பதிப்புகளில்

என் சென்னை..!

8th Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

இன்றுதான் என் இயல்பு வாழ்விற்கு திரும்பியுள்ளேன் எங்கள் சாலையில் வெள்ளம் ​வடிந்திருக்கிறது. மின்சாரமும் வந்துவிட்டது. இண்டெர்னெட் முழுமையாக வேலை செய்யாவிட்டாலும் ஒரளவுக்கு வந்து வந்து உதவிக் கொண்டிருகிறது. கடந்த ஒரு வாரமாக எனக்கு கைகொடுத்தது எனது பி.எஸ்.என். எல். இணைப்புள்ள மொபைல் மட்டும்தான். கடந்த வாரம் முழுதும் மற்ற இணைப்புகள் முற்றிலும் செயல் இழந்துபோன நிலையிலும் அது வேலை செய்ததால் ஒரு சில நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்பு கொள்ள முடிந்தது. மற்றொரு ஆச்சரியம் பி.எஸ்.என்.எல் 'மொபைல் டேட்டா' கூட வேலை செய்ததுதான்..!

image


டிசம்பர் 1

எனக்கு மட்டுமல்ல சென்னை வாசிகள் பலருக்கும் பீதியான சூழ்நிலையை தொடங்கி வைத்த நாள். தீபாவளியின் போதும், அதன் பின்னரும் பெய்தது போன்று அன்றும் மழை கொட்டத் தொடங்கியது. முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு, குண்டும், குழியுமான சாலைகளைக் கடந்தும், கழிவு நீர் துவாரங்களிலிருந்து தப்பியும் வீடு வந்து சேர்வது சென்னைவாசிகளுக்கு பழகிப்போன ஒன்றாகி விட்டது. 

அதே போன்று ஒரு மழையாகத்தான் இதுவும் இருக்கும் என்று சாதாரணமாக நினைத்தது தவறாகிப்போனது. சென்னையின் மைய பகுதியில் வசிப்பதால் பாதுகாப்பை பற்றி யோசித்ததே இல்லை. வழக்கம் போல் தமிழ் யுவர் ஸ்டோரி எடிட்டிங் பணிகளை முடித்துவிட்டு தூங்கப்போய்விட்டேன்.

டிசம்பர் 2

மழை குறித்து பெரிதாக யோசிக்கவில்லை. வழக்கமான அன்றைய பணிகளை முடித்து விட்டு, தொலைகாட்சியில் கண்களை ஓட்டினேன். மழை செய்திகளாக வந்து கொண்டிருந்தது. புற நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட சேதச்செய்திகளை பார்த்தேன். சில சேனல்களில் மழை வெள்ளம் பற்றிய விவாதங்கள்... ஓடின. நானும் என் பங்கிற்கு 'கொஞ்சம் கூட யோசிக்காமல் தாழ்வான இடங்களிலும், குளம், ஏரி பகுதிகளில் போய் ஏன் வீடு வாங்கிவிட்டு இப்போது புலம்புகிறார்கள்..' என்று எனக்குள் யோசித்தும் கொண்டேன். 

மறு நாள் எனக்கும் இதேப்போன்று ஒரு ஆபத்து காத்திருந்ததை உணராதவளாக பணிச்சுமை அசதியில் அன்று சீக்கிரமே தூங்கப் போய்விட்டேன்.

டிசம்பர் 3

காலை மணி ஆறு. தூக்கம் கலையாத அந்த நேரத்தில் திடீரென என் அப்பா கூப்பிடும் சத்தம். கூடவே, வெளியே சாலையில் சைரன் வாகனங்களின் சத்தம். "தண்ணீ, தண்ணீ..." என்று சத்தமிடும் அடுத்த வீட்டு பெண்ணின் குரலை அந்த தூக்க கலக்கத்திலும் புரிந்து கொண்டு ஏன் இப்படி கத்துகிறார்கள் என்று மனதுக்குள் திட்டிக்கொண்டேன். அப்போது ''வீட்டுக்குள் தண்ணீ வந்திடுச்சு...'' என்கிற அப்பாவின் பதட்டமான குரலை கேட்டு அவசரமாக எழுந்து வெளியே வந்து பார்த்தால் எங்கள் வீட்டை ஒட்டிய சாலைக்குள் திபு திபு வென்று வெள்ளம் போல நீர் வந்து கொண்டிருக்கிறது. அப்போது மழை எதுவும் இல்லாததால் எங்கிருந்து இவ்வளவு தண்ணீர் வருகிறது என்று குழப்பத்தில் சாலைக்கு ஓடினேன்.

முட்டிவரை வெள்ளம். என்னைப்போல் பலர் அங்கே பக்கத்து சாலைகளில் இருந்து வரும் தண்ணீரை பார்த்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். காலில் ஒட்டிய சேருடன் காம்பௌண்டுக்குள் வந்தோம். மளமளவென எங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் வராமல் இருக்க தடுப்புகள் வைத்தோம்...

என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் தொலைக்காட்சியை ஆன் செய்தேன். கன மழை காரணமாக புற நகர் பகுதியில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சொன்னார்கள்.

ஆற்றிலிருந்து தூரத்தில் நாங்கள் இருந்தாலும் முதல் முறையாக எங்களையும் புற நகர் வாசிகளாக்கியது வெள்ளம் என புரிந்து கொண்டேன். உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர், தொலைப்பேசி இணைப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக செயல் இழந்தன.

செய்வதரியாது சில மணி நேரம் சென்றது... பின்னர், முக்கிய ஆவணங்கள், பொருள்களை பேக் செய்து மாடியில் கொண்டு வைத்தோம்..!

முதல் முறையாக நகரின் மையப்பகுதியில் பல இடங்களில் 5 அடி முதல் 10 அடி வரை தண்ணீர். பல வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகளின் கீழ் தளம் முழுமையாக மூழ்கியது. முக்கிய சாலைகள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. நேரம் செல்ல செல்ல சென்னை ஸ்தம்பித்தது..! இப்படி ஒரு பேரிடரை சென்னை சந்தித்ததில்லை. நானும்தான். ஆனாலும், மற்றவர்களை போல பெரும் பாதிப்பின்றி தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

image


மறு நாள் காலை. அதிர்ஷ்டவசமாக என் பி.எஸ்.என்.எல் மொபைலும் விழித்துக் கொண்டது. ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் குவிந்த மேசேஜ்களை படித்து மாளவில்லை. உள் நாட்டிலும், வெளி நாடுகளில் இருந்தும் பதட்டமான விசாரிப்புகள். 'அம்மாவிடமிருந்து அழைப்பு இல்லை. அப்பாவை தொடர்பு கொள்ள முடியவில்லை, நண்பர் மற்றும் அவரின் குடும்பத்தை காணவில்லை இப்படி பல பல... தயவு செய்து விசாரித்து சொல்லுங்கள்...' என்று பதைபதைக்கும் விசாரிப்புகள் அன்று முழுதும். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் செல்போன் நெட்வொர்க் கிடைக்காததால் இந்த பதற்றம்.

என் பத்திரிகையாளர் மூளையை பயன்படுத்தி பல நண்பர்கள், உடன் பணியாற்றியோர், பிற நண்பர்கள் மூலமாகவும் முடிந்த வரை தகவல்கள் பெற்று பதில் அளித்து வந்தேன். ஆனாலும், பலரது தொலைப்பேசி முடங்கி இருந்தது. நேரில் சென்று பார்க்க முடியாத அளவுக்கு சாலைகளில் வெள்ளம். மின் இணைப்பு இல்லாத இரவு. கை விரல்களும், காதும், வாயும் கூட வலிக்கத் தொடங்கி விட்டது. தூங்க மனம் இல்லை என்றாலும் அன்றைய சோர்வு படுக்கையில் தள்ளியது.

அடுத்த நாள். எழுந்து பார்த்தால் வாட்ஸ் ஆப்பில் குவியல் குவியல்களாக உதவி கோரும் தகவல்கள். மருத்துவமனைக்கு போகமுடியாமல் பிரசவ வலியில் துடிக்கும் பெண், அவசர சிகிச்சை தேடும் முதியோர், பால் கிடைக்காத பச்சிளம் குழந்தை என்று பட்டியல் நீண்டது... இணையம் மூலமாக பல தன்னார்வ இளைஞர்கள் ஒன்று திரண்டனர். அவர்களுடன் நானும் இணைந்து இயன்றவரை உதவ முயன்றேன். முதலில் பலர் நலமுடன் இருக்கிறார்கள் என்பதை உற்றார் உறவினர்களிடம் தெரிவித்து அவர்களின் பதட்டத்தை தீர்ப்பதே பெரும் பணியாக அமைந்தது. 

image


ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் நிம்மதியாக வீட்டில் அமர முடியவில்லை. என் நண்பருடைய கார் ஒன்றை எடுத்துக்கொண்டு நேரடியாக வீடுவீடாக சென்று குடிநீர், பிஸ்கட், உணவு வாங்கி கொடுத்தும் ஆறுதல் சொல்லியும் பணிகளை தொடர்ந்தோம். 4 நாட்களாக வெளியுலக இணைப்பின்றி பல முதியவர்களும், ஊனமுற்றோரும் வீட்டில் முடங்கி கிடந்ததை பார்த்தோம். பல நாட்களுக்கு பின் வெளி நபரை பார்த்த மகிழ்ச்சியில் எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதது என் மனதை கரைத்தது. தொலைவில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கு தகவல் அனுப்ப முடிந்ததில் மன நிறைவடைந்தனர். சிலரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்கவைக்கும் பணியையும் செய்தோம்.

வெள்ளி, சனி தினங்கள் இந்த பணிகளிலேயே சென்றது. நண்பர்களின் எண்ணிக்கை பெருகி எங்கள் குழு ஐந்து பேராக பணிகளை தொடர்ந்தது. இரண்டு வாகனங்களில் பயணித்து பணிகளை தொடர்ந்தோம்.

image


30 பேர் தங்கியிருந்த 80 வயதுக்கும் மேலுள்ள முதியோர் இல்லம் சென்று உதவினோம். அவர்களுக்கு தேவையான மருந்துகள், குடிநீர், டைப்பர் என அனைத்தையும் வாங்கி சென்றோம். கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள், அதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 

அங்கிருந்து திரும்பும் பாதைகளில் வெள்ளம் புரட்டிப் போட்ட பல இடங்களை பார்க்க வேதனையாக இருந்தது. பலர் சாலைகளில் தஞ்சம் புகுந்திருந்தனர். சிலர் எங்களிடம் உணவு எதிர்பார்த்தனர். என் நண்பர் அவரின் மாமியாரோடு இணைந்து 200 பேருக்கு உணவு சமைத்து அனுப்பி வைத்தது நெகிழ்சியாக இருந்தது.

தற்போது, பல முனைகளில் இருந்து உதவிகள் சென்னைக்கு குவிந்த வண்ணம் உள்ளது. மனித சக்தியின் மகிமையை இந்த மழை சென்னை வாசிகளுக்கு புரிய வைத்துள்ளது.

கீழ்தளத்தில் குடியிருந்தவர்களை காப்பாற்றி தங்க வைத்த அந்நாள் வரை சிரித்து பழகாத மேல் வீட்டு வாசிகள். எல்லா தரப்பினரையும் தங்க அழைப்பு விடுத்து கதவுகளை திறந்த மசூதிகள், கோயில்கள், சர்ச்சுகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என்று மனிதாபிமான பட்டியல் நீள்கிறது.

இன்றுதான் எனது அலுவலக பணியை தொடங்கி இருக்கிறேன். கடந்த வாரம் முழுதும் ஒரு சில கட்டுரைகள் மட்டுமே என்னால் அப்டேட் செய்ய முடிந்தது. எனது நிலைமையை புரிந்து கொண்டு ஒத்துழைத்த எனது அலுவலகத்திற்கு என் நன்றிகள். இப்படி ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதில் நான் பெருமை படுகிறேன். 

'என் சென்னை' க்கு உதவிட எனக்கு இடமளித்த யுவர்ஸ்டோரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

(படங்கள் உதவி: நிஷாந்த் க்ருஷ்)

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags