பதிப்புகளில்

போர் கண்ட பூமியான யாழ்பாணத்தில் சிறு தொழில் மூலம் தன் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொண்ட நிர்மலா!

YS TEAM TAMIL
10th Oct 2017
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

யாழ்ப்பாணம்

இன்று சுய பொருளாதார வாழ்வாதார முயற்சிகள், சுய கைத்தொழில் முயற்சிகள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற சூழலில் சில நம்பிக்கை அளிக்கின்ற செயற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பது மன நிறைவைத் தருகிறது.

யாழ்ப்பாணம் - சுன்னாகம் புதுவளவு என்கிற இடத்தில் வசிக்கும் மார்ட்டீன் ஜெயராஜா நிர்மலா என்கிற குடும்ப பெண்ணொருவர் ’ஜெயா உற்பத்திகள்’ என்கிற பெயரில் பெண்களுக்கான விதவிதமான கைப்பைகளை 2014 மாசி மாதம் முதல் தயாரித்து வருகிறார் நிர்மலா. 

பட உதவி: நிமிர்வு

பட உதவி: நிமிர்வு


அவர் சொந்தமாக தயாரிக்கும் ஒவ்வொரு கைப்பையும் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சுயதொழில் முயற்சியாளரின் உற்பத்திகளோ தரத்தில் மிகவும் மேம்பட்டவையாகவே இருக்கின்றன.

உள்ளூர் உற்பத்தி இவ்வளவு தரமாக உள்ளதா எனும் அளவிற்கு ஆச்சரியப்பட வைக்கின்றன. யதார்த்தமான விலையில் விற்கும் உற்பத்திப் பொருட்களை நிர்மலாவின் கணவர் கடைகளுக்கு விநியோகித்து வருகிறார்.

சுயதொழில் முயற்சியாளர் நிர்மலாவுடன் பேசினோம், 

“என் கூட குடும்பத்தில் இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரமும் இருந்தார்கள். அப்பா சின்ன வயதிலேயே இறந்து விட்டார். இரண்டாவது அக்காவும் நோய் வாய்ப்பட்டு ஆசிரியர் கலாசாலையில் படித்துக்கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார். அவர் இறந்த கவலை தாங்காமல் சில நாளில் அம்மாவும் இறந்துவிட்டார். நான் 96-ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். அன்றிலிருந்து சாதாரண வருமானத்துடன் தான் வாழ்ந்து வருகிறோம்,” என்றார். 

நான் இந்த பெண்களுக்கான கைப்பைகள் தயாரிக்கும் தொழிலுக்கு வந்த விதம் கொஞ்சம் விசித்திரமானது. எனது கணவர் பாதையில் நடந்து போகும் போது பின்னால் வந்த வாகனம் மோதி கடுமையான விபத்துக்கு உள்ளாகினார். விபத்தை நேரில் பார்த்த பலரும் அவர் பிழைக்கமாட்டார் என்றே நினைத்தனர். காதால், மூக்கால் எல்லாம் இரத்தம் வழிந்த சீரியஸாக தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். பின்னர் ஒருவாறு கடவுளின் கிருபையால் குணமடைந்தார்.

என் கணவர் அழகுசாதனப் பொருட்கள் விற்கும் கடையிலேயே வேலை செய்தார். விபத்துக்கு பிற்பாடு ஞாபகசக்தி சற்று குறைந்து விட்டது. இதனால் வேலை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அந்த நேரம் உதவி செய்வதற்கு பல உறவுகள் முன் வந்தனர். ஆனால், எனது கணவர் அந்த உதவிகளை ஏற்க மறுத்துவிட்டார்.

அந்த நேரம் நாமே ஏன் ஒரு சிறிய தொழிலை தொடங்க கூடாது என கணவருக்கு ஆலோசனை கூறினேன். அவரும் சம்மதித்தார். நான் ஏற்கனவே பெண்களுக்கான பிளவுஸ், சட்டைகளை தைத்து வந்தேன். எனவே அது தொடர்பிலான ஒரு தொழிலை செய்வது பற்றியே சிந்தித்தேன். பக்கத்து கடைக்குப் போய் பெண்களுக்கான கைப்பைகள் இரண்டு வாங்கி வந்து அதன் தையல்களைப் பிரித்துப் பார்த்தேன். ஒவ்வொரு தையலாக பிரித்து பார்த்து அதன்படி தைக்க முயற்சித்தேன். இறுதியில் அது வெற்றியளித்தது.

இப்பொழுது பல்கலைக்கழக, பள்ளிக்கூட மாணவிகளுக்கும், வேலை செய்யும் பெண்களுக்கும், வீட்டுப் பெண்களுக்கும் பொருத்தமான கைப்பைகளையே அதிகம் தயாரித்து வருகிறோம். 25 வகைக்கும் மேலான கைப்பைகள் தயாரித்தாலும் சந்தையில் 5 வகையான கைப்பைகளே அதிகம் விற்பனையாகிறது.

எனது நிலையைப் பார்த்த பிரதேசசெயலக அதிகாரிகள் அலுமாரி, தையல்மிஷின், போன்றவற்றை தந்து உதவினார்கள். கண்காட்சிகள் நடத்தும் போது எனக்கும் அறிவிப்பார்கள். அவை தான் எனது உற்பத்திப் பொருட்களை பலரிடம் சென்றடையவும் வைத்தது. இறுதியாக நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற சிறுகைத்தொழில் கண்காட்சியிலும் கலந்து கொண்டேன். அதிலும் பல்வேறு வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் கிடைத்தன. குறிப்பாக எங்கள் பிரதேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் மக்களும் எனது கைப்பைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

எங்களுக்கு இப்போது பிரதான பிரச்சினையாக உள்ளது இடவசதி தான். சீமெந்திலான கொட்டகையும், தையல் உபகரணங்களும் ஏற்பாடு செய்து கொடுத்தால் இன்னும் இரு மடங்கு கூடுதலாக பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். நான் சாதாரண தையல் மெசினில் தான் இவ்வளவு கைப்பைகளையும் தயாரித்து வருகின்றேன். 

கைப்பைகள் தைப்பதற்கென்று சிறப்பு மெசின்கள் இருக்கின்றன. அவற்றை வாங்கினால் இன்னும் வினைத்திறனுடன் இந்தத் தொழிலைக் கொண்டு நடத்தலாம்.

சரியான விலைக்கு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தலிலும் சிக்கல்களை எதிர்நோக்கிறோம். எனது கூலியையும் சேர்த்து இலாபத்துடன் வருமானம் சற்றக் குறைவாகத்தான் கிடைக்கிறது. அதனை வைத்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது. ஆனால் உற்பத்தியை இன்னும் பெருக்கி அதிக லாபத்தை பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

என் போன்று கஷ்டப்படும் ஏனைய பெண்களுக்கும் இதனைக் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். என சமூக அக்கறையுடன் கூறி முடித்தார்.

image


இவர்களின் தேசத்தில் இப்படி ஆயிரம் நிர்மலாக்கள் இருக்கிறார்கள். உள்ளூரில் எமது பெண்கள் இந்த உற்பத்திகளை வாங்கிப் பயன்படுத்துவதால் எமது தொழில் துறைகள் பன்மடங்கு வளர்ச்சியடையும்.

போர் முடிந்த இந்த காலப்பகுதியில் அதிகம் உருவாகியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இப்படியான சுயதொழில் முயற்சிகள் நிறைந்த பலனைத் தரும். அவர்களுக்கு சிறுதொழில் தொடங்க சிறிய முதலீடுகளே இன்று தேவைப்படுகின்றன.

அவற்றை வழங்கி ஊக்குவித்தால் சிறுகைத்தொழில் முயற்சிகள் வளரும் போது இந்த தேசத்தின் பொருளாதார பலம் அதிகரிக்கும். தமிழர்கள் பொருளாதாரத்தில் மேலும் பலமடவார்கள் என்பதே அப்பகுதி மக்களின் நம்பிக்கை. 

உற்பத்திகளை வாங்க, நிர்மலாவின் கைபேசி எண்: 0094 774 585094

(இக்கட்டுரை யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் ’நிமிர்வு’ என்ற மாத இதழில் பிரசுரிக்கப்பட்டது ஆகும். அவர்களின் அனுமதியுடன் யுவர்ஸ்டோரி தமிழில் வெளியிட்டப்பட்டுள்ளது)

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக