Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

2019 இந்திய தேர்தல்: இளைஞர்கள் கைகளில் நாட்டின் வருங்காலம்...

2019 இந்திய தேர்தல்: இளைஞர்கள் கைகளில் நாட்டின் வருங்காலம்...

Thursday December 13, 2018 , 4 min Read

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 17 வது மக்களவையை தேர்வு செய்ய நடைபெற உள்ள தேர்தலில் 80 கோடி இந்தியர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியது.

வருங்கால வரலாற்று ஆசிரியர்கள் நூற்றாண்டின் இறுதியில் 2019 மற்றும் 2024 தேர்தல்களை திரும்பிப் பார்த்து அலசி ஆராயும் போது, அவற்றை அங்கீகரிக்கலாம் அல்லது ஏமாற்றம் தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது.
image


இதற்கான காரணம், இந்தியாவின் வேகமாக வளரும் இளம் மக்கள்தொகை. ஷாங்காயில் இருக்கும் சீன முதலீட்டாளர் அல்லது வர்த்தகரிடம் பேசும் போது அவர்கள் இந்தியா குறித்து உற்சாகமாக கருத்து தெரிவிக்கக் காரணமாக இருப்பதும் இந்த இளம் மக்கள்தொகை தான்.

உள்கட்டமைப்பு நோக்கில், 1990 கள் அல்லது 2000ம் ஆண்டு துவக்கத்தில் இருந்தது போல் இந்தியா இருப்பதை அவர்கள் உற்சாகமாக ஒப்பிடுகின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு, வாங்கும் சக்தி அதிகரிக்கத்துவங்கும் நிலையில் இந்தியா இருக்கிறது. மேலும் சீனா போல இந்தியா ஒரு குழந்தை கட்டுப்பாட்டை கொண்டு வராததால் இந்த இளம் மக்கள்தொகையின் பலன், சீனாவை விட (18 ஆண்டுகள்), அதிக அளவு (51 ஆண்டுகள்) இருக்கும் என்கின்றனர்.

எனினும், இந்த கணிப்பு, 1980 கள் முதல் 2010 வரை சீனா வெற்றிகரமாக நிறைவேற்றியதை, இந்தியாவும் சாதிக்கும் எனும் அனுமானத்தின் அடிப்படையில் அமைகிறது. அதாவது தொழிலாளர் சந்தையில் நுழையும் லட்சக்கணக்கானவர்களுக்கு முழுநேர வேலை கிடைத்து, அதன் பயனாக, வீட்டு வசதி, வாகனங்கள் மற்றும் நுகர் கடன் பிரிவுகளில் கணிசமான வளர்ச்சி உண்டாகும்.

இந்தியாவை பொருத்தவரை, சீனாவுடம் ஒப்பிடும் போது நீண்ட காலத்திற்கான இளம் மக்கள்தொகை சாதகமாக இருந்தாலும், இந்த நிலையை அடைவதில் உள்ள சவால்களை புரிந்து கொள்ள முயல்வது சுவாரஸ்யமானது. ஆனால் மக்கள்தொகையின் அமைப்பு தான் எல்லாமும் என சொல்லிவிட முடியாது.

மார்கன் ஸ்டான்லி அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுவது போல, உலகமயமாதலின் 30 ஆண்டுகளில், வளரும் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட 74 நாடுகளில் 19 நாடுகள் மட்டுமே வளர்ந்த நாடுகளாக மாறியிருக்கின்றன. இவற்றில் தென்கொரியா மற்றும் போர்ச்சுகல் மட்டுமே 2 கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்டவை. இவ்வளவு ஏன், அதன் அதிக வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்பாட்டை மீறி, சீனா கூட வளர்ந்த நாடாக இன்னும் பத்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். எனவே இளம் தலைமுறையை கொண்ட நாடாக இருப்பதாலேயே வளமான நாடாக மாறிவிட முடியாது.

வளரும் நாடாக உயர்வது

இந்தியாவின் மொத்த தேசிய வருமானம் (ஜி.என்.ஐ) என்பது தனிநபருக்கு 1,820 டாலராக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கிறது. 2017 ல் சராசரி இந்தியரின் வருமானம் மற்றும் வளர்ச்சி இந்த அளவில் தான் இருக்கிறது. 2000 முதல் பணியில் இருப்பவர் மக்கள் தொகை 1.6 சதவீத வளர்ச்சி பெற்றதாக வைத்துக்கொண்டால் ஜிடிபி வளர்ச்சி 7.2சதவிதம் எனக் கொள்ளலாம்.

இதே விகிதத்தில் வளர்ச்சி அடைந்தால், அடுத்த தலைமுறையில் இந்தியா தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துவிடும். இந்த இரண்டு நாடுகளும் வளர்ந்த நாடுகள் பட்டியில் கீழ் இடத்தில் உள்ளன.

இந்தியா ஒரு தலைமுறையில் அடுத்த சீனாவாக மாறி, இரண்டாவது தலைமுறையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக வேண்டும் எனில், ஜிடிபி வளர்ச்சி இரட்டை இலக்கமாக இருக்க வேண்டும். அடுத்த 40 ஆண்டுகளுக்கு இதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். வரலாற்றில் எந்த நாட்டிற்கும் இது சாத்தியமானது இல்லை.

கிரிக்கெட்டை உதாரணமாக காண்பித்தால், இளம் மக்கள் தொகை என்பது பவர் பிளே போன்றது. இதனால் அதிக வளர்ச்சி விகிதத்தை எளிதாக அடையலாம். ஆனால் என்ன பிரச்சனை எனில், இந்தியா இறுதி ஓவர் வரை 10 ரன்களுக்கு மேல் அடித்தாக வேண்டும்.

பொருளாதார சீர்த்திருத்த விமர்சகர்கள் கூறுவது போல் இந்தியா வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சியில் சிக்கிக் கொள்ளவில்லை என்றாலும் கூட, வேலைவாய்ப்பு வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவில்லை. வளரும் நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளாக மாறிய நாடுகளில், ஒரு சதவீத வளர்ச்சி உயர்வுக்கு 0.5 சதவீத வேலைவாய்ப்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் இது பொருளாதார சீர்திருத்தத்தின் முதல் 10 ஆண்டுகளில் 0.4 ஆக மட்டுமே இருந்தது. தற்போது 0.25 ஆக குறைந்துள்ளது.

இதற்கான முக்கியக் காரணம், மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது, கடினமான தொழிலாளர் சட்டங்கள், நிரந்தர ஊழியர்களுக்கான அதிக சமூக பாதுகாப்பு செலவீனம் போன்றவை என கருத வேண்டியிருக்கிறது.

இதன் விளைவாக, நிறுவனங்கள் தானியங்கி மயமாக்கல் அல்லது ஒப்பந்த தொழிலாளர்களை நாடும் நிலை உள்ளது.

வளர்ச்சியும், வேலைவாய்ப்பும்

இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை வளர்ச்சிப்படி, வரும் பத்தாண்டுகளில் ஆண்டுக்கு 10 மில்லியன் பேர் பணியாளர் பரப்பில் இணைவார்கள். மக்கள்தொகை கணக்குபடி, தற்போதைய வேலைவாய்ப்பு 473 மில்லியன் எனும் போது, அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு 2.1 சதவீதம் உயர வேண்டும்.

வேலைவாய்ப்பின் வளர்ச்சித் தன்மை, இதே அளவில் நீடிப்பதாகக் கொண்டால், வேலை தேடும் ஒவ்வொருவருக்கும் முழு வேலைவாய்ப்பு கிடைக்க, இந்தியாவின் ஜிடிபி 10 சதவீதமாக இருக்க வேண்டும்.

கொரியா, சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு இடையே சமநிலை காண, மக்களை விவசாயத்தில் இருந்து உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவை போன்ற அதிக திறன் வளர்ச்சி கொண்ட துறைகளில் ஈர்க்க வேண்டும்.

எனினும் இதுவரை, விவசாயம் சாராத வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அனைத்து அரசுகளின் செயல்பாடும் மோசமாகவே உள்ளன.

மேலும், வேலைவாய்ப்பை உயர்த்துவது பதவிக்கு வரும் எந்த அரசுக்கும் சவாலாக இருக்கும் எனும் நிலையில், நாட்டில் வேலைவாய்ப்பு சந்தை தொடர்பான நிலையை உணர்த்தக்கூடிய வகையில் வேலைவாய்ப்பு தரவுகள் தொடர்பான திறன் வாய்ந்த காரணிகள் ரிசர்வ் வங்கி அல்லது புள்ளியியல் துறையிடம் இல்லை என்பது வேதனையானது. சீனா தவிர எல்லா வளரும் நாடுகளிலும் இந்த காரணிகள் உள்ளன.

நம்பகமான தரவுகள் இல்லாததால், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக பலவித கருத்துகளும் அளவுகளும் இருக்கின்றன. நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதை பொருத்து கடந்த ஆண்டில் வேலை வாய்ப்பு உருவாக்கம் என்பது 1.5 மில்லியன் முதல் 12 மில்லியன் வரை இருக்கலாம்.

image


வேலைவாய்ப்பு உருவாக்கம்

2019 தேர்தலை வருங்காலம் வேலைவாய்ப்பு உருவாக்கம் எனும் லென்ஸ் வழியே தான் நோக்கும் என்பதற்கான காரணம், இதுவரையான வெளிப்படையான சமூக மோதல்களுக்கு எல்லாம் இதுவே முக்கியக் காரணமாகும். அதிகரிக்கும் மக்கள்தொகை, பருவநிலை மாற்றம், நிலம் துண்டாவது விவாசயத்தை இடர் நிறைந்ததாக மாற்றியிருக்கிறது.

இருப்பினும், விவசாயிகளுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு என்பது ஈர்ப்பில்லாத ஒப்பந்த பணிகள் தான். இதன் காரணமாகவே அரசு வேலைகளில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கோரிக்கை சார்ந்த போராட்டம் அதிகரித்துள்ளன. விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான போராட்டமும் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க மாநில அரசுகள் இலவச திட்டங்கள் அறிவித்து நிதி பற்றாக்குறையை அதிகரிக்கின்றன.

நீண்டகால வேலைவாய்ப்பின்மை உளவியல் நோக்கிலும் பாதித்து, சமூக அமைப்புகள் மீதான நம்பிக்கையைக் குறைக்கின்றன.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியா என்ன தீர்ப்பளிக்கிறது என்பது நம் நாட்டுக்கு மட்டும் அல்ல உலகிற்கும் முக்கியமானது.

இந்தியா அதன் ஜனநாயகத்தன்மைக்குள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வாக்களித்தால், அடுத்த இருபது ஆண்டுகளில் சர்வதேச வறுமை விகிதம் குறைந்து, உலகம் முழுவதும் உள்ள பொருளாதாரங்களுக்கு புதிய சந்தைகள் திறக்கப்படும். சீனா எப்படி உலகம் விரும்பும் சந்தையாக உருவானதோ அது போல நிகழும்.

வாக்காளர்களில் பாதிக்கு மேல் இருக்கும் இந்திய இளம் தலைமுறையினர் கையில் இன்று இருக்கும் தேர்வும் வாய்ப்பும், அடுத்த 40 ஆண்டுகளில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

ஆங்கில கட்டுரையாளர்: ஷைலேஷ் ஜா | தமிழில்; சைபர்சிம்மன்

(பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளருக்கு சொந்தமானது. இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.)