு இடமாகும். குழந்தைகள் முதல் இளைஞர்கள், குடும்பங்கள் வார இறுதி நாட்களில் சென்றுவருவது வழக்கம். அங்கேயும் எண்ணெய் கசிவு பரவி மாசு அடைந்துள்ளதால் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். 

image


“சுமார் 1100 பேர்கள், சுட்டெறிக்கும் வெயிலில் எண்ணெய் சேற்றை அகற்றும் பணியில் தங்களை தன்னார்வமாக ஈடுபடுத்திக்கொண்டனர். டன் கணக்கில் எண்ணெய் சேற்றையும், மணல் சேற்றையும் அப்புறப்படுத்த இவர்கள் உதவினார்கள்,” 

”தற்போது எண்ணெய் பரவல் நின்றுள்ளது. எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை எண்ணெய் படலம் இல்லை. ஆங்காங்கே மட்டுமே இருக்கிறது, அதுவும் ஓரிரு நாட்களில் சரியாகி விடும். சேற்றை அப்புறப்படுத்தும் பணி நல்ல பலனை அளித்துள்ளது,” என்று கடலோரக் காவல்படை செய்தி வெளியிட்டுள்ளது. 

சுற்றுச் சூழலுக்கு என்ன பாதிப்பு?

கடலில் கலந்துள்ள எண்ணெயை காணும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு நம் கண்களுக்கு தெரிந்தாலும் அப்படி எதுவும் இல்லை என்று மறுக்கின்றனர் அரசு அதிகாரிகள். கடல்வாழ் உயிரினங்களான மீன், நண்டு, ஆமைகள் மற்றும் இன்னும் சில சிறிய பிராணிகள் இதில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அது நீண்ட கால பாதிப்பு இல்லை என்றே தமிழக அரசு சொல்லிவருகின்றது. இருப்பினும் எண்ணெய் கசிவால் சுமார் ஒரு வாரமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லமுடியாமல் கடலோர மீனவர்கள் வருமான இன்றி தவித்து வருகின்றனர். அண்மையில் அடித்த வர்தா புயலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்குள் இந்த சம்பவம் மேலும் அவர்களை பாதித்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

சேகரிக்கப்பட்ட எண்ணெய்க் கழிவை பத்திரமாக கையாள்வதற்கு, விசேஷ உயிரி-சீராக்கல் கருவியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அளித்துள்ளது. சேகரிக்கப்பட்ட எண்ணெய்க் கழிவை இந்தியன் ஆயில் கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதலில் உயிரி - சீராக்கல் செய்வதற்கு, எண்ணூர் துறைமுகப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு டிரெய்லர்கள் மற்றும் ஆள்களுக்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்(HPCL) ஏற்பாடு செய்துள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் இதற்காக 2000 சதுர மீட்டர் அளவுக்கு ராட்சத குழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயிரி-சீராக்கும் பணி இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடட்டினால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மேற்பார்வையில் ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் செய்துமுடிக்கப்படும் என்று செய்தி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

எண்ணெய்ப் படலத்தை தொடர்ந்து கண்காணிப்பதற்கு கடலோரக் காவல் படையின் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளன. எங்கேனும் எண்ணெய்க்கசிவு திரண்டிருப்பது கண்டறியப்பட்டால், கடலோரக் காவல் படையின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ் தேவையான ஆட்களுடன், கருவிகளும் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

image


விபத்து நிகழ்ந்ததற்கான காரணங்கள் மற்றும் அது தொடர்பான காரணிகளைக் கண்டறிவதற்கு வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ், சட்டபூர்வ விசாரணைக்கு கப்பல் துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். துறைமுகத்தில் இருந்து வெளியேறாமல் இரண்டு கப்பல்களும் தடை செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக இரண்டு கப்பல்களின் உரிமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு பிரதிநிதிகளுடன் கப்பல் துறை தலைமை இயக்குநர் பேசி வருகிறார். எம்.டி. டாண் காஞ்சீபுரம் கப்பலின் P&I காப்பீட்டாளர்கள் உள்ளூர் ‘கேட்புத் தொகை மையங்களை’ திறந்து கேட்புத்தொகை நடைமுறைகளையும், கேட்புத்தொகை சார்ந்த நடவடிக்கைகளையும் செய்துவருகிறார்கள். சர்வதேச எண்ணைய் கப்பல் உரிமையாளர்கள் மாசுசார் அமைப்பு (உரிமையாளர்/P&I காப்பீட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘எண்ணை கசிவு எதிர்வினை’க்கான சர்வதேச அமைப்பு) சென்னை விரைந்துள்ளது.

அரசு சூழலை சமாளிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், முழுமையான சுத்தமாக்கல் நடவடிக்கைகள் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்று இதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

தன்னார்வலர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து இந்த சம்பவத்தில் உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டதை போன்று தற்போது தொடர் நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ள அரசும் தங்கள் பணிகளை முதலில் இருந்தே துரிதப்படுத்தி இருந்தால் நிலைமையை சீக்கரமாக கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.  

Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share
Report an issue
Authors

Related Tags