பதிப்புகளில்

சொந்த வருமானத்தில் 260 உயிர்களை காப்பாற்றியுள்ள ஆம்புலன்ஸ் மணி!

புதுவை மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் மணிகண்டன், கடன் பெற்று ஆம்புலன்ஸ் வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக செய்து வருகிறார். 34 மாதங்களில் 260க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார் ஆம்புலன்ஸ் மணி. 
posted on 24th October 2018
Add to
Shares
657
Comments
Share This
Add to
Shares
657
Comments
Share

சமூக சேவை செய்ய ஒன்று நல்ல சிந்தனையோடு, பொதுப்பணியில் ஈடுபாடும் தேவை மற்றொன்று கண்கூடாக நேர்ந்து விடும் அவலத்தை கண்டு மனம் வெகுண்டெழுந்து தன்னைப் போல பிறரும் துன்பப்படக் கூடாது என்ற எண்ணத்தில் செய்ய முன்வருவது. 

குடிசை வீட்டில் வசித்தாலும் கடன் பட்டு ஆம்புலன்ஸ் வாங்கி சமூக சேவகராக உயர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் மணிக்கு இந்த எண்ணத்தை ஏற்படுத்தியது யார்?

உயிர்களை காப்பாற்ற தேவைப்படும் கோல்டன் ஹவரில் கிடைக்காத மருத்துவ உதவியால் கண் முன்னே நடக்கும் உயிரிழப்புகள் ஏராளம். அப்படித் தான் புதுச்சேரி மாநிலம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டனின் கண் முன்னே உயிரிழந்த அவரது சகோதரனின் மரணமும் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார், 4 சக்கர வாகனங்கள் வாங்குவது குறித்த ஆலோசனைகளையும் தொலைபேசி மூலம் வழங்கி வருகிறார்.

பட உதவி: விகடன் மற்றும் ஃபேஸ்புக்

பட உதவி: விகடன் மற்றும் ஃபேஸ்புக்


பேவேலைக்கு செல்வதற்காக புதுச்சேரியின் முக்கிய சந்திப்பான பத்துக்கன்னு ஜங்ஷனை கடந்து கொண்டிருந்தவர் அந்தப் பகுதியில் கூடிஇருந்த கூட்டத்தை பார்த்து என்ன நடந்தது என பார்க்கச் சென்றுள்ளார். கல்லூரி மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி ரத்தவெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து ஆம்புலன்சிற்கு தகவல் கொடுங்கப்பா என்று கூறிவிட்டு கூட்டத்தினுள் தலையை விட்டு பார்த்தவருக்கு அதிர்ச்சி, கண்ணில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ரத்த வெள்ளத்தில் கிடந்தது அவருடைய சகோதரர், என்னோடு சிரித்து பேசி விளையாடி குறும்புத் தனம் செய்த என் தம்பி ஹரிராமன் ரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சற்று கிடக்கிறான் என்பதை பார்த்து மனம் பதைபதைத்தது. 

விபத்து நடந்து வெகுநேரமாகியும் அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவில்லை, ஒரு வழியாக நானே ஒரு வாகனத்தில் என்னுடைய தம்பியை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். இரண்டு நாட்கள் கோமாவில் இருந்தவன் கடைசியில் சிகிச்சை பலனளிக்காமல் நினைவு திரும்பாமலே உயிரிழந்து விட்டான். என் தம்பியை மருத்துவமனையில் அனுமதித்த போது மருத்துவர் என்னிடம் கூறியது இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடியே வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பது தான். 

சரியான நேரத்தில் கிடைக்காத ஆம்புலன்ஸ் சேவை என் தம்பி உயிரை காவு வாங்கிவிட்டது என் மனதை நெருடிக் கொண்டி இருந்தது என்கிறார் மணிகண்டன்.

தம்பியின் மரணத்தை தொடர்ந்து பத்துக்கன்னு ஜங்ஷனில் ஆம்புலன்ஸ் சேவை தேவை என்று அரசுக்கு பல முறை மனுக்கள் கொடுத்துள்ளார் மணிகண்டன். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. மனுக்கள் கொடுத்து சோர்ந்து போனவர் கடைசியில் ஒரு முடிவை எடுத்தார். பிறரை நம்பி இருக்காமல் சொந்தமாக ஆம்புலன்ஸ் சேவை வழங்கலாம் என்று தீர்மானித்து வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்கி பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகிறார். 

நான் சிறுக சிறுக சேமித்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை முன்பணமாக செலுத்தி தவணைக்கு வாகனத்தை எடுத்து ஆம்புலன்ஸ் சேவைக்காக பயன்படுத்தினேன். புதுச்சேரி மாநிலத்திற்குள் நுழைய பத்துக்கன்னு ஜங்ஷன் முக்கியமான இடம், 6 வழிகளைக் கொண்ட பிரதான ஜங்ஷனில் விபத்துகளும் அதிக அளவில் நடக்கின்றன. இந்த இடத்திற்கு வருவதற்குள் பல உயிர்கள் பறிபோய்விடுகின்றன, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கினேன் என்கிறார் மணிகண்டன்.

பத்துக்கன்னு ஜங்ஷனில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக காத்திருக்கிறது மணியின் ஆம்புலன்ஸ். இளைஞர்கள் மீது அதிக அன்பு கொண்ட மறைந்த ஏவுகணை நாயகன் டாக்டர் அப்துல்கலாம் மணிகண்டனின் மனம் கவர்ந்த நாயகன். 2016ம் ஆண்டு புதுச்சேரியில் கலாம் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் தனது இலவச ஆம்புலன்ஸ் சேவையை செய்து வருகிறார் மணிகண்டன்.

image


அப்பாவும் டிரைவர் என்பதால் தொடக்கத்தில் ஆம்புலன்ஸை அவரே ஓட்டினார், இரவு நேரங்களில் நான் ஓட்டி வந்தேன். விபத்தில் சிக்கியவர்களை ஸ்டெர்ச்சரில் தூக்கி வைத்து எடுத்துச் செல்வதற்கு அப்பாவிற்கு சிரமம் இருந்ததால் பின்னர் ஆட்களை போட்டு வாகனத்தை இயக்கி வருகிறேன் என்கிறார் மணிகண்டன். 

விபத்து மற்றும் அவசர கால உதவி என்று எப்போது மணிகண்டனின் தொலைபேசியை தொடர்பு கொண்டாலும் அடுத்த சில நிமிடங்களில் சிட்டாக பறந்து வந்து நின்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்த்து உயிர் பிழைக்க வைத்துவிடும் உன்னதமான பணியை செய்து வருகிறார்.

”எங்கள் குடும்பம் இன்னும் குடிசை வீட்டில் தான் வசிக்கிறோம். கடன் வாங்கி ஆம்புலன்ஸ் சேவை செய்ய வேண்டுமா என்று என் குடும்பத்தினர் கேட்டாலும் எனக்கு இதில் ஒரு திருப்தி கிடைக்கிறது, சரியான நேரத்தில் கிடைக்காத ஆம்புலன்ஸ் சேவையால் என் தம்பி இறந்தது போல இனி எந்த உயிரும் பறிபோகக் கூடாது என்ற எண்ணம் ஆழமாக இருந்ததால் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறேன்,” என்கிறார்.

இதுவரை 260க்கும் மேற்பட்ட உயிர்களை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று காப்பாற்றியுள்ளேன், சுமார் 38 கர்ப்பிணிப்பெண்களை அழைத்து சென்று பிரசவத்திற்கு சேர்த்துள்ளோம், இவற்றில் 2 குழந்தைகள் ஆம்புலன்சிலேயே பிறந்துள்ளன. சிரமம், கடன் பாராமல் ஆம்புலன்ஸ் சேவை செய்வதற்கு இதுவரை ஒரு பைசா கூட யாரிடமும் காசு வாங்கியதில்லை பலனடைந்தவர்கள் கூறும் நன்றி தரும் மனநிறைவே போதும் என மனமகிழ்ச்சியோடு இந்தப் பணியை செய்து வருவதாகக் கூறுகிறார் மணிகண்டன்.

ஆம்புலன்ஸ் சேவையோடு இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் இலவச சொர்க்க ரதத்தையும் பொதுமக்களுக்காக இயக்கி வருகிறார் மணிகண்டன். மறைந்த அப்துல்கலாம் அவர்களின் 87வது பிறந்தநாள் அண்மையில் நடந்து முடிந்தது அவரின் பிறந்த நாளன்று ஏழைகளின் இறுதி ஊர்வல மரியாதைக்காக இலவச சொர்க்க ரதத்தை உசுடு கிராமத்தில் பயன்பாட்டிற்காக அளித்துள்ளேன். 

இலவச சேவை செய்வதற்காக உதவி செய்ய வேண்டும் என்று அரசையோ அல்லது வசதிபடைத்தவர்களையோ இதுவரை அணுகியதில்லை, கடைசி வரை என்னுடைய சொந்த வருமானத்திலேயே இந்த இரண்டு சேவைகளையும் ஏழை மக்களுக்காக இலவசமாக செய்தாலே போதும் அதனை நோக்கித் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் மணிகண்டன்.

image


மணிகண்டனின் சமூக சேவைக்கு அரசு அங்கீகாரம் அளிக்காவிட்டாலும் பத்திரிக்கைத்துறையும், தனியார் அமைப்புகளும் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளன. சிறந்த சமூக சேவகர் விருது, இளம் சமூக மாற்றத் தலைவர் விருது 2018 உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மணிகண்டன் பெற்றுள்ளார். 

லண்டன் உலக செம்மொழி பல்கலைக்கழகம் மணிகண்டனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. படிப்பறிவு, வசதி படைத்த பின்புலம் இல்லாவிட்டாலும் மனமிருந்தால் நம்மால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வாழும் கடவுள் மணிகண்டன். 

Add to
Shares
657
Comments
Share This
Add to
Shares
657
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக