பதிப்புகளில்

'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தன்: தமிழ் சினிமா தகவல் களஞ்சியமும் மூவரின் முக்கிய பதிவுகளும்

22nd Mar 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

1958... நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்துக் கொண்டிருந்த நேரம். அவரது அலுவலக மேலாளர் ஆர்.எம்.வீரப்பன் மேஜையில் அந்தப் படத்தின் ஸ்டில்கள் இருப்பதைப் பார்க்கிறார் ஆனந்தன். அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது வழக்கம். "ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா" என்று யதார்த்தமாகக் கேட்கிறார் ஆனந்தன். "பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்" என்ற பதில் வருகிறது. அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆர். அவரை பாராட்டினார். அந்தச் சம்பவம்தான் தமிழ் சினிமாவில் பி.ஆர்.ஓ. என்ற தொழில் பிரிவு உதயமாகக் காரணம்.

image


தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளரும், 'தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம்' என்று போற்றப்படுபவருமான 'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தனின் மறைவு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பு.

'நாடோடி மன்னன்' தொடங்கி 1,500 படங்களுக்கு மேல் பி.ஆர்.ஓ. எனச் சுருக்காமாக அழைக்கப்படும் மக்கள் தொடர்பு பொறுப்பாளராக (பிஆர்ஓ) பணியாற்றிவர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக கூட்டமைப்பின் பத்திரிகையில் பணியாற்றியபோது, திரைப்பட ஸ்டுடியோக்களை வலம் வந்து, குறுகிய காலத்தில் நிறைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை திரட்டினார். தனது அர்ப்பணிப்பு மிக்க முயற்சியால் 6,000 படங்கள் பற்றிய அரிய தகவல்களை திரட்டியுள்ளார்.

அரிய புகைப்படங்களைத் திரட்டி இவர் நடத்திய ஒரு பிரம்மாண்ட கண்காட்சி, திரையுலகில் நற்பெயரையும், பெருமையும் பெற்றுத் தந்தது. கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2002-ம் ஆண்டு அதிமுக தலைமையிலான அரசு, இவர் சேகரித்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற சேகரிப்புகளை அரசு வாங்கி பாதுகாத்திட ரூ.10 லட்சம் வழங்கியது. மேலும், அவர் எழுதிய 'சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு' எனும் நூலை வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்கியது.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், முந்தைய ஆண்டில் வெளியான படங்களின் விவரங்களை ஒரு புத்தக வடிவில் வெளியிட்டு சினிமா செய்தியாளர்களிடம் அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தமிழ்த் திரைப்படத் துறை தொடர்பான வரலாற்றை அறிந்துகொள்ள முற்படுபவர்களுக்கு இவர் பதிவு செய்த ஆவணங்கள், தகவல்கள்தான் ஆதாரமாக விளங்கும் என்ற அளவுக்கு இவரது அர்ப்பணிப்பு மிக்க பணி வியக்கத்தக்கது.

'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தன் மறைவையொட்டி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட 3 முக்கியப் பதிவுகள் இங்கே...

'ஃபிலிம் நியூஸ்' தன் வாழ்க்கையின் தடங்களை அழிக்க முடியாத அளவுக்கு பதிவு செய்துவிட்டு மறைந்துள்ளதைக் குறிப்பிடும் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பதிந்த அனுபவப் பகிர்வு:

தமிழ் திரையுலகின் முதல் பிஆர்ஓ என்ற பெருமையோடு, தகவல் பெட்டமாக திகழ்ந்தவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் வீட்டில் ஒரு சந்திப்பு. எம்ஜிஆரில் ஆரம்பித்து இந்தி நடிகர்கள் ராஜேந்திர குமார் வரை பல விஷயங்களை துருவிதுருவி கேட்டபோது அவ்வளவு உற்சாகமாக பதிலளித்தார்.

போட்டோ ஆல்பங்களை காட்டி பல சம்பவங்களின் பின்னணியை அவர் விவரிக்க, அந்த விஷயம் ஞாபகம் இருக்கிறதா இந்த விஷயம் ஞாபகம் இருக்கிறதா என்று நானும் தோண்ட மூன்று மணி நேரம் கடந்து விட்டது.

அவரின் கடின உழைப்பில் உருவான தலையணை அளவுடைய, ''சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு'' என்ற புத்தகத்தை அன்போடு அளித்தார்.

திரையுலகின் பழைய விஷயங்களை போற்றி பாதுகாக்கிறவர்களை அவர் எப்படி நேசித்தார் என்பது அவர் முகத்தில் அப்படியே தெரிந்தது.

வெளியே வந்தபோது உடன் வந்திருந்த செய்தியாளர் சாந்தி சொன்னார்... ''சார் நீங்கள் இருவரும் பேசிய பல விஷயங்களைகேட்கும் போது பிரமிப்பாக இருக்கு. 85 வயதில் அவர் இவ்வளவு சந்தோஷமாக பேசுவார் என்றே எதிர்பார்க்கவேயில்லை.''

சாந்தியிடம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் காக்கா ராதா கிருஷ்ணன் உயிர் எதில் இருக்கும் என்று கேட்டேன். அவர் கேரம் போர்டு என்றார். நான் இன்று ஆனந்தன் சாருக்கு கேரம் போர்டு ஆனேன். அதனால்தான் அவருக்கு உற்சாகம் என்றேன்.

*

தமிழ் சினிமாவின் ஆவணத் தொகுப்பாக இருந்த 'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தன் மறைந்துவிட்டதையும், அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கு யாருமில்லாததையும் கவலை கலந்த அக்கறையுடன் பகிர்ந்த தமிழ் ஸ்டூடியோ அருண் பதிந்த பகிர்வு:

ஒவ்வொரு மாசமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று மொழிவாரியாக எத்தனை படம் வெளியாகின்றது? அப்படங்களின் இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யார்? என இன்ன பிற விவரங்களையும் குறித்து வைத்துக்கொண்டவர். ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் வந்திருக்கின்றன? எந்த நடிகருடைய படம் அதிகமான எண்ணிக்கையில் வந்திருக்கின்றன? எந்த இயக்குனரின் படங்கள் அதிகம்? குறிப்பிட்ட தயாரிப்பாளரின் எத்தனை படங்கள் ஒரு வருடத்தில் வெளியாகியிருக்கின்றன? என்பதையெல்லாம் ஆவணங்களாக சேர்த்து வைத்தவர்.

பத்திரிகைகளுக்கு அந்தப் புகைப்படங்களை அனுப்பிவைப்பார். ஃப்லிம் சேம்பரில் உறுப்பினராக இருந்தார். சினிமா புத்தகங்கள், பாட்டு புத்தகங்கள், புகைப்படங்கள், என எதைச் சேகரித்தாலும், அதை உரியவரிடமிருந்து இனாமாகப் பெறாமல், முறைப்படி அதற்குரிய காசுகொடுத்துதான் மொத்தத் தொகுப்பையும் சேர்த்தார்.

இவரின் ஆவணத்தொகுப்பு வேலைகளுக்கான சம்பளமாக அங்கிருந்து வருடத்திற்கு 120 ரூபாய்தான் அனுப்பியிருப்பார்கள். எனினும், பணம் ஒரு பொருட்டல்ல, என்று தன் விருப்பத்திற்காக, இந்தச் சினிமாவின் மீது கொண்ட தீராக்காதலுக்காக வாழ்வின் கடைசி நொடி வரை இதே வேலையை மிகுந்த ஈடுபாட்டோடு செய்தவர்.

இவரது மொத்த சேமிப்புகளையும் அரசாங்கம் விலைகொடுத்து வாங்கியிருந்தாலும், "அது இன்று என்ன நிலையிலிருக்கிறது?" என்று ஒரு தகவலும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஆனந்தனிடமிருந்து பெற்றுச்சென்ற அந்த பொக்கிஷங்கள் இந்நேரம் கவனிப்பாரற்று சிதைந்துபோயிருக்கும். அரசாங்கம் மாறி மாறி வந்தும், அவரது ஆவணங்கள் முறைப்படி சேகரித்து வைத்து, நிரந்தர கண்காட்சி அமைக்க முடியாமல் போனது.

ஆனால், கடைசி வரையிலுமே ஆனந்தனைச் சந்திக்கும்பொழுதும், அவர் கலந்துகொள்கிற ஒவ்வொரு கூட்டங்களிலுமே, அரசிடம் தான் கொடுத்த ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டு, நிரந்தரக் கண்காட்சி அமைக்க வேண்டும் என தன் இறுதி விருப்பத்தினைச் சொல்லிக்கொண்டேயிருப்பார். அவர் மறைவிற்குப் பின்பாவது, அந்த ஆவணங்கள் உயிர்ப்போடு இருக்க எவரேனும் முயன்று அதைச் சாத்தியப்படுத்தினால், அதுவே ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நாம் செய்கிற மரியாதை.

*

இன்றைக்கு வேண்டுமானால் ஆவணப்படுத்த டேட்டா பேஸ், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவை இருக்கலாம். ஆனால், அன்றைக்கு மழை காலத்திலும் அதிக வெயில்காலத்தில் புகைப்படங்களை பாதுகாப்பது சாதாரண விஷயம் இல்லை. அது மட்டுமல்ல... கரையான்களிடம் இருந்து தான் சேகரித்து வைத்து இருந்த பழைய சினிமா புத்தகங்கள் மற்றும் தகவல்களை கட்டி காப்பது பெரிய விஷயம். அப்படி தமிழ் சினிமாவின் வரலாற்றை கட்டிக்காத்தவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் என்று புகழாரம் சூட்டும் திரைப்பட விமர்சகர் ஜாக்கி சேகர் வெளியிட்டுள்ள இந்த 3 நிமிட வீடியோ பதிவு, ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் எனும் தமிழ் சினிமா தகவல் களஞ்சியத்தின் மகத்துவத்தை எழுத்துச் சொல்கிறது...


இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags