உலக எய்ட்ஸ் தினமும் பரவ வேண்டிய விழிப்புணர்வுத் தகவல் செயலியும்!
எச்ஐவி, ஹெபடிடிஸ் போன்ற பரவும் உயிர்கொல்லி வைரஸ்கள், நம் நாட்டின் சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக இருந்தன. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அரசின் திட்டங்கள், இலவச மருத்துவ வசதிகள், விழிப்புணர்வுத் தகவல்கள் முதலானவற்றை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குப் பெரும் பங்குண்டு. இந்தச் சூழலில், ஏனையத் துறைகளைப் போலவே மருத்துவ - சுகாதாரத் துறைக்கும் கைகொடுக்க ஆரம்பித்திருக்கிறது, நம் கைகளிலே தவழ்கின்ற ஸ்மார்ட் ஃபோன்கள். அதில், ஸ்மார்ட்ஃபோன் செயலி ஒன்றின் மூலம் மக்களுக்கு எய்ட்ஸ் முதலான நோய்களைப் பற்றிய சரியானத் தகவலை மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, சென்னையைச் சேர்ந்த ஒய்.ஆர்.ஜி கேர் (YRG Care) நிறுவனத்தின் "ப்ராஜெக்ட் 1-2-1" (Project 1-2-1) செயலி. தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு, இந்தச் செயலியை செயல்படுத்தி வருகிறது ஒய்.ஆர்.ஜி. கேர்.
தமிழ் யுவர்ஸ்டோரியுடன் 'ப்ராஜெக்ட் 1-2-1' குழுவோடு நடத்திய உரையாடல் இதோ...
'ப்ராஜக்ட் 1-2-1' க்கான தொடக்கம்
எய்ட்ஸ் நோய் பற்றிய முழுமையான மற்றும் ஒவ்வொருவருக்கும் தேவையான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அத்தியாவசியம் உள்ள காலம் இது. குறிப்பாக, டெக்னாலஜியின் பயன்பாடு அதிகம் இருப்பதால் இந்த செயலியை தொடங்கினோம் என்று பகிர்ந்துக்கொள்கின்றனர் ப்ராஜெக்ட் 1-2-1 வின் குழுவினர்.
YRG121 செயலி ஆங்கிலம் மற்றும் தமிழில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சில் தற்போது இயங்கி வருகிறது.
''இந்த செயலித் திட்டம் குறிப்பாக பாமர மக்களை மனதில் வைத்து தொடங்கப்பட்டது. அவர்களுக்கும் எய்ட்ஸ் போன்ற பரவும் நோய்களை பற்றி தகவல்களை தெரிவிப்பது, மருத்துவ வசதிகளையும் உதவிகளையும் பற்றி எடுத்து சொல்லுவதே 1-2-1 இன் பிரதான நோக்கம். தவிர, மக்களிடையே ஒரு நெருக்கமான உறவையும் இந்த செயலி மூலம் பெற முடியும்" என்கிறார் YRG யின் ப்ராஜட் மேலாளர் கணேஷ் அய்லூர் கைலாசம்.
YRG நிறுவனத்தின் கீழ் பல மருத்துவ வசதிகளும் ஆலோசனைகளும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தாலும், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும், கண்டறிதல்களும் நிறுவனர் டாக்டர் சுனிதி சாலமன் அவர்களால் 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ''அப்போது மக்களிடம் நேரடியாக சென்று பேசி அவர்களுடைய பிரச்னைகளை பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அது போன்ற, ஒருவருக்கு ஒருவர் உரையாடலை கச்சிதமாக இந்த காலத்திற்கேற்ப செய்யும் வழி தான் இந்த செயலி." என்று திட்டத்தை பற்றி விலக்குகின்றனர் இந்த குழுவினர்.
செயல்படும் முறை
கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக மாற்றி இத்திட்டத்தில் சேர்ப்பதுதான் இதன் சிறப்பம்சம். இதைப்பற்றி இத்திட்டத்தின் சமூக விழிப்புணர்வு மேலாளர் சேதுலக்ஷ்மி விளக்கும் போது, "சமூகங்களுக்கு இடையே சென்று எந்தவொரு குறிப்பிட்ட பிரச்னையை பற்றி பேசி, அவர்களுக்கு விழிப்புணர்வை வழங்குவதில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டுவருகின்றோம். அதே வழியில், எய்ட்ஸ் ஹெபடிடிஸ் மற்றும் இதர பால்வினை நோய்கள் இந்தியாவில் பெருமளவில் குறைந்தாலும், அடிதட்டு மக்களுக்கும் கற்பிப்பது அவசியமாகிறது. அதனால், கல்லூரியை சுற்றியிருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை முதலில் தேர்வு செய்துக்கொள்கிறோம். ஒரு செயலி மூலம் அவர்களை தொடர்பில் வைத்து, அவர்கள் பிரச்னைகளுக்கு அதன் மூலம் ஒரு தீர்வும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், அந்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தகவல்கள் சேர்ந்து தங்களை காத்துக்கொள்வதற்கான சரியான வழியை அளிக்கிறோம்" என்று திட்டத்தின் மொத்த விவரங்களை விளக்கினார்.
தன்னார்வலர்களாக இருக்கும் மாணவர்கள், முதலில் செயலி மூலம் பதிவுசெய்யப்பட்டிருக்கும் புகார் மற்றும் கேள்விகளுக்கு ஏதுவாக, அந்தந்த வீடுகளுக்கும், குடியிருப்புகளுக்கும் செல்வார்கள். அங்கு ஒரு சின்ன கலந்தாய்வு, அதன் பின் சர்வே கேள்விகளுக்கு பின், தகுந்த ஆலோசனையை வழங்குவதும், அல்லது குறிப்பிட்ட சேவையை பற்றி எடுத்துக்கூறுவதும் இத்திட்டத்தின் முக்கிய பணி. மருத்துவ வசதிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையில் ஒரு வழிக்காட்டியாக இங்கு மாணவர்களுடைய பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
செயலியில் இருக்கும் இதர வசதிகள்
மக்களுக்கு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களை பற்றி எடுத்துக்கூறும் வழிக்காட்டுதலாக இந்த செயலி இருந்தாலும், மருத்துவம் அல்லாத பல வசதிகளைப் பற்றிய தகவல்களை மக்களுக்கு எடுத்துசெல்லும் மற்றொரு நோக்கமும் இதில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதை பற்றி YRGயின் மற்றொரு உறுப்பினர் தம்புராஜ் கூறுகையில், "மருத்துவமனைகள், விடுதி, இரத்த வங்கி, சிறப்பு மருத்துவ முகாம், குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம் போன்ற பல சேவைகள் அளிக்கும் நிறுவனங்களின் பெயர்களும் இந்த செயலியில் பட்டியலிடப்பட்டிருக்கும். எந்த வகையான மையம், எத்தகைய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும், இலவச சேவைகள் உண்டா என்ற முழு விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும். உதாரணத்திற்கு, குறிப்பிட்ட இடத்தில் விடுதி வேண்டும் என்று தேடும் போது, செயலியில் பட்டியலிடப்பட்டிருக்கும் விடுதிகளிலிருந்து வேண்டியவை மட்டும் காட்டப்படும். "தற்போது, கிட்டத்தட்ட 25 சேவை மையங்கள் மட்டும் இந்த செயலியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது, இது மேலும் அதிகரிக்கப்படும் என்கிறார்.
மாணவர்களுக்கு தேவையான பயிற்சி
1-2-1 திட்டத்தின் முதல் மற்றும் முக்கியமான அம்சம் என்னவென்றால், இது இளம் கல்லூரி மாணவர்களால் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றது. இதனால், அவர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி முகாம் நடத்தப்படுவதுண்டு. ''முதலில், மாணவர்கள் அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் பெயர்களை பதிவு செய்து இதில் சேர்ந்துக்கொண்டாலும். அவர்களுக்கு பயிற்சி என்பது அத்தியவாசமாகிறது. HIV மற்றும் பால்வினை நோய்களை பற்றி சிறு விளக்கத்திற்கு பின், மக்களோடு எப்படி தொடர்பு கொள்ள வேண்டும், அவர்களோடு உரையாடும் போது எந்தவகையான சவால்களை சந்திக்க நேரும், அதை எப்படி கச்சிதமாக சமாளிப்பது, போன்ற வாழ்க்கை சூழலை மையமாக வைத்து பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சேவை மையத்துடன் மக்களை எப்படி தொடர்பில் வைப்பது போன்ற பல பிரிவுகள் இந்த பயிற்சி முகாமில் இருப்பது குறிப்பிடத்தக்கது. "சில கல்லூரிகளில் ரெட் ரிப்பன் க்ளப், ரெட் க்ராஸ், போன்ற சேவை சார்ந்த குழுக்கள் இருப்பதால், அவர்களுக்கு மேலும் பயனுள்ள வகையில் இந்த திட்டம் உதவுகிறது.
செயலி மட்டுமல்லாமல் ஹெல்ப்லைன் டெஸ்க் மூலமும் மக்கள் YRG கேர் நிறுவனத்தை தொடர்புக்கொண்டு தங்களுடைய பிரச்னைகளை பற்றி பகிர்ந்துக்கொள்ளலாம்.
044-33125000 என்ற எண்ணில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
சந்தித்த சவால்கள்
"இந்த செயலியை வடிவமைப்பதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆனது. இதுவே எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது. செயலி தயாராகாததால் இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. தவிர, சில சேவை மையங்களுக்கு சென்று அவர்களிடம் விவரித்து, இந்த திட்டத்திற்குள் கொண்டுவருவது சற்று கடினமான விஷயமாக ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இவை அனைத்துமே எங்களுக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்" என்று ஒரு சேர பகிர்ந்துக்கொள்கின்றனர். பிரசித்தி பெற்ற மேக் அழகு சாதனங்கள் நிறுவனத்திற்கு கீழ் இருக்கும் மேக் எய்ட்ஸ் நிதி முலமே இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்நிதி ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்து கொள்ளக்கூடியது. இதற்காக அவ்வப்போது ஒரு தனி அறிக்கை அவர்களுக்கு சேர்பித்தும் வருகின்றனர்.
தற்போது 700 மாணவர்களை கொண்ட இந்த திட்டம் மேலும் வளர்ந்து 2000 மாணவர்களை கொண்ட ஒரு பெரும் படையாக மாறவுள்ளது. அதுமட்டுமல்லாமல், 1.5 லட்ச மக்களுக்கு எய்ட்ஸ் பற்றின விழிப்புணர்வையும், அமைதியான ஆரோக்கியத்தை நோக்கிய வாழ்வையும் ஏற்படுத்துவதே இவர்களின் லட்சியமாக இருப்பது நமக்கு தெளிவாக புலப்படுகிறது.
உலக எய்ட்ஸ் தினமான இன்று இவர்களின் சேவைக்கு தமிழ் யுவர்ஸ்டோரியின் சார்பில் ஒரு பூங்கொத்து!
இணையத்தளத்திற்கு YRG Care