நாளை தொடங்கும் 32வது ஒலிம்பிக் போட்டிகள்: என்னென்ன சிறப்பம்சங்கள்?

இந்தியா சார்பில் 120 பேர் பங்கேற்பு!
5 CLAPS
0

32-ஆவது ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்டில் நடத்தப்பட வேண்டியது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, நடக்கமுடியாமல் போக, இந்த ஆண்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரபூர்வமாக நாளை தொடங்குகிறது.

தொடக்க நிகழ்ச்சி, டோக்கியோ தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியாவில் 23ம் தேதி மாலை 4.30 மணி அளவில் தொடக்க விழாவை காணலாம். தற்போது இருக்கும் கொரோனா சூழல் காரணமாக முக்கியமான சில தலைவர்கள் மட்டுமே தொடக்க விழாவில் கலந்துகொள்கின்றனர். ஜப்பான் மன்னர் நருஹிடோ உள்பட உலக நாடுகளைச் சோ்ந்த தலைவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

இந்தத் தொடக்க நிகழ்ச்சி உட்பட எந்த நிகழ்ச்சியையும், ரசிகர்கள் காண அனுமதி கொடுக்கப்படவில்லை. கொரோனா காரணமாக கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை, சுமாா் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 11,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக் சிறப்பம்சங்கள்!

* இந்த முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியின் போது பதக்கம் பெறுபவர்கள், பங்கேற்பாளர்கள், பதக்கம் வழங்குவோர் என யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

* மேலும், இந்த ஆண்டு பதக்கங்களை விளையாட்டு வீரர்களின் கழுத்தில் அணிவிக்கப்பட மாட்டாது என்றும், மேடைக்கு முன் பதக்கங்கள் கொண்டு வரப்படும், அதனை வீரர்களே எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். குழு புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

* சமீபகாலமாக அதிகரித்து வரும் நிறவெறியை எதிர்க்கும் வகையில் இந்த ஒலிம்பிக்கில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியினர் முதல் ஆட்டத்தின் போது முழங்காலில் சிறிது நேரம் நிற்க இருக்கின்றனர்.

* இதற்குமுன்பு டேபிள் டென்னிஸ், தடகளம், வில்வித்தை, ஜூடோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல் போன்ற விளையாட்டுகளில் கலப்பு பிரிவில் போட்டிகள் நடைபெற்றதில்லை. ஆனால் இந்த முறை கலப்புப் பிரிவில் போட்டிகள் நடக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

* முன்பு எந்த ஒலிம்பிக்கில் இல்லாத வகையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் 6 புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கராத்தே, ஸ்கேட்டிங், sport climbing, surfing ஆகியவற்றோடு 13 ஆண்டுக்கு முன் நீக்கப்பட்ட பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் ஆகியவை இந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது!

* டோக்கியோ 2021 ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் என 119 பேர் 16 பிரிவுகளில் 85 போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர்.

* இந்தியாவிலிருந்து 90 போ் கொண்ட முதல் பிரதான குழு ஏற்கெனவே டோக்கியோ சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது,

* ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானால் உருவாக்கப்பட்ட Hindustani Way எனும் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 

* தொடக்க நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் மூத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல இருக்கின்றனர்.

* இதேபோல் நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல இருக்கிறார்.

* இந்தியாவின் மூத்த வீராங்கனை மற்றும் ஆறு முறை சாம்பியனான மேரி கோமுக்கு இது கடைசி ஒலிம்பிக் ஆகும்.

* முதல்முறையாக மும்பையைச் சேர்ந்த தீபக் காப்ரா ஜிம்னாஸ்டிக் அம்பயராக ஒலிம்பிக்கில் பணியாற்ற இருக்கிறார்.

* தமிழகத்தில் இருந்து இந்தமுறை ஒலிம்பிக்கில் 12 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

* ஆரோக்கியா ராஜீவ், நாகநாதன் பாண்டி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி (ரிலே ரேஸ்); சத்தியன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்); சரத் ​​கமல் (டேபிள் டென்னிஸ்); மற்றும் மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்), நேத்ரா குமனன், கணபதி, மற்றும் வருண் (படகோட்டம்); பவானி தேவி (ஃபென்சிங்) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

* இதற்கிடையே, போட்டி அதிகாரப்பூா்வமாக நாளை தொடங்க இருந்தாலும், அணிகள் அளவிலான போட்டிகளின் தொடக்கச் சுற்றுகள் கடந்த செவ்வாய்க்கிழமையே தொடங்கிவிட்டது.

* அதன்படி, நடந்தப்போட்டிகளில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது ஜப்பான் சாஃப்ட்பால் அணி. ஆஸ்திரேலியாவை எட்டுக்கு - இரண்டு என்ற கணக்கில் வீழ்த்தி வென்றுள்ளது!

* இதற்கிடையே, 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் நடத்த இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறது.

Latest

Updates from around the world