‘பசித்திரு, முட்டாளாயிரு’- தொழில்நுட்பத்தில் சிறக்கும் கெட்வ்யூ குழு!

  By sneha belcin|25th Dec 2015
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Share on
  close

  நம்பமுடியாத அளவிலான உற்சாகத்தோடு பேசுகிறார் சந்தோஷ். சாதாரண சுவர்க்கடிகாரத்தின் தொழில்நுட்பத்தைக் கூட புரிந்துக்கொள்ள முடியாத எனக்கே ஆக்மெண்டட் ரியாலிட்டி, ஹோலோகிராம்கள், லீப் மோஷன் சென்சார், ப்ரனவ் மிஸ்ட்ரியின் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ தொழில்நுட்பம் பற்றியெல்லாம் பாடம் நடத்தினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

  image


  ‘கெட்வ்யூ’ (Getvu) எனும் தொழில்நுட்ப நிறுவனத்தை அமெரிக்காவில் தோற்றுவித்தவர் சந்தோஷ். சந்தோஷ் பிறந்து வளர்ந்தது முழுவதும் கோவையில் தான். கடந்த 2014ல் தான் அமிர்தா பல்கலைகழகத்திலிருந்து இளநிலை பட்டம் பெற்றிருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே, தொழில்முனைவில் வெற்றி என பல கதைகளை கேட்டிருந்தாலுமே, தொழில் ரீதியாக வெற்றி, தொழில்நுட்ப ரீதியாக வெற்றி என மிளிரும் ‘கெட்வ்யூ’-ன் கதையை நிச்சயம் தவற விட விரும்ப மாட்டீர்கள்! தனது தொழில் பயணத்தை தமிழ் யுவர்ஸ்டோரியுடன் சந்தோஷ் பகிர்ந்து கொண்டார்.

  தொழில்நுட்பம்

  “அயர்ன் மேன் படத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தைப் பார்க்கும் போதெல்லாம், அது போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் எப்போது இங்கு வரும், அதை நாம் எப்போது உபயோகிப்போம் என்று ஆசையாக இருக்கும்.தொழில்நுட்பம் சார்ந்த பல விஷயங்களை தேடிப் பிடித்துக் கற்றுக் கொண்டே இருப்பேன். 

  அப்போது, ப்ரனவ் மிஸ்ட்ரியின், 'சிக்ஸ்த் சென்ஸ்' (sixth sense) எனும் தொழில்நுட்பத்தை கண்டறிய நேர்ந்தது. அதில் சிறப்பு என்னவென்றால், ப்ரொஜெக்டர் ஒன்று எங்கேனும் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும், அதிலிருந்து வெளிப்படும் திரையில் இருக்கும் செய்திகளுடன் நாம் வெறும் கைகளாலேயே வேலை செய்ய முடியும். அந்த தொழில்நுட்பம் என்னை மிகவும் ஈர்த்தது” என்கிறார் சந்தோஷ், கொஞ்சம் கூட ஆர்வம் குறையாமல்.

  கல்லூரி இரண்டாம் ஆண்டிலேயே ஆண்டிராய்டு செயலிகள் உருவாக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருந்தாலுமே, ‘சிக்ஸ்த் சென்ஸ்’ தொழில்நுட்பத்தின் சிறு விதையிலிருந்து, 'கெட்வ்யூ' உருவாக்கியிருக்கும், உருவாக்கவிருக்கும் தயாரிப்புகள் பல துறைகளிலும் பயன்படுபவை. எதிர்கால தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வமாய் இருக்கும் சந்தோஷ், அதில் தன் பங்கை வலிமையாக நிலை நாட்ட மேற்கொண்ட முயற்சிகள் அநேகம் வெற்றியில் தான் முடிந்தன.

  image


  “வருங்காலத்தில் மடிக்கணினி, ஸ்மார்ட்ஃபோன் இவை எதுவும் பரபரப்பாய் பேசப்படாது. கண் முன்னே விரிந்துக் கிடக்கும் கணினித் திரையை, மனிதன், வெறும் கைகளால் இயக்குவான் என்பது தான் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமாய் இருக்கும் என்று நாங்கள் யூகித்தோம். அதை நோக்கிய தொழில்நுட்பம் தான் ஆக்மெண்டட் ரியாலிட்டி.”

  ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்டதில்லை ‘கெட்வ்யூ’. பிரம்மாண்டமான தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றும் பாதையில், ஒரு நிறுவனமாக தங்கள் குழுவை பதிவு செய்தல் கட்டாயமானதாக இருந்திருக்கிறது.

  “கல்லூரியின் மூன்றாம் வருடத்தில், பல மாதிரி தயாரிப்புகளை செய்து, வெளிநாடுகளிலுள்ள பல நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தோம். எங்களுடைய மாதிரித் தயாரிப்புகளிலெல்லாம் நாங்கள் கைகளை ட்ராக் செய்வதற்கு ‘லீப் மோஷன் சென்சார்’ என்னும் ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோம். அந்தத் தொழில்நுட்பம் என்னவென்றால், புரொஜெக்டர் மூலம் உங்கள் சுவரில் தெரிந்துக் கொண்டிருக்கும் கணினித் திரையில், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் இருக்குமென்றால், அதில் வேலை செய்ய கையையே உபயோகப்படுத்தலாம். மார்க்கர் போன்ற கருவிகள் எதுவும் தேவைப்படாது. அந்தத் தொழில்நுட்பத்திற்கு முதலில் உங்கள் கையை ட்ராக் செய்ய வேண்டும். ‘லீப் மோஷன் ஆக்செல்லரேட்டர்’ என்றொரு நிகழ்ச்சியை அமைத்து நடத்தியவர்கள், எங்களுக்கு நிதி அளித்தனர். அதன் மூலமாகத் தான் அமெரிக்கா சென்று எங்கள் வடிவமைப்பைத் தொடங்கினோம்.”

  image


  ஆக்மெண்டட் ரியாலிட்டியை நோக்கிய கெட்வ்யூவின் பயணம் மிகச் சுவாரசியாமாக இருந்திருக்கிறது. முதலில், டிஜிட்டல் திரையை உருவாக்கும் ஹோலோகிராம்களை படைப்பதுப் பற்றிக் கற்றறிந்திருக்கிறார்கள். எளிமையாக சொல்லுவதென்றால், நாம் ஒருக் கண்ணாடி மட்டும் அணிந்துக் கொண்டால் போதும்; நம் வீட்டுச் சுவரே கணினித் திரையாக மாறும்.நம் அருகில் ஒரு ரோபோட் நிற்கும். இவற்றையெல்லாம், நம் கைகளாலேயே நாம் இயக்கலாம்.

  “பிறகு அமெரிக்கா சென்று, எங்களுடைய தயாரிப்பை வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு உருவாக்கினோம். நாங்கள் இந்தத் தயாரிப்பை நான்கு வருடங்களுக்கு முன்னரே செய்தோம். அதற்குப் பிறகு தான், மைக்ரோசாஃப்ட் லென்ஸ் சமீபத்தில் அறிமுகமானது. அதைப் பார்த்தவுடன் எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கைக் கிடைத்தது. சரியான பாதையில் தான் சென்றுக் கொண்டிருக்கிறோம் என்று உற்சாகம் தொற்றிக் கொண்டது.

  நாங்கள் நம்புவதை பிறரும் நம்புகிறார்கள் என்ற நம்பிக்கை வந்தது. சில அனுபவங்களுக்குப் பிறகு, ஆக்மெண்டட் ரியாலிட்டியை, சாதாரண மனிதர்கள் உபயோகிக்கத் தொடங்க நிறைய நாட்கள் ஆகும் என்பதை உணர்ந்தோம். ஆனால், பல நிறுவனங்களில் ஆக்மெண்டட் ரியாலிட்டிக்கானத் தேவை இருப்பதை உணர முடிந்தது. எனவே, ஆக்மெண்டட் ரியாலிட்டியை வேறு விதமாக சப்ளை செயின் துறையில் பயன்படுத்தப் போவதாய் திட்டமிட்டோம்.”

  ஊக்கம்

  “எங்கள் ஊக்கத்தைப் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், இப்போதிருக்கும் உச்சக்கட்ட தொழில்நுட்பங்கள் எல்லாம் ஸ்மார்ட் போனிற்குள்ளும், மேக் புக்கிற்குள்ளும் 2டி திரையில் இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில், மனிதர்கள், செயலிகளுடன் மனிதர்களாகவே கலந்துரையாடுவார்கள். ஒரு நாற்காலியில் ஆறு மணி நேரம் அமர்ந்திருக்க மாட்டார்கள். சாதாரணமாக, நாம் தினந்தினம் ஒரு புத்தகத்தை எப்படித் தொட்டு உபயோகிக்கிறோமோ, அது போலவே டிஜிட்டல் உலகோடும் இயங்கலாம். ஆனால், டிஜிட்டல் திரையை உணரமுடியாது, அவ்வளவுதான். இப்படிப்பட்ட யோசனைகளை செயல்படுத்தும் எண்ணம் மிகச் சுவாரசியமாக இருந்தது.

  மேலும், கல்லூரியில் ஸ்ரீராம் சார் பல வகைகளில் எங்களுக்கு உதவினார். கல்லூரி மூன்றாம் வருடத்தில் அமெரிக்கா போவதென்பது, படிப்பைப் பாதியில் விட்டது போல இருக்கும். அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து படிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்று, ஊக்கம் கொடுத்து, அதற்காக ஏகப்பட்ட அனுமதிகள் பெற்றுத் தந்தது ஸ்ரீராம் சார் தான். நன்றி சார்” என்கிறார் சந்தோஷ்.

  ஆக்மெண்டட் ரியாலிட்டி

  சந்தோஷுடன் கல்லூரியில் படித்த மீனாட்சி சுந்தரம், ராகேஷ், சேஷு தற்போது ‘கெட்வ்யூ’-ன் துணை நிறுவனர்கள். மொத்தம் ஆறு பேர் கொண்ட குழு தான் ‘கெட்வ்யூ’. கெட்வ்யூ தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் தயாரிப்புப் பற்றி கேட்ட போது, எனக்கு புரியும்படி சொல்வதற்கு சந்தோஷ் சொன்ன உதாரணம் இது!

  image


  “அமேசான் அல்லது ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஒரு பொருளை நீங்கள் வாங்க தேர்வு செய்துவிட்டு வெளியேறுகிறீர்கள். சில நாட்களில் அது உங்களை வந்தடையும். வாடிக்கையாளராக, நமக்கு தெரிந்தது இவ்வளவு தான். ஆனால், நீங்கள் ஆர்டர் செய்த பிறகு, அங்கிருக்கும் கணினியில் நீங்கள் தேர்வு செய்திருக்கும் பொருட்களின் பட்டியல் வெளியிடப்படும். ‘பிக்கர்’ என்னும் பதவியில் இருப்பவர், அதைப் பார்த்துவிட்டு, ஒரு சிறு ட்ராலியையும், பார் கோடு ஸ்கானரையும் எடுத்துக் கொண்டு பொருட்களை எடுக்கச் செல்வார்கள். பிறகு அதை எடுத்து, பார்சல் செய்து நமக்கு அனுப்புவார்கள். 

  இதில் மூன்று முக்கியமான செயல்பாடுகள் இருக்கின்றன. ஒன்று, குறிப்பிட்ட தயாரிப்பு எங்கிருக்கிறது என்று கண்டறிய வேண்டும், இரண்டாவது அதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் , மூன்றாவதாய் ‘பார் கோடு ஸ்கானர்’ வைத்து அப்டேட் செய்ய வேண்டும். இந்த மூன்று செயல்களையும் எளிமைபடுத்துவது தான் எங்கள் தொழில்நுட்பம். எப்படியென்றால், ‘பிக்கர்’ ஒருக் கண்ணாடியை அணிந்துக் கொண்டால் போதும், கண் முன்னே ஒரு ‘அம்புக்குறி’ தெரியும், அதை பின் தொடர வேண்டும். பிக்கருக்குத் தேவையான பொருளை ஆக்மெண்டட் ரியாலிட்டி மூலமாக ‘ஹைலைட்’ செய்துக் காட்டுவோம். அதனால், வேலையும் குறைந்த நேரத்தில் முடியும். எல்லாவற்றையும் தானியங்கு முறையில் அமைக்கிறோம். அவ்வளவு தான்”.

  தற்போது ஓடிஜி மற்றும் சோனி ஸ்மார்ட் கிளாஸ் நிறுவனங்களுக்கு செயலிகள் உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் ‘கெட்வ்யூ’-ன் வெற்றி ரகசியம் பற்றி கேட்டதற்கு, 

  “எங்கள் துறையைக் கண்டுப்பிடித்தப் பிறகு, அதில் முன்னேறத் தேவையான வழியையும் நாங்கள் தான் கண்டுபிடித்தோம். முதலில், வாடிக்கையாளரை மையமாக கொண்டு மேம்படுத்தியத் தயாரிப்பை, பிறகு நிறுவனங்களை மையமாக கொண்டதாக மாற்றினோம். முதலில் ஹார்டுவேரில்’ கவனம் செலுத்தினோம்; பிறகு தான் நாங்கள் மென்பொருளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கண்டுப் பிடித்தோம்.”

  ‘பசித்திரு,முட்டாளாயிரு’ என்னும் ஸ்டீவ் ஜாப்சின் வாக்கியம், சந்தோஷிற்கு மிகப் பெரிய ஊக்கம் என்கிறார். விடுமுறைக்காக சந்தோஷ் கோவை வந்திருப்பதனால், கெட்வ்யூவின் துணை நிறுவனர்கள் இருவர் அமெரிக்காவில் இருந்து, தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் தயாரிப்பைக் கவனித்துக் கொள்கின்றனர். வரும் மாதங்களில் சில கூட்டங்களிலும், கருத்தரங்களிலும் பங்கேற்றப் பிறகு, எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவிருக்கிறது கெட்வ்யூ.

  இன்றைய தேவைக்கு மட்டுமின்றி, நாளைய தேவைக்கும் யோசிக்கிறது ‘கெட்வ்யூ’. விருப்பம் போல பல கற்று, பல சிறப்புகளைப் பெற்று, முன்னேற,கெட்வ்யூ-விற்கு வாழ்த்துக்கள்!

  Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.