பதிப்புகளில்

12 வயதில் திருமணம், 13 வயதில் குழந்தைக்கு தாய்: பேபி ஹால்டெர் எழுத்தாளராய் உருவெடுத்தக் கதை!

posted on 24th October 2018
Add to
Shares
547
Comments
Share This
Add to
Shares
547
Comments
Share

தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியவர், மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளாகி பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர், 12 வயதிலே இரு மடங்கு வயது மூத்தவருக்கு திருமணம் செய்யப்பட்டவர், 13 வயதில் ஒரு குழந்தைக்கு தாயானவர், கணவரோடு தொடரும் பிணக்கால், தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியவர். 

தொடர்ந்து விடாப்பிடியான வைராக்கியதுடன் அயராது வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை நடத்தியவர்... என்று வறுமை, துயரம், வன்முறை மற்றும் பல போராட்டங்களுடன் போராடிய பணிப்பெண் பேபி ஹால்டெர், இறுதியாக தன்னை எழுத்தாளராக செதுக்கிக் கொண்டார். ஆம், அவரெழுதிய அவருடைய வாழ்க்கை வரலாறு இதுவரை 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பூமியின் சொர்க்கம் என்று டிராவலர்களால் அழைக்கப்படும் அழகிய காஷ்மீர் பள்ளதாக்கு, பேபி ஹால்டெருக்கோ நரகம். அங்கு தான் பிறந்தார் அவர். அப்பாவின் பொறுப்பற்ற தனத்தாலும், அவரால் தினம் தினம் சித்ரவதை அனுபவித்த பேபியின் தாயார், இரவோடு இரவாக யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது ஹால்டெருக்கு நான்கு வயது. 

அவளது தந்தையாலே துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிய பேபியின் துயர வாழ்வு அவ்வயதிலே தொடங்கிவிட்டது. அவருடைய அப்பா மறுமணம் செய்து கொள்கிறார். சின்ன அம்மாவாக வந்தவரோ, பேபியை அவருடைய குழந்தையாக எண்ணாமல் மிச்ச துயரங்களை தரத்துவங்கினார். பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பேபியின் படிப்பை 6ம் வகுப்போடு நிறுத்தினார். 12 வயதிலே பேபிக்கு திருமணமும் முடிந்தது. திருமணத்துக்கு முந்தைய நிமிடங்கள் வரை அவள் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறுகிறார்.

image


“ஒரு நாள் வீடு முழுவதும் விருந்தினர்கள் நிறைந்து இருந்தனர். நான் என் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு சேலையை கட்டாயப்படுத்தி அணிவித்தார்கள். இதுக்கு முன்பு நான் பார்த்திராத ஒருநபருடன் மண்டபத்தில் அமர வைத்தனர். நான் ஏதோ பூஜை நடக்கிறது என்று நினைத்தேன். பின்பு தான் எனக்கு கல்யாணம் என்று தெரிந்தது,”

என்று கடந்த கால நினைவுகளை பகிரும் பேபி, அவரை விட இரு மடங்கு வயது மூத்தவருக்கு மணம் முடிக்கப்பட்டார். அச்சமயத்திலும் பேபி, ‘திருமணம் செய்து கொள்வதும் நல்ல விஷயம் தான், அப்படியாச்சும் விருந்து கிடைக்குமே’ என்றே தன் நண்பர்களுடன் கூறியுள்ளார். அந்தளவுக்கு உணவு என்பதே அரிதான ஒன்றாகவே இருந்துள்ளது அவருக்கு. 

அவருடைய நண்பர்கள் படித்தும், விளையாடிக் கொண்டும் இருக்கையில் பேபி, ஒரு குழந்தைக்கு தாயாகினார். என்ன நடக்கிறது என்கிற புரிதல் ஏற்படுவதற்கு முன்னரே மூன்று குழந்தைகளுக்கு தயாகினார். 

முதல் குழந்தையை பெற்றெடுக்கையில் பேபியின் வயது 13. திருமணத்தின் முதல் இரவில் தொடங்கிய துஷ்பிரயோகம் ஒரு சகாப்தம் வரை தொடர்ந்துள்ளது. முதல் பிரசவத்திற்கு தானே மருத்துவமனைக்கு சென்று பிள்ளை பெற்றுக் கொண்ட பேபி, ஒரு முறை ஆண் தோழனிடம் பேசிக் கொண்டிருந்தார் என்பதற்காக கணவனால் பலமாக தாக்கப்படுகிறார். அம்முறை கொடூர காயங்கள் ஏற்பட்டாலும், பேபிக்கு அது புதிதல்ல. தினந்தோறும் கணவனால், நேரும் அடி, உதைகள், இழிச்சொற்களின் காரணமாய் மூன்று குழந்தைகளுடன் வீட்டை வெளியேறி டெல்லி செல்கிறார்.

“பெத்த பச்சிளம் குழந்தையை வீட்டிலியே விட்டுவிட்டு ராத்திரியோடு ராத்திரியாக வெளியேறும் அளவுக்கு எங்க அம்மா துயரங்களை சந்தித்துள்ளார். என் அப்பாவுடைய நடத்தைகளை சகித்து கொள்ள முடியாமல் மனம் நொந்து வீட்டைவிட்டு வெளியேறினார். 

என் சொந்த அக்கா அவனது கணவனால் வெறும் கைகளால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டாள். எங்க பக்கத்து வீட்டுக்கார பெண் ஒருவர் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பின், உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். ‘எதுபோன்ற உலகில் நாம் வாழ்கிறோம்?’ என்று எண்ணிக் கொள்வேன். மூன்று பெண்கள் அவர்களது உயிரை இழந்ததை கண்கூடாக பார்த்த நான் நான்காவது ஆளாக இருக்க விரும்பவில்லை...” என்று யுவர்ஸ்டோரிக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். 

இனியும் இவ்வாழ்க்கை கொடூரமானதாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், விதியை மாற்றி அமைப்பதற்காகவும், 1999ம் ஆண்டு, அவருக்கு 25 வயதாகையில், ஹால்டெர் அவரது கணவனை விட்டுவிட்டு, தனது மூன்று குழந்தைகளுடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க டெல்லிக்கு தப்பிச் சென்றார்.

“என் பிள்ளைகளை வளர்ப்பதற்கான உலகம் அதுவல்ல. என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்று எண்ணினேன்,” 

எனும் அவர் எங்கு செல்வது பற்றி எந்த திட்டமும் இல்லை, ஆனால் அவர் எந்த மனிதனையும் நம்பவில்லை. கடவுள் மட்டுமே அவளது நோக்கங்களைக் கருத்தில் கொள்ளும் வலிமைக்கு உகந்தவர் என்றெண்ணி கடவுள் நம்பிக்கையோடு இருந்தார். மூன்று பிள்ளைகளுடன் அவர் டில்லியில் உள்ள சகோதரன் வீட்டை அடைந்துள்ளார்.

“அவரது குடும்பம் எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. அவர்கள் எங்களை பாரமாகக் கருதினார்கள். நாங்கள் ஒவ்வொரு நாளும் போராட வேண்டியிருந்தது. எங்களைச் சுற்றி இருக்கும் மக்கள் எங்களை மதிப்பிட்டு கொண்டே இருந்தார்கள்,” அவர் நினைவு கூர்கிறார். ஹால்டெரின் நிலையைக் கண்டு வருந்திய அவருடைய சகோதரனின் நண்பர் ஒருவர், பணிப்பெண்ணாக ஒரு வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டே, அங்கே குழந்தைகளுடன் வசிக்கவும் ஏற்பாடு செய்தார். 

“பிரச்சனை என்னவென்றால் அந்த வீட்டிலிருந்த மக்கள் மனிதாபிமானமற்றவர்கள். நாங்கள் அவர்களிடம் பணியாற்றுகிறோம் என்பதற்காக அவர்களுக்கே நாங்கள் சொந்தமானது போன்று நடந்து கொண்டார்கள். ஓராண்டுக்கும் மேலாக அங்கு பணியாற்றினேன்.” 

”அங்கிருந்தவர்களிடம் வேறு ஏதாவது வேலை ஏற்பாடு செய்து தருமாறு உதவிகேட்டேன். அப்படி ஒருவர் தாதுஷிடம் (அப்பாவிடம்) எங்களை அழைத்துச் சென்றார். அன்றிலிருந்தே என் இரண்டாவது வாழ்க்கை தொடங்கியது,” என்கிறார்.

எழுத்தாளர் மற்றும் ஓய்வு பெற்ற மானுடவியலாளரும் புகழ்பெற்ற ஹிந்தி இலக்கியவாதி முனிஷி பிரேம்சந்தின் பேரனான பிரபோத் குமாரே ஹால்டெரின் தாதுஷ். உண்மையில், பிரபோத் ஹால்டெரை அவருடைய மகளாகவே பார்த்தார். 

“தாதுஷ் என்னை உடனடியாக குழந்தைகளுடன் கிளம்பி வரச்சொன்னார். அவரை தாதுஷ் என்றே கூப்பிடச் சொன்னார். போலீஷ் மொழியில் தாதுஷ் என்றால் அப்பா என்று பொருள். அவரது சாந்தமான பேச்சும், குரலும் என்னை அமைதியாக உணர செய்தது,” என்றார்.

பட விளக்கம் (இடது) : பிரபோத் உடன் பேபி ஹால்டெர் 
பட உதவி (இடது): Behance  வலது: Friday Magazine

பட விளக்கம் (இடது) : பிரபோத் உடன் பேபி ஹால்டெர் பட உதவி (இடது): Behance  வலது: Friday Magazine


அவர் ஹால்டெரின் குழந்தைகளை மட்டும் நல்ல பள்ளியில் சேர்க்கவில்லை, ஹால்டெருக்கும் எப்படி வாசிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று கற்று கொடுத்தார். 

“என் பெற்றோர் செய்யாததைகூட அவர் எனக்கு செய்தார். அதன் பிறகு, என் இறக்கைகள் படபடத்து பறக்கத்தொடங்கின,” என்று கடந்த கால நினைவுகளுக்குள் சென்றார்.

ஹால்டெரும் பிரபோத்தும் ஒருவருக்கொருவர் துணையாய் இருந்துள்ளனர். அங்கே ஹால்டெரும் அவரை மீட்டெடுத்துள்ளார். ஹால்டெர் வேலை செய்து கொண்டிருக்கும் சமயங்களில் தகப்பனாய் இருந்து பிரபோத் அவரது கதையை கேட்டறிந்துள்ளார். ஒரு நாள் பிரபோத் குமாரின் புத்தக அலமாரியைத் துடைத்து வைக்கும் ஹால்டெர் அங்கிருக்கும் நூல்களை ஆவலாகப் பார்த்துள்ளார். அதை பிரபோத்தும் பார்த்தார். 

“நான் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்ததை அவர் கவனிந்திருந்துள்ளார். ஒரு நாள் என்னிடம் வந்து ‘நீ படிக்க விரும்புகிறாயா?’ என்று கேட்டார். சங்கடமாகி, கையிலிருந்த புத்தகத்தை வைத்துவிட்டேன். அவர் இது நஸ்லீமா நஸ்ரின் புத்தகம் என்றுக்கூறி வசிக்க வலியுறுத்தினார்,” எனும் ஹால்டெதாரின் புத்தக வாசிப்பு அங்கு தொடங்கியது.

ஒரு நாள் வழக்கமான வேலைகளில் ஹால்டெர் மூழ்கி கிடந்தபோது, பேப்பரும், பேனாவுடன் வந்த பிரபோத் அவளிடம் ‘எழுது’ என்று கூறியுள்ளார். “நான் பயந்துவிட்டேன். என்ன எழுதுறதுனு ஒரு ஐடியாவே இல்லை. நான் என்ன எழுத வேண்டும் என்று கேட்டேன். அவர், ‘உன்னைப் பற்றி எழுது’ என்றார்.” 

பின்னர் ஹால்டெர் தினமும் இரவு நேரங்களில் டைரியில் அவருடைய வாழ்க்கை எழுதத் தொடங்கினார்.

“நான் ஒரு நாள் எழுதத் தவறவிட்டாலும் என் மகள் என்னை திட்டுவாள். ஒரு நாள் தாதுஷ் எவ்வளவு எழுத முடிந்தது என்று கேட்டார். நான் நான்கு பக்கங்களில் மட்டுமே எழுதியிருந்தேன். அதிலும், அதிகப் பிழை இருப்பதாக சொன்னேன். அவர் அதை வாசிக்கச் சொன்னார். நான் அவரிடமே டைரியைக் கொடுத்துவிட்டு, வேலை செய்யப் போனேன். அவர் என்னிடம் வந்து ‘நிறைய எழுது, எழுதுவதை நிறுத்தாதே’ என்றார். 

தாதுஷ் உடன் அவரது நண்பர்களும் ஹால்டெருக்கு போதுமான ஊக்கத்தினையும், தைரியத்தினையும் கொடுத்ததன் பலனாய், ஹால்டெர் அவருடைய கதையை எழுதி முடித்துள்ளார்.

ஹால்டெரின் டைரியை நாவலாக மாற்றினாரர் தாதுஷ். உண்மையில் ஹால்டெர் எழுதிய அவரது வாழ்க்கைக் குறிப்புகள் புனைவு நாவல்களையே தோற்கடிக்கக் கூடியது. அவர் வங்காள மொழியில் எழுதியதை பிரபோத் இந்தியில் ‘ஆலோ அந்தாரி’ ஆக்கினார். ஆலோ அந்தாரி ஆங்கிலத்தில் ‘எ லைப் லெஸ் ஆர்டினரி’ ஆகியது. தமிழிலும் ‘விடியலை நோக்கி...’ என்றும் 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 

பட உதவி : the better india

பட உதவி : the better india


“எழுத்தாளர்களை கடவுள் போல் கருதும் கொல்கத்தாவுக்கு ஒரு முறை சென்றிருந்தேன். அங்கு என் புத்தகம் வெளியிடப்பட்டது. என்னால நம்பவே முடியல. பாத்ரூமுக்கு சென்று கண்ணாடி முன்னாடி நின்று கிள்ளி பார்த்துக் கொண்டேன்” எனும் ஹால்டெர் கதையை உலக மக்கள் பலரும் அவர்களது வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி கொண்டனர். 

அவரது புத்தகம் பரவலாக பரவியது. உலகெங்கிலும் இருந்த பத்திரிகையாளர்கள், பிபிசி போன்ற செய்தி அமைப்புகளாலும், அவரது பயணத்தை ஆவணப்படுத்த முற்பட்டனர்.

ஹால்டெரை பணிப்பெண் வேலையை விட்டுவிடுமாறு தாதுஷ் வலியுறுத்தியுள்ளார். அதனால், ஹால்டெர் பிள்ளைகளுடன் கொல்கத்தாவுக்கு சென்றுள்ளார். அங்கு புத்தகம் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அவர்களது கனவுகளை கட்டியமைத்துள்ளார். 

“பாரிஸில் நல்ல ராயல்டி கிடைத்தது. அங்கு ஆறு லட்சம் பிரதிகள் விற்பனையாகின,” என்றார் அவர்.

இன்று, ஹால்டெர் மேலும் இரு புத்தகங்களின் ஆசிரியராக ஜொலிக்கிறார். மேலும், சோனாக்ஷியில் செயல்படும் பாலியல் தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்படுத்த உதவும் என்.ஜி.ஓவில் பணிப்புரிந்து வருகிறார்.

“உலகம் மாறி வருகின்றது. மனித மனங்களும் மாறுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் பெண்கள் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்று சொல்ல விரும்புகிறேன். ‘எனக்கு நான் முக்கியம்’ என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். முக்கியமாக, நிறைய வாசியுங்கள், படியுங்கள். வாசிப்பு உங்களது எண்ணங்களை மேம்படுத்தும்,” என்று கூறி முடித்துக் கொண்டார். 

தகவல்உதவி: யுவர்ஸ்டோரி மற்றும் தி பெட்டர் இந்தியா 

Add to
Shares
547
Comments
Share This
Add to
Shares
547
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக