’Madras Day’- முகம் தெரியாத பலருக்கும் முகவரி தந்த சென்னைக்கு வயது 380!

“எங்க ஊரு மெட்ராசு அதுக்கு நாங்க தானே அட்ரசு” என்று மாஸ் காட்டும் பல மொழி பேசும் மக்களை நண்பர்களாக, உறவினர்களாக மாற்றி தினம் ஒரு புதுப்புது அனுபவத்தை கற்றுத் தரும் சென்னை நகருக்கு வயது 380.

’Madras Day’- முகம் தெரியாத பலருக்கும் முகவரி தந்த சென்னைக்கு வயது 380!

Thursday August 22, 2019,

3 min Read

வானுயர்ந்த கட்டிடங்கள், எப்போதும் பீப் பீப் ஹாரன் சத்தம், மஞ்சள் ஒளி ஊடுரவிச் செல்லும் சாலைகள் என வாகன நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் நகரம். திரும்பிய திசையெல்லாம் மேம்பாலங்கள், மெட்ரோ ரயில், ஷாப்பிங் மால்கள் என்று 21ம் நூற்றாண்டில் வளர்ச்சி கண்டுள்ள நகரமாக இருக்கிறது சென்னை. ஆனால் இதே சென்னையில் தான் அடர்ந்த வனம், டிராம் மற்றும் குதிரை வண்டி ஓடிய சாலைகள், படகு போக்குவரத்து நடந்த அடையாறு, கூவம் ஆறு இவையும் இருந்துள்ளன.


சென்னை பாரிமுனையில் இருந்து தொடங்குகிறது. இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டையின் உருவாக்கத்தில் இருந்து தான் சென்னையின் கட்டுமானம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கோட்டை கட்டுவதற்காக அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. அதுவே பின்னர் கிராமங்கள், நகரங்களாக மாற்றப்பட்டுள்ளன. வடசென்னை பகுதிகளை மதராசப்பட்டினம் என்றும் தென்சென்னை பகுதிகளை சென்னப்பட்டினம் என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

older chennai

படஉதவி : நன்றி தி இந்து

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது சென்னை என்பது மிக முக்கியமான வர்த்தகத் தளமாக இருந்துள்ளது. கப்பல் மூலம் துறைமுகப்பகுதியில் வந்து இறக்கப்படும் பொருட்கள் பாரிமுனைப் பகுதியில் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையின் உள்பகுதிகளுக்கு இந்தப் பொருட்கள் கூவம், அடையாறு வழியாக படகு மூலமும், தரைவழி போக்குவரத்து மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போது மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1996ல் தமிழ்நாட்டின் தலைநகராக திகழ்ந்த மெட்ராஸ் சென்னை ஆனது.


1639ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பெற்ற ஆகஸ்ட் 22ம் தேதியை சென்னை தினம் என்று கொண்டாடுகின்றனர். முதலில் மைலாப்பூர் தினம் என்று கொண்டாடப்பட்டு வந்த நிலையில் 2004ம் ஆண்டு முதல் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 18 தேதி முதல் 25ம் தேதி வரை மாரத்தான், கண்காட்சிகள் என பல வித போட்டிகளுடன் சென்னை தினத்திற்கான கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் களைகட்டிவிடுகின்றன.


சென்னையின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கும் செந்நிற கட்டிடங்களான மாநிலக்கல்லூரி, சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பு கட்டிடம், மெட்ராஸ் உயர்நீதிமன்ற கட்டிடங்கள், கலங்கரை விளக்கம், சாந்தோம் சர்ச், மவுன்ட் ரோட் தர்கா, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மெரினா கடற்கரை நகர உருவாக்கல் குறித்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லிய வண்ணம் இருக்கின்றன.


கல்வி, வேலைவாய்ப்புக்காக வீட்டுக்கொருவரை சென்னைக்கு அனுப்பிவைக்கும் வழக்கம் இன்றளவும் தமிழக கிராமங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் உள் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல வெளி மாநில மக்களுக்கும் வசிப்பிடம் தந்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறது சென்னை.

மெடிகேர் தலைநகராக விளங்கும் சென்னைக்கு மருத்துவ சுற்றுலாவிற்காக மட்டுமே 40 சதவிகிதம் பேர் வந்த செல்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலிலும் சென்னை இடம்பெற்றுள்ளளது.

இரண்டாம் கட்ட நகரங்களில் வேலைவாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் சென்னை மீதான மோகம் குறைவதில்லை பலருக்கு. போக்குவரத்து நெரிசல், மக்கள்தொகை பெருக்கம், அன்றாட வாழ்வியல் சிரமங்கள் என எத்தனை குறை சொன்னாலும் சென்னையில் 10 வருடங்கள் இருந்தவர்களுக்கு சென்னையை விட்டு போகலாம் என்ற எண்ணம் இருந்தாலும் 3 நாட்களுக்கு மேல் சொந்த ஊரிலேயே இருக்க மனம் இல்லாமல் மீண்டும் சென்னைக்கே வந்துவிடுபவர்கள் ஏராளம். அப்படியொரு வாழ்க்கை முறையில் மக்களை கட்டிப்போட்டுள்ளது சென்னை நகரம்.


சென்னையின் புராதானக் கட்டிங்களை பாதுகாக்கவும், இந்த கால தலைமுறைக்கு பண்டைய நினைவுகளை புகட்டும் விதமாக http://themadrasday.in நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. பழங்கால கட்டிங்களுக்கு சுற்றுலா, சென்னையின் பாரம்பரிய உணவுகளை தேடி சுவைப்பது, பள்ளி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா, சென்னையின் தேவை குறித்த விவாதங்கள் என நகர் முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.


வரலாற்று இடங்களை சுற்றிப்பார்க்கும் நிகழ்வு ஆகஸ்டு 18 முதல் 25ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் தமிழ்மகன் திரைப்பட ஸ்டுடியோக்களான ஏவிஎம், பிரசாத், கற்பகம் மற்றும் விஜயவாஹினி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று அதன் சிறப்புகளை விவரிக்க உள்ளார்.


சென்னப்பட்டினத்தின் பழங்கால கிராமங்களான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், புரசைவாக்கம் பகுதிகளுக்கு சென்று பாரம்பரிய உணவை ருசிக்க வைக்கும் நிகழ்விற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஃபுட் வாக் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான ஸ்ரீதர் வெங்கட்ராமன்,

“இந்த நிகழ்வில் அனைத்து வயதினரும் பங்கேற்றுக் கொள்ளலாம். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அந்தப் பகுதியில் அதிகம் பெயர்போன ஒரு உணவோடு அந்த இடத்தின் சிறப்பை அசைபோடும் ஒரு நிகழ்வாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.

ராயபுரம் பகுதிகளில் வசிக்கும் பார்சி இன மக்களுடன் ஆகஸ்ட் 25ம் தேதி காலை சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்சி இன மக்களின் வரலாறு குறித்த கலந்துரையாடலுடன் காலை 8 மணியளவில் சிற்றுண்டி உண்டு மகிழும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் [email protected] பதிவு செய்யலாம்.


ஆகஸ்ட் 25ம் தேதி வின்டேஜ் இருசக்கர வாகன கண்காட்சி நடைபெற உள்ளது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட வின்டேஜ் பிராண்டுகளான ரேலேய், ரட், பிஎஸ்ஏ, ஹம்பர், பாராட்ரூபர் சைக்கிள்கள் மற்றும் 1900களில் பயன்படுத்தப்பட்ட பியர்ஸ் பைசைக்கிள்கள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. வின்டேஜ் சைக்கிள் விளக்குகள் (எண்ணெய், மண்ணெண்ணெய் மற்றும் மெகுவர்த்தி மாடல்கள்) டைனமோக்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.


சென்னையின் வரலாற்றைக் கொண்டாடும் அதே சமயம் அதிகரித்து வரும் மக்கள்தொகையால் வாழத்தகுதியற்ற நகரமாக மாறிக்கொண்டு வரும் சிங்காரச் சென்னையை தூய்மை செய்தும் சென்னை தினத்தை கொண்டாடி மகிழலாம்.


குறைந்தபட்சமாக நாம் அசால்டாக தூக்கி வீசும் பிளாஸ்டிக், நீர் நிலைகளை மாசுபடுத்துதல், காற்று மாசு உண்டாக்குதல் இவற்றையாவது தவிர்க்கலாம். மக்கள் அக்கறை இல்லாமல் இருப்பதால் சட்டங்கள் போட்டு நிர்பந்திக்க வேண்டிய நிலையை தவிர்த்து நம் வீட்டைப் போல நகரையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயன்றால் நம்ம சென்னை நல்ல சென்னையாக என்றுமே பல்லாயிரக்கணக்கானோரின் கனவு நகரமாக இருக்கும்.