பதிப்புகளில்

விளைநிலத்தில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்க ஆளில்லா விமானம் வடிவமைத்த ஸ்டார்ட் அப்!

18th Jul 2018
Add to
Shares
80
Comments
Share This
Add to
Shares
80
Comments
Share

’தானோஸ் டெக்னாலஜிஸ்’ (Thanos Technologies) என்கிற ஸ்டார்ட் அப் பிரதீப் பலேலி, பிரத்யுஷ் அக்கிபெடி ஆகிய நிறுவனர்களால் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் விவசாய தொழில்நுட்பப் பிரிவில் செயல்படுகிறது. சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதில் இருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறது.

மார்வெல் காமிக் யூனிவர்ஸ் தொடர்புடைய தானோஸ் என்றதும் சமீபத்திய அவெஞ்சர்ஸ் திரைப்படமான ’இன்ஃபினிட்டி வார்’ நம் நினைவிற்கு வரும். ஆனால் தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தானோஸ் என்பது அவர்களது வாழ்வை பாதுகாத்து பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணியைத் திறம்பட மேற்கொள்ளும் ஆளில்லா விமான தொழில்நுட்ப நிறுவனமாகும்.

ஆளில்லா விமானங்களை பல்வேறு அர்த்தமுள்ள தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்று நம்பினார் தானோஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ பிரதீப் பலேலி. இந்த நம்பிக்கையுடன் 2016-ம் ஆண்டு இந்நிறுவனத்தைத் துவங்கினார். இந்த ஸ்டார்ட் அப் ஆரம்பத்தில் பிரத்யேக தேவைக்காக வடிவமைக்கப்படாமல் வெவ்வேறு விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு தயார்நிலையில் இருந்த ஆளில்லா விமானத்தின் உதவியுடன் வான்வழி ஆய்வு தீர்வுகளை வழங்கத் துவங்கியது.

தானோஸ் நிறுவுவதற்கு முன்பு பிரதீப் மேற்கூரை சூரிய சக்தி அமைப்புகளை நிறுவும் நிறுவனமான சோல்ட் எனர்ஜி (Zolt Energy) நிறுவனத்தில் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ-வாக இருந்தார்.

நிலங்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்துதல்

”முன்பு நிலத்தை கண்காணிக்கும் திறனை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது. மனித தலையீடுகளுடன் மேற்கொள்ளப்படும் தரவு சேகரிப்பு முறைக்கான நேரத்துடன் ஒப்பிடுகையில் ஆளில்லா விமானம் பயனபடுத்தி தரவு சேகரிக்கும் முறைக்கு அதில் ஒரு பங்கு நேரம் மட்டுமே செலவாகும்,” என்றார் பிரதீப்.

ஹைதராபாத்தில் வெவ்வேறு ஸ்டார்ட் அப் நிகழ்வுகளில் செயல் விளக்கம் அளித்தபோது விவசாய நிலங்களைக் கொண்ட சில விவசாயிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப ஊழியர்கள் ஆளில்லா விமானங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்து பிரதீப்பிடம் கேட்டனர்.

எனவே பிரதீப் சில ஆய்வுகள் நடத்தவும் விவசாயிகளுடன் நேர்காணல் நடத்தவும் தீர்மானித்தார். விவசாயத்தில் உள்ள பிரச்சனைகள், குறிப்பாக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் நடவடிக்கையில் நிலவும் பிரச்சனைகளை உணர்ந்தார். இந்தச் செயல்முறையில் ஈடுபடுவோருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இதற்கான தொழிலாளர்கள் கிடைப்பது கடினமாகிறது. இந்த செயல்முறை தானியங்கி முறைக்கு மாற்றுவதற்கு உகந்தது என நினைத்தார்.

அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களை ’தானியங்கி வான்வழி பூச்சிகொல்லி தெளிக்கும் தளத்தின்’ வடிவமைப்பு, உருவாக்குதல் மற்றும் முன் வடிவமைப்பை சோதனை செய்தல் ஆகியவற்றிற்காக இக்குழுவினர் செலவிட்டனர்.

”எங்களது தொழில்நுட்ப செயல் விளக்கங்களிலும் விவசாய கண்காட்சிகள் ஒன்றிலும் எங்களது ஆளில்லா விமானத்தை காட்சிப்படுத்தினோம். விவசாயிகள் ஆர்வம் காட்டியது எங்களது ஊகங்களை உறுதி செய்தது. அவர்களது கருத்துகளை கேட்டறிந்து அதன் அடிப்படையில் சந்தையில் தயார் நிலையில் இருக்கும் விதத்திலான 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட வான்வழி தெளிக்கும் தளத்தை உருவாக்கினோம்,” என்றார் பிரதீப்.
image


இணை நிறுவனரை இணைத்துக்கொள்ளுதல்

பிரதீப் ஆளில்லா விமானம் உருவாக்கத் துவங்கியபோது தனியாக இதில் ஈடுபடமுடியாது என்பதை உணர்ந்தார். அவருக்கு இணை நிறுவனர் ஒருவர் தேவைப்பட்டார். கிட்டத்தட்ட அதே நேரத்தில் பிரத்யுஷ் அக்கிபெடி பல்வேறு நோக்கங்களுக்காக பல அளவுகள் மற்றும் கட்டமைப்புகளைக் கொண்ட ஆளில்லா விமானம் குறித்து ஆராய்ந்து வந்தார். பிரத்யுஷ் உருவாக்கிய ஆளில்லா விமானங்கள் சந்தையில் கிடைக்கும் மற்ற எல்லா விமானங்களைக் காட்டிலும் மாறுபட்டதாக இருந்ததை பிரதீப் உணர்ந்தார்.

”ஆர்சி/ஆளில்லா விமான பொழுதுபோக்காளர்கள் வாட்ஸ் அப் குழு வாயிலாகவே அவரைத் தொடர்பு கொண்டேன். பின் இருவரும் சந்தித்துக்கொண்டோம்,” என்றார் பிரதீப்.

இருவரும் கலந்துரையாடிய பின்னர் பிரத்யுஷ் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ-வாக இணைந்துகொண்டார். ஆளில்லா விமானங்களை உருவாக்குதல், வடிவமைத்தல், சோதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கையாண்டார். பிரத்யுஷ் இணை நிறுவனராக இணைவதற்கு முன்பு பசபிக் மருத்துவமனைகளில் தலைமை நிர்வாக மேலாளராக இருந்தார்.

”எங்களது முதல் மற்றும் ஒரே ஊழியர் ஹரிஷ் அல்லாடி. இவர் வான்வெளிப் பொறியியல் பிரிவில் எம்.டெக் முடித்துள்ளார். தற்போது பிரத்யுஷ் உடன் சில காலமாக பணிபுரிந்து வருகிறார். ஆளில்லா விமானம் மற்றும் ஆளில்லா விமானம் சார்ந்த செயல்பாடுகள் தொடர்பான சிக்கல்களுக்குத் தனித்துவமான தீர்வுகளை ஹரிஷ் முன்வைக்கிறார்,” என்றார் பிரதீப்.

தயாரிப்பு எவ்வாறு செயல்படுகிறது?

வான்வழியாக தெளிக்க உதவும் இந்தத் தளம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே சீராகவும் திறமையான விதத்திலும் 15 முதல் 20 நிமிடங்களில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் பணியை முடித்துவிடும். விவசாயிகளின் உள்ளீடு செலவுகளைக் குறைக்க உதவும். அதே போல் விளைச்சலையும் மண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவும்.

பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படவேண்டிய நிலத்தின் எல்லைகளை அடையாளப்படுத்த ஒரு மொபைல் செயலி பயன்படுத்தப்படும். பின்னர் ஆளில்லா விமானத்தின் உயரம் மற்றும் வேகம் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படும். அதன் பிறகு அனைத்து அடிப்படை சோதனைகளும் முடிந்ததும் ஆளில்லா விமானம் பறக்கும்.

தெளிக்கும் நடவடிக்கையின்போது மனித தலையீடுகளே தேவைப்படாது. ஆளில்லா விமானம் தானாகவே புறப்பட்ட இடத்தை வந்தடையும். ஒருவேளை தேவைப்பட்டால் மனிதர்கள் தலையிட்டு திரும்ப வரவழைக்கமுடியும். ஒரு ஏக்கர் நிலப்பு பாரம்பரிய முறையில் தெளிக்கப்படுவதற்கு சுமார் 100-150 லிட்டர் பூச்சிக்கொல்லிகள் தேவைப்படும்.

”தற்சமயம் நாங்கள் 30 முதல் 40 லிட்டர் (நடுத்தர அளவு தெளிக்க) பயன்படுத்துகிறோம். ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 லிட்டராக (குறைவான அளவு தெளிக்க) குறைக்க விரும்புகிறோம். அளவு குறையக் குறைய பணி விகிதம் (ஒரு மணி நேரத்திற்கு பணிபுரியும் ஏக்கரின் அளவு) அதிகரிக்கும்,” என்றார் பிரதீப்.

பயிர் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் செடிகளின் எண்ணிக்கைக்காகவும் விவசாய தொழில்நுட்பம், விவசாய சார்ந்த தானியங்கல் மற்றும் விவசாயம் சார்ந்த நுண்ணறிவுப் பிரிவு போன்றவற்றில் தானோஸ் பணிபுரிகிறது. பாதுகாப்புப் துறையில் இந்திய ராணுவத்தின் R&D பிரிவில் சிறிதளவு பங்களிப்பதாகவும் இக்குழுவினர் தெரிவித்தனர். இவர்களிடம் உள்ள ஆளில்லா விமானத்தை தாங்குசுமை டெலிவரி பயன்பாடு மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்காக பிரத்யேகமாக பயன்படுத்தும் விதத்தில் வடிவமைத்தனர்.

image


தயாரிப்பை உருவாக்குதல்

தானோஸ் CIE IIITH மற்றும் ICRISAT ஆகியவற்றால் இன்குபேட் செய்யப்படுவதுடன் RICH மற்றும் சர்ஜ் இம்பேக்ட் ஃபவுண்டேஷன் அண்ட் பெர்க்லி ஸ்மார்ட் ஏபி ஆகியவற்றால் ஆதரவளிக்கப்பட்டு வழிகாட்டப்படுகிறது.

”சில நிறுவனங்கள் ஆளில்லா விமானங்களை இறக்குமதி செய்கின்றன. அல்லது சந்தைக்கு தயாராக இல்லாத வடிவத்தில் ஆளில்லா விமானங்களை உருவாக்குகின்றன. நாங்கள் சந்தைக்குத் தயாராக இருக்கும் தயாரிப்பை வடிவமைத்து, உருவாக்கி, எங்களது இடத்திலேயே சோதித்து பார்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார் பிரதீப்.

முதலீடு குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் வருவாய் மாதிரி சிறப்பாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவுமே இந்நிறுவனம் இவ்வாறு செயல்படுகிறது. எனினும் ஆளில்லா வான் வழி அமைப்பு தளங்களை உருவாக்கத் தேவையான பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதும் இல்லை விற்பனை செய்யப்படுவதுமில்லை.

3கே கார்பன் ஃபைபர் ஷீட்கள், டிசி மோட்டார்கள், ப்ரொப்பெல்லர்கள் மற்றும் பிற சிறிய எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டது. ஆளில்லா விமானத்தின் முக்கிய பொருட்களில் ஒன்று ஃப்ளைட் கண்ட்ரோலர். இதுவும் சீனாவிலிருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஓபன் சோர்ஸ் ஹார்டுவேர் பயன்படுத்தி தங்களது சொந்த வடிவத்தை உருவாக்குவதில் தற்போது பணிபுரிந்து வருவதாக பிரதீப் தெரிவித்தார். இதன் மூலம் ஆளில்லா விமானங்களை சிறப்பாகவும் பாதுகாக்கவும் மாற்றுவதற்கு தேவையான கூடுதல் திறன்களைப் பெறலாம் என்றார்.

வருவாய் மாதிரி

தற்போது அதிக உறுதிப்பாடுடன்கூடிய ஆளில்லா விமான முன்வடிவத்தில் இந்நிறுவனம் பணிபுரிந்து வருகிறது. இது வெவ்வேறு வகையான பயனர்களுக்கு (காவல்துறை, ராணுவம், நகராட்சிகள்) கண்காணிப்பு பயன்பாடுகளுக்கு உதவக்கூடியதாகும். ஆளில்லா விமானம் வாயிலான விநியோகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றையும் ஆராய்ந்து வருகிறது.

இக்குழுவினரிடம் தெளிப்பதை சேவையாக வழங்கும் மாதிரி (Spraying-as-a-Service) உள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு 500 ரூபாய் முதல் 600 வரை கட்டணம் வசூலிக்க திட்டமிடுகின்றனர். 15 லிட்டர் விவசாயத்திற்கான பூச்சிகொல்லி தெளிக்கும் ஆளில்லா விமானம் உருவாக்குவதற்கான தற்போதைய செலவைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை ஓராண்டில் திரும்பப்பெறப்படும் (CAPEX மற்றும் OPEX) என பிரதீப் நம்புகிறார்.

விவசாய ஆளில்லா விமானங்களுக்கான உலகளாவிய சந்தை 2022-ம் ஆண்டில் 4.2 பில்லியன் டாலரை எட்டும் என்றும் 30.19 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் காணப்படும் என்றும் நம்பப்படுகிறது.

2017-ம் ஆண்டு இந்தியாவில் 17 ஒப்பந்தங்களுடன் சுமார் 53 மில்லியன் டாலர் விவசாய ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்காக ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா அரசாங்கம் சில விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுடனும் ஆளில்லா விமான நிறுவனங்களுடனும் பணிபுரிந்து வருகிறது. இதற்காக ’தி பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனும்’ அரசாங்கத்துடன் பணியாற்றி வருகிறது.

ஆரம்பத்தில் நிறுவனர்கள் தங்களது சேமிப்பிலிருந்து 18 லட்ச ரூபாயை முதலீடு செய்தனர். வருவாய் ஈட்டுவதற்கான வெவ்வேறு வகையான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இதுவரை 2.25 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் பிரதீப் தெரிவித்தார்.

”இந்தியாவில் ஏராளமான ஆளில்லா விமான நிறுவனங்கள் உள்ளன. ஆனால் உள்ளூர் பயன்பாடுகளுக்கும் அதே சமயம் ஏற்றுமதி செய்வதற்கும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட, சந்தைக்குத் தயாராக உள்ள, நுண்ணறிவு கொண்ட ஆளில்லா விமானங்களை உருவாக்க விரும்புகிறோம். இந்திய ஆளில்லா விமான சந்தையில் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் மிகப்பெரிய உற்பத்தியாளர் / சேவை வழங்குவோராக செயல்பட விரும்புகிறோம்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
80
Comments
Share This
Add to
Shares
80
Comments
Share
Report an issue
Authors

Related Tags