பதிப்புகளில்

நூற்றாண்டை கடந்து குளிர்பானத் தொழிலில் சந்தையை நிலைநாட்டிய ‘காலிமார்க்’ ப்ராண்டின் கதை!

6th Feb 2017
Add to
Shares
287
Comments
Share This
Add to
Shares
287
Comments
Share

தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை எதிர்த்து கடந்த மாதம் தமிழகம் எங்கும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து மத்திய-மாநில அரசுகளை ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் பிறப்பிக்க கோரிக்கை விடுத்து வெற்றியும் கண்டனர். 

ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய போராட்டத்தில் பல முக்கிய பிரச்சனைகளுக்கான குரல்களும் எழுந்தது. அதில் ஒன்று, வெளிநாட்டு நிறுவன தயாரிப்பான பெப்சி-கோக் குளிர்பானத்தை புறக்கணிப்போம் என்று மாணவர்கள் தொடங்கிய பிரச்சாரம் தீயாக பரவியது. ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கோக், பெப்சியை கழிவறையில் கொட்டிய வீடியோ பலரால் லைக் செய்யப்பட்டு, ஷேர் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உள்நாட்டு குளிர்பான தயாரிப்பு நிறுவனம் மற்றும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ப்ராண்டான ‘காலிமார்க்’ தயாரிப்பில் வெளிவரும் பொவோண்டோ, விப்ரோ, சோலோ ஆகியவற்றின் பின் மக்களின் பார்வை திரும்பியுள்ளது.  

image


90’களில் வாழ்ந்தவர்கள் பலரும் காலிமார்க் சோடா, பொவோண்டோ பானத்தை அனுபவிக்காமல் இருந்திருக்கமாட்டார்கள். அன்றைய காலக்கட்டத்தில் உள்நாட்டில் தயாரான இதற்கு நல்ல மவுசு இருந்தது. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பலரும் பொவோண்டோவை ருசித்து குடித்து மகிழ்ந்தனர். 

காலிமார்க் பிறந்த கதை

பி.வி.எஸ்.கே.பழனியப்பன் என்பவரால் 1916 தொடங்கப்பட்டதே ‘காலி ஏரேடெட் வாட்டர் வொர்க்ஸ்’ நிறுவனம். காபி மற்றும் ஏலக்காய் ஏற்றுமதி செய்து வந்த காலியப்பன் என்ற தனது தந்தையின் பெயரில் இந்நிறுவனத்தை தொடங்கினார் பழனியப்பன். 23 வயதில் தந்தையின் தொழிலை விட புதிதாக எதையாவது செய்ய நினைத்த பழனியப்பன் குளிர்பான தொழிலை தொடங்கினார். 

“அப்போது ஸ்பென்சரில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானங்களை கண்டபோது இந்த ஐடியா அவருக்கு வந்தது. உள்ளூரில் இதுபோன்று குளிர்பானம் தயாரித்தால் எப்படி இருக்கும் என்று தன் நண்பர்களிடம் சொன்னபோது, அனைவரும் அதை உற்சாகத்தோடு வரவேற்றுள்ளனர்,” 

என்று காலி ஏரேடெட் வாட்டர் வொர்க்ஸ் நிறுவனத்தின் சென்னை பிரிவு உரிமையாளரும் பழனியப்பனின் பேரனும் ஆன கேபிஆர்.சக்திவேல், லைவ் மிண்ட் பேட்டியில் கூறியிருந்தார். தனது மனைவி உன்னாமலை அம்மாளின் உதவியோடு, பழனியப்பன் கைகளால் பயன்படுத்தக்கூடிய ஒரு இயந்திரத்தை வாங்கினார். அதன் மூலம் கேசை தண்ணீரில் செலுத்தி, 100 மடங்கு ப்ரெஷர் கொடுத்து சோடா தயாரித்தார். வீட்டிலேயே இதை செய்து வந்த அவர், 1916’இல் விருதுநகரில் தனது முதல் பேக்டரியை தொடங்கினார். பின்னர் நான்கு ஆண்டுகளில் அடுத்தடுத்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கும்பகோணம், சென்னை மற்றும் காரைக்குடியில் பேக்டரிக்களை திறந்தார் பழனியப்பன். 

”அப்போது ஒரு டஜன் என்பது பதினான்கு என்பதாகும். ஒரு கடைக்காரர் ஒரு டஜன் பாட்டில்கள் வாங்கினால் அவர்களுக்கு அதை 12 பாட்டில்களின் விலைக்கு தருவோம். இதுவே எங்களது மார்கெடிங் முறையாக இருந்தது. சுதந்திர போராட்டத்தின் போது கூட விற்பனை பாதிக்கப்படவில்லை. எங்களின் பாட்டில்கள் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது,” என்றார் சக்திவேல்.
பட உதவி: தி நியூஸ் மினிட்

பட உதவி: தி நியூஸ் மினிட்


இப்படி மெல்ல வளர்ந்து தமிழகம் முழுதும் பேக்டரிக்களை தொடங்கி தங்கள் விற்பனையை பெருக்கிய காலிமார்க் குழுவினர், அவ்வப்போது புது சுவைகளை குளிர்பானத்தில் அறிமுகப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்தனர். புது புது கலர்களில் பானத்தை கொடுத்தது இவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 

பழனியப்பனின் குடும்பத்தை சேர்ந்த பலரும் பல யூனிட்களை நிர்வகிக்கின்றனர். பல மடங்கு பெருகிய காலிமார்க் குழுமம், ஒவ்வொரு பேக்டரியிலும் 1000 க்ரேட்டுகளுக்கு மேல் ஒரு நாளில் உற்பத்தி செய்யத்தொடங்கியது. இருப்பினும் வெளிநாட்டு பானங்களுடன் போட்டிப் போடுவதும், அவர்களின் விளம்பர யுக்திகளுக்கு ஈடு கொடுப்பதும் பெரும் சவாலாகவே இருந்துள்ளது. இது பற்றி தி நியூஸ் மினிட் பேட்டியில் பழனியப்பனின் மார்கெடிங் யுக்தி பற்றி நினைவுக்கூர்ந்த காலிமார்க் குடும்பத்தின் நான்காவது தலைமுறையை சேர்ந்த பழனிராஜ்,

“அவர் கடைக்கு ஒரு வாடிக்கையாளரை போல் சென்று வேறு குளிர்பானத்தை பருகுவார். அதை சுவைத்த பின், ச்சே இது மோசமாக உள்ளது, நீங்கள் காலிமார்க் விற்கும் புதிய பானத்தை விற்பனை செய்யுங்கள் அது சுவையாக இருக்கும் என்பார். அடுத்த நாளே அவர் தன் தயாரிப்புகளை அந்த கடைக்காரரிடம் விற்பனைக்கு கொண்டு செல்வார். அவரும் ஆர்வத்தில் காலிமார்க் குளிர்பானங்களை வாங்கி விற்க சம்மதிப்பார்...” என்றார்.

மக்களை கவர்ந்த பொவோன்ட்டோ

காலிமார்க்கின் பல தயாரிப்புகளில் மக்களின் மனதில் தெவிட்டாது இன்றளவும் இருப்பது பொவோண்டோ தான். காலிமார்க் தயாரித்த பொவோண்டோ 1958-ல் கடைகளுக்கு புதிய வரவாக விற்பனைக்கு வந்தது. திராட்சைப் பழரச சாறின் சுவையை நாவில் தித்திக்கச் செய்யும் பொவோன்ட்டோவை சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்புவது அதன் சிறப்பு.  8 தயாரிப்பு பானங்களை அளிக்கும் காலிமார்க் தற்போது தமிழகம் தவிர கர்நாடகா, மும்பை, டெல்லி, துபாய், ஆஸ்திரேலியா என்று விரிவடைந்துள்ளது. 

image


அண்மையில் தமிழக வணிகர் சங்கம், வரும் மார்ச் 1-ம் தேதி முதல் கோக்க கோலா, பெப்சி கடைகளில் விற்பனை செய்யப்படாது என்று அறிவித்ததை அடுத்தும், பல கல்லூரிகளும் அதை அமோதித்திருப்பதும், உள்ளூர் உற்பத்தி காலிமார்க் நிறுவனத்துக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும். குறிப்பாக பொவோண்டோ; பெப்சி, கோக்குக்கு மாற்றாக அந்த இடத்தை பிடிக்க முயற்சிக்கும். 

சந்தை விரிவாக்கம் மற்றும் வருங்கால திட்டங்கள்

தற்போது ஏற்பட்டுள்ள சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பல புதிய திட்டங்களை தீட்டி வருகிறது காலி ஏரேடெட் வாட்டர் வொர்க்ஸ் நிறுவனம். காலிமார்க் மற்றும் பொவோண்ட் 1000 கோடி ரூபாய் விற்றுமுதலை வரும் 2020-க்குள் பெற ஆறு ஆண்டு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. 

“புதிய உற்பத்தி யூனிட் ஒன்றை அமைக்கவும், புதிய யுக்திகளுடைய முதலீட்டாளர்கள் மற்றும் பல புதிய சுவைகள் கொண்ட குளிர் பானங்களை அறிமுகப்படுத்தவும் திட்டம் வகுத்துள்ளோம். சென்னை அருகில் உள்ள ஸ்ரீ சிட்டி’-ல் ரூ.150 கோடி மதிப்பில் நிறுவனம் மற்றும் உற்பத்தி யூனிட் ஒன்றும் அமைக்கப்படும்,” 

என்று தலைமை இயக்குனர் தனுஷ்கோடி தி ஹிந்து பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த புதிய யூனிட்கள் மூலம் சந்தையின் தேவையை பூர்த்தி செய்யவும், தங்களின் ப்ராண்டை விரிவாக்கம் செய்யவும் முடிவெடுத்துள்ளது காலிமார்க் நிறுவனம். 

வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியை சந்திக்கும் பல உள்நாட்டு பொருட்களுக்கு மத்தியில், ஒரு நூற்றாண்டை கடந்து, பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தும் இன்றைய தலைமுறை வரை நீடித்து வந்துள்ள காலிமார்க் ப்ராண்ட் தற்போது கனிந்து வந்துள்ள சந்தையை நன்கு பயன்படுத்தி பயன்பெறும் என்று நம்பப்படுகிறது. காலத்திற்கேற்ப அவர்களின் இன்றைய தலைமுறை உரிமையாளர்களும் புதிய யுக்திகளை புகுத்தி, விளம்பரத்திலும் கவனம் செலுத்தி வருவது இவர்களை நிச்சயம் தென்னகத்தின் குளிர்பான சந்தையில் சிறந்தை இடத்தை பிடிக்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Add to
Shares
287
Comments
Share This
Add to
Shares
287
Comments
Share
Report an issue
Authors

Related Tags