பதிப்புகளில்

கிரிக்கெட் பிரியர்களுக்கு பந்து வீசும் இயந்திரத்தை வழங்கும் ஸ்டார்ட் அப்!

12th Nov 2018
Add to
Shares
124
Comments
Share This
Add to
Shares
124
Comments
Share

சிலருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருக்கும். சிலருக்கு விளையாட்டுதான் வாழ்க்கையே. பெங்களூருவைச் சேர்ந்த கிரிக்கெட் பிரியரான ப்ரதீக் பலநேத்ரா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்.

பிரதீக் இரண்டு வயதிருக்கும்போதே கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்துள்ளார். பல்வேறு அணிகளில் விளையாடியுள்ளார். விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பிலும் மாநில அளவிலும் விளையாடியுள்ளார்.

பெங்களூரு ஆர்வி பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் பொறியாளரான பிரதீக் பென்சில்வேனியா, லெஹிக் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப தொழில்முனைவுப் பிரிவில் முதுகலைப் பட்டம் படிக்க 2015-ம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது நிலைமை மாறியது.

image


அமெரிக்காவில் பிரதீக்கால் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. 

“அமெரிக்காவில் நல்ல பந்து வீச்சாளர்களைக் கண்டறிவது கடினம். உள்விளையாட்டு மைதானத்தைச் சென்றடைய ஒரு மணி நேரம் ஆகும்,” என நினைவுகூர்ந்தார். 

பந்துவீச யாரும் இல்லாத நிலையில் இந்த சிக்கலுக்கு எளிதாக தீர்வுகாண்பது குறித்து சிந்தித்தார். பிரதீக் உடன் படித்தவரான ஜஸ்டின் ஜேகப்ஸ் உடன் இணைந்து பல்கலைக்கழகத்தில் ஒரு ப்ராஜெக்டிற்காக விலைமலிவான சிறிய பந்துவீச்சு இயந்திரத்தை உருவாக்கினர். சிவில் பொறியியல் பின்னணி கொண்ட ஜஸ்டின் பேஸ்பால் விளையாட்டு வீரர். இவர் இந்த ப்ராஜெக்டில் தீவிர ஆர்வம் காட்டினார்.

ஒரு ப்ராஜெக்டிற்காக மின்சார பயன்பாடு தேவையில்லாத, விலை மலிவான, எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய பந்து வீச்சு இயந்திரத்தை உருவாக்கிய முயற்சியானது முழுவீச்சில் செயல்படும் ஒரு ஸ்டார்ட் அப்பாக மாறியது. பிரதீக் மற்றும் ஜஸ்டின் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது முதுகலைப் படிப்பை முடித்த பிறகு ஃப்ரீபௌலர் (Freebowler) துவங்கினர்.

இன்று பிரதீக் இந்தியாவிலும் ஜஸ்டின் அமெரிக்காவிலும் வணிகத்தை நிர்வகித்து வருகின்றனர். இவர்களுடன் ஆர்விசிஈ-யில் பிரதீக்குடன் படித்தவரும் ஆர்வி கல்லூரி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ஹெச்.கே. விஸ்வநாத் மூன்றாவது இணை நிறுவனராக இணைந்துகொண்டார். 

”விஸ்வநாத் முழுமையாக கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் சான்றிதழ் பெற்ற அம்பயர், ஸ்கோரர், பயிற்சியாளர். நான் அவரை அணுகியபோது ஆர்வமாக இணைந்துகொண்டார்,” என்றார் பிரதீக்.
image


ஃப்ரீபௌலர் எவ்வாறு செயல்படுகிறது?

மின்சார பயன்பாடு தேவையில்லாத எளிதாக எடுத்துசெல்லக்கூடிய இந்த பந்து வீச்சு இயந்திரமானது பல்வேறு கோணங்களில் பந்தை வீசும் திறன் கொண்டது. அதுமட்டுமன்றி கிரிக்கெட் மைதானத்தில் பந்து வீசுவது போன்ற அமைப்பில் பந்தை வீசக்கூடியதாகும். பந்தினை வீசுவதற்கு ஏதுவாக கைபோன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் பந்து வீசும் கப் ஒரு முனையில் இருக்கும். தூக்கியெறியக்கூடிய கைபோன்ற அமைப்பானது ஸ்பிரிங் கேபிள் சிஸ்டம் வாயிலாக காலால் இயக்கக்கூடிய லிவருடன் இணைக்கப்பட்டிருக்கும்.

பந்தினை வீசக்கூடிய கைபோன்ற அமைப்பு முதலில் கீழே இழுக்கப்பட்டு லாக் செய்யப்படும். காலால் இயக்கக்கூடிய லிவர் கீழே இழுக்கப்பட்டு லாக் செய்யப்படும். இந்த செயலானது ஸ்பிரிங்கை முடுக்கிவிடும். பந்து வைப்பதற்கான கப்பில் பந்து வைக்கப்பட்டு வீசக்கூடிய கை ட்ரிக்கர் ஹேண்டில் கொண்டு ரிலீஸ் செய்யப்படும். அப்போது முன்னால் இருக்கும் ஆட்டக்காரரை நோக்கி பந்து வீசப்படும்.

மின்சாரத்தால் இயங்கும் மற்ற பந்துவீச்சு இயந்திரங்களில் ப்ளாஸ்டிக்கினால் கோட் செய்யப்பட்ட செயற்கை பந்துகள் பயன்படுத்தப்படும். அவ்வாறின்றி ஃப்ரீபௌலர் இயந்திரம் ஆட்டக்காரர் முறையான கிரிக்கெட் பந்துகளில் விளையாட உதவுகிறது. மின்சார பந்து வீச்சு இயந்திரத்தைக் கொண்டு பந்து வீசப்படும்போது பந்து சேதமடைய வாய்ப்புண்டு. ஆனால் ஃப்ரீபௌலர் பந்தினை த்ரோயிங் ஆர்ம் கொண்டு வீசுவதால் களத்தில் பந்து வீசப்படும் அனுபவத்தை ஆட்டக்காரருக்கு வழங்குகிறது.

கைப்பிடியைப் (knob) பயன்படுத்தி கப்பில் இருக்கும் பந்தை வெவ்வேறு கோணங்களில் வீசமுடிவதால் ஆட்டக்காரர் பந்தை திறம்பட எதிர்கொண்டு அனுபவம் பெறமுடியும். இந்த இயந்திரத்தின் அடிப்பகுதியில் சக்கரம் உள்ளது. இதனால் இது எளிதில் நகர்த்தக்கூடியதாகும். ஆட்டக்காரரிடம் இருந்து வழக்கமான 22 அடி தொலைவைக் காட்டிலும் குறைவான தூரத்திலும் வைத்துக்கொள்ளலாம். இதனால் ஆட்டக்காரர் வெவ்வேறு தொலைவில் விளையாடவும் அதிவேகமாக பவுன்ஸ் ஆகும் பந்தை எதிர்கொள்ளவும் முடியும்,” என்றார் பிரதீக்

சரியான முன்வடிவத்தையும் தயாரிப்பு பார்ட்னர்களையும் கண்டறிவதில் இந்த ஸ்டார்ட் அப் சவால்களைச் சந்தித்தது. ”சீனாவிலும் அமெரிக்காவிலும் சில ஆய்வுகள் மேற்கொண்டோம். ஆனால் அமெரிக்காவில் அதிக செலவாகும் என தெரியவந்தது. அதேபோல் சீனாவில் லாஜிஸ்டிக்ஸ் சார்ந்த பிரச்சனைகள் இருந்தது. இறுதியாக பெங்களூருவின் மைசூர் ரோட் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் தயாரிப்பாளருடன் பணிபுரிந்தோம்,” என்றார். 

image


போட்டி மற்றும் தனித்துவம்

Omtex நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த Leverage Bowling ஆகிய நிறுவனங்களுடன் ஃப்ரீபௌலர் போட்டியிடுகிறது. அதுமட்டுமின்றி சந்தையில் மின்சார பந்துவீச்சு இயந்திரங்களும் கிடைக்கிறது.

ஆனால் இயந்திரத்தின் விலையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுமே தங்களது தனித்துவம் என்கிறார் பிரதீக். 

சைட் ஆர்ம் த்ரோயர் (sidearm thrower) விலை 2,500 ரூபாயாக இருக்கையில் மின்சார பந்துவீச்சு இயந்திரங்கள் 1.5 லட்ச ரூபாயில் துவங்கி 7-8 லட்ச ரூபாய் வரை ஆகும்.

”சைட் ஆர்ம் த்ரோயர் விலை மலிவாக இருப்பினும் அவை கடினமானதாகும். மின்சார பந்துவீச்சு இயந்திரங்கள் சாதாரண மக்களால் வாங்க முடியாத அளவிற்கு விலையுயர்ந்ததாகும். எங்களது இயந்திரத்தின் விலை இவை இரண்டிற்கும் இடைப்பட்டது,” என்றார்.

ஃப்ரீபௌலர் இயந்திரம் 26 கிலோ எடை கொண்டதாகும். சுமார் 60 கிலோ எடை கொண்ட மின்சார பந்துவீச்சு இயந்திரங்களைக் காட்டிலும் மிகவும் எடை குறைந்ததாகும்.

தற்சமயம் அமேசான் மற்றும் ஷாப்பிஃபையில் கிடைக்கும் பந்து வீச்சு இயந்திரத்தின் விலை 32,000 ரூபாயாகும். இதன் உண்மையான விலை 40,000 ரூபாய். ஆனால் பண்டிகைக்கால தள்ளுபடி விலையில் ஃப்ரீபௌலர் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் மேலும் வளர்ச்சியடைகையில் இதன் விலை குறைந்து 25,000-யில் இருந்து 30,000 ரூபாய்க்குள் கிடைக்கும்.

image


வருங்கால திட்டம்

ஃப்ரீபௌலர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. “இதுவரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் 25 யூனிட்கள் வரை விற்பனை செய்துள்ளோம். அத்துடன் 100 யூனிட்களுக்கான ஆர்டர் வந்துள்ளது,” என்றார் பிரதீக்.

இந்நிறுவனம் கிரிக்கெட் விளையாடப்படும் நாடுகள் அனைத்திலும் தனது தயாரிப்பை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

“ஆஸ்திரேலியா, யூகே, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்கள் இயந்திரத்தை பேஸ்பாலுக்கும் பயன்படுத்தலாம். எனவே அமெரிக்க சந்தையில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அத்துடன் பல்வேறு ஆசிய மக்கள் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடுகின்றனர்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ”கால்பந்துக்குப் பிறகு உலகம் முழுவதும் 1.5 பில்லியன் ரசிகர்களுடன் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. நாங்கள் தனிநபர்கள் மட்டுமின்றி பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், க்ளப்புகள், அகாடெமிக்கள், உள்விளையாட்டு அரங்கங்கள், சங்கங்கள், குடியிருப்புகள், கார்ப்பரேட்கள், மால்கள், பூங்காக்கள் போன்றவற்றில் எங்களது தயாரிப்பை சந்தைப்படுத்த உள்ளோம்,” என்றார்.

சுயநிதியில் இயங்கி வரும் ஃப்ரீபௌலர் 2020-ம் ஆண்டில் சுமார் 50,000 யூனிட்களை விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முதலீட்டை எதிர்நோக்கியுள்ளது. “உலகளாவிய கிரிக்கெட் மேம்பாட்டு முயற்சிகளுக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இணைந்து செயல்படுகிறோம்,” என்றார் பிரதீக்.

ஆங்கில கட்டுரையாளர் : சமீர் ரஞ்சன் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
124
Comments
Share This
Add to
Shares
124
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக