பதிப்புகளில்

'கைகளால் எழுதும் பழக்கத்தை அழியவிடக்கூடாது'- பாதுகாக்கப் போராடும் கேட்கும் குறைபாடுள்ள கிருத்திகா!

24th Apr 2016
Add to
Shares
278
Comments
Share This
Add to
Shares
278
Comments
Share

நான் சிட்டுக்குருவிகளைப்பற்றி படித்தது நினைவிருக்கிறது. ஒரு காலத்தில் இந்திய கிராமப் பகுதிகளில் நகரங்களிலும் பறந்து திரிந்துகொண்டிருந்த இந்த இனம் இப்போது பார்ப்பதற்கே அரியதாகிவிட்டது. புலியைப் போலவோ அல்லது பாண்டாவைப்போலவோ அல்லாமல் சத்தமில்லாமல் யாருக்கும் தெரியாமல் இந்த கிரகத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது. கிருத்திகா ராமகிருஷ்ணன் ஒரு விஷயத்தை என்னிடம் குறிப்பிட்டபோது இதே போன்ற வருத்தம்தான் என்னுள் ஏற்பட்டது. கைகளால் எழுதும் பழக்கமும் எதிர்காலத்தில் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார்.

ஏற்கெனவே ஃபவுன்டென் பேனா என்பது பள்ளிக்குச்செல்லும் இன்றைய மாணவர்களுக்கு தெரியாத ஒன்றாகிவிட்டது. கைகளால் எழுதுவது என்பது கூட இப்படித்தான் ஆகிவிடுமா? கைகளால் எழுதும் எழுத்துக்களை பழைமைவாய்ந்த வரலாற்று சிற்பம் போல அருங்காட்சியகங்களில்தான் பார்க்கமுடியுமோ? ஒருவேளை 23 வயது கிருத்திகா போன்றவர்கள் இப்படிப்பட்ட முயற்சி எடுக்காவிட்டால் அப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது.

image


கிருத்திகா அவரது தம்பி கௌஸ்துப்புடன் சேர்ந்து 'Wrilax' எனும் ஸ்டார்ட் அப்பை நிறுவியுள்ளார். இது கைகளால் எழுதுவதை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்டது. Wrilax என்பது Write to Relax. ஸ்மார்ட்ஃபோன்ஸ், லேப்டாப்ஸ், இன்டெர்னெட் போன்றவற்றிலிருந்து ஒதுங்கி, பேனாவினால் ஏதாவது எழுதவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு சில நிமிடங்களாவது எழுதவேண்டும். சமீபத்தில் அதன் ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளனர். வெப்சைட் உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு நேரம் எடுப்பதற்கான காரணம் அடுத்தவருக்கு உபதேசிப்பதற்கு முன் முதலில் இவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். அதனால் இந்த வெப்சைட் முற்றிலுமாக கைகளால் எழுதப்படுகிறது. கிருத்திகா காலிகிராஃபி (Calligraphy) பயிற்சி பெற்றவர். ஃப்ரீலான்சராக கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் அவுட்பாக்ஸில் பணிபுரிந்தார். இந்த நிறுவனம் முக்கிய நாட்களில் அவர்களின் அன்பானவர்களின் சார்பாக பரிசுகளைக் கொண்டு சேர்க்கும்.

ஆன்மாவின் மொழி

கிருத்திகா 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்தவர். நான்கு வயது வரை அவருக்கு பேச்சு வரவில்லை. கேட்கும் கருவி மூலமாகவும் ஸ்பீச் தெரபி மூலமாகவும்தான் அவரது பேசும் திறனை வளர்த்துக்கொண்டார். கோயமுத்தூரைச் சேர்ந்த கிருத்திகா புது டெல்லியில் வளர்ந்தார். சில வருடங்களுக்கு முன் நான்கு பேர் கொண்ட அவர்களது குடும்பம் கொல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்தது. அனைத்தையும் எதிர்த்து போராடும் குணம் படைத்த கிருத்திகா தன் பேச்சுத்திறனை மெருகேற்ற கல்லூரியில் நடைபெற்ற “மக்கள் மத்தியில் பேசும் பயிற்சி”யில் பங்கேற்றார். “பலர் பல அறிவுரைகளை வழங்கினார்கள். கேட்கும் கருவியை உபயோகிக்கச் சொன்னார்கள். சிறப்புப் பள்ளிக்கு செல்லச்சொன்னார்கள், ஆங்கிலத்தை மட்டும் கற்றுக்கொள்ளச் சொன்னார்கள்.” என்றார் கிருத்திகா.

ஆனால் அவரது பெற்றோர் கிருத்திகா ஒரே ஒரு மொழியுடன் நிறுத்தக்கூடாது என்றனர். ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி போன்ற மொழிகளுடன் அவர்களின் தாய்மொழியான தமிழும் கற்றார் கிருத்திகா. சிறப்புப் பள்ளியில் சேர்க்காமல் அவரை சாதாரண பள்ளியிலேயே படிக்கவைத்தனர். இதனால் கிருத்திகா இரட்டிப்பு உழைப்பு போடவேண்டியிருந்தது. முதல் வரிசையில் உட்கார்ந்தால் மட்டுமே அவரால் ஆசிரியர் சொல்வதை கேட்கமுடியும். Apeejay பள்ளியில் சப்போர்டிங் ஆசிரியர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் நன்றாக படித்தார். லோரெட்டோ கல்லூரியில் Education Honours பட்டம் பெற்றார். தற்போது செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் மனித வள மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ பயின்றுவருகிறார்.

image


அவரது பேச்சு குறைபாடு காரணமாகவே அவரால் எழுதுவதில் முற்றிலுமாக கவனம் செலுத்த முடிந்தது. பள்ளியிலும் கல்லூரியிலும் அவரது எழுத்துத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார். லோரெட்டோவில் Calligraphy படித்தார். மேலும் க்ராஃபோலஜியும் (Graphology) படித்தார். க்ராஃபோலஜி என்பது ஒருவரின் கையெழுத்தின் மூலம் அவரது குணாதிசயங்களை கண்டறியும் துறையாகும். இந்த அறிவியல் துறையில் கிருத்திகா சிறந்து விளங்கினார்.

கிருத்திகா கைகளால் எழுதியது மற்றும் காலிகிராஃபி

கிருத்திகா கைகளால் எழுதியது மற்றும் காலிகிராஃபி


காலிகிராஃபி என்பது நினைவாற்றலையும் பொறுமையையும் வளர்த்துக்கொள்ளும் ஒரு அழகிய கலை. இது கிட்டத்தட்ட தியானத்தைப் போன்றது. நான் எழுதும்போது எனக்கான ஒரு தனி உலகத்திற்கு சென்றுவிடுவேன்.

என்கிறார் கிருத்திகா.

பள்ளி மாணவர்கள் தங்கள் கையெழுத்தை மேம்பெடுத்த உதவுகிறார். அப்படிப்பட்ட மாற்றம் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று நம்புகிறார். கிருத்திகாவின் பல்கலைக்கழக மாரல் ஸ்டடீஸ் அசைன்மென்ட்டிற்காக கொல்கத்தாவின் The Oral school for Deaf Children பள்ளி மாணவர்களுக்கு காலிகிராஃபி சொல்லிக்கொடுத்தார். இதை சொல்லிக்கொடுக்கையில் மாணவர்களிடம் கண்ட மகிழ்ச்சியைப் பார்க்கும்போது, தான் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்று கிருத்திகா திருப்தியடைந்தார்.

எதிர்கால திட்டம்

Wrilax ப்ராண்டை பிரபலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட்டின் உதவியுடன் இசை, யோகா போல எழுதுவதையும் ஒரு பழக்கமாக்கும் முயற்சியில் இருக்கிறார். பரஸ்பர நன்மைக்காக பிரபல பேனா உற்பத்தியாளர்களின் உதவியை நாட உள்ளார். Wrilax என்ற வார்த்தை அகராதியில் ஒரு வினைச்சொல்லாக இடம்பெறவேண்டும் என்பதே அவரது கனவு.

ஆக்கம் : ஷரிகா நாயர் | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ரம்யா ஸ்ரீராம்- காண்கதைகளின் வழியே வாழ்க்கை!

கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இசை மூலம் உதவும் 'சம்பூர்ணா'

Add to
Shares
278
Comments
Share This
Add to
Shares
278
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக