பதிப்புகளில்

சலவைத் தொழிலை மீட்டு இயற்கை வழியில் கொண்டு செல்லும் இன்ஜினியர்!

YS TEAM TAMIL
16th Feb 2016
Add to
Shares
35
Comments
Share This
Add to
Shares
35
Comments
Share

நம்மால் ஏற்படும் இயற்கை மாறுதல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனமல்ல. பெங்களூருவின் வர்த்தூர், பெலாண்டூர் ஆகிய ஏரிகளில் வித்தியாசமான குமிழ்கள் தோன்றியபோது எல்லாருடைய கவனமும் அந்த ஏரிகளின் பக்கம் திரும்பியது. ஆனால் அந்த நிகழ்வில் எந்த மர்மமும் இல்லை. சலவைசோப்களில் கலந்திருக்கும் கெமிக்கல்கள் அந்த ஏரி நீரோடு கலந்ததன் விளைவு அது.

நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாஸ்பேட் ரசாயனத்தை சோப்பில் பயன்படுத்த சமீபத்தில் தடை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம். சலவைசோப்களில் பரவலாக பயன்படுத்தப்படும் சோடியம் லாரல் சல்பேட் வேதிப்பொருள் eczema போன்ற தோல் வியாதிகளுக்கு வழிவகுக்கும் என ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரச்னை சிக்கலானதாய் தெரிந்தாலும் அதற்கான தீர்வு எளிமையானதுதான். சீயக்காய். இயற்கை மனிதர்களுக்கு தந்த மகத்தான பரிசுகளில் ஒன்று சீயக்காய். இந்த பரிசைப் பயன்படுத்தி நம்மையும் நம் சுற்றுச்சூழலையும் காக்கும் முயற்சியில்தான் இருக்கிறார் 31 வயதான மனஸ் நந்தா.

மனஸ் தன் 'பபுள்நட் வாஷ்" BubblenutWash' நிறுவனத்தை 2015-ல் தொடங்கினார். ஐஐஎம் பெங்களூருவின் NSRCEL அமைப்பினால் வளர்த்தெடுக்கப்பட்ட நிறுவனம் இது.

image


புற்றுநோய் உண்டாக்கக்கூடிய காரணிகளைக் கொண்ட செயற்கை சோப்புகளை தவிர்த்து 100 சதவீதம் இயற்கையான முறையில் வாடிக்கையாளர்களின் ஆடைகளை சலவை செய்து தருகிறது இந்த நிறுவனம். இந்த இயற்கை முறை சலவையில் சீயக்காய்தான் முக்கிய மூலப்பொருள். காடுகளில் வசிக்கும் மக்களிடமிருந்து இந்த மூலப்பொருள் பெறப்படுகிறது. இதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவியாய் இருக்கிறது இந்த நிறுவனம்.

பொறியியலாளர் தொழிலதிபரான கதை

ஐ.ஐ.டி பட்டதாரியான மனஸ் ஒரு முதலீட்டு ஆலோசகராக ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றினார். பின் CFA சான்றிதழ் பெற்றார். வேலை மகிழ்ச்சியானதாய் இருந்தாலும் அந்த வாழ்க்கைமுறை அவர் உடல்நிலையை மிகவும் பாதித்தது. 'ஜங்க் உணவுகள், நீண்ட நேர வேலை, மாசடைந்த காற்று, அழுக்கான தண்ணீர் என அனைத்தும் சேர்ந்து என்னை பாதித்தன' என்கிறார் மனஸ்.

அவர் மனம் மாற்றத்தை விரும்பியது. தன் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டார். அது அவருக்கு புதிய படிப்பினைகளை கற்றுக்கொடுத்தது.

"நாம் தினந்தோறும் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள், சோப்கள், லோஷன்கள் போன்றவற்றில் அதிகளவு புற்றுநோய் காரணிகள் இருப்பதை தெரிந்துகொண்டேன். இந்தியாவில் இயற்கைப் பொருள் என விளம்பரப்படுத்தப்படுபவை எல்லாம் ஏராளமான ரசாயனங்களை கொண்டவைதான். அவற்றின் லேபிள்களை பார்த்தாலே நம்மால் இதை தெரிந்துகொள்ளமுடியும்" என்கிறார் மனஸ். உடனே மனஸ் தனக்கான சோப்புகளையும் சலவை பொருட்களையும் தானே தயாரிப்பதென முடிவெடுத்தார்.

2011-ல் இன்னுமொரு முக்கிய முடிவை எடுத்தார் மனஸ். தன் வேலையை விட்டுவிட்டு ஒரு தொண்டு நிறுவனத்தில் இணைந்தார். இயற்கை முறை விவசாயம், இயற்கை ஆற்றல் வழிமுறைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது அந்த தொண்டு நிறுவனத்தின் முக்கிய பணிகள். அவர் காடுகளில் செலவழித்த இந்த காலகட்டத்தில்தான் இந்திய மூலிகைகளின் மகத்துவத்தை அறிந்துகொண்டார். அவற்றை நகர மக்களுக்கு வழங்குவதன் மூலம் காட்டில் வாழும் மக்களுக்கும் பயன் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டார்.

இந்த கொள்கையை ஒட்டி ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதுதான் அடுத்தகட்ட பணி என அவருக்குத் தெரிந்திருந்தாலும், தெரியாத ஏரியாவில் நுழைவதில் ஒரு சின்ன தயக்கம் இருந்தது. 2013-ல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிக்கச் சென்றார். இதற்கு பாரிஸின் லூயிஸ் ட்ரெஃபஸ் பவுண்டேஷன் உதவி செய்தது. ஆக்ஸ்போர்டில் ஆசிரியர்கள், நண்பர்கள் துணையோடு தனது நிறுவனத்திற்கான செயல்திட்டத்தை வகுத்தார்.

ஒடிசாவிலிருந்து பெங்களூரு வரை!

சீயக்காய்களை மனஸ், ஒடிசா, உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களின் விவசாயிகளிடம் வாங்குகிறார். அவை ஒடிசாவில் சுத்தம் செய்யப்பட்ட பின், பெங்களூருவிற்கு கொண்டு செல்லப்பட்டு பேக் செய்யப்படுகின்றன. BubblenutWash தயாரிப்புகள் பெங்களூரு கடைகளில் மட்டுமின்றி ஆன்லைனிலும் கிடைக்கின்றன.

image


ஆக்ஸ்போர்ட் பல்கலைக்க்ழகத்தின் வொல்ப்சன் பரிசும், டூ இட் பரிசும் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. லூயிஸ் ட்ரெஃபஸ் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த விவசாய தொழில் நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று.

வாடிக்கையாளர்களும் வருமானமும்!

இந்த நிறுவனத்தின் தற்போதைய குறி குழந்தைகள்தான். குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையானது. சலவை சோப்களின் ரசாயனங்கள் அவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணுகின்றன. குழந்தைகள் பெட்ஷீட்கள், துண்டுகள் ஆகியவற்றை மெல்லும் பழக்கம் உடையவர்கள். அதன் வழியாக இந்த கெமிக்கல்கள் உணவுக் குழாய்களுக்கும் செல்கின்றன.

இந்த நிறுவனம் தயாரிக்கும் பிரத்யேக குழந்தைகளுக்கான சலவைசோப் இந்தியா, இங்கிலாந்து ஆகிய இடங்களில் கிடைக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் நிறைய பொருட்களை தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் மனஸ். "எங்கள் படைப்புகளை முடிந்தவரை மலிவாக கொடுக்க முயற்சிக்கிறோம். மக்களை இயற்கையின் பக்கம் திருப்ப இதுதான் வழி" என்கிறார் மனஸ்.

image


BubblenutWash தயாரிப்புகள் மற்ற சோப், சலவைத்தூள் ஆகியவற்றைவிட விலை அதிகம்தான். பின் ஏன் வாடிக்கையாளர்கள் அதிக பணம் கொடுத்து இவர்களின் தயாரிப்பை வாங்கவேண்டும்? பதிலளிக்கிறார் மனஸ்.

"பதப்படுத்தபட்ட பாலுக்கும், கறந்த பாலுக்கும் இருக்கும் வித்தியாசம்தான் சலவைசோப்பிற்கும் எங்களின் தயாரிப்புகளுக்குமான வித்தியாசம்" என்கிறார் மனஸ்.

இந்த பொருட்களை விற்பதன் மூலம் வருவதுதான் பிரதான வருமானம். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடக்கத்தில் நிதியுதவி அளித்தது. சமீபத்தில் லூயிஸ் ட்ரெஃபஸ் தொண்டு நிறுவனமும் நிதியுதவி அளித்துள்ளது.

தாக்கம்

ஒவ்வொரு சீயக்காய் மரமும் 1500-2000 ரூபாய் வரை வருமானம் அளிக்கக்கூடியது. "நிறைய மரங்களை வைத்திருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். மரங்களை அதிகப்படுத்தினால் வருமானமும் அதிகரிக்கும்" என்கிறார் மனஸ்.

சவால்கள்

இதில் மூன்று சவால்கள் உள்ளதாக பட்டியலிடுகிறார் மனஸ். முதலாவது, முதலீட்டு பற்றாக்குறை. இந்த நிறுவனத்தில் எடுத்தவுடன் முதலீடு செய்ய யாரும் முன்வருவதில்லை. குறிப்பிடத்தகுந்த ரிசல்ட் காண்பித்தால் மட்டுமே முதலீடு செய்கிறார்கள். முதலீடு இல்லாமல் வளரமுடியாதே என்பது மனஸின் ஆதங்கம்.

இரண்டாவது, பொருட்களை டெலிவரி செய்வதில் ஆகும் அதிக செலவு. இதை சமாளிக்க ஒரு பெரிய முதலீடு தேவை. அதை ஒரு உதாரணத்தோடு விளக்குகிறார் மனஸ்.

"நாங்கள் வெறுமனே ஒரு போன்காலில் சீயக்காய்களை ஆர்டர் செய்துவிட முடியும். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து அவற்றை வாங்கி விற்கிறோம். இதனால் செலவு அதிகமாகிறது' என்கிறார் மனஸ்.

மூன்றாவது, இந்தத் துறையில் ஈடுபாடோடு வேலை செய்பவர்கள் மிகக்குறைவு. சம்பளமும் குறைவு என்பதால் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

image


போராட்டப்பாதை

கரடுமுரடான பாதைதான். ஆனால் மனஸ் அதில் கொண்டாட்டமாய் நடைபோடுகிறார். அவருக்கும் ஊக்கமளிப்பது விவசாயிகளின் முகத்தில் தெரியும் சந்தோஷம்தான். "ஒரு விவசாயி தன் அண்ணன் சொன்னார் என்பதற்காக 30 ஆண்டுகளுக்கு முன் தன் தோட்டத்தில் சீயக்காய் மரங்களை நட்டார். என்றாவது ஒருநாள் அவை பலன் தரும் என்பது அவரின் நம்பிக்கை. நாங்கள் அவரிடம் சென்று சீயக்காய்களை விற்க சொன்னபோது அவர் ஆனந்தக்கண்ணீர் விட்டார். தன் அண்ணன் வாக்கு பலித்ததில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அவரைப் போன்றவர்களின் மகிழ்ச்சிதான் எங்களை மேலும் முன்னோக்கி செலுத்துகிறது" என்கிறார் மனஸ்.

காடுகளை வெறுமனே சுரண்டுவதில் மனஸிற்கு விருப்பமில்லை. அதற்கு பதில் காடுகளிலிருந்து கிடைக்கும் பொருட்களின் மதிப்பை அதிகரிப்பதன் மூலம் காடுகளை பாதுகாப்பதோடு முதலீடுகளையும் ஈர்க்கமுடியும் என்பது அவரின் எண்ணம். அதை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

இணையதள முகவரி: BubblenutWash

ஆக்கம் : ஸ்னிக்தா சர்மா | தமிழில் : சமரன் சேரமான்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற இயற்கை பொருள் தயாரிப்பு தொழில்முனைவோர் கதைகள்:

இயற்கை வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து பெற்று விற்பனை செய்யும் 'நேச்சுரலி யுவர்ஸ்'

“சோப்பு சுந்த(ரி)ரம், எரினின் சுத்தத்தை நோக்கிய புரட்சி”

Add to
Shares
35
Comments
Share This
Add to
Shares
35
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக