பதிப்புகளில்

கோபமூட்டிய பேருந்து அனுபவமும் பின்பற்ற 10 அடிப்படைகளும்!

YS TEAM TAMIL
9th May 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

அந்தச் சிறுமிக்கு பன்னிரெண்டு வயது இருக்கலாம். பள்ளிச் சீருடை அணிந்திருந்தாள். குழந்தைகளுக்கே உரித்தான கள்ளம் கபடமற்ற அழகிய முகம். அன்று 29சி வழித்தடப் பேருந்தில் அவள் பயணித்தாள். அதே பேருந்தில் நான். அவள் முன் படிக்கட்டின் இறங்கும் வழியின் அருகில் இருந்த இருக்கையின் கம்பியைப் பிடித்து நின்றுக் கொண்டிருந்தாள். நான் நடத்துநரைத் தாண்டி சில இருக்கையைத் தாண்டி, அவளுக்கும் முன்னே நின்று கொண்டிருந்தேன்.

பேருந்தில் ஒருவரையொருவர் இடித்து நெருக்கும் அளவுக்குக் கூட்டம் இல்லை. ஏதோ ஒரு நிறுத்தத்தில் முன் படிக்கட்டின் வழியே ஏறிய அந்த இளைஞன், ஒடிசலாய், முன் பக்கப் பற்கள் நீட்டிக் கொண்டிருக்க, கண்களில் கள்ளத்தனத்துடன் (வர்ணைக்கான காரணம் பின்வரும் வரிகளில்) அந்தச் சிறுமியைப் பார்த்தான். ஏறிய பொழுதில் இருந்து சற்றே முன்னேறி வசதியாய் அந்தச் சிறுமியின் பின்னே நின்று கொண்டு உரச ஆரம்பிக்க, கூட்டம் குவிய ஆரம்பித்தது.

அவனுக்கு இன்னமும் வசதியாக, அந்தச் சிறுமியின் இடுப்பில் கைவைத்துச் சில்மிஷம் செய்ய ஆரம்பிக்க, அந்தச் சிறுமிக்கு அவஸ்தை. அச்சிறுமி அப்படியும் இப்படியும் நகர அவனும் விடுவதாயில்லை. ரௌத்திரம் பழகு என்று வளர்ந்த வளர்ப்பில், பார்த்துக் கொண்டு என்னாலும் சும்மா இருக்க முடியவில்லை. அப்போதுதான் மாநில அளவில் தற்காப்புக் கலையில் பட்டமும் வென்ற நேரம். பொறுத்தது போதும் பொங்கியெழு என்று அச்சிறுமியின் அருகில் நகர முற்பட்டபோது, அச்சிறுமியே அழுகையுடன் அவனைத் தள்ளி "ச்சீ ஏன் இப்படி ஒரசுறே" என்று சத்தம் போட, அருகில் இருந்த ஒரு பெண் அச்சிறுமிக்கு ஆதரவாய்ப் பேச, அப்போது அடித்தான் அந்தக் காலி ஒரு ட்விஸ்ட். அவன் சொன்னது... "தோ டா... இது மூஞ்ச பாரு, இதை நான் உரசுனேனா..." மேலும் சில கேவலமான சொற்களை அவன் பிரயோக்கிக்க, அந்த வார்த்தைத் தாக்குதலில், அச்சிறுமியின் சுயம் அத்தனை பேர் முன்னிலையிலும், அவள் அழகில்லை என்ற அந்தத் தாக்குதலில் தகர்ந்து போனது!

இதற்குதான் அந்த இளைஞனின் உருவத்தைப் பற்றிய வர்ணனைத் தந்தேன். அவன் இப்படிப் பேசும்போது யாரும் வாயைத் திறக்கவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் பின்பக்க வழியில் இருந்து முன்பக்க வழிக்கு நான் நீந்திக் கரைச் சேர்ந்து அவனை ஓங்கி ஓர் அறை கொடுக்க, மொத்தம் கூட்டமும் விழித்துக்கொண்டது.

"ஏய், $%## என்னை ஏன் அடிக்குறே?" என அவன் கேட்க, "உன்னை உன் மாமியார் விட்டுக்கு கூப்பிட்டு போக டா %$##%*# நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்னு நானும் பார்த்துட்டுதான் இருந்தேன். செய்யறதையும் செஞ்சுட்டு அடாவடியாப் பேசுறே, உன் முகரையைக் கண்ணாடியில் பார்த்தியாடா %$##**#@@? டிரைவர் வண்டிய நேரா போலீஸ் ஸ்டேஷன் விடுங்க" என்று சொன்னதும் அச்சிறுமி என் கையைப் பிடித்துக் கொண்டது, அந்தக் குழந்தையின் கண்களில் அத்தனை பயம். நான் சட்டென்று, அவள் காதில் குனிந்து, "நீ கவலைப் படாதே, நானே கம்ப்ளைன்ட் தரேன், நீ வர வேண்டாம்" என்றேன். அதற்குள் எல்லோரும் அவனுக்கு எதிராகக் குரல் கொடுக்க, "ஏய் உன்னை என்ன பண்றேன் பாரு", என்று சொல்லிக்கொண்டே பேருந்தில் இருந்து இறங்கி ஓடினான். நானும், "டேய் ஆணழகா நில்லுடா $%##^&" என்று சொல்ல அவன் ஓடியே போனான்!

image


இதுபோல நிகழ்வுகள் எல்லாம், நமக்கு வெறும் கதைகள்தான். டெல்லி தொடங்கி கேரளம் வரை எத்தனை நிர்பயாக்கள். பாலியல் துன்புறுத்தல்கள், பலாத்காரங்கள் நிமிடத்துக்கு நிமிடம் எங்கயோ நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இங்கே பெண்கள் பாலியல் பாலத்காரம் செய்யப்படுவதற்கு, அவள் பெண் என்ற ஒரு காரணமே போதுமானதாய் இருக்கிறது என்பதுதான் உண்மை. அவள் நிறமோ, ஆடைகளோ, அழகோ, சாதியோ, மதமோ, வயதோ இவை எதுவுமே காரணங்கள் இல்லை. ஆண்களின் போதைக்கு ஊறுகாயாக ஒரு பெண் தேவைப்படுகிறாள், அவனின் காமத்துக்கு வடிகாலாய் ஓர் உடல் தேவைப்படுகிறது.

இவையெல்லாம் உண்மைதான் என்று ஆண்களே தங்களின் குற்றச் செயல்களின் மூலம் இதுவரை உறுதி செய்திருக்கிறார்கள். இவர்களின் மனநிலையை மாற்றும் முயற்சியில், பெண்களை மதிக்க வேண்டும், உன் சுதந்திரம் போல் அவளுக்கும் சுதந்திரம், தவறு செய்தால் கடுமையான தண்டனைகள் உண்டு என்பது போன்ற உளவியல் சார்ந்த, சட்டம் சார்ந்த, வளர்ப்புச் சார்ந்த எந்த மாற்றமும் இந்தச் சமூகத்தில் ஏற்படவில்லை. யாரோ ஒரு பெண் இறந்ததும் குரல்கள் வெடிக்கிறது, அடுத்தப் பரப்பரப்பான செய்தி வரும்போது, அந்தக் குரல்கள் நசுங்கிப் போகிறது அல்லது மக்களிடம் இருந்து மறைக்கப்படுகிறது. இறுதியில் சட்டம் குற்றவாளிகளுக்குக் குறைந்தபட்ச தண்டனையில் தன் கடமையை முடித்துக் கொள்கிறது.

ஒசாமாவை வளர்த்துவிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், பின்னாளில் வளர்த்த கடா மார்பில் முட்டுவது போல் முட்டியதும், அவனை அழித்தது. நம் நாட்டு அரசியல்வாதிகளும், சட்ட வல்லுனர்களும் கூட, மிகப்பெரிய ஓர் அழிவு வரும்வரை காத்திருப்பார்கள், தங்கள் வீட்டில் நெருப்பெரியும் வரை, அவர்களுக்கு மக்களின் சதைகள் பொசுங்கும் வாசனை தெரியாது.

குழந்தை என்றும் முதியவள் என்றும் பாராமல் வன்புணர்ச்சி செய்யத் தூண்டும் மோகம் என்பது பெரும் மன வெறியே. மதயானைகளை, வெறிப்பிடித்த நாய்களைக் கூடச் சரிப்படுத்த மனமின்றிக் கொலை செய்யும் சமூகம், அதை ஆதரிக்கும் சட்டம், இப்படிப் பெரும் வெறியுடன் மனித மிருங்களைத் தண்டிக்கச் சட்டம் இயற்றி, அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் வரை, இப்போதுள்ள பெற்றோர்கள் வருங்காலத் தலைமுறையைச் சரியாய் வளர்த்து சீர்ப்படுத்தும் வரை, பெண்கள் தங்களைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வாகனம் ஒட்டிக்கொண்டு போகும்போது, பேருந்தில் செல்லும்போது, தனியே நடக்கும்போது பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை நானும் கடந்திருக்கிறேன். பெரும்பாலும் அத்தகைய சமயங்களில், உதவிக்கு எந்த ஆண்களும் வருவதில்லை. ஒரு சமயம் ஒரு காவல் துறை அதிகாரியிடம் புகார் அளித்தபோது கூட ஒருவனைத் துரத்திப் பிடிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. பெரும்பாலும் நம் கைகளும் கால்களுமே நமக்குதவி. சமயங்களில் சக பெண்கள், அதுவும் மீன் விற்கும், பூ விற்கும், காய்கறி விற்கும் எளிய பெண்களே உதவியிருக்கிறார்கள். மற்றவர்கள் தயங்கி தயங்கி நகர்ந்துவிட்டிருக்கிறார்கள். யாரையும் குறை சொல்ல முடியாது. அப்படித்தான் சமூகம் பெண்களைப் பழக்கி வைத்திருக்கிறது.

பயம், வன்முறை பயம், நீதி கிடைக்காதென்ற பயம், காவல்துறையை நாடுவதற்கும் கூட பயம், பத்திரிகைகளின் புனைவுகளில் பயம். ஒரு பெண் கொலை செய்யப்பட்டால், தற்கொலை செய்து கொண்டால், முதலில் கள்ளக்காதல் என்று போலியாய்க் கற்பிக்கப்பட்ட கற்பென்ற ஒன்று களங்கப்படுத்தப்படும் பயம், வீட்டில் உள்ள முதியவர் முதல் வளர்க்கும் நாய்க்குட்டி வரை விளம்பரப்படுத்தபடும் பயம், சமூகத்தின் ஏளனப் பார்வையின் மீது பயம், இப்படிப்பட்ட பயம் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் இழுத்தடிக்கும் காலவதியான சட்டம் உள்ள சமூகத்தில், குடிகாரர்கள் நிறைந்திருக்கும் சமூகத்தில் பெண் எப்போதும் போகப் பொருளே, அவளின் பயன்கள் தீர்ந்து, சாலையில் பயமில்லாமல் செல்லும்போது, சமதர்ம சமுதாயம் என்பதற்கான வித்து அங்கிருந்தே மலரத் தொடங்கும்.

அதுவரை, தல என்றும் தளபதி என்றும் கபாலி டா என்றும் கூவும் இளைஞர்கள் கூட நடு ரோட்டில் யாரோ ஒரு பெண்ணுக்குப் பிரச்சனை என்றால் ஓடிவர மாட்டார்கள், மாறாகத் தங்கள் ஸ்மார்ட்போனில் அதை ஒரு குருங்காட்சியாக எடுத்து வாட்ஸ் ஆப்புவார்கள். இந்த வீரர்கள்!

நம் அரசியலில் இரண்டற கலந்துவிட்ட வன்முறை, பலகீனமான சட்ட அமைப்புக்கள், பெரும்பாலான இளைஞர்களைக் கோழைகளாக்கி வைத்திருக்கிறது. சாதிகளைக் கொண்டு பிளவுப்படுத்தி வைத்திருக்கிறது. சாராயக் கடைகளைப் பெருக்கி போதையில் ஆழ்த்தியிருக்கிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம்?

1. ஆணோ, பெண்ணோ இரண்டு குழந்தைகளும் மனிதர்கள்தான். இரண்டு குழந்தைகளுக்குமே உடல் பலம் தேவை. ஆதலால் உணவில் பாரபட்சம் தவிர்க்கலாம்.

2. உடற்பயிற்சி, தியான பயிற்சி, தற்காப்பு கலை இருவருக்குமே அவசியம்.

3. சிவந்த நிறமே அழகு என்று பெண் பிள்ளைகளை வெயிலில் விடாமல் வீட்டுக்குள் அடைப்பதை தவிர்க்கலாம். பத்து முதல் மூன்று மணி வரை உள்ள வெயிலில் குறைந்தது பதினைந்து நிமிடமாவது நிற்பது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி யையும், அதைப்பொறுத்து உட்கொள்ளும் கால்சியமும் உடல் பலத்துக்குத் தேவை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

4. தினம் குழந்தைகள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கலாம். முன் முடிவு எடுத்துத் தீர்ப்புச் சொல்லாமல் நாம் நம்பும் உறவை பற்றிக் குழந்தைக் குறை கூறினால், அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று சிந்திக்கலாம்!

5. வெளியே விளையாடும்போது, குழந்தைகளின் மீது கவனம் இருக்க வேண்டும். பக்கத்து வீட்டு, எதிர் வீடு என்று போனால், நமக்குத் தொல்லையில்லாமல் வேலைகளைக் கவனிக்கலாம் என்றோ சீரியல் பார்க்கலாம் என்றோ மூழ்கிவிடுதல் தவறு!

6. நாம் கோழையாய் இருந்தாலும், நம் குழந்தைக்கு நாம்தான் ஹீரோ, ஆதலால் நம்முடைய நடவடிக்கைகளையும் சரி பார்த்துக் கொள்ளலாம்!

7. வன்முறை வீரம் இல்லை, விவேகமும் அன்பும், மாற்றி யோசித்தலும் சூழ்நிலையை எளிதாக்கும், அவசியம் ஏற்படும்போது ரௌத்திரம் பழகுவதும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

8. சட்டத்தில் இன்னமும் எங்கோ சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நம் பிள்ளைகளுக்குச் சட்டத்தை மதித்து நடக்கவும் சொல்லிக் கொடுக்கலாம்.

9. ஆணும் பெண்ணும் சமமே, பெண்பிள்ளை பலம் குறைந்தவள் என்றும் ஆண் மட்டுமே பலம் நிறைந்தவன் என்றும் சொல்லி வளர்ப்பதை தவிர்க்கலாம்.

10. ஒரு மாங்கனியின் விதையைப் போடும்போது ஒரு விருட்சம் வளர்கிறது, மாங்கனிகளைத் தருகிறது. அதுபோலவே குழந்தைகளின் மனதில் நாம் விதைக்கும் எண்ணங்களும் என்பதை மனதில்கொண்டு செயல்படுதல் அவசியம்.

| கட்டுரையாளர் அமுதா - இணைய எழுத்தாளர். இவர் தனது ஃபேஸ்புக் பக்கம் மற்றும் வலைப்பதிவுத் தளம் மூலம் தொடர்ச்சியாக அனுபவங்களை கட்டுரைகளாக பகிர்ந்து வருபவர். | 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

தலித் இளைஞர் படுகொலையும் ஒரு ஐ.டி. பெண்ணின் குமுறல்களும்!

'ஃபேஸ்புக்கில் ஆண்களைப் போல் பெண்களும் சுதந்திரமாக புகைப்படத்தோடு பதிவிடும் நாள் வர வேண்டும்'- கிர்த்திகா தரண் 

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக