41 ஆண்டுகள் வன வாழ்க்கை: 'ரியல் டார்சன்' மனிதரின் கதை!

போரால் சிதைந்த குடும்பத்தின் துயரம்!
3 CLAPS
0

டார்சன் படத்தில் மனிதர்களின் வாடையே இல்லாமல் காடுகளே கதி என காட்டு மனிதனாக வாழ்ந்திருப்பார் ஹீரோ. அந்தப் படத்தின் ஹீரோவை உண்மையான டார்சனாக ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ஹோ வான் லாங்.

தற்போது 49 வயதாகும் அவர், வியட்நாம் வனத்தில் 41 ஆண்டுகள் நாகரிக மனிதர்களின் வாசனை இல்லாமல், பெண்கள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியாமல், தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

‘ரியல் டார்சன்' என வியட்நாம் மக்களால் அழைக்கப்பட்டு வரும் இவர், வனங்களில் வாழச் சென்றது ஒரு துயரப் பின்னணியில் தான். லாங் பிறந்தபோது அவரின் அழகான குடும்பம் வியட்நாம் நகரத்தில் நாகரிக வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்துள்ளது. ஆனால், 1972ம் ஆண்டு அந்தக் குடும்பம் எதிர்பாராத சோகத்தை சந்தித்தது.

அமெரிக்கா - வியட்நாம் போர் நடந்தது இந்த ஆண்டு தான். இந்த போரில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் சிக்கி லாங்கின் தாய் மற்றும் அவரின் சகோதரர் ஒருவர் என இரண்டு பேர் உயிரிழக்க முற்றிலுமாக சிதைந்தது அந்தக் குடும்பம்.

இந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் இருந்து வந்த லாங்கின் தந்தை, தாக்குதலில் இருந்து தப்பித்திருந்த லாங் மற்றும் அவரின் மற்றொரு சகோதரரின் உயிரைக் காப்பாற்ற ஒரு முடிவெடுத்தார். போரால் சிதைந்துகொண்டிருக்கும் குடும்பத்தை காப்பாற்ற நகர வாழ்க்கையை துறப்பது தான் அந்த முடிவு. அதன்படி,

கைக்குழந்தையாக இருந்த லாங் மற்றும் அவரின் சகோதரரை தூக்கிக்கொண்டு, வியட்நாம் நகரத்தை விட்டு வெளியேறி, குவாங் நங்கை மாகாணத்தின் டே டிரா மாவட்டத்தில் உள்ள அடர் வனத்தில் தஞ்சம் புகுந்தார். பின்னாளில் அங்கேயே தங்களின் வாழ்க்கையை தகவமைத்துக் கொண்டுள்ளனர்.

இப்படி ஆரம்பித்த அவர்களின் வன வாழ்க்கை 41 ஆண்டுகள் நீடித்துள்ளது. இத்தனை ஆண்டுகளும் அடர் வனத்தில் விலங்குகளுடன் விலங்குகளாக வாழ்ந்துகொண்டு வனத்தில் கிடைத்த தேன், பழம் மற்றும் வன உயிரினங்களை சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர் மூவரும்.

இந்த 41 ஆண்டுகளில் இவர்கள் மூவரும் மொத்தமே ஐந்து மனிதர்களை மட்டுமே சந்தித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் மற்ற மனிதர்களின் கண்ணில் படும்போது, அவர்களிடமிருந்து தங்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக தங்கள் இருப்பிடத்தை காலி செய்து வேறு இடங்களில் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

எனினும் 2013ம் ஆண்டு இவர்களைப் பற்றி கேள்விப்பட்டு உடனே வன வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்த அந்நாட்டு அரசு இவர்கள் வாழ்ந்த வனத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் தங்கவைத்து மறுவாழ்க்கை கொடுத்துள்ளது. இப்போது மூவரும் மெதுவாக நாகரிக வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாறிவருகின்றனர்.

இவர்களின் மறுவரவுக்கு உதவியாக இருந்த அல்வாரோ செரெஸோ என்ற புகைப்படக் கலைஞர் இந்தக் குடும்பத்தை வனத்தில் இருந்து மீட்டெடுத்ததை பற்றி கூறும்போது,

லாங்கின் தந்தை வியட்நாம் போர் நியாபகத்திலேயே இன்னும் இருக்கிறார். அவரால் போர் முடிந்துவிட்டது என்பதை நம்பவில்லை.

போர் காரணமாக அவருக்கு நகரத்துக்கு திரும்புவதற்கான பயம் இருந்து வந்துள்ளது. இதனால் தான் இத்தனை காலம் அவர்கள் நகரத்துக்கு வரவில்லை. இதில் லாங் தான் கவனிக்கப்பட வேண்டியவர். ஏனென்றால், கைக்குழந்தையாக இருந்த போது அவர் காடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதால், அவருக்கு பெண்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் இருந்துள்ளது.

தற்போது அவரால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாடு காண முடிகிறது என்றாலும் பாலியல் உறவு என்னவென்பது கூட அவருக்குத் தெரியாமல் இருந்து வருகிறது. வாழ்வின் பெரும்பகுதியை காடுகளில் கழித்த லாங்கால் சமூக அடிப்படைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் இப்போதும் ஒரு குழந்தை தான். நான் யாரையாவது அடிக்கச் சொன்னால் கூட எந்த யோசனையும் இல்லாமல், நன்மை தீமை வித்தியாசம் இல்லாமல் அவர்களை அடித்து விடுவார்," என்று கூறியிருக்கிறார்.

கட்டுரை தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world