பதிப்புகளில்

'திறமை மட்டும் இருந்தால் போதாது, அதிர்ஷ்ட்டமும் அவசியம்’– நடிகை பிரியாமணி!

15th Nov 2018
Add to
Shares
35
Comments
Share This
Add to
Shares
35
Comments
Share

பிரியாமணி கதாநாயகி மற்றும் முன்னாள் மாடல். இவர் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தேசிய திரைப்பட விருதும் மூன்று வெவ்வேறு மொழி திரைப்படங்களுக்காக மூன்று பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். பெங்களூருவில் பிறந்த வளர்ந்த இவர் தற்போது திருமணம் முடிந்து மும்பையில் இருக்கிறார். 

தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான பிரியாமணி தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். பருத்திவீரன், திரக்கதா, கோலிமார், ராவணன், சாருலதா, மன ஊரி ராமாயணம், யமதொங்கா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். ரோஹித் ஷெட்டியின் ’சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் ஆடிய நடனத்தை யாரால் மறக்கமுடியும்?

பிரியாமணி தனது ரசிகர்களுடன் எளிதாக உரையாட உதவும் வகையில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். தற்சமயம் இதுகுறித்து உற்சாகமாக உள்ளார். அவர் தனது நடிப்புப் பயணம், சவால்நிறைந்த திரைப்படங்கள், மீடூ இயக்கம் குறித்த அவரது பார்வை என பல்வேறு விஷயங்களை யுவர்ஸ்டோரி வீக்எண்ட் உடன் பகிர்ந்துகொண்டார்.

அவருடனான நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

உங்களது செயலி குறித்து சொல்லமுடியுமா?

எனது செயலியில் என்னுடைய அனைத்து பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படும். இந்த செயலியில் என்னுடைய தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல தகவல்கள் இருப்பதால் இதன் மூலம் என் ரசிகர்களுடன் என்னால் இணையமுடியும். இது ஊடாடும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் எனக்கு மெசேஜ் அனுப்பலாம் அவர்களுக்கு ஸ்டார் வழங்கப்படும். அதிக ஸ்டார் பெறுபவர்கள் நான் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோ செட்டில் என்னை சந்திக்கலாம்.

image


என்னுடைய ரசிகர்கள் அவர்களது புகைப்படங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதற்கென ஒரு பிரத்யேக பகுதி இந்தச் செயலியில் உள்ளது. இதன்மூலம் அவர்களைப் பற்றி நான் அதிகம் தெரிந்துகொள்ளமுடியும். நான் கேட்க விரும்பும் இசையை செயலியில் இணைத்துள்ளேன். என்னுடைய செயலியை பார்வையிடுவோர் தங்களுக்குப் பிடித்த இசையையும் இதில் சேர்க்கலாம். நானும் அந்த இசையை ரசிப்பேன். இந்த ஊடாடும் செயலியானது என்னைப் பற்றி என் ரசிகர்கள் அதிகம் தெரிந்துகொள்ளவும் அவர்களைப் பற்றி நான் தெரிந்துகொள்ளவும் உதவும்.

தற்போது எந்த திரைப்படங்கள்/ஷோக்களில் பணிபுரிந்து வருகிறீர்கள்?

தற்போது ஒரு தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. கன்னட திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளது. டான்ஸ் கேரளா டான்ஸ் என்கிற மலையாள ஷோவில் பணிபுரிந்து வருகிறேன். இது விரைவில் வெளியாக உள்ளது. இ-டிவிக்காக மற்றொரு நடன ரியாலிட்டி ஷோவிலும் பணிபுரிந்து வருகிறேன். அமேசான் ப்ரைமின் ’தி ஃபேமிலி மேன்’ என்கிற டிஜிட்டல் தொடரில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளேன். அடுத்த ஆண்டு இது வெளிவரும். 

எப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தை நீங்கள் அதிகம் ரசிப்பீர்கள்?

எனக்கு உணர்ச்சிபூர்வமான கதாப்பாத்திரங்களில் நடிக்கப் பிடிக்கும். உடனடியாக உணர்ச்சிவசப்படுவது மிகவும் கடினம். ஆனால் இப்படிப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளை ஏற்கப் பிடிக்கும்.

மீடூ இயக்கம் குறித்த உங்களது கருத்து என்ன?

என்னைப் பொருத்தவரை குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும். இதற்கு முன்பும் சில பெண்கள் தவறாக நடத்தப்பட்டதை பொதுவெளியில் தெரிவித்துள்ளார்கள். ஆனால் சில சமயங்களில் புகாரளிக்கப்பட்டும் யாரும் செவிமடுத்து நடவடிக்கை எடுத்ததில்லை. தற்போது அந்த சம்பவங்கள் குறித்து பகிர்ந்துகொள்வது நல்ல போக்காகும். ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் மென்பொருள் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் என அனைத்து பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எங்கெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ, அது ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் முன்வந்து மீடூ என்று சொல்வது முக்கியம் என்று நான் கருதுகிறேன். யார் மீது குற்றம் சாட்டப்படுகிறதோ அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

ஓய்வு நேரத்தில் எத்தகைய வேலையில் ஈடுபடுவதில் உற்சாகமடைவீர்கள்?

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேரம் செலவிடுவது பிடிக்கும். அதே சமயம் நேரம் கிடைக்கும்போது பேட்மிட்டன் விளையாடுவதையும் ரசிப்பேன். என் அம்மா பேட்மிட்டன் விளையாட்டில் இந்தியா சார்பாக விளையாடியுள்ளார். எனவே இந்த விளையாட்டு என் ரத்தத்தில் கலந்த ஒன்று. தீவிரமாக பேட்மிட்டன் விளையாட்டில் ஈடுபடவில்லை என்றாலும் இதை விளையாடுவதை ரசிப்பேன்.

image


எந்த மொழித் திரைப்படங்களில் நடிப்பது அதிக சவால் நிறைந்ததாக இருந்தது?

மலையாள திரைப்படங்களில் நடிப்பது அதிக சவால் நிறைந்தது. படப்பிடிப்பிற்கான இடம், படப்பிடிப்பு நடக்கும் வீடு, கதை, ஸ்கிரிப்ட் என அனைத்துமே வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

திரக்கதா திரைப்படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. இது 1982-2008 காலகட்டத்திற்கிடையே இருந்த ஒரு கதாநாயகி பற்றிய கதை. மலையாள திரைப்படங்களின் ஸ்கிரிப்டும் கதையும் திகைப்பளிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். பலரால் இந்தத் திரைப்படங்களின் கதாப்பாத்திரங்களை தங்களுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் என்பதே இந்தத் திரைப்படங்களின் சிறப்பம்சமாகும். 

மலையாள படங்களின் வெவ்வேறு கதையம்சங்களைக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு நான் பார்த்த ‘நியான் மரியகுட்டி’ திரைப்படத்தை என்னால் மறக்கவே முடியாது. இதில் ஒரு சிறுவன் இளம் வயதிலேயே பெண்ணாக மாற விரும்புவான். இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்வான். இது போன்று பலருக்கு நடந்துள்ளது. தற்போது இதுவே ஒரு திரைப்படமாகியுள்ளது. நான் வியந்து பார்த்த மற்றொரு திரைப்படம் கேங் வார் தொடர்பான அங்கமலி டயரிஸ். பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடிய திறமையான எழுத்தாளர்கள் பலர் மலையாள திரைத்துறையில் உள்ளனர்.

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் உங்களது கதாப்பாத்திரம் குறித்து சொல்லுங்கள்?

அது அற்புதமான தருணமாக அமைந்தது. ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். எனக்கு ஷாருக்கான் மிகவும் பிடிக்கும். நான் அவரது தீவிர ரசிகை. இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக ரோஹித் ஷெட்டிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பிற்கிடையே ஷாருக்கான் தனது ஐபேடில் கேபிசி விளையாடியது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. அவர் ஒரு அற்புதமான மனிதர்.

நீங்கள் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீங்கள் விருது பெறும்போது மகிழ்ச்சியாக உணர்வீர்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை ஒருவர் என்னிடம் வந்து ஆட்டோகிராஃப் கேட்கும்போதுதான் நான் வெற்றியடைந்ததாக உணர்வேன். அந்த தருணத்தில் நீங்கள் கவனிக்கப்படுவதாகவும் நினைவில் கொள்ளப்பட்டதாகவும் உணர்வீர்கள். எனினும் வெற்றி காரணமாக இருமாப்பு வந்துடக்கூடாது. வாழ்க்கையில் எங்த நிலையில் இருந்து வந்தோம் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.

நடிகையாக இருப்பது எத்தகைய உணர்வைக் கொடுக்கும்?

என்னைப் பொருத்தவரை ஒரு நடிகராக இருப்பது என்பது ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியும் நிலையாகும். எனினும் திறமை மட்டுமே உங்களை எல்லா நிலைக்கும் இட்டுச்செல்லாது. உங்களுக்கு அதிர்ஷ்ட்டமும் தேவை. நீங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதும் அவசியம்.

நீங்கள் எப்படி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள்?

நான் யோகா பயிற்சியில் அதிகம் ஈடுபடுவேன். எனக்கு உதவ தனிப்பட்ட பயிற்சியாளர் இருக்கிறார். ஜிம் செல்ல சற்று சோம்பலாக உணர்வதால் பயிற்சியாளரை தேர்வு செய்தேன். அத்துடன் சரியான பயிற்சியாளர் உடன் இல்லை எனில் ஏதேனும் காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உடல் வளையும் தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதால் யோகா செய்கிறேன். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நடனமும் உதவுகிறது. இருப்பினும் தற்சமயம் நான் நடனமாடுவதைவிட நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறேன்.

உங்களது வருங்கால திட்டம் என்ன?

முன்கூட்டியே திட்டமிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கடந்த காலம் அல்லது எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் நிகழ்காலத்தில் வாழ்ந்து வருவதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே எனக்குப் பிடிக்கும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஆஷா சௌத்ரி | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
35
Comments
Share This
Add to
Shares
35
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக