சென்னை மாணவன் அர்ஜுன் உருவாக்கியுள்ள பள்ளி வாகன செயலி!

0 CLAPS
0

பொதுவாகவே பள்ளிக்குச் சென்றுள்ள பிள்ளைகள் வீடு திரும்ப தாமதமானால் ஒருவித பயம் ஏற்படும், இதுவே கடும் மழை, புயல் உள்ள நாட்களில் நடந்தால் சொல்லவேத் தேவையில்லை. இது போன்ற ஒரு தருணத்தில் தனது அம்மாவின் வேதனையை உணர்ந்த பள்ளி மாணவன் அர்ஜுன் இதற்கான தீர்வாகவே செயலி ஒன்றை உருவாக்க எண்ணினான்.

"அன்று கடும் மழை, வீட்டிற்கு தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தேன், அன்று எனது அம்மாவின் வேதனையை உணர்ந்தேன், இதுவே தீர்வை ஏற்படுத்த என்னை உந்தித் தள்ளியது" என்கிறார் அர்ஜுன். அப்பொழுது அர்ஜுன் ஏழாம் வகுப்பு மாணவன்.

சிறு வயது முதற்கொண்டே தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் தான் அர்ஜுனை செயலிகளை உருவாக்கும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. அர்ஜுனின் அதீத ஆர்வத்தைக் கண்ட அவரது அப்பா, அர்ஜுனை சிறுவயது முதலே ஊக்கப்படுத்தி வந்தார். பின்பு அர்ஜுன் வீட்டிலேயே தனது முயற்சிகளை செய்யத் துவங்கினார் என்று அர்ஜுனின் அப்பா பெருமிதம் பொங்கக் கூறினார்.

இப்படி உருவானது தான் அர்ஜுனின் முதல் மொபைல் செயலி ‘Ez School Bus Locator'. இது ட்வின் ஆப் செயலியாகும். இதன் மூலம் பள்ளி வாகனம் எங்கு உள்ளது, அந்த வாகனத்தில் தனது பிள்ளை இருக்கிறார்களா எனவும் பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடியும். பிள்ளைகளின் அடையாள அட்டையில் QR கோட் இடம் பெற்றிருக்கும். வாகனத்தில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் இந்த கோட் ஸ்கேன் செய்யப்படும். இந்த செயலியை உருவாக்க ஒரு மாத காலம் ஆனதாக கூறும் அர்ஜுன் சமூக ஊடகங்கள் மூலமாக இதை விளம்பரப்படுதியதாக கூறுகிறார். "பள்ளிகளுக்கு கொண்டு சென்றோம். அவர்கள் தேவை என்னவென்று அறிந்து அதன்படி இந்த செயலியை மேலும் மெருகேற்றினோம்" என்கிறார்.


இவரின் முதல் செயலி பல விருதுகளை வென்றுள்ளது. டிசம்பர் 2012 ஆம் ஆண்டு MIT நடத்திய 'ஆப்' போட்டியில் முதல் பரிசை கே-8 பிரிவில் இவரது கண்டுபிடிப்பு வென்றது. ஜூலை 2013 ஆம் ஆண்டு டிஜிட்டல் எம்பொவர்மண்ட் பௌண்டஷன் நடத்திய ‘mBillionth Award South Asia’ மற்றும் அக்டோபர் 2013 'குளோபல் டிஸ்கவரி அகடமி டிசைன் ஆப் காண்டஸ்டில்' இறுதித் தேர்வுக்கு இவரின் செயலி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சென்ற நவம்பர் மாதத்தில் "லொகேட்டெரா" (Locatera) என்ற பெயர் மாற்றத்துடன் வெளியிடப்பட்டது.


க்ளவுட் பிளாட்ஃபார்மில் செயல்படும் இந்த செயலி பேருந்தை ட்ராக் செய்வது மட்டுமின்றி பள்ளிகள் தங்களின் வாகன மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்கிறார் அர்ஜுன். தற்பொழுது இச்செயலி ஆண்ட்ராய்டு வசதி உள்ள கைபேசியில் மட்டும் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

ஸ்மார்ட் கைபேசி இல்லாத பெற்றோர்களும் பள்ளி வாகனம் இருக்கும் இடத்தை அறிந்துக் கொள்ள முடியும். வாகனத்தில் இருக்கும் பணியாளரின் தொலைபேசிக்கு ஒரு மிஸ்டு கால் விடுத்தால் போதுமானதே, குறுந்தகவல் மூலம் வாகனத்தின் இடம் மற்றும் பிள்ளை வாகனத்தில் உள்ளாரா என்ற தகவலும் உடனடியாக அனுப்பப்படும்.

அவர் படிக்கும் பள்ளியில் இந்தச் செயலியை அறிமுகம் படுத்தியுள்ளார். மேலும் பல பள்ளிகளுக்கு இதை கொண்டு செல்ல திட்டம் வகுத்துள்ளதாகவும் கூறும் அர்ஜுன் தற்பொழுது பத்தாம் வகுப்பில் பயில்கிறார்.

2015 ஆம் ஆண்டுக்கான 'Google India Code to Learn Contest 2015' வென்றுள்ள அர்ஜுன் இந்திய அரசின் 'ராஷ்ட்ரிய அவிஷ்கார் அபியான்' திட்டத்தின் கீழ் இதற்கான விருதை விரைவில் பெறவுள்ளார்.


'லொக்கேட்டெரா' செயலி தவிர பெண்களுக்கு பயன்படும் 'isafeguard' என்ற செயலியையும் சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் உதவிய தானார்வ தொண்டர்களுக்கான 'ivolunteer ' செயலியையும் அர்ஜுன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இளம் வயதிலயே பிள்ளைகளின் ஆர்வத்தை அறிந்து, அதற்கேற்ற ஊக்கத்தையும், ஆதரவையும் பெற்றோர்கள் அளித்தால் அர்ஜுன் போன்ற திறம் படைத்த பல சிறுவர்கள் உருவாகுவார்கள் என்பதில் ஐயப்பாடில்லை.