பதிப்புகளில்

படிப்பை பாதியில் விட்ட விவசாயி மகன், ஒரு டெக் மில்லினியரான வெற்றி கதை!

வறுமை சிலரை வீழ்த்தி விடுகிறது. ஆனால், தன்னம்பிக்கையும் விடாமுயற்சி கொண்டோர் வறுமையை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டுகின்றனர். மிக இளம் வயதிலேயே இதைத் தன் வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கார்ப்பரேட்360 நி றுவனத்தை உருவாக்கி நடத்திவரும் வருண் சந்திரன்.

tamil selvan
30th Sep 2015
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

“நான் சொல்ல விரும்புவது இதைத்தான்: நம் வாழ்க்கையை வடிவமைப்பவர்கள் சிறந்த ஆசிரியர்கள் மட்டுமல்ல. சில நேரங்களில் சிறந்த ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலையும் நம் வாழ்க்கையை செதுக்க உதவுகிறது. புறக்கணிக்கப்படுவது கூட புகழப்படுவதற்கு இணையாக நல்லதாக இருக்க முடியும்.” ஜூலியா ராபர்ட்ஸ்.

வருண் சந்திரனுக்கு வாழ்க்கை தான் மிகச்சிறந்த ஆசிரியராக இருந்து வருகிறது. பிழைத்திருக்க வேண்டிய அவசியமே அவருக்கான மிகப்பெரிய உத்வேகமாக இருந்து கொண்டிருக்கிறது.

image


சிங்கப்பூரை மையமாகக் கொண்டு உலகமெங்கும் தன் சிறகை விரித்துக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தும் மில்லீனியர் ஆக வளர்ந்திருக்கிறார் வருண் சந்திரன். தனது உணவுத் தேவைக்கே கஷ்டப்பட்ட ஒருவர் உலக அரங்கில் கால்பதிக்கும் நிறுவனத்தை உருவாக்கும் அளவுக்கு உயர்வது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயமல்ல. ஆனால், அது சாத்தியம் என்பதை வருண் மெய்ப்பித்துக் காட்டிவிட்டார்.

தனது வறுமை நிலை குறித்தோ, சாதாரண பின்னணி குறித்தோ கவலைப்பட்டுக் கொண்டிருக்காத, தாழ்வு மனப்பான்மை இல்லாத, ஆனால் உலக அரங்கில் சாதிக்க வேண்டுமென்ற துணிவுடன் இருக்கும் இளைய இந்தியாவின் அளப்பறிய ஆற்றல்களை அறிந்துகொள்ள இவரின் கதையை படியுங்கள்.

“கேரளத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமமான படம் (padam) தான் என் சொந்த ஊர். என் தந்தை ஒரு விவசாயி. அதனால், தந்தையின் தினசரி வேலைகளில் உதவுவது என கடின உழைப்பை சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டேன். எங்களுக்கு சாப்பிடுவதற்கு நல்ல உணவுக் கூட கிடைக்காத நிலையில், மிக மிகக் குறைவான அடிப்படை வசதிகளுடனேயே நாங்கள் வாழ வேண்டியிருந்தது. வாழவும் பிழைத்திருக்கவும் உண்டான அவசியமே எனது குழந்தைப் பருவத்தை வரையறுத்தது. நான் மேலும் மேலும் சிறப்பாக செயல்பட இது என்னை உந்தியது. உழைப்பின் மதிப்பை நான் கற்றுக்கொண்டேன்,” என்கிறார் இன்று நான்கு கண்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனமான கார்ப்பரேட் 360 (Corporate 360)-இன் நிறுவனரான 2 வயது வருண் சந்திரன்.

image


கேரளத்தில் ஒரு ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்ததால், நல்ல நிலையை அடைய இவர் போராட வேண்டியிருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அவரின் பெற்றோர், தங்கள் மகனுக்கு நல்ல கல்வியை அளித்திட வேண்டுமென்று விரும்பினர். கிராமத்துக்கு அருகிலிருந்த பத்தனபுரம் என்ற சிறிய டவுனில் இருந்த பள்ளியில் வருண் சேர்க்கப்பட்டார். கடினமான உடலுழைப்பானது அவரது உடலை உறுதியாக்கியிருந்தது. விளையாட்டுகளில் சிறந்து விளங்க அது முக்கிய காரணமாக அமைந்தது. விரைவிலேயே, தனது பள்ளியான செயிண்ட் ஸ்டீஃபன் உயர்நிலைப் பள்ளிக்காக பதக்கங்களை வெல்லத் தொடங்கினார்.

பத்தாம் வகுப்பு முடித்த போது, இவரது கால்பந்து திறமைக்காக கேரள மாநில அரசு இவருக்கு படிப்பு உதவித்தொகை வழங்கியது. “அந்த உதவித்தொகை மட்டும் கிடைக்காதிருந்தால், நான் படிப்பை அப்போதே விட்டிருப்பேன்”. கேரளாவின் சிறந்த இளம் கால்பந்து வீரராக தங்கப்பதக்கதை வென்றதன் மூலம், தனது கால்பந்து வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முத்திரையை பதித்தார். கேரள இளைஞர் கால்பந்து அணி, கேரள பல்கலைக்கழக கால்பந்து அணிகளுக்கு கேப்டனாக தலைமைத் தாங்கினார்.

கால்பந்து களத்தில் அவருக்கு காயமேற்பட்ட போது, தன் வாழ்க்கையிலேயே பெரிய ரிஸ்க் எடுக்க அவர் தீர்மானித்தார்: கால்பந்தில் இருந்தும், கல்லூரியிலிருந்தும் விலகி, வேலைத் தேடி பெங்களூருவுக்கு செல்ல முடிவு செய்தார்.

ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை.

வீட்டில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. குடும்பத்தின் ஏழ்மை நிலையைப் போக்க, ஏதாவது சம்பாதித்துக் கொடுத்தே ஆகவேண்டிய சூழல். “என் பாட்டி தன் கையிலிருந்த தங்க வளையலை கழட்டிக் கொடுத்து, எங்காவது சென்று வேலைத் தேடிக்கொள்ள சொன்னார். நானும் உடனே என் பெட்டிப் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பிவிட்டேன்.” தன்னால் எப்போதும் மறக்கவே முடியாத அந்த கடந்தகாலச் சம்பவத்தை நினைவுகூர்கிறார் வருண்.

படம் கிராமம்

படம் கிராமம்


2002ல் சிறிய பையுடனும் கொஞ்சம் நம்பிக்கையுடனும் பெங்களூருவுக்கு போய் சேர்ந்தார். அங்குள்ள இண்டர்நெட் கஃபேகள் மூலம் அனைத்து வகையான தொழில்நுட்ப வேலைகள் மற்றும் தொழில்முனைவுகள் பற்றி கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தீராத ஆர்வத்தால் உந்தப்பட்ட அவர், சிறப்பாக ஆங்கிலம் பேசும் திறமையின் அவசியத்தையும் உணர்ந்தார். இதற்காக ஒரு ஆங்கில அகராதி வங்கினார். ஷிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர் போன்றோரின் நாவல்களை படிப்பதில் வெகுநேரம் பொது நூலகங்களில் செலவிட்டார். தன் ஆங்கில அறிவையும் உச்சரிப்பையும் செழுமைப்படுத்திக்கொள்ள சி.என்.என். தொலைக்காட்சியை பார்ப்பார்.

“நிறைய புத்தகங்கள் படித்ததன் மூலம், என் கிராமத்துக்கு வெளியே இருந்த முழு உலகத்தை அறிந்துகொண்டேன்.” என்கிறார் வருண். தெரிந்துகொள்ள வேண்டுமென்ற தீராத வேட்கை அப்படிபட்டதாக இருந்தது. வெறும் புனைகதைகள் படிப்பதுடன் அவர் திருப்தியடையவில்லை. புதினமல்லாத பல்வேறு துறைகள் பற்றிய புத்தகங்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. தொழில்முனைவு உலகத்தை நோக்கி அவரது கண்களை திருப்பியதுடன் அவருக்கு வழிகாட்டியாகவும் அவை இருந்தன.

“என்னுடைய பள்ளி நாட்களில் இருந்தே இந்தியாவின் பிரபல கால்பந்து வீரரான ஐ.எம்.விஜயன் எனது ஆதர்ச நாயகனாக, எனக்கு உத்வேகமூட்டுபவராக இருந்தார். எனக்கு கடவுள் போன்றவர் அவர். தெருக்களில் வாழ்வது முதல் சோடா, வேர்க்கடலை விற்றது என மிக மிக அடிமட்ட நிலையில் இருந்து, இந்தியாவின் மிகச்சிறந்த கால்பந்து வீரராக அவர் உயர்ந்தார். “மிகக் கடினமானச் சூழல்களில் இருந்து அவ்வளவு பெரிய சாதனையாளராக அவரால் உயர முடிந்ததெனில், என்னாலும் உயர முடியும்” என்ற எண்ணம் எனக்குள் எப்போதுமே இருந்ததை நான் நினைவுகூர்கிறேன்.” என்கிறார் வருண்.

”பெங்களூருவில் வேலை செய்தபடி, சைபர் கஃபேகளில் இண்டெர்நெட் பற்றிக் கற்றுக்கொண்டே, ஒரு புரொக்ராமராக நான் என்னை உருவாக்கிக் கொண்டேன். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதில் எனக்கு நம்பிக்கையிருந்தது. இணையத்தின் மூலம் கட்டற்ற தகவல்கள் கிடைக்கும் நிலையில், உங்களால் எதையும் கற்றுக்கொள்ள முடியும். நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால் எல்லாமே கிடைக்கும்”

இந்த உந்துச் சக்தியுடன் அவர் பெங்களூருவில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தார். பின்னர், தானே சிங்கப்பூரில் ஒரு வேலையும் தேடிக்கொண்டு 2008ல் சிங்கப்பூருக்கு பயணமானார். “வாய்ப்புகளை பொறுத்தவரையில் என் கண்களை திறந்தது சிங்கப்பூர்தான்” என்று வெளிப்படையாக கூறுகிறார். புதிய இடத்தில் தன் திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய நிலை அவருக்கு. வேலை செய்து கொண்டிருக்கும் போதே, தன் வேலையை எளிதாக்கக்கூடிய ஒரு மென்பொருள் கோடிங்கை (coding for software tool) அவரே கண்டுபிடித்தார். அவர் செய்து கொண்டிருந்த அந்த வேலையின் மதிப்பை அவரது சகபணியாளர்கள் விரைவிலேயே உணர்ந்து கொண்டனர். அதுதான் அவரது சொந்த நிறுவனமான கார்ப்பரேட்360 (corporate360- C360) பிறக்கக் காரணமாக அமைந்தது. “எங்கு பார்த்தாலும் மக்கள் பிக் டேட்டா (big data) பற்றி பேசுவதைக் கேட்ட போது என்னை நான் இப்படி கேட்டுக் கொண்டேன்; நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், அதிக விற்பனைக்கும் உதவும் வகையில் எப்படி அனைத்துத் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்?”

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதுமையான விற்பனை நுண்ணறிவுத் தகவல்களை அளிக்கும் மென்பொருளை (sales intelligence software) அறிமுகப்படுத்தியது இவரது நிறுவனம். உலகின் மிகப்பெரிய ஐ.டி.நிறுவனங்கள் முதல் புதிதாக தொடங்கப்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரை சி 360 வாடிக்கையாளர்களில் அடக்கம். “சந்தை செயல்பாடுகளை ஆராய்வதற்கான முன்கணிக்கும் பகுப்பாய்வு (predictive analytics) மற்றும் பிக் டேட்டா பற்றி நிறைய நிறுவனங்கள் பேசுகின்றன. ஆனால், அவை வெவ்வேறு தொழில்துறைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டவை அல்ல. அவர்கள் பயன்படுத்தும் ஆல்கரிதம்(algorithm) முறையானது, பரிமாற்றத் தகவல்கள் மற்றும் இணைய நடத்தை(web behavior) இரண்டையும் கடைந்து எடுக்கப்படும் தகவல்கள் மூலம் பொதுவான தகவல் குறிகளை (generic data indicators) அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை மட்டுமே.” என்று கூறும் வருண், “சரியான மக்களிடம், சரியான நேரத்தில், சரியான செய்திகள் மூலம் உயர்ந்த இலக்கு நோக்கிய விற்பனை வாய்ப்பை உருவாக்கும் வகையில், வாடிக்கையாளருக்கு பொருத்தமான தொழில்துறை ரீதியான விற்பனைத் தகவல்களை நாங்கள் அளிக்கிறோம்.” என்று விளக்கம் அளிக்கிறார் வருண்.

சி 360ன் முதன்மையான ப்ராடக்ட் ஆன ‘டெக் சேல்ஸ்க்ளவுட் (Tech SalesCloud)’ மென்பொருள், பிக் டேட்டா(Big Data), பேட்டர்ன்கள்(Patterns), முன்கணிப்பு பகுப்பாய்வு முறைகள்(predictive Analytics), போட்டித்தொடர்பான நுண்ணறிவு(competitive Intelligence), தொடர்புகள் நுண்ணறிவு (Contact Intelligence), வலைதள பகுப்பாய்வு (Web Analysis) மற்றும் ஐ.டி. ஆய்வு இவற்றின் மூலமாக விரிவான மார்க்கெட்டிங் கேம்பெய்ன் டேட்டா சேவையை ஐ.டி. மார்க்கெட்டர்கள் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழு உறுப்பினர்கள்

குழு உறுப்பினர்கள்


“சி.ஆர்.எம். எனப்படும் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை மற்றும் மார்க்கெட்டிங் ஆடோமேஷன் டூல்களில் நிறுவனங்கள் பெரும் முதலீடுகள் செய்கின்றன. ஆனால், சரியான டேட்டா செட்களை(Data Sets) அளிக்கும்போது மட்டுமே இந்த டூல்கள் செயல்திறனுடன் சிறப்பாக செயல்பட முடியும். இந்தத் தேவையை நிறைவு செய்யும் வகையில், உங்கள் முதலீட்டு ஆதாயம் (Return on Investments - ROI), அதிகப்பட்சமாக இருக்கும் வகையில், மிக மிகத் தரமான விற்பனை நுண்ணறிவுத் தகவல்களை மார்க்கெட்டிங் டூல்களுக்கு அளித்து அவற்றின் செயல்திறனை கூட்டுவதற்கு எங்கள் சேல்ஸ்க்ளவுட் ப்ளாட்ஃபார்ம் உதவுகிறது.” என்று கூறும் அவர், “ஐ.டி.கம்பெனிகள் தங்கள் இலக்கு வாடிக்கையாளர் தளத்தில் தொடர்ந்து நடக்கும் மாற்றங்களை கண்காணிக்க முடியாமல் போராடுவதையும், அதற்காக அவர்களின் மார்க்கெட்டிங் பட்ஜெட்டில் கணிசமான அளவு முதலீட்டு ஆதாயம் குறைவாக அளிக்கும் லிஸ்ட் பர்சேஸ்களில் செலவிடப்படுவதையும் நாங்கள் உணர்ந்தோம். ஆகவே, இந்த பிரச்னைக்கு தீர்வுகாண முடிவெடுத்தோம். இதற்காக தொழில்நுட்ப சந்தையாளர்களுக்காக முதல் முறையாக ‘டேட்டாவை ஒரு சேவை’ ஆக அறிமுகம் செய்தோம். இந்த சேல்ஸ்க்ளவுட் ஐ.டி.மார்க்கெட்டிங் டேட்டா ப்ளாட்ஃபார்மானது, ‘ரியல் டைம் டேட்டா ரீஃப்ரெஷ்’ மற்றும் பராமரிப்பு சேவையுடன் கூடிய சந்தா மாதிரியில் (சப்ஸ்க்ரிப்ஷன் மாடல்) கிடைக்கிறது.” என்று மேலும் தெரிவிக்கிறார்.

தற்போது மூன்று வயதாகும் இந்த நிறுவனம் கடந்த ஆண்டு தான் மில்லியன் டாலர் இலக்கைக் கடந்தது. இப்போது பெரிய எதிர்காலத் திட்டங்கள் இருக்கின்றன. 2015க்குள் 5 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதும், குழுவினரின் எண்ணிக்கையை 30 ஆக வளர்ப்பதும், டேட்டா செட்களை விரிவாக்குவதுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கிளைகள்தொடங்குவதும் இலக்கு. “இந்தத் துறையில் உள்ள சில பெரிய நிறுவனங்கள், பெரிய தொகைக்கு எங்களை வாங்க அணுகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், எங்களின் விருப்பம் அதுவல்ல. நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதை மிகவும் நேசிக்கிறோம். எங்கள் கனவை அடைவதில் தீர்மானமாக இருக்கிறோம்.

தனது சொந்த ஊரான கேரளத்திலுள்ள பத்தனபுரத்தில் ஒரு தனிக்கிளை அலுவலகத்தையும் வருண் திறந்திருக்கிறார். “என் சொந்த ஊரிலுள்ள மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டுமென்று விரும்புகிறேன். நம் ஊரில் பஞ்சம் வாய்ப்புகளுக்குத்தான், திறமைகளுக்கல்ல. இப்படி என்னைப் போல சாதிக்கக்கூடிய பலர் இங்கு இருக்கலாம். அவர்களை தேடிச் செல்கிறேன். மிகவும் பெருமைப்படத்தக்க, விசுவாசமிக்க குழுவை நாங்கள் கட்டமைத்திருக்கிறோம்.” என்கிறார்.

வாழ்க்கையை ஒரு முழு சுற்று சுற்றிவிட்ட வருண், தான் கற்றுக்கொண்டவற்றை பகிர்ந்துகொள்கிறார்: “தெரிந்துகொள்ளும் ஆர்வம், விடாமுயற்சி இவை இருந்தால் போதும், எல்லாமே சாத்தியமாகும். இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஆனால், நேர்மறையாக நம்பிக்கையுடன் இருப்பதற்கு நாம் தினசரி கற்றுக்கொண்டாக வேண்டும்”.

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக