தொழில் முனைவோருக்கு புதிய அனுபவம் தரும் ‘ஸ்டார்ட்-அப் பயணம்’ அறிவிப்பு!
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் குழுக்கள் இணைந்து, தொடக்க நிறுவனங்களை பார்வையிடுவதற்கான “ஸ்டார்டப் பயணம்” (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டத்தின் இந்த ஆண்டு பதிப்பை வரும் மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இப்பயணம், முழுக்க முழுக்க மாணவ மற்றும் தொழில் முனைவோர்களுக்காகவே தொடங்கப்பட்ட விழிப்புணர்வு முயற்சியாகும். இன்றைய காலகட்டங்களில் ஆர்வமுள்ள பல தொழில்முனைவர்கள், சமூக வளைதளங்கள் மற்றும் ஆன்லைன் வெளியீடுகளில்தான் அதிக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றி கேட்டும், படித்தும் தெரிந்து கொள்கிறார்கள். உண்மையான ஸ்டார்ட் அப் பற்றிய முழு விவரங்களை அவர்களுக்கு அனுபவம் மூலமாக பெற்றுத்தருவதே இப்பயணத்தின் லட்சியம் ஆகும். தேசிய அளவில் வருடாவருடம் நடைப்பெறும் ‘ஜாக்ரிதி யாத்ரா’ ஐடியாவை பின்பற்றி உருவாக்கியதே ‘ஸ்டார்ட்-அப் பயணம்’ திட்டமாகும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டார்ட்-அப் பயணத்தின் முதல் பதிப்பை கோவையில் நடத்தினர். அது கோவைக்குள் இருக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை பார்வையிடும் வாய்ப்பை அளித்தது. பின்னர் 2016 மே மாதம் ஊர்களுக்கிடையே ஆன ‘இண்டெர்சிட்டி பயணம்’ கோவையில் இருந்து பெங்களுருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல தொழில்முனைவோர்கள் அதில் கலந்து கொண்டனர். அதை அடுத்து ஜூலை மாதம் மதுரையில் ஸ்டார்ட்-அப் பயணம் நடந்தது. இதில் தொடக்க நிறுவன நிறுவனர்கள் மற்றும் சிஇஒ’க்கள் கலந்து கொண்டனர்.
இதில் தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள், உத்திகள், சிக்கல்களிலிருந்து மீண்டு வரும் அனுபவங்கள் பற்றிய விவரங்களும் விளக்கப்படும். இது ஆர்வமுள்ள தொழில்முனைவர்களை ஊக்குவித்து, தொழில்முனைவுச் சூழலின் நன்மைகளைப் பற்றி நேர்மையாக வெளிப்படுத்தும் ஸ்டார்ட் அப் சமுதாயத்தின் ஒரு முயற்சியாகும்.
ஸ்டார்ட்-அப் பயணம் என்றால் என்ன?
ஒரு மனிதன் தன் இலக்கை அடைய சில கரடு முரடான சாலைகள், குறுகிய பாதைகள், வேகத்தடைகள், போக்குவரத்து குறிகளை கடக்க வேண்டியது இருக்கும். இலக்கை விட இலக்கை அடைவதற்கான பயணமே முக்கியமாகும். ஸ்டார்ட் அப் பயணத்தின் இலக்கும் அதுவே. அனுபவசாலிகளிடம் நேரடியாக சென்று அவர்களின் ஸ்டார்ட் அப் பயணத்தை பற்றிய முழு விவரங்களை அவரை பார்த்தும் கேட்டும் கற்றுக்கொள்ளலாம்.
இந்திய இளைஞர்களுக்கு மத்தியில் தொழில் முனைவுக் குறித்தான எண்ணங்களை ஊக்குவிக்கும் முயற்சியே இந்தப் பயணம். பங்கேற்பாளர்களை, புதிதாக மலரக்கூடிய பல நிறுவனங்கள் மற்றும் நிறுவப்பட்ட பல நிறுவனங்களுக்கு, சுற்றுப்பயணமாக கொண்டு செல்வதே ஸ்டார்ட் அப் பயணத்தின் திட்டம் ஆகும்.
இந்த ஆண்டு திட்டமிட்டுள்ள பயணம் மூன்று நாட்களுக்கு இருக்கும். இதில் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர் கலந்துகொள்ளலாம். கோவை முதல் சென்னை வரை இருக்கப்போகும் பயணத்தில் 20-க்கும் மேற்பட்ட சிஇஓ’க்களும் நிறுவனர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். கோவை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் சென்னை நிறுவனர்களுடன் கலந்துரையாடி இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து விவாதித்து அனுபவம் பெற்றுக்கொள்ளலாம்.