பதிப்புகளில்

நகரம் போல காட்சி அளிக்கும் ஓடந்துறை கிராமங்கள்: வளர்ச்சிக்கு உதவிய உள்ளாட்சி நிர்வாகம்!

YS TEAM TAMIL
6th Jul 2018
Add to
Shares
232
Comments
Share This
Add to
Shares
232
Comments
Share

1996-ம் ஆண்டிற்கு முன்பு எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் இருந்த ஓடந்துறை பஞ்சாயத்து ஆர் சண்முகம் என்கிற பஞ்சாயத்துத் தலைவர் தண்ணீர், மின்சாரம், வீட்டுவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டதால் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டது. 

வறுமையில் சிக்கித் தவித்த கிராமவாசிகளின் நிலை கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வாயிலாக மேம்பட்டுள்ளது.

மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. சுமார் பத்தாண்டுகளில் குடிசைகளில்லா பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்த கிராமங்களில் தடையில்லா தண்ணீர் விநியோகமும், இரவு விளக்குகளும், சிறப்பான சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளன. 

நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தால் வளர்ச்சியை சாத்தியப்படுத்தமுடியும் என்பதற்கு சான்றாக விளங்கும் ஓடந்துறை மற்ற கிராமங்களும் பின்பற்றதக்க வகையில் முன்மாதிரியாக திகழ்கிறது.
ஆர். சண்முகம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர். பட உதவி: சாரதா பாலசுப்ரமணியன்

ஆர். சண்முகம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர். பட உதவி: சாரதா பாலசுப்ரமணியன்


கோயமுத்தூரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஓடந்துறை கிராம பஞ்சாயத்தின் ஊமபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான விஜயலஷ்மி ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகள் பள்ளிக்குச் செல்ல நீண்ட தூரம் பயணம் மேற்கொண்ட நாட்களை நினைவுகூர்ந்தார். 

”கிராமத்தில் ஒரு துவக்கப்பள்ளி மட்டுமே இருந்தது. பின்னர் கிராமப்புற குழந்தைகள் மேட்டுப்பாளையம் சென்று பள்ளிப்படிப்பை தொடர்வதற்காக பஞ்சாயத்தால் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன,” என்று VillageSquare.in-க்கு தெரிவித்தார்.

”குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல கிட்டத்தட்ட 10 கி.மீ பயணிக்க வேண்டிய சூழல் நிலவியதால் பலர் இடை நிறுத்தம் செய்தனர்,” என்று VillageSquare.in-க்கு தெரிவித்தார் ஓடந்துறை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகம்.

1996-ம் ஆண்டு சண்முகம் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு இந்த கிராமத்தின் வளர்ச்சிப்பணிகள் மும்முரமாயின. இந்த பஞ்சாயத்தின்கீழ் பத்து கிராமங்கள் உள்ளன.

அனைவருக்கும் தண்ணீர்

“பஞ்சாயத்துத் தலைவரான நான் பொறுப்பேற்றபோது வளர்ச்சிப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரே ஒரு கிராமத்தில் மட்டுமே குடிநீர் இருந்தது. அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதே என்னுடைய உடனடி நடவடிக்கையாக இருந்தது,” என்றார்.

சண்முகம் பொறுப்பேற்ற பிறகு போர்வெல்கள் சுத்தம் செய்யப்பட்டன. ”மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினோம். கோடைக்காலத்தில் போர்வெல்கள் வற்றி விடுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இங்கு வற்றாத பவானி ஆறு உள்ளதால் அந்த தண்ணீரை கிராமங்களுக்கு விநியோகிப்பது குறித்து சிந்தித்தோம்,” என்று அவர் VillageSqure.in-க்கு குறிப்பிட்டார்.

1998-ம் ஆண்டு பஞ்சாயத்து அரசாங்கத்திற்கு முன்மொழிந்தது. சண்முகம் கூறுகையில், “ஒரே ஒரு பஞ்சாயத்திற்காக மிகப்பெரிய அளவில் நிதியை ஒதுக்கமுடியாது என அரசாங்கம் பதிலளித்தது,” என்றார்.

1995-ம் ஆண்டு தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம் துவங்கப்பட்டபோது சமூகத்திடமிருந்து பணம் திரட்டப்படுமானால் இவர்களது திட்டம் சமர்ப்பிக்கப்படலாம் என சண்முகத்திடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இது சமூக பங்களிப்புடன்கூடிய திட்டம். இதில் 10 சதவீத பங்களிப்பு சமூகத்தின் தரப்பில் இருக்கவேண்டும். 90 சதவீதம் இந்திய அரசாங்கத்திடமிருந்து ஒதுக்கப்படும். உலக வங்கி இந்த முயற்சியை ஆதரித்தது.

”கிராமத்தினருடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களது சமூகம் 4.8 லட்சம் பங்களித்தது. அரசாங்கத்திடமிருந்து 480 லட்ச ரூபாய் பெறப்பட்டது. 100 ரூபாய், 500 ரூபாய் என கிராமத்தினர் தங்களால் இயன்ற தொகையை வழங்கினர்,” என்றார் சண்முகம்.

தண்ணீர் விநியோகம்

தேசிய அளவில் திட்டத்தை 52 மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கான நிதியுதவி வழங்கப்படும் முதல் மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்டது. தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், 13 கி.மீ பைப்லைன், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் ஆகியவை 11 மாதங்களில் கட்டப்பட்டது. 2000-ம் ஆண்டு கிராமங்களுக்கு பாக்டீரியாக்கள் இல்லாத தண்ணீர் வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் விநியோகிக்கப்பட்டது. 

image


”இதற்கு முன்பு இருட்டு நேரங்களில் தண்ணீர் கொண்டு வருவதற்காக என் குழந்தைகளையும் உடன் அழைத்துக் கொண்டு ஒரு நீரோடைக்குச் செல்வேன். தண்ணீர் மோசமாகவே இருக்கும். வாரத்தில் ஒரு நாள் எங்களது துணிகளை எல்லாம் ஓடைக்கு எடுத்துச் சென்று நாள் முழுவதும் செலவிட்டு துவைத்து மாலையில் வீடு திரும்புவோம்,” என்று விஜயலஷ்மி VillageSquare.in-க்கு தெரிவித்தார்.

”தற்போது அவர்களது வீட்டிலேயே பைப் மூலம் தண்ணீர் வருவதால் இந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது பணிகளை விரைவாக முடித்துவிட்டு குழந்தைகளையும் நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்பிவிடுகின்றனர்,” என்றார் சண்முகம். நீர் தேவைகளைப் பொருத்தவரை ஓராண்டில் இந்த கிராமங்கள் சுயசார்புடன் மாறியது.

இதர வளர்ச்சிகள்

முன்பு குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மேட்டுப்பாளையம் வரை பயணித்தனர். ஆனால் இன்று ஒரு ஆரம்பப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகியவை இந்த கிராமப் பகுதிகளில் உள்ளன. சண்முகம் குறிப்பிடுகையில், 

“கிராமங்களில் பள்ளிகள் இருப்பதால் யாரும் இடை நிறுத்தம் செய்வதில்லை. கல்விக்கான அனைத்து வசதிகளையும் இங்கு வழங்குகிறோம். முன்பு 40-50 மாணவர்கள் படித்த பகுதிகளில் தற்போது 350-400 மாணவர்கள் படிக்கின்றனர். இது மிகப்பெரிய மாற்றமாகும்,” என்றார்.

ஓடந்துறை பஞ்சாயத்தின் கீழ் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் விவசாயத் தொழிலாளர்கள். பழங்குடி சமூகத்தினர் 400-500 குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். பஞ்சாயத்துத் தலைவர் குறிப்பிடுகையில், “வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் நிலையை மேம்படுத்துவது குறித்து சிந்தித்தேன். அப்போதுதான் மறைந்த முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா புது வாழ்வு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்,” என்றார்.

வறுமை குறைப்பு

பஞ்சாயத்தில் கிராமப்புற வறுமை குறைப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவர் நியமிக்கப்பட்டார். ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சமூகத்தின் ஏழை மற்றும் தேவையிருப்போர் கண்டறியப்பட்டனர்.

ஓடந்துறையில் இந்த திட்டத்தின்கீழ் சோதனை திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 1997-ம் ஆண்டு 45 வீடுகள் கட்டப்பட்டன. 1999-ம் ஆண்டு 25 வீடுகள் கட்டப்பட்டன. 2003-ம் ஆண்டு 135 வீடுகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் வீடுகள் கட்டப்பட்டு 2006-ம் ஆண்டு தற்காலிக குடிசைகளே இல்லாமல் போனது.

பின்னர் பஞ்சாயத்துத் தலைவர் மக்களுக்கு தேவை ஏற்படும்போது சிறு கடன்களை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

”இந்த பஞ்சாயத்து வளர்ச்சியடைந்ததும் மற்ற பஞ்சாயத்துகளும் எங்களது பகுதியை பார்வையிட்டு செயல்பாடுகளை காண விரும்பினர். எங்களது வளர்ச்சி மாதிரியைக் காணவும் புரிந்துகொள்ளவும் ஒவ்வொரு பஞ்சாயத்திலிருந்தும் 1,000 ரூபாய் வசூலித்தோம். இவ்வாறு 1.65 லட்சம் சேகரித்து நுண்கடன் திட்டத்திற்கு பயன்படுத்தினோம்,” என்று தெரிவித்தார்.

நுண்கடன் திட்டம் மக்களின் அவசர தேவைக்காக உருவாக்கப்பட்டதாகும். ”பள்ளி புத்தகங்கள், சீரூடை போன்றவை வாங்குவதற்கோ அல்லது மருத்துவ ஆலோசனைக்காகவோ 500 ரூபாய் அல்லது 1,000 ரூபாய் என சிறு தொகை தேவைப்பட்டால் அவர்கள் விண்ணப்பித்து இந்தக் கடனைப் பெற்றுக்கொள்ளலாம்,” என்றார் சண்முகம். விண்ணப்பித்த அதே நாள் குறைந்த வட்டியுடன் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். தனிப்பட்ட குடும்பங்களின் மேம்பாட்டிற்கு இந்தத் திட்டம் பயன்படும்.”

வருவாய் அல்லது வேலை தேவைப்படுவோருக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சிறு கடைகள் அமைப்பது, சணல் பை அல்லது பாய் தயாரிப்பு, சிறு தொழில் துவங்குதல் போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில் துவங்க விரும்புவோருக்கு வங்கிக் கடன்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

உபரி மின்சாரம்

இந்த பஞ்சாயத்து சொந்தமாக காற்றலை அமைத்து அதன் வாயிலாக வருவாய் ஈட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பஞ்சாயத்து காற்றாலை வாயிலாக உற்பத்தியாகும் கூடுதல் மின்சக்தியை மாநில மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்து 19 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. சண்முகம் கூறுகையில்,

 “அரசு திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்தினால் வளர்ச்சி சாத்தியமாகும். வளர்ச்சிகள் ஏதும் இல்லாத கிராமங்களை பத்தாண்டுகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் ஒருவரும் இல்லாத பகுதியாகவும் சுயசார்புடனும் மாற்றுவது ஓடந்துறை பஞ்சாயத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தால் சாத்தியம் என்றால் இந்தியாவின் எந்த பகுதியிலும் இது சாத்தியமே. கிராமவாசிகளின் ஆதரவுதான் வளர்ச்சிக்கான முக்கியக் காரணம்,” என்கிறார் சண்முகம்.

அது மட்டுமின்றி இது ஊழல் இல்லாத பஞ்சாயத்தாகும். ஒவ்வொரு பைசாவும் கிராமத்தின் வளர்ச்சிக்கே ஒதுக்கப்படுகிறது. இதுவே பஞ்சாயத்தின் வெற்றிக்குக் காரணம். “ஒரு கிராமம் வளர்ச்சியடைய வேண்டுமானால் அங்கு ஊழல் அறவே இருக்கக்கூடாது. அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும்,” என்று உறுதியாக கூறினார் சண்முகம்.

அவர் பொறுப்பேற்றபோது இந்த கவுன்சிலில் இருந்த மக்கள்தொகை 1,650-ஆக இருந்தது. இன்று 9,500 பேர் இந்த கிராமங்களில் வசிக்கின்றனர். “தற்போது இந்த மக்களுக்கு தண்ணீர், மின்சாரம், நல்ல சாலைகள், வீடுகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. இதன் காரணமாகவே மக்கள் இந்த கிராமங்களுக்கு குடிபெயர விரும்புகின்றனர். பொதுவாக மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்வது குறித்தே சிந்திப்பார்கள். எனினும் இங்குள்ள முழுமையான வளர்ச்சி காரணமாக நிலைமை தலைகீழாக மாறியுள்ளது,” என்று சண்முகம் VillageSquare.in-க்கு தெரிவித்தார்.

ஆங்கில கட்டுரையாளர் : சாரதா பாலசுப்ரமணியன் | தமிழில் : ஸ்ரீவித்யா

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரை முதலில் VillageSquare.in-ல் வெளியானது. இதில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளாகும். எந்த விதத்திலும் யுவர்ஸ்டோரியின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை.)

Add to
Shares
232
Comments
Share This
Add to
Shares
232
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக