நவீன விக்கிரமாதித்தன் கதைகள் பகுதி- 6
ஸ்டார்ட்-அப் கதைகளை தாண்டி முதலீடுகளை எவ்வாறு பெறுவது என்று பகுதி பகுதியாக இந்தவாரம் முதல் பார்ப்போம்!
உங்களிடம் ஒரு ஐடியா பிறந்துவிட்டது. அதை சந்தை நிலவரத்துடன் ஒப்பிட்டு ஒரு Business Plan உருவாக்கிவிட்டீர்கள். அதை செயல்படுத்த வேண்டும். அதற்கு முதலீடு வேண்டும். முதல் கட்டம் உங்களிடம் இருந்தே தொடங்குகிறது.
வள்ளுவர் சொல்வார்:
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை .
அதாவது ஒருவன் தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று பாதுகாப்பானது.
ஆனால் வரவுக்கும் செலவிற்கும் சரியாக வைத்து மீதமில்லாமல் வாழ்வதே இன்றைய நுகர்பொருள் கலாச்சாரத்தின் அவலம். எவ்வளவு சம்பாதித்தாலும் அவ்வளவிற்கும் செலவு இழுத்து வைத்துக்கொள்வது. அதிலும் முதல் தலைமுறை பட்டதாரி பணியாளர்கள் என்றால் கேட்க வேண்டியதே இல்லை. எக்கச்சக்க தேவைகள் இருக்கும்.
90% சதவீதம் பேருக்கு தொழில் குறித்து ஆர்வம் இருந்தாலும் இந்த வளையத்தில் இருந்து வெளியில் வருவது மிகக்கடினம். ஆக ஒரு ஆறுமாத காலம் திட்டமிட்டு பொருள் சேர்த்துக்கொண்டு வர வேண்டும். இந்த முதல் படியில் குறைந்தது 10 லட்சம் ரூபாயுடன் களத்தில் இறங்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் ஐடியாவிற்கு உருவம் கொடுத்து அதை குறைந்தபட்ச செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பயனாளர்களிடம் கொண்டு சேர்த்து பயன்படுத்த ஆரம்பித்தால் இன்னும் சிறப்பு.
இரண்டாம் கட்டத்தில் ஒத்த சிந்தனை உள்ள ஒரு நண்பரை உங்கள் தொழிலுக்குள் கொண்டுவந்தால் சிறப்பு. அவர் ஒரு முதலீட்டுடன் வரலாம் அல்லது தொழில்நுட்பத் திறனுடன் வரலாம். அதற்கேற்ப அவருக்கு நீங்கள் பங்குகளை தரலாம். அதிகபட்சம் 50% பங்குகளை விட்டுக்கொடுக்கலாம். இதற்கு சிறந்த உதாரணம் கூகிள் நிறுவனர்கள் லேரிபேஜ், சேர்ஜேப்ரின். யாஹூ நிறுவனர்கள். ஃபிலிப்கார்ட் நிறுவனர்கள். இவர்கள் கதையில் உள்ள ஒற்றுமை ஒருவர் தளரும் போது இன்னொருவர் கைதூக்கி விடுவார்.
ஆனால் நல்ல இணை நிறுவனர் (Co-Founder) கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆகவே தான் பல சமயம் இந்த இரண்டாம் கட்டத்தை தொடக்க நிறுவனர் தாண்டி சென்றுவிடுவார். உதாரணத்திற்கு Facebook இல் ஆரம்பத்தில் வெறும் 10000 டாலர் முதலீடு செய்து துணை நிறுவனராக வந்த Eduardo Saverin பாதியில் விலகிச் சென்றாலும் இன்றைய மதிப்பு 50,000 கோடிக்கும் அதிகம்.
மூன்றாம் கட்டத்தில் உங்கள் ஐடியாவை சந்தைக்கு கொண்டு செல்லவேண்டும். உற்பத்தி செலவை விட அதை சந்தை படுத்துவதற்கு தான் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இங்கு தான் 30 இல் இருந்து 65லட்சங்கள் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். ஒருபுறம் உங்கள் ஐடியாவை சந்தைக்கு ஏற்ப மெருகேற்ற வேண்டும். மறுபுறம் சந்தையில் பல வழிகளில் கொண்டு சேர்க்க வேண்டும். இன்னொருபுறம் அடிப்படை கட்டமைப்புகளுக்கு செலவழிக்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் முதல் முறையாக சேர்ந்து பலவருடங்கள் அவர்களுடன் பயணிக்கும் பணியாளர்களுக்கும் பங்குகளை வழங்குவார்கள். இந்த மூன்றாம்கட்டத்தில் முதலீட்டை பெருக்க நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் வட்டத்தில் உங்கள் ஸ்டார்ட்அப்பை பற்றி சொல்லி முதலீட்டை கூட்ட வேண்டும்.
இதற்கு ஒரே ஒருவரிடம் மொத்தமாக முதலீட்டை பெறலாம். எலன் மஸ்க், பில்கேட்ஸ் போன்றோர்கள் குடும்பத்தில் இருந்தே இதை பெற்றார்கள். சிலர் பல நண்பர்களிடம் இருந்து Crowd Funding போல பெற்று தொழிலை வளர்த்தார்கள். ஒரு சதவிதத்தில் இருந்து 6% வரை உங்கள் பங்குகளை இந்த கட்டத்தில் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். இந்த கட்டத்தில் முதலீடு செய்பவர்கள் நம்பிக்கையின் பேரில் வருகிறவர்கள். ஆனால் தொழில் வளரும் போதும், அடுத்தகட்ட முதலீடு உள்ளே வரும்போதும் இவர்களின் அந்த ஒரு பங்கின் மதிப்பு பல மடங்கு எகிறும். Facebookஇன் ஆரம்பத்தில் வேலை செய்த Dustin 5% பங்கு இருந்தது. இன்று அவரின் சொத்து மதிப்பு 65000 கோடி. உலகின் மிக வயது குறைவான பில்லியன் டாலர் பணக்காரர் இவர்.
நான்காம் கட்டம் என்பது தொழில் கொஞ்சம் வளர்ந்து, சந்தைக்கு சென்று சேர்ந்து பலரை அடைந்து அடுத்த கட்டத்தை நகரும் நிலையில் இருப்பது. இந்த கட்டத்தில் தான் வங்கி கடன், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் (Angel Investors) எனப்படும் சிறிய தொழில் முதலீட்டாளர்கள் வருகிறார்கள். இந்த கட்டத்தில் ஒரு கோடி முதல் ஆறு கோடி வரை முதலீட்டை பெருக்கலாம். அதற்காக நீங்கள் குறிப்பிடத்தக்க பங்குகளை விட்டுக்கொடுக்க வேண்டும். 10 முதல் 17% வரை விட்டுக்கொடுக்கலாம். இந்த இடத்தில் கூகிளில் முதலீடு செய்த ஸ்ரீராம் குறிப்பிடத்தக்க முதலீட்டாளர். அன்று அவர் செய்த முதலீடு 50 லட்சத்திற்கும் குறைவு. இன்று அவரது முதலீட்டின் மதிப்பு 12600 கோடிகள். இதெல்லாம் எல்லோருக்கும் நடந்துவிடுவதில்லை. ஆனால் இதில் நூற்றில் ஒரு பங்கு நடந்தாலே அவர் பல நூறு கோடிகளுக்கு அதிபராகி விடுகிறார். அதனால் தான் உலகமெங்கும் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஐந்தாம்கட்டம் மிக முக்கியமான பகுதி. வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்கள் மூலம் ஒரு பெரும் முதலீடு கிடைக்கும். அதில் A,B,C,D என்று முதலீட்டு தொடர்கள் உண்டு. ஒவ்வொன்றிலும் நிறுவனரின் பங்கு குறையும், மதிப்பு கூடும். 30-40 சதவீத பங்குகளை விட்டுக்கொடுக்க வேண்டிவரும். அதனாலேயே நிறுவனத்தில் உங்களின் உரிமை குறையத் தொடங்கும். முடிவெடுக்கும் அதிகாரங்கள் பலரின் கைக்கு செல்லும். யார் தொடங்கியதோ அவர்களே தூக்கி அடிக்கப்படலாம். பல பெரிய தொழில்முனைவோர்களுக்கு இது நடந்திருக்கிறது. மிக சமிபத்திய உதாரணம் Flipkart. இது ஒரு வில்லங்கமான, சுவாரஸ்யமான கட்டம். இதை சரியாக கையாண்டு தன்னையும் வளர்த்து முதலீட்டாளர்களையும் திருப்திபடுத்திய வெற்றிவீரர்களின் கதைகளும் உண்டு. தெறித்து ஓடியவர்களின் கதைகளும் உண்டு. அடுத்த பகுதியில் இதை விரிவாக பார்ப்போம்.
அதற்கடுத்த ஒரு கட்டம் இருக்கிறது. பங்கு சந்தை மூலம் பெரும் முதலீட்டை திரட்டுவது. இந்த உயரத்தை எட்டுவது சாமானியம் அல்ல. ஆனால் முடியாததும் இல்லை. அதை அதற்கடுத்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
கதை தொடரும்...
(பொறுப்பு துறப்பு: இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)