பதிப்புகளில்

புனித விலங்கான மாடுகளை மையமாகக் கொண்டு புத்தகம் எழுதிய ஷோபா நாராயண்!

17th Jul 2018
Add to
Shares
26
Comments
Share This
Add to
Shares
26
Comments
Share

ஷோபா நாராயண் பத்திரிக்கையாளர் மற்றும் ஆசிரியர். இவர் ’மான்சூன் டயரி’, ரிட்டர்ன் டு இண்டியா’ ஆகிய இரண்டு நினைவுக் குறிப்புகளை எழுதியுள்ளார். இவரது புனைவல்லாத படைப்பான ’தி கௌஸ் ஆஃப் பேங்களூர்’ சமீபத்தில் வெளியானது. பயணம், வன விலங்குகள், இயற்கை, உணவு, பானங்கள், ஃபேஷன், கலை, இசை, கலாச்சாரம், ஆடம்பரம், வாழ்க்கை முறை போன்றவை குறித்து பல்வேறு வெளியீட்டாளர்களுக்காக எழுதுகிறார்.

image


இந்த புத்தகத்திற்கான மையமாக ஏன் மாடுகளைத் தேர்ந்தெடுத்தீர்கள்? ’மான்சூன் டயரி’ புத்தகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றை எழுத விரும்பினீர்களா?

கதையின் மையத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மாடு தான் என்னிடம் வந்து சேர்ந்தது. ஒருமுறை நான் லிஃப்டிற்கான பட்டனை அழுத்தியபோது உள்ளே மாடு இருப்பதைப் பார்த்தேன். அப்படித்தான் துவங்கியது. மாடுகள் அடங்கிப்போகிற அமைதியான மிருகம் என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அந்த அமைதிக்குப் பின்னே அதன் விதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திறன் உள்ளது. ஆகவே நான், மாட்டை மையமாகத் தேர்வு செய்தேன் என சொல்ல மாட்டேன். மாடுகள்தான் அவைகளுடன் தொடர்பில் இருக்க என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது எனக்குக் கிடைத்த பரிசு என்பேன். 

நான் இந்தியாவில் மாடுகளைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவை என்னுடைய வீட்டு வாசலில் வந்து நிற்கும் என நான் நினைத்ததில்லை. இந்தக் கதை உருவாக பத்தாண்டுகளுக்கும் மேலானது. மாடு மெல்ல நடந்து வருவதைப் போலவே இந்தக் கதையும் உயிர்பெற அதற்கே உரிய நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளது.

நம் நாட்டில் மாடுகளை எவ்வாறு வழிபடுகிறார்கள் என விவரிக்கமுடியுமா?

’கோ’ என்கிற எழுத்தில் தொடங்கும் ஏதேனும் வார்த்தைகளை கற்பனை செய்து பாருங்கள். அவை அனைத்திற்கும் மாடுகளுடன் தொடர்பு இருக்கும். கோபுரம், கோதாவரி, காவிஸ்தி, கோதுளி போன்ற வார்த்தைகளும் கோபால், கோதாவரி போன்ற பெயர்களும் மாடுகளுடன் தொடர்புடையவை. மாடுகளை வழிபடுதல் இந்திய நம்பிக்கையுடன் தொடர்புடையதாகும்.  

image


மாடுகள் மீதான் உங்களது பாசம் இத்தனை ஆண்டுகளில் எவ்வாறு மாறியுள்ளது?

ஒவ்வொரு நாளும் அது அதிகரித்து வருகிறது. நான் எப்போதும் மாடுகளை கவனித்து வருவேன். 

மாடுகள் தொடர்பான அத்தனை கதைகளும் புராணங்களும் உண்மை என்றே நான் நினைக்கிறேன். அவை மென்மையான மிருகங்கள். தெளிவான கண்கள் கொண்டவை. விசால மனமுடையவை. அதன் நடை மெல்ல இருப்பினும் யானையைப் போன்று கம்பீரமானவை. மாடுகள் இந்திய மிருகங்களின் அடையாளச் சின்னமானவே கருதப்படுகிறது. இதுபோன்ற காரணங்களுக்காகவும் தெளிவாக எடுத்துரைக்க முடியாத இன்ன பிற உணர்வுகள் காரணமாகவும் எனக்கு மாடுகளைப் பிடிக்கும்.

நீங்கள் வளர்ந்த பெங்களூரு பகுதியின் முந்தைய நினைவுகள் மற்றும் பிடித்தமான நினைவுகள் என்ன? அவை எந்த அளவிற்கு மாறியுள்ளது?

பெங்களூரு இப்போது என்னுடைய ஊர். ஆனால் நான் அமெரிக்காவில் இருந்து திரும்பியபோது இது புதிய நகரமாக இருந்தது. நான் சென்னையில் வளர்ந்தேன். இருந்தும் பெங்களூருவைப் போன்று நட்புறவுடன் வரவேற்கும் இந்திய நகரம் வேறு எதுவுமில்லை. இங்கே வசிப்பதற்காக நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். பெங்களூரு எப்படி தோட்ட நகரமாக இருந்தது என்றும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது என்றும் எனக்கு நினைவில்லை. ஒரு வகையில் பழைய நினைவுகள் இல்லாததும் நன்மையே என்று நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை இன்றைய பெங்களூரு நகரத்தையே நான் அறிவேன். இது எனக்குப் பிடித்துள்ளது.

நீங்கள் அமெரிக்காவில் வாழ்ந்ததில் இருந்து இந்தியா திரும்பிய வரை இத்தனை ஆண்டுகளில் மாடுகள் குறித்த உங்களது கண்ணோட்டம் மாறியுள்ளதா?

இந்தியாவில் நாம் அனைவரும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுடனேயே வளர்ந்துள்ளோம். நான் மாடுகளைப் பார்த்தவாறே வளர்ந்தேன். மாடுகளை கவனித்தல், இந்த மிருகங்களின் மீதான ஈடுபாடு, வீட்டிற்கு பால் விநியோகிக்கும் பெண்மணியை சந்தித்தல் போன்றவை இந்த புத்தகம் உருவெடுக்க உதவியது. இதற்காக பல சூழ்நிலைகள் ஒன்றிணைந்தது. சர்வதேச அளவில் இந்த புத்தகம் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அமெரிக்காவில் நேர்மறையான கருத்துகளும் விற்பனையும் பெற்றுள்ளது.

உங்களுக்கும் சரளாவிற்கும் இடையே இருக்கும் இணைப்பு எத்தகையது என விவரிக்கமுடியுமா?

என்னுடைய கதையின் கதாநாயகிதான் பால் விநியோகம் செய்யும் பெண்ணான சரளா. அவர் பல்வேறு கதைகளையும் எண்ணங்களையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான கதாபாத்திரம். மாடுகள் மனிதர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என சரளா நம்புகிறார். நானும் அவ்வாறே நம்புகிறேன். மாடுகளை மையமாகக் கொண்ட ஒரு கதையை என்னால் எழுதமுடியும் என்று பத்தாண்டுகளுக்கு முன்பு நீங்கள் என்னிடம் சொல்லியிருந்தால் நான் உங்களைப் பார்த்து சிரித்திருப்பேன். என்னுடைய வாசகர்கள் அற்புதமான பெண்ணான சரளாவைப் பற்றி படித்து, ரசித்து அவரை மதிப்பார்கள் என நம்புகிறேன்.

இந்த புத்தகத்திற்காக ஆய்வு செய்யவும் இந்த புத்தகத்தை எழுதவும் உங்களுக்கு எவ்வளவு நாட்களானது?

இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க பத்தாண்டுகள் ஆனது. ஏனெனில் இந்தக் கதை அதற்கே உரிய வேகத்திலேயே வெளிப்பட்டது. நான் எழுதத் துவங்கியதும் மாடுகள் குறித்த ஆய்வைத் துவங்கினேன். இந்த ஆய்வு, புத்தகத்தையே மாற்றியது. நாட்டு பசு இனங்களான Bos Indicus குறித்து தெரிந்துகொண்டேன். இந்த மாடுகள் கொடுக்கும் பால் ஆரோக்கியமானது. பெங்களூருவைச் சேர்ந்த பலர் நாட்டு மாடுகளின் பாலை வாங்கத் துவங்கிய போக்கைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. 

image


புத்தகத்தில் விவரிக்கப்பட்ட சாகச நடவடிக்கைகளில் உங்களுக்குப் பிடித்தது எது?

சரளாவும் நானும் மாடு வாங்க சந்தைக்குச் சென்ற பகுதி எனக்கு மிகவும் பிடித்த சாகச நடவடிக்கையாகும்.

மாடு வைத்திருப்பது எத்தகைய அனுபத்தைத் தரும்? இதுவும் மற்ற செல்லப் பிராணிகளை வைத்திருப்பது போன்ற அனுபவத்திற்கு இணையானதா?

நாய் அல்லது பூனை போன்றதல்ல மாடு. அது அதிக தற்சார்புடைய விலங்கு. என்னைப் போலவே என் வாசகர்களும் மாடுகளையும் மற்ற அனைத்து மிருகங்களையும் விரும்புவார்கள் என நம்புகிறேன். அவர்கள் மாடுகளை உணர்வுகள் நிறைந்த உயிரினமாக பார்க்கத் துவங்குவார்கள் என நம்புகிறேன்.

பால் விநியோகிக்கும் பெண் மற்றும் மாடுகளுடன் உங்களுக்கு ஏற்பட்ட சாகச அனுபவம் குறித்து உங்களுடைய குடும்பம் என்ன கருத்து தெரிவித்தது?

என்னுடைய கணவர் பொறுத்துக்கொண்டார். என்னுடைய விசித்திரமான நடவடிக்கைகளைக் கண்டு என் குழந்தைகள் ரகசியமாக பெருமிதம் கொண்டாலும் வெளிப்படையாக என்னைப் பார்த்து சிரித்தனர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்களான என் பெற்றோரும் புகுந்த வீட்டினரும் மனதார சம்மதித்தனர். என்னுடைய உறவினர்கள் அமெரிக்காவில் இருக்கும் அவர்களது குழந்தைகளிடம் பேசும்போது என்னை ஒரு உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றனர். 

”ஷோபாவைப் பாருங்கள். இந்திய பாரம்பரியத்துடன் எப்படி இணைந்திருக்கிறார்,” என்கின்றனர். 

நான் முன்மாதிரியாக மாறுவதைக் கண்ட என் உறவினர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் தங்களால் இதைப் பின்பற்றமுடியாது என்பதால் என்னை வெறுத்தனர்.

உங்களுக்கு பிடித்தமான எழுத்தாளர் யார்? உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் எவை?

நினைவுக் குறிப்புகள் மற்றும் யதார்த்தமும் கற்பனையும் நிறைந்த படைப்புகளை வழங்கும் சமகால எழுத்தாளர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உதாரணத்திற்கு இசபெல் ஆலெண்டே, எமி டான், டேவிட் செடாரிஸ், ஜொனாதன் ஃபிரான்சென், ஹருகி முரகமி, ஆதிஷ் தசீர் போன்றோர் என் விருப்பப்பட்டியலில் அடங்குவர். இதே வகையில் எப்போதும் பிடித்த எழுத்தாளர்கள் கேப்ரியல் கார்சியா மார்கஸ், ஆர் கே நாராயண், அய்ன் ரேண்ட், சல்மான் ருஷ்டி, ஆலிஸ் முன்ரோ போன்றோர். இன்றும் இவர்களுடைய புத்தகங்களில் ஒன்றை எடுத்து படிக்கத் துவங்கினால் என்னையே மறந்துவிடுவேன். பி.ஜி.வுட்ஹவுஸ் புத்தகங்கள் குறிப்பாக பெர்டி ஊஸ்டர், ஜீவ்ஸ் தொடர் போன்றவை எப்போதும் எனக்கு சிரிப்பை வரவழைக்கும்.

அத்துடன் ஜே.டி.சாலிஞர் எழுதிய ’தி கேட்சர் இன் தி ரை’ புத்தகத்தை நான் மிகவும் ரசித்தேன். சமீபத்தில் நான் படித்த மரியா செம்பிள் எழுதிய நாவலான ‘வேர் வுட் யூ கோ பெர்னடெட்?’ எனக்கு பிடித்திருந்தது. அருந்ததி ராய் எழுதிய ’தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்’ எனக்கு பிடித்திருந்தது. அவர் எழுதும் பாணியும் புதிர் போல கதையை ஒன்றிணைத்த விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கு பிடித்தமான மற்றொரு புத்தகம் வில்லியம் தால்ரிம்பில் எழுதிய சிட்டி ஆஃப் ஜென்ஸ் (City of Djinns). ஏனெனில் அவர் டெல்லியின் வரலாற்றை அசாதாரண முறையில் வெளிப்படுத்தியிருப்பார். அதே போன்று என்னுடைய நகரங்களான பெங்களூரு மற்றும் சென்னை குறித்து எழுத விரும்புகிறேன்.

உங்கள் புத்தகங்களுக்கான உத்வேகம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?

இந்திய கலாச்சாரத்தின் மீது எனக்குள்ள ஆர்வத்திலிருந்து எனக்கு உத்வேகம் பிறக்கிறது. தனிநபர்கள் மற்றும் அவர்களது உணர்வுகள் சார்ந்த கதைகள் விநோதமான இடங்களிலேயெ உருவாகும். வாசகர்கள் தங்களில் இருந்து மாறுபட்ட மக்கள் சந்திப்பைத் தேடுவார்கள். இது ஒவ்வொரு நகரிலும் சாத்தியமே. இவர்களது விநோதமான அற்புதமான வாழ்க்கையை தெரிந்துகொண்டு நீங்கள் ரசிக்கலாம். இவர்களிடம் சிறப்பான கதைகள் இருக்கும். நீங்கள் இவர்களது நண்பர்களாகிவிடலாம். இதுகுறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். 

மாடுகளுடன் இணைந்திருங்கள். பறவைகளுடனும் தேனீக்களுடனும் இணைந்திருங்கள். நகரவாசிகளான பறவைகள், தேனீக்கள், கால்நடைகள் போன்ற நம்மைச் சுற்றுயுள்ள இயற்கையுடனான இணைப்பை நாம் துண்டித்துவிட்டோம். பரிணாம வளர்ச்சி மற்றும் சூழலியல் ஆகியவற்றின் ஒரு பகுதியான முக்கிய இணைப்பை தவிர்த்துவிடுகிறோம். நாம் அதை மீட்டெடுக்கவேண்டும்.

உங்களைப் பொருத்தவரை ஒரு நல்ல எழுத்தாளருக்கு இருக்கவேண்டிய முக்கிய பண்பு என்ன?

ஒரு எழுத்தாளர் உத்வேகம் கிடைக்கும் வரை எழுதுவதற்காக காத்திருக்கக்கூடாது. இதுவே அவரிடம் இருக்கவேண்டிய முக்கிய பண்பாகும். உத்வேகம் என்பது முழுமை பெறாதவர்களுக்கானது என்பார்கள். உங்கள் மனவிருப்பத்திற்கேற்ப உங்களால் எழுத முடியவேண்டும். நான் என் வாழ்க்கை முழுவதும் எழுதிக்கொண்டிருக்கிறேன். குழந்தையாக கவிதையும் எழுதியுள்ளேன். பதின்மவயதில் பத்திரிக்கைகளிலும் எழுதியுள்ளேன். என்னுடைய 18 வயதில் உள்ளூர் செய்தித்தாள்களுக்கு எழுதத் துவங்கினேன். இன்று வரை நிறுத்தவே இல்லை.

புதிதாக எழுதும் எழுத்தாளருக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?

உங்களுக்குள் இருக்கும் எழுத்தாளரின் குரலைக் கண்டறியுங்கள். ஆர்வமாக தலைப்பைக் கண்டறியுங்கள். சுற்றி நடப்பவற்றை விரைவாக கூர்ந்து கவனியுங்கள். அதன் பிறகு உட்கார்ந்து எழுதுங்கள்.

உங்களது அடுத்த புத்தகங்களில் எந்த மாதிரியான மையக்கருத்தை ஆராய உள்ளீர்கள்?

என்னுடைய ஏஜெண்ட் மற்றும் வெளியீட்டாளருடன் சில யோசனைகளை கலந்துரையாடி வருகிறேன். ஆன்மீகம், சிகிச்சைமுறை, உடற்பயிற்சி போன்ற பகுதிகளில் ஆராய்ந்து வருகிறேன். இவற்றில் புத்தகத்திற்கான சரியான ஒன்றை கண்டறியவேண்டியதே சிக்கலாக உள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : ஆஷா சௌதரி | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
26
Comments
Share This
Add to
Shares
26
Comments
Share
Report an issue
Authors

Related Tags