பதிப்புகளில்

அஞ்சேல் 5 | வரம் ஆகும் சாபம் - 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் [பகுதி 2]

'விக்ரம் வேதா' மூலம் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். பகிரும் அனுபவக் குறிப்புகளின் நிறைவு பகுதி.

29th Nov 2017
Add to
Shares
123
Comments
Share This
Add to
Shares
123
Comments
Share

(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)

'விக்ரம் வேதா'வின் திரைக்கதையை வாசித்தேன். கெத்தான ஸ்க்ரிப்ட். ஒருவித பயம் தொற்றியது. என் நலம் விரும்பிகள் அனைவருமே எனக்கு ஊக்கமளித்தனர். "இதுதான் உங்களோட படம். இதில் சிறப்பாகச் செய்தால் நிச்சயம் கவனத்துக்குரிய இசையமைப்பாளர் ஆகிவிடுவீர்கள்" என்றனர். ஒருவழியாக திட்டமிட்டுப் பணியாற்ற ஆரம்பித்தேன். 

image


ஒரு படத்தில் பாடல்களோ அல்லது பின்னணி இசையோ நன்றாக வருவதற்கு நாம் நேரத்தை மிகுதியாக முதலீடு செய்வது அவசியம். இயக்குநர் 'ஓகே' என்று சொன்னால்கூட நமக்கு முழு மனநிறைவு வரும் வரை மீண்டும் மீண்டும் செதுக்க வேண்டும். அல்லது, மீண்டும் முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். இதைச் செய்வதற்கு நான் ஒருபோதும் தயங்குவதே இல்லை. 'விக்ரம் வேதா' இசை வெகுவாகப் பேசப்படுவதற்கு இதுவே அடித்தளமாக அமைந்தது.

எனக்கு மிகப் பெரிய சாதகமான விஷயம் ஒன்று நடந்தது. படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன்பே என்னிடம் முழு ஸ்கிரிப்டும் தரப்பட்டது. 'விக்ரம் வேதா'வின் ஸ்கிரிப்டுக்கு இசையமைத்தேன். வழக்கமாக, ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு அளிக்கப்படும் காட்சிகளுக்குத்தான் பின்னணி இசை அமைப்போம். ஆனால், எனக்கு ஸ்கிரிப்டுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது, நம் திறமையை இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்ய உதவியது.

பொதுவாக, அனிமேஷன் படங்களுக்குத்தான் இதுபோல் ஸ்கிரிப்ட்டுக்கு இசையமைப்பது நடக்கும். தமிழ்ப் படங்களில் இப்படிச் செய்வது சற்றே அரிதான ஒன்றுதான். ஸ்கிரிப்ட்டை வாசித்து ஒவ்வொரு காட்சிக்குத் தகுந்தபடி அமைத்துக் கொடுத்த இசையை படப்பிடிப்பின்போது இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி பயன்படுத்தினர். உணர்வுபூர்வமான காட்சிகளைப் படமாக்கும் முன்னரும் பின்னரும் இசையைப் பொருத்தி சரிபார்ப்பார்கள். இது பார்வையாளர்களுக்கும் நல்ல திரை அனுபவத்தைத் தர வழிவகுத்தது.

'விக்ரம் வேதா' படக் குழுவினருடன்...

'விக்ரம் வேதா' படக் குழுவினருடன்...


ஸ்கிரிப்டை வாசித்து காட்சிகளை மனதுக்குள் உள்வாங்கி பாடல்களையும், பின்னணி இசையையும் அமைக்கும்போது முழுமையான சுதந்திரம் கிடைக்கும். அதன்மூலம் தனித்துவமாக செயல்பட்டு இசையை கச்சிதமாக இழைக்கவும் முடிந்தது.

வழக்கமாக, ஒரு படத்தின் சண்டைக் காட்சிகளில் ஆர்ப்பாட்டமான பின்னணி இசை இருக்கும். கிட்டத்தட்ட எல்லா படங்களிலுமே ஒரே மாதிரியாக இருப்பதுபோல் பார்வையாளர்களுக்குத் தோன்றும். ஆனால், 'விக்ரம் வேதா' அப்படியல்ல. ஸ்கிரிப்டில் சண்டைக்காட்சிகளை வாசிக்கிறேன். சண்டை போடும் இரு கதாபாத்திரங்களின் பின்னணியையும், அவர்கள் சண்டையிடுவதற்கான காரணத்தையும் உள்வாங்கிக் கொள்கிறேன். சண்டையிடும் இருவரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே பின்னணி இசையை அமைக்கிறேன். அதைத் திரையில் பார்க்கும்போது புது அனுபவம் கிடைக்கச் செய்கிறது. 'விக்ரம் வேதா' இடைவேளை சண்டைக்காட்சிகளில் காட்சிகளைத் தாண்டி இசையும் பார்வையாளர்களுக்குள் உட்புகுவதால் திரைமொழியின் வீரியம் கூடுவதை உணரலாம்.

இப்படியாக, ஸ்கிரிப்டை வாசித்தபடி சுமார் 70 சதவீதம் இசை அமைக்கப்பட்டது. படப்பிடிப்புக்குப் பின்னர் எஞ்சிய வேலைகள் நடந்தது. இதுதான் இசை வெற்றிபெற வழிவகுத்தது என்று நம்புகிறேன். இந்த முறையைதான் இப்போது நான் இசையமைக்கும் படங்களிலும் பின்பற்றி வருகிறேன்.

ஒரு நாவல் படிக்கிறோம். அதில், ஒரு கதாபாத்திரம் குதிரையில் விரைந்து போய்க் கொண்டிருப்பதை வாசகர் ஒருவர் கற்பனை செய்யும்போது, அதன் லெவவே வேறு மாதிரி இருக்கும். ஆனால், அதை அப்படியே காட்சிப்படுத்தும்போது அந்த வாசகர் செய்த கற்பனையை ஒத்த அனுபவம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் அதன் தன்மை குறைந்ததுதான் காணப்படும். எனவே, எழுத்து வடிவில் காட்சிகளை வாசித்துவிட்டு, அந்த உணர்வுகளுக்கு ஏற்றபடி இசையமைக்கும்போது நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இயக்குநர்களுக்கும் படப்பிடிப்பின்போது இந்த உத்தி பல வழிகளில் உறுதுணைபுரியும்.

image


'விக்ரம் வேதா'வில் நடந்தது இதுதான்: என்னிடம் ஸ்கிரிப்ட் கொடுத்தனர். கதை அருமை. நான்லீனியர் திரைக்கதை மிரட்டலாக இருந்தது. அதை வாசித்தவுடன் சில காட்சிகளுக்கான 'தீம்' இசை மனதுக்குள் ஓடின. உடனே சில உணர்வுபூர்வ காட்சிகளுக்கு இசையமைத்துத் தந்தேன். 'இது நல்லாருக்கே... இப்படியே கன்ட்டினியூ பண்ணிடுங்க' என்று சொல்லிவிட்டார்கள். எனவே, திரைக்கதைக்கு இசையமைக்கும் சுதந்திரமான வாய்ப்பு ஏற்பட்டு, அதை நிறைவாகப் பயன்படுத்தினேன்.

இப்போது என் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. ஒப்பந்தமான படங்களின் இசைக்கான வேலைகளுக்கு போதுமான இடைவெளியும் உள்ளது. இந்தப் படங்களுக்கு இசையமைக்க பேருதவியாக இருப்பது, நான் வாய்ப்புக்காக காத்திருந்த காலம்தான் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், நாம் வாய்ப்புக்காக காத்திருக்கும் காலம் என்பது சாபம் அல்ல... நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வகை செய்வதால் வாய்ப்பு வராததும், வரத் தாமதம் ஆவதும் வரமே!

இசையில் ஆர்வத்துடன் இயங்கத் தொடங்கியதற்கும், சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததற்கும் இடைபட்ட காலம்தான் என் படைப்புத் திறனுக்கு இப்போது பெரும் துணையாக இருக்கிறது. அதாவது, நான் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த மூன்றரை ஆண்டு காலம்தான் எனக்கு மிகப் பெரிய பலத்தைத் தந்திருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில், எனக்குப் பிடித்த படங்களின் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் எடுத்துவைத்து, அவற்றுக்கு இசையமைத்து பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது எண்ணற்ற தீம்களுக்கான பின்னணி இசையையும், பாடல்களுக்கான டியூன்களையும் வசப்படுத்த முடிந்தது. அவை எல்லாவற்றையும் ஓர் இசை வங்கி போல சேமித்து வைத்திருக்கிறேன். நான் வாய்ப்பு இல்லாத காலக்கட்டத்தில், எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தவுடன் பயன்படுத்த வேண்டும் என்று மெனக்கெட்டு செய்தவை அவை. ஒரே பாடலை ஒரு மாத காலம் இழைத்தது எல்லாம் அப்போதே நடந்திருக்கிறது.

யுத்தம் வரும்போது ஆயுதங்களை தயார் செய்வது சரியான வியூகம் அல்ல; எந்நேரத்தில் தயாராக இருக்க வேண்டும். இது யுத்தத்துக்கு மட்டுமல்ல; நம் வாழ்க்கைப் போராட்டத்துக்கும் சரியாகப் பொருந்தும்.

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை காதல், அன்பு, ஊக்கம், கொண்டாட்டம், மகிழ்ச்சி என சில குறிப்பிட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையிலான பாடல்கள் மட்டுமே அதிகம் இருக்கும். எந்த மாதிரியான கதையாக இருந்தாலும், பாடல் காட்சிகள் எங்கெங்கு இடம்பெறும் என்பதை எளிதில் கணித்துவிடலாம். எனவே, ஒவ்வொரு தனிக் கதைக்காக காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. நம் டியூன் வங்கியில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் புதிது புதிதாக மெட்டமைத்து சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

என்றுமே புதிதாக இசையமைப்பதும் முடியக் கூடியதுதான் என்றாலும், நம் காத்திருப்புக் காலத்தில் அதிக நேரம் கொடுத்து அமைத்த இசையானது, புதியதை விட நிச்சயம் மேன்மையானதாக இருக்கும். அதை எடுத்துப் பயன்படுத்துவது பலம்தான்.

இசைத் துறைக்கு மட்டுமல்ல. எல்லா தொழிலுக்குமே இது பொருந்தும் என்று நம்புகிறேன். கலைத் துறையில் சற்றே கூடுதலாக பலன் தரவல்லது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஓர் இயக்குநர் ஆவதற்காக போராடி வரும் படைப்பாளி, தன் வாய்ப்புக்காக காத்திருக்கும் காலத்தில் கதைகளையும் திரைக்கதைகளையும் உருவாக்கி வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தலாம். முதல் வெற்றிக்குப் பின் குவியும் வாய்ப்புகளை பக்குவமாக எதிர்கொண்டு, தன் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள அவர் தனது கதை வங்கியைப் பயன்படுத்தலாம்.
நடிகர் விஜய் சேதுபதி, ‘புரியாத புதிர்’ இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி உடன் சாம்

நடிகர் விஜய் சேதுபதி, ‘புரியாத புதிர்’ இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி உடன் சாம்


எந்த விதமான கலை வடிவத்தில் நாம் தனிப்பட்ட முறையில் எதை அதிகம் விரும்புகிறோமோ அதுவே நம் படைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நான் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற திரையிசை மேதைகளைக் கேட்டுதான் ரசனையை மேம்படுத்திக்கொண்டேன். என் படைப்பிலும் அவர்களது தாக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால், எந்தச் சாயலும் இல்லாமல் தனித்துவம் காட்டுவதில்தான் முழு கவனமும் செலுத்தி வருகிறேன். அதில் மனநிறைவு பெற்றபடி என் திரையிசைப் பயணத்தைத் தொடர்கிறேன்.

சினிமாவுக்குள் நுழைந்தபோது, என் பெற்றோர் தங்களுக்கே உரித்தான அக்கறையுடன் கவலைப்பட்டனர். முதல் படம் வெளியானதும் ஓரளவு நம்பிக்கை பிறந்தது. இப்போது அது வெகுவாக வலுவாகியிருக்கிறது. நான் சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் என்ற திருப்தி அவர்களுக்கு.

இந்தத் தொடர் மூலமான பகிர்வின் இறுதியாக, என் இணையர் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். 2010-ல் திருமணம் செய்துகொண்டேன். ஆம், நான் சினிமாவில் தடம்பதிக்கப் போராடிய அதே காலக்கட்டம்தான். பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்தபோது, 'பேசாம வேற வேலைக்குப் போயிடுங்களேன்' என்று என்னைச் சுற்றியிருந்த பலரும் அறிவுறுத்தினர். ஆனால், 'உங்களால் முடியும். காத்திருப்போம்' என்று சொல்லால் மட்டுமல்ல; செயலாலும் அன்றும் இன்றும் என்றும் உறுதுணையாக இருக்கிறார் என் மனைவி.

முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 4 | காத்திருக்கப் பழகு! - 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் [பகுதி 1]

அஞ்சேல் தொடரும்...

Add to
Shares
123
Comments
Share This
Add to
Shares
123
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக