பதிப்புகளில்

"40 ஆண்டுகால எனது வாழ்வின் நிகழ்வுகளை அழிப்பது மட்டும் அல்ல என்னையே அழிப்பது தான் நோக்கம்"- சிவ அய்யாதுரை

22nd Dec 2015
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

ஃபேஸ்புக்கில் உலாவிக்கொண்டிருந்த போது தான் நான் தற்செயலாக முதன் முதலில் 'சிவ அய்யாதுரை' பற்றி தெரிந்துகொண்டேன். எனது செய்தி ஓடையில் வந்திருந்த ஹஃபிங்டன் போஸ்ட் கட்டுரை, சிவ அய்யாதுரையை இ-மெயிலின் கண்டுபிடிப்பாளர் எனக் குறிப்பிட்டு, அதன் 30 வது ஆண்டில் அவரது சாதனையை கவுரவித்திருந்தது. கூகுளில் தேடிப்பார்த்த போது, மீண்டும் ஒரு ஹஃபிங்டன் போஸ்ட் கட்டுரை கண்ணில் பட்டது. நியூஜெர்சியின் நெவார்க் நகரைச்சேர்ந்த, இ-மெயிலின் உண்மையான கண்டுபிடிப்பாளரான இந்த பழுப்பு நிற இளைஞருக்கு எதிராக ரேத்தியான்(Raytheon ) மற்றும் பிபிஎன் ஆகிய இரண்டு பெரிய அமெரிக்க நிறுவனங்கள் திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டதாக அந்தக்கட்டுரை குறிப்பிட்டது.

காலனியாதிக்கத்திற்கு பிந்தைய இந்தியாவில் மேற்கில் இருந்து கிடைக்கும் சின்ன கவுரவத்தை கூட நாம் பெரிதாக கொண்டாடும் தன்மை கொண்டிருந்த நிலையில், எப்படி இந்த பெயரை அறியாமல் இருந்தோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் குறிப்பாக இந்த சாதனையின் பிரம்மாண்டத்தை கருத்தில் கொள்ளும் போது இன்னும் திகைப்பாக இருந்தது. ஏனெனில் அய்யாதுரை, 14 வயதில் இ-மெயிலை கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை, எம்.ஐ.டியில் நான்கு பட்டம், எக்கோ மெயில் நிறுவனர் மற்றும் அமெரிக்க அஞ்சல் அமைப்பை மாற்றி அமைத்தபெருமையாளர் உள்ளிட்ட சாதனைகளை கொண்டிருக்கிறது.

image


இரண்டு கட்டுரைகளையும் பாக்கெட் செயலியில் சேமித்து விட்டு மறந்து விட்டேன். பின்னர் படிக்க முயன்ற போது அவற்றை காணவில்லை. இணையத்தில் விரிவாக தேடிய போது, இந்தத் தகவல் உண்மை அல்ல என எதிர்ப்பு உண்டானதை அடுத்து இரண்டு கட்டுரைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டதாக தெரிந்து கொண்டேன். இமெயிலை கண்டுபிடித்த பெருமை அமெரிக்கரான 'ரே டாம்லின்சனு'க்கு வழங்கப்படுகிறது. சிவ அய்யாதுரை தொடர்பான தேடல் மூன்று விதமான முடிவுகளை அளிக்கின்றன; ஹாலிவுட் நடிகை பிரான் டிரெஷரை அவர் மணந்து கொண்டது, அவரை பொய்யர், ஏமாற்றுபவர் என குற்றம்சாட்டும் தாக்குதல்கள் மற்றும் அவர் பதிவு செய்துள்ள இணையதளங்கள்.

இந்த விஷயம் தொடர்பாக எதிர் கருத்துகளில் இருந்தோ அல்லது அவரது இணையதளங்களில் இருந்தோ முடிவுக்கு வர முடியாது. குழப்பத்துடன் பேட்டிக்காக அவரை தொடர்பு கொண்டபோது ஒப்புக்கொண்டார். நீண்ட உரையாடலுக்குப்பின் குழப்பம் பெரிதாக விலகிவிடவில்லை. ஆனால் அவரது வாதத்திற்கு வலு சேர்க்கவோ அல்லது விமர்சிக்கவோ முயலாமல் (அதற்கு இந்த கட்டுரையாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை) இந்தப் பேட்டி நாம் உரையாடுவதற்கான வழிகளை திறந்து விடுகிறது. இதன் மூலம் நாம் சீரான தன்மையுடன் மற்றும் நாகரீகத்துடன் விவாதித்து, விமர்சித்து கருத்தும் தெரிவிக்கலாம். அமெரிக்க மீடியா இதை தான் செய்யத்தவறுவிட்டது. இந்திய சகோதரர்களுக்கும் இதில் ஆர்வமில்லை. "எனக்கு எதிரான முக்கிய வாதம், நான் ஒரு சுய பிரச்சார வர்த்தக புள்ளியாக இருக்கிறேன் என்பதும், இணைய தொழில்முனைவோராக இருக்கிறேன் என்பதுமாக இருக்கிறது. ஆனால் நான் இமெயிலை கண்டுபிடித்தேன் எனும் ஆதாரங்களுக்கு இது எப்படி எதிராக அமையும்” என்று கேட்கிறார் அவர்.

இந்த பேட்டி பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் இங்கு சர்ச்சைக்குறிய இமெயில் விஷயம் பற்றி மட்டுமே பேசியுள்ளோம். அவரது வாழ்க்கை, கல்வி மற்றும் இதர சாதனைகள் பற்றிய தகவல்கள் அடுத்தப் பகுதியில் இடம்பெறுகிறது.

உங்கள் அம்மா லெஸ் மிக்கல்சனிடன் ( யுனிவர்சிட்டி ஆப் மெடிசன் அண்ட் டெண்டிஸ்டிர் ஆப் நியூஜெர்ஸி விஞ்ஞானியான இவரது வழிகாட்டுதலின் கிழ் தான் தான் இமெயிலை கண்டுபிடித்ததாக அய்யாதுரை சொல்கிறார்) உங்களை அறிமுகம் செய்து வைத்த போது நீங்கள் பள்ளிப் படிப்பை கைவிடும் நிலையில் இருந்தீர்கள் அல்லவா?

ஆம், அப்போது எனக்கு 14 வயது.

14 வயதில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் என்ன?

இந்தியாவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். என் பாட்டி ஒரு விவசாயி. என் அம்மா தீண்டத்தகாத வகுப்பில் இருந்து வந்ததை மீறி மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார். போரின் நடுவே வளர்ந்த என் தந்தை 11 வயது வரை எழுத படிக்கக் கற்றுக்கொள்ளவில்லை. 7 வயதில் நாங்கள் அமெரிக்கா வந்த போது வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என நினைத்தேன். ஒவ்வொரு முறை இந்தியா வந்த போதும் எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புக்கு எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன். என்னக்காக மட்டும் அல்லாமல் நான் இந்த இடத்திற்கு வருவதற்காக தியாகங்கள் செய்தவர்களுக்காகவும் நான் நல்ல நிலைக்கு வரவேண்டும் என நினைத்தேன். அதன் பிறகு உலகை மாற்ற வேண்டும் எனும் ஊக்கம் உண்டானது.

இ-மெயிலை கண்டுபிடிக்கும் எண்ணம் எப்படி உண்டானது?

1978 ல் உலகை கற்பனை செய்து பாருங்கள். பிசி இல்லை. ஸ்மார்ட்போன் இல்லை. லேப்டாப் இல்லை. சாமானியர்களுக்கு கம்ப்யூட்டர்களை அணுகும் வசதியும் இருக்கவில்லை. தொழில்நுட்ப திறன் கொண்டவர்களுக்கே அது சாத்தியமாக இருந்தது. அவர்களும் தரவுகளை கையாளவே கம்ப்யூட்டரை பயன்படுத்தினர்.

என்னைப்பொருத்தவரை இமெயில் என்பது ஒரு தொழில்நுட்ப நபர் இன்னொரு தொழில்நுட்ப நபருக்கு செய்தி அனுப்புவது அல்ல. அது ஒரு முழு அமைப்பு; சாதாரண பயனாளியை மனதில் கொண்டு அது உருவாக்கப்பட்டது. ஒரு டாக்டர், ஒரு டெண்டிஸ்ட், ஒரு செயலாளர் அதை பயன்படுத்தலாம். இதன் மூலம் அவர்கள் டைப்ரைட்டரில் இருந்து கம்ப்யூட்டர் டெர்மினலுக்கு மாறலாம். இதுவே இமெயில் கண்டுபிடிப்பை புரட்சிகரமாக்கியது.

ஸ்டீப் ஜாப்ஸ், கம்ப்யூட்டரை உருவாக்குவதற்கு முன் ஒருவர் தனக்கான கம்ப்யூட்டரை சொந்தமாக உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் பாகங்களை தனித்தனியே வாங்கி அசெம்பிள் செய்து கொள்ள வேண்டும். அதனால் தான் ஜாப்சின் மேகிண்டாஷ் புரட்சிரகமாக இருந்தது. லட்சக்கணக்கானோர் அதை அணுக முடிந்தது. இமெயில் கம்ப்யூட்டரை லட்சக்கணக்கானோர் அணுகுவதை சாத்தியமாக்கியது. அதை தான் நான் கண்டுப்பிடித்தேன்.

இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

சாதாரண பயனாளிகளுக்கு தகவல் தொடர்பை சாத்தியமாக்க வேண்டும் என நினைத்தேன். வரி வடிவ செய்திகளை அணுக முடிவது மட்டும் போதுமானதல்ல. அப்போது இதைத் தான் செய்து கொண்டிருந்தனர். நூறு வெவ்வேறு விதமான அம்சங்கள் இருந்தன. ஒரு செயலாளருக்குப் பழக்கமான அம்சங்கள் எல்லாம் இருக்கும் வரை அவர் இமெயிலுக்கு மாற மாட்டார். அவர் இன்பாக்ஸ், அவுட் பாக்ஸ், முகவரி பெட்டி மற்றும் குப்பை பெட்டிக்கு பழக்கப்பட்டிருந்தார். பதில் ரசீது பெற அவர் பழக்கப்பட்டிருந்தார். இந்த அம்சங்கள் எல்லாவற்றையும் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது. இணைக்கப்பட்டப் பாகங்களின் அமைப்பு இமெயில், ஒரு இஞ்சினை உருவாக்குவது போல இருந்தது.

உங்களுக்கு முன் செயல்பட்டவர்களின் பங்களிப்புகளின் மீது, குறிப்பாக ரே டாமிலின்சன் மற்றும் அர்பாநெட் போன்ற அமைப்புகளின் பங்களிப்பு ஆகியவற்றின் மீது தான் உங்கள் கண்டுபிடிப்பு அமைந்துள்ளதை நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்பது தான் உங்கள் மீதான குற்றச்சாட்டாக இருக்கிறது. இமெயில் கண்டுபிடிப்பில் எந்த அளவு மூலத்தன்மை இருக்கிறது? மற்றவர்களின் பங்களிப்பு என்ன ?

இதன் பின் உள்ள அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். இராணுவம், தனியார் வர்த்தக்கத்துறை, மற்றும் கல்வித்துறை ஆகியவை இதில் தொடர்பு கொண்டுள்ளன. 60 களிலும் 70 களிலும் அவர்கள் செய்ய முயன்று கொண்டிருந்தது என்ன என்றால், யுத்த களத்தில் ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளியில் உள்ள வீரருக்கு செய்தி அனுப்புவது தான். 1978 ல், எனக்கு 14 வயது இருந்த போது, நான் எந்த தொழில்நுட்பத்தையும் அணுகவில்லை. அவர்களின் பாகங்களை எதையும் பயன்படுத்தவில்லை. இதைத் தான் புரிய வைக்க விரும்புகிறேன். இமெயிலை கொண்டு வர அவர்களின் எந்த விஷயமும் எனக்குத்தேவைப்படவில்லை. இணையம் கூட தேவைப்படவில்லை.

நான் உருவாக்கியது முதல் 1993 வரை, ஆரம்ப கால இமெயில் அமைப்பு இணையத்தை பயன்படுத்தவில்லை. இதை நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளலாம். இந்த அமைப்பு உள்ளூர் பகுதி வலைப்பின்னலை கொண்டு உருவாக்கப்பட்டது. ஒரு அலுவலகத்தில் நாங்கள் ஈதர் நெட் கார்ட்களை உருவாக்கி, எங்கள் சொந்த கம்ப்யூட்டர்களை அமைத்தோம். அவர்களுடைய வலைப்பின்னல் மற்றும் புரோடாகால்களை கூட பயன்படுத்தவில்லை.

உங்களுக்கு இராணுவம் தேவை என உலகை நம்ப வைக்க விரும்புகின்றனர். அதாவது இராணுவ தொழில் வளாகம் மகத்தான தொழில்நுட்பங்களை உருவாக்க கூடியது என நினைக்க வைக்க விரும்புகின்றனர். நம்முடைய வரிப்பணம் தான் பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு பயன்படுத்தப்படுவதாக நம்ப வைக்கப்பட்டுள்ளதால் தான் இந்த அளவுக்கு எதிர்ப்பும், ஆவேசமும். பாதுகாப்புத்துறை ஆய்வில் ஈடுபடுகிறது. இதன் பயனாக நடுவே ஜிபிஎஸ் கிடைக்கிறது. வெல்க்ரோ கிடைத்தது. இமெயில் கிடைத்தது. இராணுவத்திற்காக செலவிடப்படும் தொகையை நியாயப்படுத்த இது உதவுகிறது.

1978 ல் நான் அவர்களின் ஒரு பாகத்தைக் கூட பயன்படுத்தவில்லை. அதற்கு தேவையும் இருக்கவில்லை.

சிறிய நகரமான இடாஹோவைச் சேர்ந்த 14 வயது பைலோ பிரான்ஸ்வர்த்(Philo Farnsworth), தொலைக்காட்சியை கண்டுபிடித்தார். இதற்காக அவரை கடுமையாக தாக்கினர். நாம் இங்கு பாதை மாறுகிறோம். ஆனால் நான் சொல்ல வருவது என்ன என்றால் இந்தியா அல்லது இடாஹோவை சேர்ந்த ஒருவரால் வாழ்க்கையை மாற்றக் கூடியவற்றை உருவாக்க முடியும் என்பது தான். இராணுவத்திற்காக நாம் கோடிக்கணக்கில் செலவிட வேண்டாம். இராணுவ தொழில்வளாகத்தில் நாம் பெரும் தொகையை செலவிட வேண்டும், ஏனெனில் அவர்கள் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளார்கள் என நம்ப வைக்கப்பட்டுள்ளோம். ஒரு வெள்ளை மனிதரால் தான் இத்தகைய ஒன்றை கண்டுபிடிக்க முடியும். நியூஜெர்சியின் நெவார்க்கை சேர்ந்த பழுப்பு நிற பையனால் இமெயிலைக் கண்டுபிடிக்க முடியும் என்பதே அவர்களை கொதிப்படைய வைக்கிறது. அதனால் தான் என் தொடர்பான கட்டுரைகளை விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. விக்கிப்பீடியாவில் எனது பக்கத்தை பார்த்தால் என்னுடைய சாதனைகளை விவரிக்கும் கட்டுரைகளுக்கான இணைப்புகளை பார்க்கலாம். ஆனால் அதற்கான கட்டுரைகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. என்னுடைய 40 ஆண்டுகால வாழ்க்கையில் நான் கண்டுபிடிப்பாளராக, விஞ்ஞானியாக இருக்கிறேன். நிகழ்வுகளை அழிப்பது மட்டும் அல்ல என்னையே அழிப்பது தான் நோக்கம்.

இது என்னைப்பற்றியது மட்டும் அல்ல; இது இராணுவத் தொழில் வளாகம் பற்றியது. அவர்கள் மத்திய கிழக்கில் சென்று குண்டுகளை வீசி மக்களை அழிக்கலாம். ஏனெனில் அவர்கள் தான் மக்கத்தான கண்டுபிடிப்புகளை செய்கின்றனர். ஆனால் இது உண்மை இல்லை. இமெயில் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. ஆனால் இதற்கு இராணுவம் காரணம் இல்லை. நல்ல ஆசிரியர்கள், என் பெற்றோர்கள், மைகேல்சன் மற்றும் உள்ளூர் சூழலின் ஆதரவால் உருவானது. இது தான் புரட்சிகரமானது. இமெயிலும், தொலைக்காட்சியும் 14 வயது சிறுவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன என மக்கள் உணர்ந்தால், இராணுவத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுவதன் அவசியத்தை உணர மாட்டார்கள். இதைக் கண்டு தான் அஞ்சுகின்றனர்.

இமெயில் கண்டுபிடிப்பு தொடர்பான மாயைகளை போக்கும் வகையில் 'ஹஃபிங்டன் போஸ்ட்' தொடர் கட்டுரைகளை வெளியிட்டது. இந்தக் கட்டுரைகள் விலக்கப்பட்டுவிட்டன. இந்த மாயைகள் பற்றிய விவரங்களை அளிக்க முடியுமா?

ARPANET அர்பாநெட் இமெயிலை உருவாக்கியது என்று சொல்வது முதல் மாயை. இது முற்றிலும் தவறானது. அவர்கள் செய்தது என்ன என்றால் மின்னணு வரி செய்தி. அர்பாநெட் தந்தி வழியே யுத்தகள தகவல் தொடர்பு ஆய்வில் ஈடுபட்டிருந்தது. இது மிகவும் சாதாரணமான அமைப்பு. 1977ல் டேவிட் க்ரோக்கர் (David Crocker ) கட்டுரையில் "முழு அளவிலான, அமைப்புகளுக்கு இடையிலான மெயில் அமைப்பை உருவாக்குவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை” என்று குறிப்பிடுகிறார்.

இரண்டாவது மாயை; ரே டாம்லின்சன் இமெயிலை கண்டுபடித்தார் என்பதும், முதல் இமெயிலை அவர் அனுப்பினார் என்பதும். ரே டாம்லின்சன் 50 ஆயிரம் வரி நிரல்களை எழுதவில்லை. அவர் ஒரு பழைய நிரலை எடுத்துக்கொண்டு அதில் திருத்தங்களை செய்து , இரண்டு கம்ப்யூட்டர்களுக்கு இடையே தொடர்பு கொள்ள @ எனும் குறியீட்டை பயன்படுத்தினார். இது இமெயில் அல்ல. இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ் போல்டர்கள் அதில் இல்லை. ஆனால் என் பங்களிப்பை மறைக்க பிபிஎன் மற்றும் ரேத்தியான் பெரும் பிரச்சாரம் மேற்கொண்டன. அவர்கள் தங்கள் பிராண்டை உருவாக்க விரும்பினர். இமெயிலை கண்டுபிடித்தவர்கள் எனும் பெருமை அவர்களுக்கு கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களை பெற்றுத்தரும்.

கிஸ்மாடோ மற்றும் டெக்டர்ட்டில் வெளியான இன துவேஷம் நிறைந்த கட்டுரைகள் ஆர்.எப்.சி தான் இமெயில் என தெரிவித்தன. ஆனால் அவை சந்திப்பு நோட்கள் மட்டுமே. இதன் பொருள் கருத்துக்கான கோரிக்கை என்பதாகும். (Request for Comment). அந்த நாட்களில் கூட்டம் நடைப்பெற்றால் மேஜையில் பலரும் இருப்பார்கள். அவர்கள் கூட்டத்தின் குறிப்புகளை எழுதுவார்கள். இதை எல்லோருக்கும் அனுப்பி வைப்பார்கள். இவை கம்ப்யூட்டர் நிரல் அல்ல. பயனர் இடைமுகத்திற்கான எந்த குறிப்பிட்ட வடிவமும் இல்லை.

சிடிஎஸ்.எஸ் இமெயில் என்றும் குறிப்பிடப்பட்டது. இது எம்.ஐ.டியில் உருவாக்கப்பட்டது. இது ஆரம்பகால வலைபதிவு என கொள்ளலாம். இதை மெயில் என கூறியதன் காரணம், அவர்களிடம் ஒரு கோப்பு இருக்கும், அதில் நீங்கள் இன்னொரு பதிவை இணைக்கலாம். இது இமெயில அல்ல. இமெயிலின் வரையரைப்படி, (நான் தான் அதை வரையரை செய்தேன். நான் தான் இந்த சொல்லை உருவாக்கினேன். இந்த அமைப்பை உருவாக்கினேன்) அது இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ் மற்றும் போல்டர்கள் ஆகிய இணைக்கப்பட்ட பாகங்களை கொண்ட அமைப்பாகும்.

2012 ல் வாஷிங்டன் போஸ்ட் உங்கள் பங்களிப்பு ஸ்மித்சோனியனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து தொடர்பான கட்டுரை வெளியான பிறகு உங்களுக்கு எதிரான கருத்துக்கள் எழுந்து, உச்சத்தை தொட்டன. இது பற்றி விளக்க முடியுமா?

எல்லோரும் இந்தியாவை உலகின் ஊழல் மிக்க நாடு என்று கூறுகின்றனர். ஆனால் அமெரிக்க ஊழல் பற்றி பேசுவதில்லை. இங்கு அது அழமாக இருக்கிறது. மறைந்திருக்கிறது. நுட்பமாக இருக்கிறது.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை இளம் கருப்பு செய்தியாளரால் எழுதப்பட்டது. அந்த கட்டுரை வெளியான ஒரு மணி நேரத்தில் எல்லோருடைய வசைபாடுதலுக்கு இலக்கானார். அவர் என்னை அழைத்து, தனது எடிட்டர் தனக்கு ஆதரவாக இல்லை என்று தெரிவித்து, எனக்கு எதிரான தாக்குதலை நடத்தும் இருவருக்கு எதிரான மறுப்பை எழுதித்தருமாறு கேட்டார். நான் நோம் சாம்ஸ்கியுடன் இணைந்து அதை எழுதத் தீர்மானித்தேன்.

ஆனால் அந்த கட்டுரை வெளியான போது அவர்கள் டேவிட் க்ரோக்கர் சொல்வதை மட்டும் ஆதரித்தனர். ஆனால் அப்போதும் கூட நான் இமெயிலை கண்டுபிடித்ததை மறுக்கவில்லை. எனக்கு முன்னர் மின்னணு செய்தி அனுப்புதல் இருந்தது என்றனர். நான் அதை கண்டுபிடித்ததாக கூறவில்லை. அது மோர்ஸ் கோட் காலத்தில் இருந்தே இருக்கிறது. ஆனால் இமெயிலை நான் உருவாக்கினேன்.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை வெளியான 7 நாட்களில் அவர்கள் ஒரு புகழ் அரங்கை உருவாக்கி அதில் இமெயிலை கண்டுபிடித்ததற்காக டாம்லின்சனுக்கு விருது கொடுத்தனர். இப்படி தான் அங்கு அமைப்பு செயல்படுகிறது.

இந்த அறிவிப்பிற்கு பிறகு ரேத்தியானின் பங்கு ஒரு டாலர் உயர்ந்தது. எனக்கு எதிராக பிரச்சாரம் புதுப்பிக்கப்பட்டது. "கரை படிந்த இந்த இந்தியர் அடித்துத் தூக்கிலிடப்பட வேண்டும்” என்று ஒரு வலைப்பதிவில் எழுதப்பட்டது. ஒரு இந்தியர் நிரல் எழுதினால், அல்லது அவுட்சோர்ஸ் செய்தால் அல்லது மைக்ரோசாப்ட் தலைவரானால் பிரச்சனை இல்லை. ஆனால் இந்தியர் கண்டுபிடிப்பாளாராக இருக்க கூடாது. நான் மோசடிக் காரர் என அழைக்கப்படுகிறேன். விக்கிப்பீடியா என்னை பொய்யர் என்கிறது.

இமெயிலை நீங்கள் 1982 ல் பேட்டண்ட் செய்தீர்களா?காப்பிரைட் மற்றும் பேடண்ட் இடையே அதிக வேறுபாடு இல்லை. 14 ஆண்டுகள் கழித்து 1996 ல் அதை நீங்கள் ஏன் புதுப்பிக்கவில்லை?

image


1980 ல் காப்பிரைட் சட்டம், சாப்ட்வேர் உரிமையை காக்கும் வகையில் மாற்றப்பட்டன. 1981ல் எனக்கு 16 வயது தான். இந்த நுட்பங்களை நான் புரிந்துகொள்ளவில்லை. வழக்கறிஞரை நியமிக்க வசதி இல்லாததால் எல்லாவற்றையும் நானே மேற்கொண்டேன். 1990களில் தான் உச்சநீதிமன்றம் சாப்ட்வேர் பேட்டண்டை ஏற்றுக்கொள்ளத்துவங்கியது. ஏற்கனவே வெளியான ஒன்றை பேட்டண்ட் பெற முடியாது என்பதால் என்னால் இதை செய்ய முடியவில்லை.

இந்த பேட்டண்ட் காரணமாக உங்களால் லாபம் பெறமுடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறதா?

வால்டர் ஐசக்சனின் புதிய புத்தகமான 'இன்னவேட்டர்ஸ்', வெள்ளைக் கண்டுபிடிப்பாளர்களை மட்டும் கொண்டிருக்கிறது. அரசு, கல்வி அமைப்பு மற்றும் இராணுவம் இணைந்து செயல்படும் போது தான் கண்டுபிடிப்புகள் நிகழ்வதாக இந்த புத்தகம் சொல்கிறது. லாபம் தான் கண்டுபிடிப்பிற்கான மிகப்பெரிய உந்துதல் என்கிறார் அவர். கண்டுபிடிப்பிற்கு லாபம் தான் மூலக்காரணம் என்று சொல்வது அபத்தமானது. மனிதக்குலத்தை ஏமாற்றுவதற்காக அதிகாரத்தில் உள்ளவர்கள் உருவாக்கிய கருத்து இது.

இன்று எனது போராட்டம் இமெயிலை கண்டுபிடித்தது தொடர்பானது இல்லை. எல்லாத் தகவல்களும் இருக்கின்றன. வாசகர்கள் அதைப்பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும். கண்டுபிடிப்புகளை யார் கட்டுப்படுத்துகின்றனர் என்பதிலும் மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்துமே நான் கவலைப்படுகிறேன்.

ஆக்கம்: ராக்கி சக்ரவர்த்தி | தமிழில்: சைபர்சிம்மன்

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக