பதிப்புகளில்

தங்களது அறக்கட்டளை மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் பில்லியனர்கள்!

posted on 6th October 2018
Add to
Shares
34
Comments
Share This
Add to
Shares
34
Comments
Share

கொடுப்பது பாராட்டுதற்குரியது எனும் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொடுப்பது முக்கியமானதாகும்.

இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் தொழிலதிபர்களும் கொடுப்பதன் அவசியத்தை நன்குணர்ந்துள்ளனர்.

image


மும்பையைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான Dasra ஆலோசனை நிறுவனமான Bain & Company உடன் இணைந்து ’இந்திய சமுதாய தொண்டு அறிக்கை 2018 – நாளைய கொடையாளியைப் புரிந்துகொள்ளுதல்’ என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நவீன யுக கொடையாளிகள் தாங்கள் ஆதரவளிக்கும் நோக்கத்தில் மிகவும் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்பட்ட ஆர்வமே நன்கொடை வழங்க உந்துதலளிக்கிறது.

Bain & Comapany பார்ட்னர் மற்றும் அறிக்கையின் இணை ஆசிரியரான அர்பன் ஷேத் கூறுகையில், 

“நாட்டு மக்கள்தொகையில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். 2016-ம் ஆண்டில், 1.06 மில்லியன் குழந்தைங்கள் ஐந்து வயது முடிவதற்கு முன்பே இறந்துவிடுகிறது. நாடு இத்தகைய சூழலில் இருக்கையில் தனிநபர்கள் அதிகம் பங்களிப்பது மட்டுமின்றி அவர்களது பங்களிப்பு சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்தியாவில் சமுதாய அடிநிலையில் இருக்கும் மக்கள் 800 மில்லியன் பேர் உள்ளனர். அவர்களைச் சென்றடைந்து தாக்கத்தை ஏற்படுத்த சுயதொழில் செய்யும் தனிநபர்கள், தொழில்முனைவோர், குடும்ப வணிகத்தில் ஈடுபட்டோர் போன்றவர்கள் ஒரு ஆண்டிற்கு நன்கொடையாக சராசரியாக 15,000 டாலர் முதல் 75,000 டாலர் வரை பங்களித்துள்ளனர். சிலர் 7,65,000 டாலருக்கும் அதிகமாகவும் வழங்கியுள்ளனர்.

அறக்கட்டளை வாயிலாகவும் லாப நோக்கமற்ற முயற்சிகள் வாயிலாகவும் பல்வேறு நோக்கங்களுக்காக ஆதரவளித்துள்ள இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் பட்டியல் இதோ:

அசிம் பிரேம்ஜி

நியாயமான, சமத்துவமான, நிலையான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான விப்ரோ லிமிடெட் நிறுவிய அசிம் பிரேம்ஜி, அசிம் பிரேம்ஜி தொண்டு நிறுவனத்தை (Azim Premji Philanthropic Initiatives Pvt Ltd) 2014-ம் ஆண்டு நிறுவினார். 

image


இந்நிறுவனம் வாயிலாக அசிம் ப்ரேம்ஜி நாட்டில் ஏழ்மை நிலையிலும் எளிதாக பாதிக்கப்படும் நிலையிலும் உள்ளவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறார்.

தனிநபர், சமூகம், அமைப்பு போன்ற வெவ்வேறு நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இந்நிறுவனம் நிதி வழங்குதல், செயல்களை சாத்தியப்படுத்துதல், முறையாக திட்டமிடல் ஆகிய மூன்று பொறுப்புகளையும் கையாள்கிறது.

சாலையோரக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு சாரா நிறுவனங்களில் ஆண்டுதோறும் 500 கோடி ரூபாயை இந்நிறுவனம் முதலீடு செய்கிறது. சைல்ட்லைன் இண்டியா ஃபவுண்டேஷன், EnAble India, Grameen Vikas Sanstha, Parivarttan, Mobility India போன்றவை இவர்களது பார்ட்னர் நிறுவனங்களாகும்.

2001-ம் ஆண்டு துவக்கத்தில் கிராமப்புறங்களில் ஆரம்பக் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையை நிறுவினார் அசிம் பிரேம்ஜி.

ஷிவ் நாடார்

HCL நிறுவனர் மற்றும் தலைவர் ஷிவ் நாடார் 1994-ம் ஆண்டு ஷிவ் நாடார் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளையை சமூக பொருளாதார வேறுபாடுகளைக் களைந்து மாற்று கல்வி மூலம் தனிநபர்களுக்கு சக்தியளித்து அதிக சமத்துவம் நிறைந்த திறன் சார்ந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அவர் நிறுவினார்.

”தனிநபர் மாற்றத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் கல்வியே மிகவும் வலிமையான ஆயுதம் என நம்புகிறேன்,” என்றார் ஷிவ் நாடார்.

image


பத்மபூஷன் விருது பெற்ற இவர் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு கல்வி நிறுவங்களைத் துவங்கினார். வித்யாக்யான், சிக்‌ஷா இனிஷியேடிவ், ஷிவ் நாடார் பள்ளி, எஸ்எஸ்என் இன்ஸ்டிட்யூஷன்ஸ், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், கிரண் நாடார் கலை நிறுவனம் ஆகியவற்றின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த 12,000-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கல்வி வழங்கியுள்ளார். தனது அறக்கட்டளை வாயிலாக ஹெல்த்கேர் உள்ளிட்ட பல்வேறு தொண்டு முயற்சிகளுக்கு 630 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அனில் அகர்வால்

Vendanta Resources Plc நிறுவனர் மற்றும் தலைவர் அனில் அகர்வால் 1992-ம் ஆண்டு வேதாந்தா அறக்கட்டளை நிறுவினார். சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி வழங்கி அவர்களது அடிப்படைத் திறன்களை மேம்படுத்தி தகுந்த பணியில் இணைய உதவுவதை நோக்கமாகக் கொண்டு இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது.

image


பள்ளிக்குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கணிணி அறிவு உள்ளிட்ட தொழில்முறை பயிற்சிகள் வழங்குதல், பெண்கள் நிலையை மேம்படுத்துதல், வாழ்வாதார திட்டங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவுதல் போன்றவற்றில் இந்த அறக்கட்டளை பணியாற்றுகிறது. நிலையான தாக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்கள், சிவில் சமூகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.

2013-14-ல் வேதாந்தா அறக்கட்டளை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், 4.1 மில்லியனுக்கும் அதிகமானோரின் சுகாதார மேம்பாடு, கல்வி, வாழ்வாதாரம் போன்றவற்றை மேம்படுத்தும் சமூக திட்டங்களுக்கு நிதி வழங்குதல் போன்றவற்றில் 49 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. 2015-ம் ஆண்டு வேதாந்தா க்ரூப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து முதல் ’நந்த் கர்’ (Nand Ghar) அல்லது நவீன அங்கன்வாடியைத் திறந்து வைத்தது.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்தியாவில் உள்ள பின்தங்கிய பெண்களின் கல்விக்கு ஆதரவளிக்க 1996-ம் ஆண்டு ’நன்ஹி காளி’ (Nanhi Kali) நிறுவினார்.

”பெண் கல்வி என்பது குழந்தை மற்றும் தாய் உயிரிழப்புகள் குறைவது, குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் மேம்படுதல், கருத்தரிக்கும் விகிதம் குறைதல், சிறந்த பொருளாதார உற்பத்தி, பெண்கள் மேம்பாடு போன்றவற்றுடன் தொடர்புடையது,” என்றார்.

image


நன்ஹி காளியில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு ஆனந்த் மஹிந்திராவின் அரசு சாரா நிறுவனமான Naandi Foundation மற்றும் KC Mahindra Education Trust ஆகியவை நிதி மற்றும் கல்விக்கான ஆதரவு வழங்குகிறது. இவர்கள் கணிதம், அறிவியல், மொழி போன்றவற்றை கற்க சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கின்றனர். நன்ஹி காளி இவர்களுக்கு பென்சில், நோட்புக், பை, சீருடை, ஆடைகள், காலணி போன்றவற்றையும் வழங்குகிறது. 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாத விவரப்படி இந்த திட்டம் 1,30,000 பின்தங்கிய சிறுமிகளுக்கு ஆதரவளித்துள்ளது.

ஆனந்த் மஹிந்திரா ஹார்வர்ட் ஹ்யூமானிடீஸ் சென்டரை ஆதரவளிக்க 10 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார்.

வினீத் நாயர்

ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான வினீத் நாயர் 2005-ம் ஆண்டு Sampark Foundation நிறுவினார். குறைந்த பட்ஜெட் கொண்ட புதுமைகள் வாயிலாக பெரியளவிலான சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும். Sampark இணை நிறுவனரான அவரது மனைவி அனுபமா நாயர் ஒரு சிறப்பு கல்வியாளர். இந்த அரசு சாரா நிறுவனம், கற்பிக்கும் வழிமுறைகளை மேம்படுத்த முயற்சிக்கிறது. குறிப்பாக கணிதம், ஆங்கிலத் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படைகளை சிறப்பான, எளிதாக புரியவைக்கும் டூல்ஸ் மற்றும் நுட்பங்களின் உதவியுடன் மேம்படுத்த விரும்புகிறது.

image


”ஒருவரின் முகத்தில் புன்னகையையும் மனதில் நம்பிக்கையையும் வரவழைக்கும் முயற்சியையே சிறப்பான முயற்சி என்பார்கள். ஒரு மில்லியன் பேரின் முகங்களில் சிரிப்பைக் கொண்டுவரவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்திற்காகவே Sampark Foundation-ல் நாங்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்துள்ளோம்,” என்றார் வினீத்.

கற்பவர்களின் புரிந்துகொள்ளுதலை மேம்படுத்த டின் ப்ரௌனின் Design Thinking Principles அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பெருமூளை வாதம் தாக்கப்பட்ட குழந்தைகளுக்காக குறைந்த கட்டணத்தில் அதிக திறன் கொண்ட கற்றல் டூல்களான Smart Class Kit-ஐ Sampark Foundation உருவாக்கியுள்ளது.

குழந்தைகள் வேடிக்கையாகவும், எளிதாகவும், ஊடாடும் வகையிலும் கற்க குழந்தைகளுக்கேற்ற பல்வேறு கற்பித்தல் முறைகளைக் கொண்ட தனித்துவமான ஊடாடும் தொகுப்பை இந்த அறக்கட்டளை வடிவமைத்துள்ளது. இதில் Sampark Didi என்கிற எளிமையான ஆடியோ சாதனம் உள்ளது. கட்டுப்பாட்டு பட்டன்கள், ஸ்பீக்கர் செட், எல்சிடி பேனல், பாடங்கள் நிறைந்த மைக்ரோஎஸ்டி கார்ட் ஆகியவற்றுடன் Sampark Didi ஒரு கையடக்க ரேடியோ ட்ரான்சிஸ்டர் போன்ற அமைப்பில் உள்ளது. முக்கியமாக கணிதம், ஆங்கிலம் ஆகிய இரு பாடங்களைக் கற்றுக்கொடுக்க பயன்படுத்தப்படுகிறது.

இன்று Sampark Smart Class Program உத்தர்காண்ட், ஜம்மு & காஷ்மீர், சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் உள்ள 50,000 பள்ளிகளில் படிக்கும் மூன்று மில்லியன் குழந்தைகளைச் சென்றடைந்துள்ளது. இதனால் இந்த அறக்கட்டளையின் முயற்சி, உலகளவில் ஆரம்பப் பள்ளியை மாற்றுவதற்கான மிகப்பெரிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. Sampark Smart Program 76,000 பள்ளிகளில் படிக்கும் ஏழு மில்லியன் குழந்தைகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருடி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
34
Comments
Share This
Add to
Shares
34
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக