பதிப்புகளில்

ஆன்லைனில் ஃபர்னிச்சர் விற்பனை: அசத்தும் நிறுவனம் தொடங்கிய மதுரை இளைஞர்!

மதுரையில் 80 ஆண்டுகளாக மர வியாபாரம் செய்து வரும் குடும்பப் பின்னணியில் வந்த எம்பிஏ பட்டதாரி சத்யபிரதீப், ஐடி பணிக்கு டாடா காட்டிவிட்டு ஆன்லைனில் ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் ஸ்டார்ட் அப்பை தொடங்கி வெற்றி கண்டுள்ளார். 

26th Sep 2018
Add to
Shares
627
Comments
Share This
Add to
Shares
627
Comments
Share

பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கைநிறைய சம்பளம், கூடுதல் சம்பளத்தோடு ஆன்சைட் பணி இதைத் தவிர வேறு என்ன வேண்டும், இதுவே போதும் என்று சொகுசு வாழ்க்கைக்கு பலரும் பழகி விடுவர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சத்ய பிரதீப் பிஇ, எம்பிஏ படித்துவிட்டு பன்னாட்டு நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். வாரத்தின் 5 நாட்கள் டென்ஷன் வேலை என்றாலும் மாதம் பிறந்ததும் சம்பளம், வார இறுதியில் 2 நாட்கள் விடுப்பு ஆஸ்திரேலியாவில் ஆன்சைட் என்று சுகபோக வாழ்க்கை அவருக்கு கிடைத்தது. 

எனினும் தாய்நாட்டை விட்டு, குடும்பப் பாரம்பரியத் தொழிலை விட்டு இப்படி அயல்நாட்டில் வந்து சம்பாதிக்க வேண்டுமா என்று யோசித்தவர், 2014ம் ஆண்டு இறுதியில் ஐடி வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு இந்தியாவிற்கு பறந்து வந்து விட்டார்.

ஃபர்னிச்சர் மேஜிக் நிறுவனர், சிஇஓ சத்ய பிரதீப்

ஃபர்னிச்சர் மேஜிக் நிறுவனர், சிஇஓ சத்ய பிரதீப்


“மதுரையில் நாங்கள் பாரம்பரியமிக்க குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள், தாத்தா, அப்பா என்று பரம்பரை பரம்பரையாக சுமார் 80 ஆண்டுகளாக மர வியாபாரம் செய்து வருகிறோம். இந்த மர வியாபாரத்தையே வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி என் படிப்பறிவைக் கொண்டு புதுமைபடுத்தினால் என்ன என்று தோன்றியது. என்னுடைய ஸ்டார்ட் அப் Furnify-ன் முதல் பயணம் மதுரையில் இருந்து தொடங்கியது,” என்றார் சத்யா.

தொழில்முனைவுக்கான பிள்ளையார்சுழி பாடம் நேடிவ் லீட் என்ற அமைப்பில் இருந்து கற்றேன். மர வியாபார தொழிலை புதிய ஸ்டார்ட் அப்பாக எப்படி கொண்டு போகலாம் என்ற சிந்தனைக்கான விதை அங்கு கிடைத்தது. மரச்சாமான்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் தளமாக இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தால் அது நல்ல தொடக்கமாக இருக்கும் என்று முடிவு செய்தேன். மதுரையைக் காட்டிலும் ஆன்லைன் ஃபர்னிச்சர் விற்பனை தளத்திற்கு சென்னையில் அதிக தேவை இருப்பதை உணர்ந்து சென்னையில் இருந்தே என்னுடைய ஸ்டார்ட் அப்க்கான ஸ்டார்ட் கியரை போட்டேன் என்கிறார் ஃபர்னிச்சர் மேஜிக்’ன் நிறுவனர் மற்றும் சிஇஒ சத்யா பிரதீப்.

மர வியாபாரத்தில் மதுரையிலேயே 80 ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் மதுரையைத் தாண்டி சென்னைக்கு இந்த தொழிலை எப்படி விரிவாக்கம் செய்யலாம் என்றும் யோசித்தே இந்த ஸ்டார்ட் அப் திட்டம் கைகொடுக்கும் என்று நம்பி இணைய வர்த்தகத்தில் பர்னிச்சர் விற்பனைக்கான அடியை எடுத்து வைத்திருக்கிறார் சத்யா.

ஃபர்னிஃபை (furnify) தளம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான விலையில் ஃபர்னிச்சர் எங்கு கிடைக்கும் என்பதை மட்டுமே வழிகாட்டும் தளமாக இருந்தது. இதனால் ஆன்லைனில் ஃபர்னிச்சர் விற்பனையை மதுரையைத் தாண்டி சென்னை, டெல்லி என்று நாடு முழுவதும் கொண்டு செல்ல ஒரே மாதிரியான வடிவமைப்பு தேவை என்பதால் ஒரு முழுமையான ஆன்லைன் விற்பனைத் தளமாக அதை ஃபர்னிச்சர் மேஜிக்(www.furnituremagik.com) என்ற பெயரில் மாற்றி வடிவமைத்துள்ளார் சத்யா பிரதீப்.

2014ம் ஆண்டு தொழில்முனைவராகும் கனவோடு ஆன்லைன் ஃபர்னிச்சர் விற்பனை துறையில் களமிறங்கிய சத்யா, 2017ம் ஆண்டில் ஃபர்னிச்சர் மேஜிக் தளத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளார். 

“தொடக்கத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கி அதனை 6 மாதங்கள் செயல்படுத்தி பார்த்த போதும் அது வாடிக்கையாளர்களை அதிகம் கவராமல் போனதால் மாற்று திட்டத்தை யோசித்து ஸ்டார்ட் அப்க்கான யுத்தியை வேறு திசை நோக்கி நகர்த்தி இறுதியில் 2017ல் இந்த பர்னிச்சர் விற்பனை தளம் முழு வடிவம் பெற்றது,” என்கிறார். 

ஃபர்னிச்சர் மேஜிக்கில் எங்கள் கடையின் ஃபர்னிச்சர்கள் மட்டுமின்றி தம்ரோ, கர்ல் ஆன் உள்ளிட்ட பிரபல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் ஃபர்னிச்சர்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இணைய வழி ஃபர்னிச்சர் விற்பனையில் உள்ள நிறுவனங்களை விட நாங்கள் வேறுபட்டு பார்க்கப்படுவதற்கான முக்கியக் காரணம் விரைவான டெலிவரி. 

அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பெப்பர் ஃப்ரை தளத்தையே எங்களது போட்டியாளராக நாங்கள் பார்க்கிறோம், அவர்களிடம் உள்ள மைனஸ் ஃபர்னிச்சர்களை ஆர்டர் எடுத்த 10 நாட்களுக்குப் பின்னரே பொருள் வீடு வந்து சேரும், அதே போன்று ஃபர்னிச்சர்கள் சேதமடைந்திருந்தால் அவற்றை ரிட்டர்ன் எடுப்பதற்கான கால அவகாசமும் அதிக நாட்கள் எடுக்கும். 

அவர்களின் மைனஸ் பாயின்டையே எங்களது பிளஸ் பாயின்ட்டாக மாற்றினோம், சென்னையின் எந்த பகுதியில் இருந்தும் ஃபர்னிச்சர் ஆர்டர் கொடுத்தால் 3 நாட்களில் சில நேரங்களில் அவசரம் கருதி அன்றே அவர்களின் வீட்டை சென்றடையும் விதமாகவும் டெலிவரி செய்யப்படுகிறது. வேகம், வாடிக்கையாளர்களின் திருப்தி இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதால் 2017ல் தொடங்கிய இந்த தளம் பிரபலமடைந்து வருவதாக மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் சத்யா.
ஃபர்னிச்சர்மேஜிக் இணையதள பக்கம்

ஃபர்னிச்சர்மேஜிக் இணையதள பக்கம்


ஆன்லைன் யுகத்தில் ஒரு பொருள் வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் தளத்திற்கு சென்று யாரும் பார்ப்பதில்லை உணவு ஆர்டர் கொடுப்பதற்கு சோமடோ, ஸ்விக்கி போல ஃபர்னிச்சர் சாமான்கள் ஆர்டருக்கு FurnitureMagik என்பதே எனது ஸ்டார்ட் அப்க்கான அடிப்படை தாத்பரியம் என்கிறார்.

சென்னையில் வசிப்போர் வீட்டு ஃபர்னிச்சர் வாங்க வேண்டும் என்றால் கடை கடையாக ஏறி இறங்கத் தேவையில்லை, டிராபிக் நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டாம் வீட்டில் இருந்தபடியே பர்னிச்சர்களை இவர்களின் தளத்தில் இணைய வழியில் பார்க்கலாம். 

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற ஃபர்னிச்சரின் விலை என்ன என்பதை பார்ப்பதற்காகவே பலர் எங்களது தளத்தை பயன்படுத்தினர் அதுவே ஒரு நல்ல வரவேற்பு என்று தான் நான் பார்த்தேன், மாதத்திற்கு 50 ஆயிரம் பேர் எங்கள் தளத்திற்கு வந்து ஃபர்னிச்சர்களை பார்க்கின்றனர் என்கிறார் சத்யா.

திருமணத்திற்காக ஃபர்னிச்சர் வாங்குபவர்களே எங்களது முதல் டார்கெட். இல்லறம் புகும் புதுமண தம்பதிகளுக்கு தேவையான ஃபர்னிச்சர்களை 2 BHK, 3BHK என பேக்கேஜ்களாகவே வழங்குகிறோம். ஏனெனில் புதிதாக திருமணம் ஆகும் தம்பதிகள் வீடு தேடி அலைய வேண்டும், அலுவலக பணியை பார்க்க வேண்டும் சில சமயங்களில் மணமகன், மணப்பெண் வெவ்வேறு ஊர்களில் வசிப்பார்கள் இருவரும் சேர்ந்து வந்து ஃபர்னிச்சர் பார்த்து ஆர்டர் கொடுப்பது என்பது சிரமமான விஷயமாக இருக்கும். இந்த சிரமங்களுக்கான தீர்வை ஃபர்னிச்சர் மேஜிக் தருகிறது. 

இதே போன்று கட்டுமான நிறுவனங்களுடனும் நாங்கள் கைகோர்த்துள்ளதால் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஃபர்னிஷ் செய்வதற்கான மரச் சாமான்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம். இந்த வியாபார யுத்திகளை களஆய்வு செய்தும் தொழில்முனைவில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையை கேட்டும் பயன்படுத்தி வருவதாகக் கூறுகிறார்.

ஓராண்டிலேயே வாடிக்கையாளர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது சத்யாவின் ஃபர்னிச்சர் மேஜிக். இதுவரை 250 வகையான ஃபர்னிச்சர்கள் இத்தளத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன, 1000 பொருட்களைக் கொண்டு வர சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறும் சத்யா, கோத்ரேஜ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களால் ஆன்லைன் விற்பனையில் ஜொலிக்க முடியவில்லை என்று ஃபர்னிச்சர் மேஜிக் உடன் பார்ட்னர்ஷிப் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக பெருமைப்படுகிறார்.

தன்னுடைய ஒட்டுமொத்த சேமிப்பையும் முதலீடாக போட்டு ஸ்டார்ட் அப் தொடங்கிய இவர், கொஞ்சம் கொஞ்சமாக தொழில்முனைவுக்கான நுணுக்கங்களைக் கற்று தனது பாதையை விரிவுபடுத்தி வருகிறார். ஆன்லைனில் பொருட்களை வாங்குவோர் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும், தொழில்முனைவு பற்றி படித்தாலும் கேட்டறிந்தாலும் செயல்முறையில் வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றி அவர்களின் நம்பிக்கையை பெறுவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. 

ஷோரூம் சென்றே பல முறை பார்த்து பார்த்து வாங்கும் வாடிக்கையாளர்களை இணையதளத்தில் வந்து பார்த்தவுடன் வாங்க வைப்பது கடினமான விஷயம் எனவே அது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்கிறார்.

ஃபர்னிச்சர் ஆர்டர் கொடுத்தால் பிற நிறுவனங்கள் டெலிவரி கொடுக்க 10 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன, வடமாநிலங்களில் இருந்து அவை போக்குவரத்து செய்யப்படுவதால் இடையில் சேதம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. பொருள் திருப்தியாக இல்லை என்றால் ரிட்டர்ன் பாலிசிக்கும் அதே 10 நாட்கள் எடுக்கும் என்பதால் வாடிக்கையாளர் செலுத்திய பணத்தை திரும்பப் பெறுவதற்கு அவகாசம் எடுக்கும். 

ஃபர்னிச்சர் மேஜிக்கில் ஆர்டர் கொடுக்கும் போது இந்த சிரமங்கள் இருக்காது, எங்களுடைய சப்ளை செயின் மிகவும் எளிமையானது, ஆர்டர் கொடுத்த உடனேயே குடோன்களில் வைக்கப்பட்டுள்ள ஃபர்னிச்சர் தரம் சரிபார்க்கப்பட்டு வாடிக்கையாளர் வீட்டிற்கு கொண்டு சென்று பொருத்திக் கொடுப்பது வரை அனைத்தையும் கஸ்டமர் பிரென்ட்லியாக செய்து கொடுக்கிறோம். இதே போன்று ரிட்டர்ன் பாலிசியும் அன்றைக்கே சரி செய்து தரப்படுவதால் வாடிக்கையாளரின் பணம் சுணக்கமின்றி அடுத்த நாளே அவர்களின் கைக்கு கிடைத்துவிடும். இந்த முறையிலேயே இவர்கள் செயல்பட்டு வருவதால் குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களின் அபிமானத்தை பெற முடிந்ததற்கான காரணம் இதுவே என்கிறார் சத்யா.

மாதத்திற்கு ரூ. 8 லட்சத்திற்கு குறையாமல் வருமானம் ஈட்டும் தொழிலாக ஃபர்னிச்சர் மேஜிக்கை கொண்டு வர விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் முதலீடு செய்துள்ளார் சத்ய பிரதீப். 

“மார்க்கெட்டிங்கிற்கு எவ்வளவு செலவு செய்கிறோமோ அதைப் பொருத்து வருவாயும் அதிகரிக்கும். ஆனால் இதற்காக அதிக நிதி தேவைப்படுகிறது, மேலும் ஃபர்னிச்சர் மேஜிக்கின் சேவையை பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய முதலீட்டாளர்களை நாட முடிவு செய்துள்ளோம்,” என்று தெரிவிக்கிறார் சத்யா.
ஃபர்னிச்சர் மேஜிக் சிடிஓ கோகுல் ரவிக்குமார்

ஃபர்னிச்சர் மேஜிக் சிடிஓ கோகுல் ரவிக்குமார்


அதிக சம்பளம் கொடுத்து ஆட்களை வைத்துக் கொள்ள முடியாது என்பதால் 7 பேரை மட்டுமே கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதிலும் 3 பேர் பகுதி நேரமாக பணியாற்றுபவர்களே. வருமானத்தை மிஞ்சிய செலவாகிவிடக் கூடாது என்பதால் அனைத்தையும் தானியங்கி முறைக்கு மாற்றியமைத்து விட்டனர். இதற்கான மென்பொருள்கள் அனைத்தையும் வடிவமைத்து கொடுத்தவர் சிடிஓ கோகுல் ரவிகுமார் என்று ஃபர்னிச்சர் மேஜிக்கை பின்னால் இருந்து இயக்குபவர்களின் விவரங்களை கூறுகிறார் சத்யா.

ஆன்லைனில் ஆடைகளை வாங்கிவிடலாம் ஆனால் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாங்கும் ஃபர்னிச்சரை எப்படி வாங்குவது என்று வாடிக்கையாளர்கள் யோசிப்பார்கள். அவர்களின் நம்பிக்கையை பெறுவதைத் தான் முதன்மையாக வைத்து நாங்கள் செயல்படுகிறோம்.

எந்த அளவிற்கு ஃபர்னிச்சரின் படங்களை தல்லியமாக காட்ட முடியுமோ அந்த அளவிற்கு துல்லியமாக 7 முதல் 8 கோணங்களில் காட்டுகிறோம். வாடிக்கையாளரின் தேவை அறிந்து மென்மேலும் மெருகேற்றிக் கொண்டே வருவதால் எதிர்காலத்தில் ஃபர்னிச்சர் மேஜிக் டாப் 10 இ-வர்த்தக இணையதளங்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஆன்லைனில் ஃபர்னிச்சர் விற்பனை சூடுபிடித்து வருகிறது, 2020ல் இந்தத் துறையில் நாடு முழுவதும் சுமார் 25 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனாலேயே பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் ஃபர்னிச்சர் விற்பனையில் களம் இறங்கியுள்ளதால் ஆரோக்கியமான போட்டி உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் சத்யா பிரதீப்.

எந்த வர்த்தக மாதிரியை தேர்வு செய்வது என்பது என்னுடைய ஸ்டார்ட் அப்பில் நான் கண்ட சவால். வருவாய் ஈட்டுவதோடு வெற்றியும் அடைய வேண்டும் என நினைத்தோம், முதலில் ஷோரூம்களை அணுகி வாடிக்கையாளர்கள் தளத்தில் ஃபர்னிச்சரை பார்த்துவிட்டு நேரில் சென்று வாங்கிச் செல்வது போன்ற திட்டத்தை செயல்படுத்தினோம். ஆனால் அதில் வாடிக்கையாளர்கள் கிடைத்தாலும் எங்களுக்கு வருமானம் இல்லை எனவே அந்த திட்டம் கைக் கொடுக்காது என்பதை உணர்ந்து 8 மாதங்கள் கஷ்டப்பட்டு தவறுகளை திருத்திக் கொண்டு புதிய மாதிரியை உருவாக்கினோம்.

ஐடி பணியை விட்டு விட்டு ஸ்டார்ட் அப்பில் இறங்கலாம் என்ற முடிவை தைரியமாக எடுத்ததாலே இன்று நான் நினைத்ததை என்னால் செய்ய முடிந்துள்ளது என்கிறார் சத்யா.

ஸ்டார்ட் அப் தொடங்குவது ரிஸ்கான விஷயம் தான், என்னைக் கூட பலரும் குடும்ப தொழிலையே பார்க்கலாமே ஏன் அதை விடுத்து வேறு ஒரு புதிய தளத்தில் பயணிக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் நான் சொல்லிய பதில் வியாபார யுத்திகள் மாறிக்கொண்டே இருக்கின்றது, அதற்கேற்ப நாமும் முயற்சித்தால் வெற்றியை காண முடியும். அதனை நிரூபிக்கவே நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தீர்க்கமாக சொல்கிறார் சத்யா. 

நிறுவனம் தொடங்கும் போது நிச்சயம் சவால்கள் வரும், 3 மாதங்கள் முயற்சித்து பார்த்துவிட்டு தோல்வியடைந்தால் மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்காக உடைந்து போய் அதனை கைவிட்டு விடக் கூடாது. இந்தியாவில் தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதனை பயன்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்கிறார் இவர்.
image


2019ம் ஆண்டில் பெங்களூரு, கொச்சின் போன்ற மெட்ரோ நகரங்களுக்கும் ஃபர்னிச்சர் மேஜிக்கை விரிவாக்கம் செய்யும் திட்டம் வைத்துள்ளார் சத்யா பிரதீப். மாற்று சிந்தனையாளராக வணிக சந்தையின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படும் இளம் தொழில்முனைவரான இவர் தன்னுடைய ரோல்மாடலாக நினைப்பது ஆன்லைன் வர்த்தகத்தில் 5வது இடத்தில் உள்ள அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா’வையே.

புகார்கள் இருக்கும் இடத்தில் தீர்வைத் தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும், உங்களுடன் சிறந்த மனிதர்கள் இருப்பதைவிட சரியான மனிதர்கள் இருக்க வேண்டும் என்ற ஜாக் மா’வின் வரிகளே தொழில்முனைவில் தான் பின்பற்றும் முக்கியமான அம்சங்கள் என்கிறார் சத்யா பிரதீப்.  

Add to
Shares
627
Comments
Share This
Add to
Shares
627
Comments
Share
Report an issue
Authors

Related Tags