பதிப்புகளில்

யாஹூ நிறுவன பணியை விட்டு பழங்குடிக் குழந்தைகளுக்கு கலை வகுப்பெடுக்கும் ஓவியர்!

YS TEAM TAMIL
25th Jun 2018
6+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

ருச்சி ஷா யாஹூ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஒன்றரை ஆண்டிலேயே அதிக சம்பளத்துடன் கூடிய இந்தப் பணியிருந்து விலகி மிகவும் குறைந்த வருவாய் கிடைக்கும் பணியில் சேர்ந்தார். ஏனெனில் சீனியர் யூஈடி டிசைனர் வாழ்க்கையில் பேப்பர் மற்றும் பெயிண்ட் இடம்பெறவில்லை. எனவே ஃப்ரீலான்சிங் அவரைக் கவர்ந்தது.

ஒரு வசதியான அலுவலக அறையிலிருந்து லடாக் பகுதியில் உள்ள சிறியளவிலான பள்ளிகளின் பக்கம் அவரது கவனம் திரும்பியது. சமூக நலனில் பங்களிக்க வேண்டும் என்கிற விருப்பமே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பள்ளிகளில் உள்ள குழந்தைகள் கதை சொல்லுதல், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளவும் டூட்லிங் தொடர்பான மறைந்திருக்கும் அவர்களது திறமைகளை வெளிக்கொணரவும் கலை மற்றும் ஓவியத்தைப் பயன்படுத்தினார்.

image


பிரபலமான இந்தப் படம் வரைபவர் பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த தொலைதூரப் பள்ளிகளில் கலையை எளிதாகக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டது அவருடைய ஓவியங்களும் கதைகளும் சிறப்பிக்கப் பெரிதும் உதவியது.

34 வயதான இவர் மும்பையில் வளர்ந்தார். இவரது பெற்றோர்கள் ஓவியர்கள். இவர்கள் சொந்தமாக வீட்டிலேயே அச்சகம் நடத்தி வந்தனர். இவர் பொம்மைகளுடன் விளையாடி வளர்ந்ததைக் காட்டிலும் கதைப்புத்தகங்கள் மற்றும் கலைப்பொருட்களுடனேயே வளர்ந்தார். அத்துடன் இவர்களது இரவு உணவு வேளை ஓவியம் தொடர்பான உரையாடல்களால் நிறைந்திருக்கும்.

எனவே ருச்சி ஓவியராக மாறி ஐடிசி, ஐஐடி மும்பையில் 2008-ம் ஆண்டு டிசைனில் முதுகலைப்பட்டம் பெற்றதில் வியப்பேதும் இல்லை. கல்லூரிப்படிப்பு முடிந்து வெளியேறியதும் யாஹூ நிறுவனத்தில் சில காலம் பணியாற்றியபோது அவர் ஃப்ளூயிட் வடிவமைப்பில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு பெங்களூருவைச் சேர்ந்த பிரதம் புக்ஸ் நிறுவனத்தில் தனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும் பகுதியில் இணைந்துகொண்டார்.

2012-ம் ஆண்டு யூகேவின் கேம்பெர்வெல்லில் விஷுவல் ஆர்ட்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு மேற்கொள்ள முழு உதவித்தொகை கிடைத்தது. இங்கு ஓராண்டு செலவிட்டு படம் வரைவதில் நிபுணத்துவம் பெற்றார்.

2013-ம் ஆண்டு அவர் இந்தியா திரும்பியதும் லடாக் பகுதியைச் சேர்ந்த தொலைதூரப் பள்ளிகளில் ஓவிய ஆசிரியையாக இணைந்துகொள்ள அவலோகிடேஸ்வரா ட்ரஸ்ட் அழைப்பு விடுத்தது.

லமாயுரு மொனாஸ்டரியில் தன்னார்வலராக இருந்தபோது வெற்று சுவற்றுடன்கூடிய வகுப்பறையில் இருந்தேன். அறையை உயிரோட்டம் மிக்க பகுதியாக மாற்ற அங்கிருந்த சுவர்களில் ஒன்றில் அவர்களின் கிராமத்தின் காட்சியை சுவரோவியமாக உருவாக்கினேன். 12 இன்ச் பேப்பரில் இருந்து 12 அடி சுவற்றிற்கு ஓவியம் தீட்டியது சுவரோவியம் வாயிலாக கதை சொல்லும் திட்டத்திற்கு வழிவகுத்தது.

இவரது சுவரோவியங்களில் ஒன்று ஃப்ரெஷ்டெஸ்க் (தற்போது ஃப்ரெஷ்வொர்க்) குழுவினர் பார்வையில் பட்டது. அவர்களது அலுவலகத்தின் சுவரில் ஓவியம் வரைய அழைத்தனர். அடுத்த நான்காண்டுகளில் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் 20-க்கும் மேற்பட்ட சுவர்களில் ஓவியம் தீட்டினார். போல்கா கஃபே, தேசி கிரியேடிவ் போன்ற தளங்களில் இவரது பணி இடம்பெற்றது. இதைக் கண்டு மற்ற நிறுவனங்களும் அரசு சாரா நிறுவனங்களும் சுவரோவியம் தீட்ட அவரை அணுகினர். 

”நான் முழுமையாக உணர்வதற்கு முன்பே ஒரு தொழில்முனைவராகவும் கார்ப்பரேட் சுவரோவியம் தீட்டுபவராகவும் மாறினேன்,” என்றார்.
image


லடாக்கில் அவர் மேற்கொண்ட தன்னார்வலப் பணியானது அவருக்கு சுவரோவியத்தில் இருக்கும் அதீத ஆர்வத்தைக் கண்டறிய உதவியதுடன் குழந்தைகளுடன் உரையாடும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் குழந்தைகள் சிறப்பாக கற்றுக்கொள்ளும் விதம் குறித்த நுண்ணறிவும் கிடைத்தது. லேர்ன் இங்கிலீஷ் த்ரூ ஸ்டோரீஸ் (LETS) திட்டத்தில் இணைந்துகொள்ளவும் அவரை அழைத்தனர். ஐடிசி, ஐஐடி மும்பையின் பேராசிரியரான அல்கா ஹிங்கோராணி அவர்களால் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தில் டிசைன் அசோசியேட்டாக இணைந்துகொள்ளுமாறு 2015-ம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் செயலியை குழந்தைகளுடன் சோதித்துப் பார்த்தபோது அந்த மாணவர்கள் தொழில்நுட்பத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டாலும் உள்ளூர் உள்ளடக்கத்தின் பற்றாக்குறை இருப்பதை கவனித்தனர்.

2007-ம் ஆண்டில் புத்தகங்களுக்கான படம் வரையும் பணியில் ஈடுபடத் துவங்கியபோது அவர் இதை கவனித்தார். வெவ்வேறு படம் வரையும் பாணிகள் குறித்து தெரிந்துகொள்ள உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்தார். அப்போது காலங்காலமாக இந்தியாவில் கதைசொல்லும் கலாச்சாரம் இருந்து வந்தாலும் சிறப்பான விளக்கப்படங்களுடன்கூடிய கதைகள் இல்லாதது தெரியவந்தது.

எனவே இந்திய படம் வரைதலுக்கான எல்லையை நீட்டிக்க நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவரும் சமூக அர்வலருமான மஹாஸ்வேதாதேவி அவர்கள் எழுதிய ‘அவர் இன்க்ரெடிபிள் கவ்’ (Our Incredible Cow) புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்தப் புத்தகத்தில் மஹாஸ்வேதாதேவி தனது செல்லப்பிராணியான நியடோஷ் என்கிற பசுவிற்கு ஏற்பட்ட விசித்திரமான நிகழ்வுகளை விவரித்துள்ளார்.

image


இந்த வேடிக்கையான பசு சாப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு படங்கள் வரையப்பட்டன. ஒவ்வொரு பக்கத்திலும் மீன், வெங்காயம், புல், பாட்டில்கள் என வெவ்வேறு உருவங்கள் காணப்படும். இந்தப் பொருட்களை சீரமைத்துப் புகைப்படம் எடுத்து அதன் பிறகே விஷுவலை உருவாக்கினேன்,” என விவரித்தார்.

இந்தப் பணியானது 2015-ம் ஆண்டு துலிகா புக்ஸால் வெளியிடப்பட்டது. எனவே வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி வரைந்து, ஓவியம் தீட்டி, அச்சிட்டு சோதனை செய்ய புத்தகங்கள் ஒரு சிறந்த தளமாக விளங்கியது. இது LETS-க்கு உதவியது.

இந்தத் திட்டத்தில் பணியாற்றியபோது மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிராம மக்கள் பள்ளி, தஹனு, ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அகஸ்தியா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன், குப்பம் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளி, குன் ஆகிய வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் பணியாற்றினார்.

இவரது பணி ஆறு புத்தகங்களில் வெளியிடப்பட்டது. ஐடிசி-யைச் சேர்ந்த மூத்த பேராசிரியரான அதாவன்கர் அவரது முயற்சிகளைப் பாராட்டி வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு புத்தகத்திற்காக பணிபுரியுமாறு அறிவுறுத்தினார்.

அடுத்த மூன்றாண்டுகளில் அர்த்தமுள்ள கருத்துக்களை படங்களாக்கி புத்தகங்களாக உருவாக்கி குழந்தைகளின் கண்களுக்கு விருந்து படைத்தார்.

அவருக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களில் ஒன்று முழுமையாக கவிதை வடிவில் எழுதப்பட்ட ’கேட் இன் தி காட்’ (Cat in the Ghat). நேஷனல் ஜியோகிராஃபிக் எக்ஸ்ப்ளோரரான சந்தேஷ் கதூர் அவர்களின் நிஜ உலகப் பயணம் மற்றும் ’போகியன்’ என்கிற புராண பூனைக்காக மேற்கு தொடர்ச்சி மலை நோக்கிய அவரது பயணம் ஆகியவை அடங்கிய இந்தப் புத்தகம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அவர் பார்த்த ஒவ்வொரு உயிரினத்தையும் படம்பிடித்து காட்டியுள்ளது. 

“இந்தியாவில் அதிக மழைப்பொழிவு அதிகமாக காணப்படும் பகுதியை பிரதிபலிக்கும் விதமாக வண்ணமயமான மைகளை ஸ்ப்ளாஷ் செய்து ஓவியங்களை உருவாக்கினேன்,” என்றார்.

’புக் ஈஸ் பீ’ (Book is Bee) என்கிற கதைக்குப் படங்கள் உருவாக்கியதும் அவர் முழுமையாக ரசித்து ஈடுபட்ட மற்றொரு பணியாகும். ”நம் வாழ்க்கையில் புத்தகங்கள் எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்பதை இந்தப் புத்தகம் நினைவூட்டும். எண்ணற்ற வார்த்தைகளின் அறிமுகமாக இருக்கலாம். அல்லது ஒலியாக இருக்கலாம். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒரு சுற்றுச்சூழலையே உருவாக்குகிறது. பென்சில் ஓவியம், இன்க் இல்லஸ்ட்ரேஷன்ஸ் மற்றும் உலர்ந்த பூக்கள் ஆகியவற்றின் கலைவையில் இந்தப் புத்தகத்தின் படங்களை உருவாக்கினேன்,” என்றார்.

image


தற்போது தி வாக்கிங் ஸ்கூல் பஸ், உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹிமாலயன் பப்ளிக் ஸ்கூல் மாணவர்களால் வரையப்பட்ட Vancouver and Pratham புக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுடனும் இணைந்து ஒரு புத்தகத்தில் பணியாற்றி வருகிறார். 

”லாப நோக்கமற்ற வெளியீட்டாளர்களுடன் பணியாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. புத்தகத்தின் அளவாகட்டும், உள்ளடக்கமாகட்டும், அச்சிடப்படும் அளவாகட்டும் அல்லது பேப்பர் வகையாகட்டும் அனைத்துமே கடினமான செயலாகவே இருந்தது. ஆனால் இதில் எதுவுமே குழந்தைகளுக்கான தரமான இலக்கியப் படைப்பை உருவாக்குவதற்கு தடையாக இருக்கவில்லை,” என்றார்.

இவர் சுயசார்புடன் செயல்படுவதைக் கண்டு தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த கிராமவாசிகள் வாயடைத்துப் போவது இவரது திட்டங்களில் இவர் தொடர்ந்து சந்தித்து வரும் மற்றொரு சிக்கலாகும். ”நான் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரியச் செல்லும்போது உள்ளூர்வாசிகள் என்னிடம் சகஜமாகப் பழகினாலும் நான் ஒரு கிராமத்திற்கு தனியாக பயணித்ததைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர். நான் பணியாற்றிய தொலைதூரப் பள்ளிகளில் ஆண் ஓவிய ஆசிரியர்களும் இருந்தனர். என்னுடன் பணிபுரிவதை அதிக சவால் நிறைந்ததாக உணர்ந்தனர்,” என்றார்.

இத்தகைய போக்கு அவர் அலங்கரித்த அலுவலகங்களிலும் தொடர்ந்தது. பெரும்பாலும் கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடையாத இடங்களிலேயே இவர் பணிபுரியவேண்டியிருந்தது.

பெரும்பாலான சூழல்களில் பணியாட்கள் மத்தியில் நான் மட்டுமே பெண்ணாக இருப்பேன். இது ஒரு மிகப்பெரிய தடையாக இருந்தது. எனக்கான பகுதியை நானே உருவாக்கிக்கொள்ளவேண்டிய சூழல் நிலவியது. சில எல்லைகளை வகுத்துக்கொண்டு அதே சமயம் என் பணியையும் நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் இருந்தது. நான் என் பணியைத் துவங்கும்வரை யாரும் என்னை பொருட்டாகக் கருதவில்லை,” என்று விவரித்தார்.

கடந்த இரண்டாடுகளாக மும்பையில் KreativeRush என்கிற தன்னுடைய சொந்த வென்சரில் பணியாற்றி வருகிறார். மும்பையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவரது திட்டங்கள் அவரை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது. அவர் கார்ப்பரேட் சுவரோவியம் தீட்டுபவராக இருப்பினும் பாதி நேரத்தை ஆர்ட் டைரக்ஷன், கதைப் புத்தகங்களுக்கு படம் வரைதல், பழங்குடிப் பள்ளிகளில் ஓவியம் சார்ந்த பயிற்சிப்பட்டறைகளை ஏற்பாடு செய்தல் போன்றவற்றிற்காக செலவிடுகிறார். அடுத்ததாக இரண்டு ஸ்டார்ட் அப்களுக்கான பெயிண்டிங் பணிகளில் ஈடுபட பெங்களூருவில் செயல்பட உள்ளார். அதன் பிறகு உத்தர்காண்டில் ஒரு திட்டத்திற்காக ஒரு புத்தகத்தை உருவாக்க குழந்தைகளுடன் பணியாற்றி வருகிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : பிஞ்சல் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா

6+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags

Latest Stories