பதிப்புகளில்

இரண்டாம், மூன்றாம் கட்ட ஊர்களில் தொழில்முனைவை ஊக்கப்படுத்தும் 'நேட்டிவ் லீட்'

Induja Raghunathan
18th Nov 2015
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

மதுரையை சேர்ந்த சிவராஜா ராமநாதன் 90’களிலிருந்து தொழில்நுட்பத் துறை சம்பத்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வமுள்ள சிவராஜா, ஆரம்ப கால கணினிகள் முதல் செல்போன், இன்டர்நெட் போன்ற பெரும்பாலான தொழில் நுட்ப சேவைகளையும், பொருட்களையும் தென் தமிழகத்தில் இவர் நடத்திய நிறுவனங்களே அறிமுகம் செய்தது. இதேப்போல் மென்பொருள் சம்பத்தப்பட்ட பல ப்ராஜக்டுகளை மதுரையில் இருந்து செய்து வந்ததில் முன்னோடியாக திகழ்ந்தார்.

தொழில்முனைவு முயற்சியில் ஈடுபடும் எண்ணம் சிவராஜா மனதில் எப்பொழுதும் இருந்த ஒன்று. இருப்பினும் மதுரை போன்ற நகரங்களில் உள்ள, தொழில்முனைவு ஆர்வம் உள்ளோர் பலரும், சென்னை அல்லது பெங்களுரு செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர், இது சிவராஜா மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. இந்த எண்ணத்தை மாற்றி, மதுரை போன்ற இரண்டாம் கட்ட ஊர்களிலிருந்தும் பலரும் தொழில்முனைவை தேர்ந்தெடுக்க, ஊக்கம் அளிக்கும் வகையில் “நேட்டிவ் லீட்” (Native Lead) என்னும் அமைப்பை நிறுவினார் சிவராஜா ராமநாதன். இதைப்பற்றியும் சிறு நகரங்களில் தொழில்முனைவு சூழ்நிலைகள் பற்றியும் விரிவாக தமிழ் யுவர்ஸ்டோரி யுடன் நடத்திய உரையாடல் இதோ…

image


‘நேட்டிவ் லீட்’ உருவானது எப்படி?

தொழில்முனை ஆர்வமுள்ளவர்கள் தங்கள் புதிய எண்ணங்கள், புதிய முயற்சிகளை அவரவரின் நகரங்களிலிருந்து கொண்டே செய்தால் இரண்டாம், மூன்றாம் கட்ட ஊர்களும் பயனடையும் என்று நம்பினார் சிவராஜா. தன் சிந்தனை மற்றும் ஆசைக்கு உரு தரும் வகையில் சிஐஐ (CII) யில் ஐடி வட்டத்தில் 2010 ஆம் ஆண்டு கன்வீனராக இருந்தபோது 'திறன் மேம்படுத்தும்' முயற்சியாக “நேட்டிவ் லீட்” (NativeLead) என்னும் ஒரு பிரிவை ஏற்படுத்தினர்.

மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள சிறு ஊர்களை சேர்ந்த இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், அவர்களை சரியான வழியில் முன் நடத்திச் செல்லவும் ‘நேட்டிவ் லீட்’ உதவிகரமாக இருக்கும் வகையில் அந்த அமைப்பை வடிவமைத்தார். இதைப் பற்றி சிவராஜா கூறுகையில், "நேட்டிவ் லீட், ஒரு சமூக முயற்சி. இந்த அமைப்பு, முதலீடும மட்டுமே ஏற்படுத்தும் நிறுவனம் அல்ல. சென்னைக்கு சென்றால் தான் தொழில்முனைவு சாத்தியம் என்று நினைக்கும் மதுரை மற்றும் சுற்றுபுற இடங்களை சேர்ந்த இளைஞர்களை, தத்தம் ஊர்களில் இருந்தபடியே தொழில்முனைவை தொடர ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட ஒரு தொடர் முயற்சி. அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள், தொழில்நுட்ப செய்திகள், அனுபவசாலிகளின் அறிவுரைகள் மற்றும் முதலீடு திரட்ட தேவையான உதவிகளை நேட்டிவ் லீட் அளித்து வருகிறது” என்றார்.

நேட்டிவ் லீட் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி

2012 ல் நேட்டிவ் லீட் ஒரு தனி அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் தொழில்முனைவை ஊக்குவிக்க, மதுரையில் பல தலைமுறைகளாக தொழில் புரியும் தொழிலதிபர்கள் மற்றும் டி.வி.எஸ் குழமம், தியாகராசர் குழுமம் போன்ற புகழும் நம்பகத்தன்மையும் வாய்ந்த நிறுவனங்களின் வழி காட்டுதல் மற்றும் உதவிகள் நேடிவ்லீடு அமைப்புக்கும் அந்த அமைப்பை அணுகும் இளம் தொழில் முனைவோருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுத்தது.

பலரும் தொழில்முனைவு சூழ்நிலையை மதுரையில் விரிவுபடுத்த உதவிக்கரம் நீட்டியதாக சிவராஜா கூறினார். அதேப்போல் மதுரையிலிருந்து சென்னை மற்றும் பெங்களுரு சென்று தொழிலில் வெற்றியடைந்த முக்கிய பிரமுகர்கள் நாகராஜா பிரகாசம் மற்றும் மாஃபா கே.பாண்டியராஜன் ஆகியோர்களை நேட்டிவ் லீட்டில் இணை நிறுவனர்களாக இணைத்துக்கொண்டது. இது நேட்டிவ் லீட் மேலும் வளர பெரும் உதவியாக இருந்ததாக சிவா கூறுகிறார்.

imageதற்போது நாகராஜா பிரகாசம் நேட்டிவ் லீடின் சேர்மனாக இருந்து வருகிறார். இவரது பங்களிப்பு நேட்டிவ் லீட் நாடளாவிய வளர்ச்சி பெற பெரும் உதவியாக இருப்பதாக சிவா கூறுகிறார். அதே போல கோவையில் விரிவாக்கம் செய்த போதும் அங்குள்ள முக்கிய தொழில் முனைவோர்கள் பலரும் எங்கள் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர் என்று சிவா கூறுகிறார், மேலும் புகழ் பெற்ற PSG பொறியியல் கல்லூரி தங்களது வளாகத்திலேயே எங்களுக்கு அலுவலக வசதியை உருவாக்கி கொடுத்திருப்பதையும் நன்றியுடன் குறிப்பிடுகிறார். இது போலவே திருச்சி , சேலம், ஈரோடு, வேலூர் போன்ற இடங்களிலும் அங்குள்ள முன்னணி தொழில் முனைவோர்கள் நேடிவ்லீடு அமைப்பின் செயல் பிரிவை நடத்த பெரிதும் துணை செய்கிறார்கள் என்கிறார்.

நேட்டிவ் லீட் ஊக்குவிக்கும் தொழில்முனைவுகள்

“தொழில்நுட்பம் மட்டும் முக்கியம் இல்லை, சிறந்த, புதுமையான ஐடியாக்களும் அதை செயல்படுத்தும் திறனுமே தொழில்முனைவுக்கு முதல் அவசியம்” என்று கருதுகிறார் சிவராஜா. வித்தியாசமான யுக்தி, அதை சந்தைப்படுத்தும் சாமர்த்தியம் இருந்தால் எந்த புதுயுக தொழில்முனை முயற்சியும் வெற்றி பெரும் என அவர் நம்புகிறார். இதற்கு ‘ரெட்பஸ்’ போன்ற உதாரணத்தை சுட்டிக்காட்டுகிறார்.

மதுரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் பல புதிய தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் உள்ளது. அதை கண்டறிந்து செய்ல்படுத்த நினைக்கும் இளைஞர்களை வழிநடத்தி செல்கிறது எங்கள் அமைப்பு. இவ்வாறே “ஹாப்பி ஹென்ஸ்” என்ற தொழில்முனை நிறுவனம், இயற்கை முட்டை தயாரிப்பில் ஈடுபட்டு இன்று லாபகரமாக இயங்கி கொண்டிருக்கிறது. இதற்கு நாங்கள் பல ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியுள்ளோம் என்கிறார் பெருமையாக.

கல்லூரிகளில் நேட்டிவ் லீட் பங்கு

“தொழில்முனைவர்கள் மட்டும் எங்கள் இலக்கு அல்ல, கல்லூரி மாணவர்களை படிக்கும் பொழுதிலிருந்தே தொழில்முனைவுக்கு ஊக்கப்படுத்தும் முயற்சியில் நாங்கள் தொடக்கம் முதல் செயல்பட்டு வருகிறோம். மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தொழில்முனைவு பற்றிய கருத்தரங்குகள், அவர்களுக்குள் இருக்கும் புதிய எண்ணங்களை வெளிகொணர்தல், அதை செயல்படுத்தும் வழிவகைகளை நேடிவ் லீட் மூலம் வழிநடத்துகிறோம்” என்றார். மதுரையில் தங்களுக்கு இது போன்ற உதவி ஆலோசனை வழங்கும் அமைப்பு இருப்பதை உணர்ந்த பல கல்லூரி மாணவர்கள் பட்டத்துக்கு பின் தங்கள் தொழிலை தொடக்க முன் வந்துள்ளது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது என்றும் மேலும் கூறினார். இந்த முயற்ற்சிகளுக்கு SAP நிறுவனம் பெரிதும் துணை செய்கிறது என்றும் மேலும் கூறினார்.

'நேட்டிவ் ஏன்ஜெல்ஸ் நெட்வொர்க்' தொடக்கம்

சென்னை, பெங்களுரு, மும்பை போன்ற நகரங்களில் இருந்து வல்லுனர்க்ளை அழைத்து வந்து ஸ்டார்ட அப் மீட், பிட்ச் ஃபெஸ்ட் போன்ற நிகழ்வுகளை மதுரையில் நடத்தி வருகிறது நேட்டிவ் லீட். “சிறு நகரங்களில், தொழில்முனை முயற்சிகளுக்கு விதை நிதி வங்கிகளிடம் பெறுவது மிக கடினமாக இருந்தது. போதிய பாதுகாப்பு இல்லாமல் கடன் அளிக்க வங்கிகள் மறுப்பதால் பல இளைஞர்கள் தங்கள் கனவு முயற்சிகளை கைவிடுவதை பார்த்தோம்” என்னும் சிவா, இதற்கு தீர்வு காணும் விதமாக, நேட்டிவ் லீடின் ஒரு பிரிவாக “நேட்டிவ் ஏன்ஜெல்ஸ் நெட்வொர்க்” அக்டோபர் 2014 ஆம் ஆண்டு தொடங்கியதாக கூறினார். “இண்டியன் ஏன்ஜெல்ஸ்” உதவியுடன் அறிவு ஆலோசனை பெற்று, மதுரையைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் உதவியோடு நேட்டிவ் ஏன்ஜெல்ஸ் இயங்குகிறது.

image


கடந்த ஆண்டு சுமார் 29 முதலீட்டாளர்களுடன் இந்த நெட்வொர்க் தொடங்கியதாக சிவா தெரிவித்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது முதல் முதலீட்டை இந்த நெட்வொர்க் மூலம் செய்ததாக மகிழ்ச்சியுடன் கூறினார். மதுரையை சேர்ந்த “ரெயின்ஸ்டாக்” என்னும் தொழில்முனைவு நிறுவனத்தில் தங்கள் முதல் முதலீட்டை செய்துள்ளார்கள். 10 லட்சம் ரூபாய் முதல் கட்ட நிதியை இந்நிறுவனம் நேட்டிவ் லீட் மூலம் பெற்றுள்ளதாக கூறினார் சிவா. இதுவரை 70 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் மேலும் 1.10 கோடிக்கான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இது வெறும் ஆரம்பம் தான்” என்கிறார் மேலும். தொழில் ஆலோசனை, சட்டரீதியான உதவிகள், எண்ணங்களை நடைமுறைப்படுத்தல், நிறுவனர்களின் பணிகள் என்று அனைத்திலும் துணை நிற்கிறது நேட்டிவ் லீட்.

நேட்டிவ் லீட் விரிவாக்கம்

மதுரை மட்டுமல்லாது கோவை,திருச்சி, சேலம், ஈரோடு, சிவகாசி, வேலூர், நெல்லை என்று தமிழகத்தின் பல ஊர்களிலும் நேட்டிவ் லீட் தன் கிளைகளை விரிவுபடுத்தி வருகிறது. ஆங்காங்கே உள்ள தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுவதாக சிவா தெரிவித்தார். மேலும் பலரும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கப் பட்டால் தங்கள் அனுபவங்களை பகிர்வதில் பயனடைய முடியும் என நம்புகிறார்.

மதுரை தவிர இதர நகரங்களிலிருந்தும் இணைந்து தற்போது சுமார் 103 முதலீட்டாளர்கள் நேட்டிவ் ஏன்ஜெல்ஸ் நெட்வொர்க்கில் உள்ளனர். முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளும் பிட்ச் ஃபெஸ்டில் தொழில்முனை ஐடியாக்களை முன் வைக்க இளைஞர்கள் அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சிவா கூறுவதலாம், “ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால் ஒதுங்கி நிற்க வேண்டாம், தயங்க வேண்டாம், நீங்கள் உங்கள் எண்ணங்களை, தொழிலைப் பற்றி தமிழிலேயே சொல்லலாம். எங்கள் முதலீட்டாளர்கள், மொழிக்கு அல்ல, புத்தாக்கத்துக்கே முன்னுரிமை தருவார்கள்” என்று தெளிவாக சொல்கிறார்.

image


இந்தியாவில் ஒரு சிலது தவிர பிரபலமாக உள்ள அனைத்து பிராண்டுகளும் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுடைய அறிவுசார் சொத்துரிமை பெற்றதாகவே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இந்திய நகரங்கள் அனைத்திலும் இளைஞர்கள் ஆர்வத்துடனும், புதிய எண்ணங்களுடன் ஊக்குவிக்கப்பட காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, தொழில்முனைவில் சரியான பாதையை அமைத்துக்கொடுத்தால் நகரங்கள் என்றில்லை சிறு கிராமங்களிலிருந்தும் பெரிய பிராண்டுகளை, பல துறைகளிலும் உருவாக்கி நம் நாட்டின் பெருமையை நிலைநாட்டக்கூடிய நாள் தொலைவில் இல்லை என்று சிவா முடிக்கிறார்.

இணையதள முகவரி: NativeLead

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக