பதிப்புகளில்

'முகவரி தந்த முதல் வெற்றி'- தெருவோர குழந்தைகளின் ரோல்மாடல் ஆகியுள்ள ஹெப்சிபா

Gajalakshmi Mahalingam
6th Apr 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

இந்திய குடிசைப்பகுதி மக்களின் வாழ்வியல் திரைப்படமாக பார்க்கப்பட்ட ஸ்லம்டாக் மில்லினர் படத்தைவிட சென்னையின் குடிசைவாழ் குழந்தையின் வெற்றிக்கதை அதிகம் கொண்டாடப்பட்டுவருகிறது. அண்மையில் பிரேசிலில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து சொந்தமண்ணுக்கு திரும்பிய மாணவி ஹெப்சிபாவின் கதை இது. அவரை தினசரி பத்திரிக்கைகள் மற்றும் நாளிதழ்கள் பாராட்டி கொண்டாடிக் கொண்டிருக்கின்றன, மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஹெப்சிபாவை ஒரு மாலைப் பொழுதில் நேர்காணல் கண்டது தமிழ் யுவர் ஸ்டோரி:

சென்னை என்ற உடன் எல்லா திரைப்படங்களிலும் காட்டப்படுவது சென்ட்ரல் ரயில் நிலையம், அந்த அடையாளத்தின் அருகில் உள்ள கண்ணப்பன் திடலில் பாதுகாப்பற்ற ஒற்றைச் சுவர் மற்றும் ஓலைகள் மூடிய வீட்டில் வசிக்கிறார் ஹெப்சிபா. சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு இது தான் தங்குமிடம் என்று தனது பேச்சைத் தொடங்கினார். 

“பள்ளியில் 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதிருந்தே எனக்கு ஓட்டப்பந்தயம் மீது அதிக ஆர்வம். பள்ளி அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் நான் முதல் மாணவியாக வந்ததைப் பார்த்து என்னுடைய உடற்கல்வி ஆசிரியர் எனக்கு இதில் நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறினார். அது இப்போது உண்மையாகி இருக்கிறது” என்று மகிழ்ச்சி அடைகிறார் ஹெப்சிபா.
image


இவர் சூளைமேட்டில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு வரலாற்றுப் பிரிவு படித்து வருகிறார். ஹெப்சிபா மேலும் தொடர்ந்து பேசுகையில் “உடற்கல்வி ஆசிரியரின் ஊக்கத்தை அடுத்து 7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்கிறேன். அதன் பின்னர் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று தோல்யிடைந்தேன். பின்னர் பொதுதேர்வில் கவனம் செலுத்தும் எண்ணத்தில் விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாகச் சொல்கிறார் பள்ளி மாணவி ஹெப்சிபா.

பள்ளி நேரம் போக மீதி நேரம் எல்லாம் தெருவோரக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கருணாலயா தொண்டு நிறுவனத்திலேயே செலவிடுகிறார் ஹெல்பிபா. அவருக்கு பிரேசில் செல்லும் வாய்ப்பை வழங்கியதும் அந்த தொண்டு நிறுவனம் தான். சென்னையில் பகுதி வாரியாக நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயப் போட்டியில் நான் முதல் மாணவியாக வந்ததைக் கண்டு கருணாலயா அமைப்பின் நிறுவனர் பால்சிங் தன்னை பிரேசிலுக்கு அழைத்துச் செல்ல முன் வந்தததாக கூறுகிறார். ஆனால் போட்டிக்குத் தயாராக 2 வார காலம் மட்டுமே இருந்ததால் என்னுடைய முழு கடின உழைப்பையும் அதில் செலுத்த வேண்டிய நெருக்கடி இருந்தது என்கிறார் ஹெஸ்பிபா. இரண்டு பயிற்சியாளர்கள் எனக்கு ஓட்டப்பந்தயம் பற்றிய முழு பயிற்சியையும் அளித்தனர், என்னுடைய ஒட்டுமொத்த பயிற்சிக் காலமும் இரண்டே வாரம் தான், பயிற்சியின் போது கருணாலயா அமைப்பு எனக்கு உணவு, உடை வெளியூர் பயண ஏற்பாடு என அனைத்து பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது” என்று கூறும் ஹெஸ்பிபா அந்த அமைப்பிற்கு தன்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறார்.

வாய்ப்புகள் சாமானியர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது அப்படிஒரு வாய்ப்பு ஹெஸ்பிபாவிற்கு கிடைத்த போதும் விதி தன் விளையாட்டைத் தொடங்கியது. ஆம் பிரேசில் செல்வதற்கு ஹெஸ்பிபாவிற்கு பாஸ்போர்ட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது, ஏனெனில் அவருக்கு நிலையான முகவரி இல்லை ஹெஸ்பிபா ஒரு சாலையோரத்தில் வசிக்கும் குழந்தை. திறமைகள் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இது போன்ற சோதனைகள், சாதனைகளுக்கு முட்டுக்கட்டை போடும் என்ற போதும் கருணாலயா அமைப்பின் தொடர் முயற்சியால் தமிழக தடகள சங்கத்தின் உதவியோடு பாஸ்போர்ட் பெற்று பிரேசில் சென்றார் ஹெப்சிபா.

வாய்ப்புகளும், சம உரிமைகளும் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக லண்டனைச் சேர்ந்த 'Street side children united' என்ற அமைப்பு தெருவோரக் குழந்தைகளுக்கு Streetside game என்ற போட்டியை முதன் முறையான பிரேசிலில் நடத்தியது. மினி ஒலிம்பிக் குழுவினரால் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 9 நாடுகளைச் சேர்ந்த தெருவோரக் குழந்தைகள் பங்கேற்றன.

“இந்தியாவின் சார்பில் என்னோடு சேர்ந்து சென்னையில் இருந்து 5 பேர் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் வெல்வேன் என்று முதலில் எனக்கு நம்பிக்கையே இல்லை எனினும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் ஜெயிச்சேன், அப்போது அனைவரும் என்னைப் பாராட்டியது எனக்கு உத்வேகம் அளித்தது. அதைத் தொடர்ந்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம், 110 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் என்று அடுத்தடுத்து பதக்கங்களை குவித்தேன். சர்வதேச அளவில் நான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே மூன்று பதக்கங்களைக் குவித்திருப்பதில் என்னுடைய குடும்பத்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி"
image


ஹெப்சிபாவிற்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், தந்தை இறந்துவிட்டார், அவரின் தாயார் ஆராயி, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து 4 பெண் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். ஹெப்சிபா பதக்கம் வென்ற சந்தோஷத்தில் அவருடைய குடும்பமே திக்குமுக்காடியுள்ளது. நான் விருது வாங்கியது ஒரு புறம் , ஊடகங்களின் பார்வை என் மீது திரும்பி உள்ளது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை உறக்கச் சொல்ல, வெற்றியின் அவசியத்தை தங்களுக்கு உணர்த்தியுள்ளதாக பெருமிதம் அடைகிறார் ஹெப்சிபா.

"நான் ஃபிளைட்ல போவேன்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை, ஆனால் அது நடந்தது, நான் தான் எங்கள் குடும்பத்தில் முதல் முதலில் ஃபிளைட்டில் வெளிநாடு செல்பவர் என்பதே என்னுடைய அம்மாவிற்கு மிகப்பெரிய சந்தோஷம், அதிலும் தற்போது பதக்கம் வென்றதன் மூலம் ஊடகங்களின் பார்வை எங்கள் மீது விழுந்துள்ளது, அவர்கள் எங்களின் கருத்தை உற்றுநோக்குகிறார்கள் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" எனக்கூறுகிறார் ஹெப்சிபா.

பிரேசிலில் விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி தெருவோரக் குழந்தைகளின் அடையாளம், கல்வி, வன்முறை பற்றி, தலைநகர் ரியோ டீ ஜெனிரோவில் 3 நாட்கள் உலக மாநாடு நடந்தது. அதிலும் பங்கேற்று ஹெப்சிபா தெருவோரக் குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசியுள்ளார். தெருவோரக் குழந்தைகளுக்கு கட்டணிமில்லா கல்வியை வழங்க வேண்டும் என்பதோடு, இடர்பாடுகளின்றி அவர்களை பள்ளிகளில் சேர்த்துக் கொண்டு கல்விச் சேவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஏனெனில் பள்ளிகள் குழந்தைகளின் நிரந்தர முகவரியைக் கேட்கின்றன, ஆனால் இவர்கள் வசிப்பது சாலையில் என்பது தான் இங்கே இருக்கும் பிரச்னை என்று கூறும் ஹெஸ்பிபா, எங்களுக்கு சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே வீடு கட்டித் தரப்பட வேண்டும் என்று கோரிக்கையையும் வைக்கிறார்.

நான் பிறந்தது முதல் வளர்ந்தது எல்லாமே சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள அல்லிக்குளம் சாலையோரத்தில் தான், அதன் பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் இருக்கும் சாலையோரத்தில் வாழ்ந்து வந்தோம். ஆனால் நாங்கள் அங்கு வசிப்பது மற்றவர்களை முகம் சுளிக்க வைப்பதாகக் கூறி எங்களை வேறு இடத்திற்கு மாற்றி விட்டனர், இதனால் நாங்கள் கண்ணப்பன் திடலில் வீடற்றோருக்கான மாநகராட்சி விடுதியில் தற்போது வசித்து வருகிறோம் என்று ஆதங்கப்படுகிறார் ஹெப்சிபா. எங்கள் கல்வி, அம்மாவின் வியாபாரம் அனைத்துமே சென்னையை ஒட்டியே அமைந்துள்ளதால் எங்களுக்கு இந்தப் பகுதியிலேயே வீடு தேவை என்கிறார்.

ஒரு ஓட்டப்பந்தய வீரருக்கு ஆரோக்கியமான உணவு கிடைத்தால் மட்டுமே அவர் நன்கு ஓடக்கூடிய அளவில் சக்தி கிடைக்கும் ஆனால் அந்த சக்தி இயற்கையாகவே ஹெஸ்பிபாவிற்கு அமைந்துள்ளது, அன்றாட வாழ்வில் சராசரி மக்களுக்குக் கிடைக்கும் சரிவிகித உணவு கூட கிடைக்காவிட்டாலும் வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறார் இந்த தெருவோரத் தங்கம். 

“ஓட்டப்பந்தயத்தில் என்னுடைய முன்மாதிரி தடகள வீராங்கனை ஷைனி வில்சன், எதிர்காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் மேலும் வெற்றி பெற்று சிறந்த தடகள வீராங்கனையாக நான் விரும்புகிறேன். அதோடு தெருவோரக் குழந்தைகளுக்கு தடகளப் போட்டிக்கான இலவச பயிற்சி அளிக்கும் பயிற்றுனராக விரும்புகிறேன்” என்ற கூறுகிறார் இந்த 16 வயது டீன் ஏஜ் மாணவி.
image


ஹெப்சிபாவைப் போன்றே ஆண்களுக்கான குண்டு எரிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வந்திருக்கிறார் மற்றொரு டீன் ஏஜ் பையன் அசோக். 

"சொந்த ஊரான தருமபுரியை விட்டு வெளியேறி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த போது எனக்கு அடைக்கலம் கொடுத்தது கருணாலயா அமைப்பு. அவர்களின் பயிற்சி மற்றும் ஊக்கம் காரணமாக 2014ம் ஆண்டு பிரேசில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்றேன், தற்போது முதல் முறையாக பங்கேற்ற குண்டு எரிதல் போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியை அளிப்பதோடு மேலும் உத்வேகம் கொடுக்கிறது' என்கிறார் அசோக்.

தெருவோரக் குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்தி கொண்டுவரப்பட்டிருக்கும் ரியோ தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உலக மாநாட்டு அரங்கில், அனைவரின் பாராட்டையும் பெற்று வந்திருக்கிறார் சென்னை தெருவோரம் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு கல்லூரி மாணவி உஷா. “தெருவோரக் குழந்தைகளின் கல்விக்கு அடையாளம் அவசியம் எனவே அரசு எங்களுக்கு நிலையான முகவரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தெருவோரக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளையும் அதன் அத்தியாவசத்தையும் உணர்த்தி நான் உரையாற்றினேன் என்கிறார் உஷா. தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் தங்களது உரிமைகளை தெரிந்து கொள்ளும் வகையில் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட உள்ளதாகவும் கூறுகிறார் அவர்.

வீடற்று சாலையோரம் வசிக்கும் குழந்தைகளுக்கும் திறமை உள்ளது அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் இவர்கள். மற்ற சமூகம் மக்களையே முன்உதாரணமாக எடுத்துக் கொண்ட அவர்களுக்கு, தங்கள் சமூகத்திற்குள்ளாகவே ஒரு முன்மாதிரியாக ஹெப்சிபா கிடைத்துள்ளது தெருவோரக் குழந்தைகளுக்கு உத்வேகம் அளிப்பதோடு, தாங்களும் வாழ்வில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. எனினும் இது போன்ற குழந்தைகளுக்கு பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முன் வந்து ஸ்பான்சர் வழங்கி உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்கள் மத்தியில் உள்ளது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடுத்த தலைமுறையை சிறப்பாக வழிநடத்தி செல்ல வழிவகுத்த ஹெப்சிபா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கருணாலா அமைப்பின் முயற்சி நிச்சயம் பாராட்டிற்குரியதே. ஹெப்சிபாவின் வெற்றி அனைத்துத் தரப்பு குழந்தைகளுக்கும் சமவாய்ப்புகளும், சமஉரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதை இந்த சமுதாயத்திற்கு உணர்த்தியுள்ளது.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

உடுமலைபேட்டையில் இருந்து ஆம்ஸ்டர்டாம் வரை - மணி குமாரின் கால்பந்து ஆர்வம்

சரக்கு வண்டி ஓட்டிப் பிழைக்கும் தேசிய விருது பெற்ற பாக்சிங் வீரர்!

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக