34 வருட கனவு: மகளோடு சேர்ந்து முனைவர் பட்டம் பெற்று சாதனைப் படைத்த அம்மா!

அம்மாவும், மகளும் ஒரே நாளில் முனைவர் பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியுள்ளனர்.

5th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

டெல்லியைச் சேர்ந்தவர் 56 வயது பெண் மாலா தத்தா. பாதுகாப்பு அமைச்சகத்தில் பொருளாதாரப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் இவர். மாலா தனது மகளுடன் சேர்ந்து சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.


அப்படி என்ன சாதனை என்று கேட்கிறீர்களா? அம்மாவும், மகளும் சேர்ந்து ஒரே நாளில் டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இதுபோல் நடப்பது இதுவே முதல் முறை என டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Phd

மாலா தத்தாவுக்கு பிஎச்டி படித்து முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பது பல ஆண்டு கனவு. 34 ஆண்டுகளுக்கு முன்பு முதுநிலை பட்டம் பெற்ற மாலாவால், அப்போது தனது கனவை நனவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் அமையவில்லை.


கடந்த 2012ம் ஆண்டு தான் மாலா தத்தாவுக்கு பிஎச்டி படிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. பிளஸ் 2 படித்து வந்த தனது இளைய மகளின் பொதுத் தேர்வுக்காக மாலா விடுப்பு எடுத்திருந்தார். அதையே சாக்காக பயன்படுத்தி, டெல்லி பல்கலையில் பொருளாதாரம் தொடர்பாக பிஎச்டி செய்ய விண்ணப்பித்தார்.


இதற்கிடையே தாயை பார்த்து தானும் முனைவர் பட்டம் வாங்க வேண்டும் என்ற எண்ணம், மாலாவின் மூத்த மகளான 26 வயது ஸ்ரேயாவுக்கு வந்தது. ஆனால் அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து 2014ல் தான் பிஎச்டிக்கு விண்ணப்பித்தார். அவர் ஆய்வு செய்தது மனநலம் தொடர்பான துறையில்.

"நானும் எனது அம்மாவும் ஒன்றாக பிஎச்டி முடிக்க முடிவெடுத்தோம். அப்போது தான் அந்த தருணம் வாழ்வில் மறக்க முடியாததாக இருக்கும். அம்மா பிஎச்டி-யில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தான் நான் சேர்ந்தேன். எனவே எனது படிப்பை முடிக்க எனக்கு மூன்று ஆண்டுகள் தான் அவகாசம் இருந்தது. நான் மிகக் கடுமையாக உழைத்து முனைவர் பட்டத்தை வாங்கினேன்,” என்கிறார் மாலாவின் மூத்த ஸ்ரேயா மிஸ்ரா.
Mala

பட உதவி: Hindustan Times

மாலாவும், ஸ்ரேயாவும் கடந்த ஆண்டே தங்கள் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்துவிட்டனர். எனவே கடந்த ஆண்டே அவர்களுக்கு பிஎச்டி பட்டம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பட்டமளிப்பு விழா நடந்த தினம், ஸ்ரேயாவின் திருமணத்திற்கு மறுநாள். அதனால் அவர்களால் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

"நாங்கள் மட்டும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தால் அன்றைய தலைப்புச் செய்தியே நாங்கள் தான் என டெல்லி பல்கலைக்கழக அதிகாரிகள் என்னிடம் கூறினார். அது ஒருபக்கம் கஷ்டமாக இருந்தாலும், இப்போது மேலும் சந்தோஷமாக உணர்கிறேன். காரணம் என்னவென்றால், எனது கணவரும் இப்போது என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார் இல்லையா. இதுவும் சந்தோஷமாக தான் இருக்கிறது,” என்கிறார் ஸ்ரேயா.

சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறார்கள் மாலாவும், ஸ்ரேயாவும். நம்பிக்கை இருந்தால் யாராலும், எப்போது வேண்டுமானாலும் சாதிக்க முடியும். நீங்கள் விரும்பியதை அடைய ஏதாவது ஒரு வழி இருக்கத்தான் செய்யும். அந்த வழியை கண்டுபிடிக்க வேண்டியது தான் உங்களுடைய முக்கியமான வேலை. இதைத்தான் இந்த அம்மாவும், மகளும் சேர்ந்து சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India