பதிப்புகளில்

பண மதிப்பு நீக்க நடவடிக்கை: எலியை ஒழிக்க குடிசையை கொளுத்திய கதையா?

YS TEAM TAMIL
27th Dec 2016
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். முடிவு வெளியாவதற்கு முந்தைய இரவு நமது ஒட்டுமொத்த கவனத்தையும் திசைதிருப்பி நமது ஃபேஸ்புக் பக்கங்களில் நிரம்பியிருந்தார் பிரதமர் மோடி. இது நடந்து கிட்டத்தட்ட 45 நாட்கள் முடிந்துவிட்டது. நவீன இந்திய வரலாற்றில் பண மதிப்பு நீக்கம் மிகவும் துணிச்சலான பொருளாதாரம் சார்ந்த ஆய்வுகளில் ஒன்றாகும். ஒரு பொருளாதார வல்லுநராக, இந்த நடவடிக்கை இந்தியாவின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும் என்கிற என்னுடைய கருத்தை நான் முன்வைக்கப் போவதில்லை.

image


பண மதிப்பு நீக்கத்தின் பொருளாதார விளைவுகள் குறித்து வெளியிடப்படும் அனைத்து ஆய்வுளும் நம்முடைய தனிப்பட்ட அனுபவம் அல்லது பாகுபாடுகளின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படுகிறது. பார்வையில்லாத ஒருவர் யானை எப்படி இருக்கும் என்று விவரிப்பது போன்ற ஆய்வுகளுக்குள் நுழையாமல் நமது புலமையை சற்று ஒதுக்கி வைப்போம். அரசு மற்றும் முக்கிய பொருளாதார வல்லுநர்களின் கூற்றான “எதிர்கால நலனுக்கான குறுகிய கால கஷ்டங்கள்” என்பது வெறுமனே நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளாக அல்லாமல் உண்மையில் எந்த அளவிற்கு உள்ளது என்பது தொடர்பான சில கேள்விளை நாம் முன்வைப்போம்.

எண்ணற்ற ஊடகங்களும் பத்திரிக்கைகளும் பண மதிப்பு நீக்கத்தின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறது. அருகிலிருக்கும் நகர்ப்புறங்களை ரொக்க பரிவத்தனையிலிருந்து டிஜிட்டலாக மாற்றுவதால், இந்தியாவில் சூழ்ந்திருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வாகும் என தவறாக சித்தரிக்கப்படுகிறது. இது சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் பெரிய பிரச்சனைகளை விடுத்து சின்னச் சின்ன பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் திறனுக்கு சமமானதாகும். ஒரு சிறிய கொள்கை அறிவிப்பு ஏதோ ஒட்டுமொத்த அரசாங்க சீர்திருத்தத்திற்கான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. மாற்றத்தை நோக்கி எடுத்துவைக்கப்பட்ட அடியைக் குறித்து பதிலளிப்பது தாமதித்திருந்தாலும், ஏற்கெனவே இது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டாலும் நம் முன் தோன்றும் புதிய கேள்விகளை அலசுவதற்கு இது உகந்த நேரம் என்று நான் நினைக்கிறேன்.

அனைத்து விசாரணையைப்போலவே இந்த நடவடிக்கைக்கான நோக்கம் குறித்த கேள்வியுடன் தொடங்குவோம். பண மதிப்பு நீக்கத்திற்கான நோக்கம் என்ன? கறுப்பு பணத்திற்கும் வரி செலுத்தப்படாத வருமானத்திற்கும் எதிராக தொடுக்கப்பட்ட ’சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ என்று அரசு தரப்பில் முதலில் கூறப்பட்டது. இலக்குகளில் துளிகூட துல்லியமாக இல்லை என்பதைத் தவிர மற்ற பல விதங்களில் இந்த நடவடிக்கை சர்ஜிகல் ஸ்ட்ரைக் எனலாம். இது பணத்தை பதுக்கியிருப்பவர்களுக்கு ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தவும் சின்னச் சின்ன ஊழலில் ஈடுபடுபவர்களை தடுக்கவும் உருவாக்கப்பட்ட எதிர்பாராத தண்டனை. ஆனால் பொது கொள்கை என்பது போர் போன்றதல்ல. சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது ஒரு தந்திரமாக செய்யப்படும் சூழ்ச்சி. இது உங்கள் எதிரிகளின் மனதில் ஒரு தற்காலிகமான பயத்தை ஏற்படுத்துமே ஒழிய இதனால் நீங்கள் போரில் வெற்றியடைய முடியாது.

பண மதிப்பு நீக்கம், பணம் பதுக்கியவர்களை பீதியடைய வைத்து பணத்தை தங்கமாக மாற்ற ஓடவைத்தது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் வலுவான ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றை பண மதிப்பு நீக்கத்துடன் சேர்த்து செயல்படுத்தாமல் போனதால் இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் சற்று முதிர்ச்சியற்றதாகவே பார்க்கப்படுகிறது. அதனால் கடந்த சில மாதங்களில் கறுப்பு பண நடமாட்டமும் கள்ளப்பணமும் தடைபட்டு, தேர்தல் நேரத்தில் உலவப்படும் பண நடமாட்டமும் தடைபட்டிருந்தாலும், இந்த நடவடிக்கையால் மட்டுமே இந்தியாவின் கறுப்பு பண பொருளாதாரம் முற்றிலும் முடங்கிவிடாது. இந்த அதிர்ச்சி நடவடிக்கைகளுக்கு பதிலாக வரி தொடர்பான சட்டத்தின் ஓட்டைகளை சரி செய்வது, வரி தகவல் சேகரிப்பில் முன்னேற்றம் ஏற்படுத்துவது மற்றும் டிஜிட்டல் பண பரிமாற்ற முறையில் சலுகைகள் அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். மாறாக பொதுமக்களின் பொருளாதார நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த அரசு அந்த பாதையை நோக்கி மக்களை மெதுவாக நகர்த்தாமல் மிகப்பெரிய அழுத்தத்தை அளித்து நெருக்கடியை கொடுத்துள்ளது.

இறுதிகட்ட செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைவரிடமும் ரகசியம் பாதுகாக்கப்பட்டதுதான் இந்த நடவடிக்கையின் ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட மற்றொரு குழப்பமான அம்சமாகும். புதுப்புது விதிகள் அறிவிக்கபடுவதையும் புதிய ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்படுவதையும் பார்க்கும்போது இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும் அரசுத் துறை மற்றும் சில மூத்த அமைச்சர்களுக்குக் கூட எந்த தகவல்களும் தெரியவில்லை என்பது புலப்படுகிறது. ஆனால் எந்த அதிகாரிகளிடம் நம்பகத்தன்மை இல்லாமல் தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாமல் ரகசியம் பாதுகாக்கப்பட்டதோ அதே அதிகாரிகள் மூலமாக வரி செலுத்தாதவர்களை அணுகுவது முரண்பாடாக உள்ளது.

பண மதிப்பு நீக்கம் எனும் நடவடிக்கை சில வெற்றிகளை சந்தித்துள்ளது. தீவிரவாத ஊடுருவலுக்கு பயன்படுத்தப்படும் கள்ளப்பண புழக்கத்தை வெகுவாக பாதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க பயன்படுத்தப்படும் இத்தகைய கள்ளப்பண பறிமாற்றமும் பாதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நேர்மறையான பக்க விளைவுகளுக்காக குறுகிய காலத்திற்கு ஏற்படும் நேரடி மற்றும் எதிர்மறையான பாதிப்புகளை நியாயப் படுத்தமுடியாது. கள்ளப்பணத்தை ஒழிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலமும் தேர்தல் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலமாகவும் (அரசாங்கம் காலம் தாழ்த்தி இதில் ஆர்வம் காட்டி வருகிறது) மேற்கண்ட இரண்டு நன்மைகளையும் அடையமுடியும்.

image


மேலும் 12 ட்ரில்லியன் ரூபாய்க்கு மேல் இந்திய வங்கிகளில் செலுத்தப்பட்டாலும் ஊழலும் வரி ஏய்ப்பும் குறையுமா என்பது கேள்விக்குறியது. வங்கி முறை மூலமாக பரிவர்தனைகளை அரசாங்கம் கண்காணித்தாலும் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் அளவு உயர்ந்ததும் நிச்சயம் இந்த கண்காணிப்பு முறை வலுவிழந்துவிடும். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்கு ஏடிஎம் மையங்களே நம் நாட்டில் இயங்குகிறது. இந்நிலையில் 90 சதவீதம் ரொக்கத்தால் தினசரி பரிவர்த்தனைகள் செய்யும் ஒருவர் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு அதிகரித்தாலும் பணத்தை எடுக்கமாட்டார்கள் என்று நம்புவது முட்டாள்தனமாக உள்ளது. க்ரீஸ், சிப்ரஸ், ஐஸ்லேண்ட் போன்ற நாடுகளில் உள்ளதுபோல பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு தொடர்ந்து அதிகரிக்கப்படும் முறையை அரசாங்கம் கொண்டுவந்தால் இங்கும் அதே நிலைதான் நீடிக்கும்.

முறைசாரா துறைகளைகளில் (கறுப்புப் பொருளாதாரம் மட்டுமல்ல) நடக்கும் சட்டவிரோதமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படுவதைத் தடுக்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே நிலையான நடவடிக்கையாகும். இதில் கடந்த இரண்டு வருடங்களில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்திற்குப் பின்னர் ரொக்கமல்லா பரிவர்த்தனைகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இருப்பினும் மிகப்பெரிய மாற்றத்திற்கு தேவையான அளவைவிட குறைவாகவே உள்ளது எனலாம். ஒரு விதத்தில் உயர் பணமதிப்பு நீக்க முறை எனும் சொல் வழக்கே தவறானதாகும். அதிக மதிப்புள்ள பணத்தை நீக்குவதற்கு பதிலாக புழக்கத்தில் விடப்படுகிறது. அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் நீக்கப்படும் முறை படிப்படியாக பல ஐரோப்பிய அரசாங்கத்தால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. கடந்த பத்தாண்டுகளின் பிற்பகுதியில் ஐரோப்பிய மத்திய வங்கி 500 யூரோ நோட்டு மதிப்பை ரத்து செய்தது. ஏனெனில் உயர் மதிப்புள்ள பணம் மனித கடத்தல்களிலும் போதைப்பொருள் கடத்தல்களிலும் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததே தவிர வேறு முக்கிய நடைமுறைக் காரணங்கள் எதுவும் இல்லை. 

ஆனால் நாம் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களான 500 மற்றும் 1000 ரூபாய்க்கு பதிலாக பாதுகாப்பு அம்சங்களுடனான புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றியுள்ளோம். பெரிய பெட்டிகளில் அடைக்கப்படும் பணக்கட்டுகளை தற்போது மிகச்சிறிய அளவிலான பெட்டிகளில் அடைத்துவிடலாம் என்பது நாட்டின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட வரிச் சோதனைகளிலிருந்து தெரியவருகிறது. மொத்தத்தில் முறைசாரா பொருளாதாரத்தில் உலவும் பணத்தின் அளவை அரசாங்கம் கணக்கிட்டு மதிப்பிடுவதற்கான ஆய்வாகவே பண மதிப்பு நீக்கம் காணப்படுகிறது.

பண மதிப்பு நீக்கம் என்பது நிச்சயமாக ரொக்கமற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை நோக்கி செல்வதற்கான ஒரு நல்ல முயற்சிதான். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. மொத்த மக்கள்தொகையில் 47 சதவீத மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. 90 சதவீத பரிவர்த்தனைகள் ரொக்கத்தால் நடைபெறுகிறது. வெறும் 30 சதவீத மக்கள்தான் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட பொருளாதாரத்தில் பண மதிப்பு நீக்கத்தின் பாதிப்பை சிந்தித்துப்பாருங்கள். இந்நிலையில் நம்பகமான மாற்று முறை இல்லாததால் பெரும்பாலான வணிக நடவடிக்கைகளை முறைப்படுத்துவது சாத்தியமற்றதாகும். பணம் எடுப்பதை முடக்கும் நடவடிக்கையும் தொடர்ந்து அதிகரித்து புதிய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடுவதற்கு அதிக நேரமும் எடுத்துக்கொண்டால், பொருளாதாரத்தின் குறுகிய கால பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் விளம்பரப்படுத்தப்படும் நீண்ட கால வெற்றிகள் தேர்தல் நேரத்தில் சந்தைப்படுத்துவதைத் தாண்டி அதிக தூரத்தில் உள்ளது.

இறுதியாக பண மதிப்பு நீக்கத்திற்கு முன்பான அதிகப்படியான பெருமையும் தயாரற்ற நிலையுமே அதன் வலி நிறைந்த அனுபவத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. முறையான திட்டமிடுதலும் ஆய்வுகளும் இல்லாமலேயே நிதி அமைச்சகமும் இந்திய ரிசர்வ் வங்கியும் விதிமுறைகளை அறிவித்துள்ளது. கடந்த ஏழு வாரங்களில் பொருளாதார நடவடிக்கைகள் பெரிதாக பாதிக்கப்பட்டதற்கான சான்றுகள் இருந்தும் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பண மதிப்பு நீக்கத்தின் வாயிலான பொருளாதார பாதிப்பு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பதாகவே தெரிவிக்கிறது. வரி செலுத்தாதவர்களுக்கு அளிக்கப்படும் பொது மன்னிப்பு குறைந்து கொண்டே வரும் என்பதை தொடர்ந்து வலியுறுத்திய பிறகு வருமானத்தை வெளிப்படுத்தும் புதிய திட்டம் ஒன்றை நவம்பர் 28-ம் தேதி அறிவித்தது. ஆனால் பண மதிப்பு நீக்கம் என்பது வரி செலுத்தாதவர்களுக்கு அளிக்கும் இறுதி தண்டனையாக அல்லவா இருந்திருக்கவேண்டும்?

நீண்ட கால நன்மைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், விரைவான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக செயல்படுத்த விரும்பும் ஒரு சிறந்த திட்டம், முதிர்ச்சியற்ற நிலையில் அறிவிக்கப்பட்டால் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாக இந்த பண மதிப்பு நீக்க முறை என்றென்றும் மனதில் பதிந்துவிடும். கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் தேர்தல் நேரத்தில் பரிமாறப்படும் பணத்தை ஒழிப்பதற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்கும் தனிமனிதனுக்கும் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துவது, ஒரு குடிசையிலுள்ள ஒரு சிறிய எலியை அழிப்பதற்காக அந்த குடிசையையே கொளுத்துவதற்கு சமமான நடவடிக்கையாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : சைலேஷ் ஜா

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எந்த விததிலும் யுவர் ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.)

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக