பதிப்புகளில்

அந்தமான் செல்லுலார் சிறை– பாரத விடுதலைப் போரின் தியாகச் சின்னம்!

15th Aug 2017
Add to
Shares
49
Comments
Share This
Add to
Shares
49
Comments
Share

ஓ, எனதருமைத் தாயகமே, ஏனோ நீயும் அழுகிறாய்?

இதோ முடியப் போகிறது அந்நியரின் ஆட்சியுமே!

தமது மூட்டை முடிச்சுகளை அவர்கள் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

தேசிய அவமானமும் துரதிர்ஷ்டமும் நீடிக்காது வெகுநாள்வரை

இதோ, விடுதலைத் தென்றலும் இனிதே வீசத் தொடங்கியுள்ளது.

பெரியவர், சிறியவர், அனைவருமே ஏங்குகின்றனர் விடுதலைக்கு.

பாரதத்தின் அடிமைத்தளை அகன்ற பின்னர்

இந்த ‘ஹரி’யும் அனுபவிப்பான் தனது விடுதலையை!

தனது விடுதலையை அனுபவிக்க விரும்பிய இந்த ஹரி யார்?

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்புர் மாவட்டத்தின் குவாதின் பகுதியைச் சேர்ந்த பாபு ராம் ஹரி, ‘சுவராஜ்யா’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகையில் அவர் தீட்டிய மூன்று தலையங்கங்கள் தேசவிரோதப் பாங்கில் இருந்ததாகக் கருதிய அன்றைய ஆதிக்க ஆங்கிலேய அரசு அவரை நாடுகடத்தி, அந்தமான் தீவின் செல்லுலார் சிறையில் 21 ஆண்டு தீவாந்தரத் தண்டனை வழங்கியது.

பட உதவி: சப்னா செளத்ரி

பட உதவி: சப்னா செளத்ரி


பாரதத்தின் சுதந்திரப் போராட்ட வேள்வியில் இவ்வாறு எண்ணற்ற உயிர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பலியிடப்பட்டன. பெயரைக் கேட்டமாத்திரமே அச்சம் அளிக்கக்கூடிய அந்தமான் செல்லுலார் சிறைக்கூடம் அத்தகையப் பலிபீடங்களில் ஒன்றாகும். தனித்தனி அறைகளில் (Cell = தனியறை) அடைத்து வதைப்பதற்கெனவே குறிப்பிட்டு உருவாக்கப்பட்டதால் அந்தக் குறியீட்டுப் பெயரில் ‘செல்லுலார்’ சிறைக்கூடம் என்றே வழங்கலாயிற்று. 

நமது சுதந்திரப் போராட்டத் தியாக வரலாற்றில் செல்லுலார் சிறைக்கூடத்திற்கு மறக்கவோ மறுக்கவோ இயலாத இடமுண்டு.

இந்திய பாஸ்டில்

அதனால்தான் இதை “இந்திய பாஸ்டில்” என்று சிறப்பித்தார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போரின் போக்கில் அந்தமான் தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது. இதுகுறித்து 1943 நவ. 8ந் தேதியன்று நேதாஜி வெளியிட்ட அறிக்கையொன்றில்,

“எவ்வாறு பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீஸில் உள்ள பாஸ்டில் சிறைக்கூடம் முதன்முதலில் விடுவிக்கப்பட்டு அதில் சிறைபட்டிருந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பெற்றனரோ, அதேபோன்று எந்த அந்தமானில் இந்தியப் போராட்டக்காரர்கள் வதைபட்டனரோ அதுவே இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முதலில் விடுவிக்கப்பட்டுள்ளது,” என்று எழுதினார்.

 (எனினும் போரின் முடிவில் அந்தமான் மீண்டும் ஆங்கிலேயர் வசப்பட்டது.) தண்டனைக் குடியிருப்புகள்- அன்றைய பிரிட்டிஷ் அரசு, கொடும் குற்றவாளிகளுக்கென பிரத்யேக தண்டனைக் குடியிருப்புகளை (Penal Settlements) உருவாக்கியது. முதன்முதலில் 1787ல் பென்கொயிலேன் (Benkoelen), பின்னர் மலாக்கா, சிங்கப்பூர், அரகாண், டெணசேரியம் என்று அனைத்துமே பிரிட்டிஷ் இந்தியாவிற்கு வெளியே அமைந்திருந்தன.

இந்திய நிலப்பிரதேசத்தில், அந்தமான் தீவில்தாம் முதன்முதலாக இத்தகைய தண்டனைக் குடியிருப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது; அதுவே அத்தகைய கடைசிக் குடியிருப்பும்கூட. எனினும் 1789லேயே அத்தகையத் தண்டனைக் குடியிருப்பு வடக்கு அந்தமான் தீவின் கார்ன்வாலிஸ் துறைமுகப் பகுதியில் கட்டமைக்கப்பட்டது. எனினும் இது ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் பல்வேறு காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது.

‘சிப்பாய்க் கலகம்’ என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பெற்ற 1857ல் நிகழ்ந்த இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போர், தண்டனைக் குடியிருப்பு குறித்து ஆட்சியாளரிடையே மீண்டும் யோசிக்க வைத்தது. அவ்வாறு மீண்டும் தோன்றியதுதான் அந்தமான் தண்டனைக் குடியிருப்பு. அந்தப் போரில் ஈடுபட்ட வீரர்களில் 200 பேர் கொடுந்தண்டனைக் கைதிக் குழுவாக 1858 மார்ச் 10ந்தேதியன்று தெற்கு அந்தமானின் பிளேயர் துறைமுகத்தில் அமைந்துள்ள சாத்தம் தீவில் முதன்முதலாக வந்து இறங்கினர். 

இரண்டாவது குழுவில் 216 பேர் இருந்தனர். அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது 1858 ஜூன் 16ந்தேதி நிலவரப்படி, மொத்தம் 773 வீரர்கள் கைதிகளாக அந்தமானை வந்தடைந்தனர். அதில் மருத்துவமனையில் இறந்தோர்- 64, தப்பிச்சென்று பிடிபடாதவர்-140, பிடிபட்டு தூக்கிலிடப்பட்டோர்-87, தற்கொலை செய்துகொண்டவர்-1, ஆக மீதமுள்ளவர்-481. 1858 செப்டம்பர் 28ந் தேதிக்குள் மொத்தம் 1,330 போராட்ட வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

1858-1860 இரண்டாண்டுக்குள் பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2,000-4,000 பேர் அந்தமானுக்கு தீவாந்தரத் தண்டனையாக அனுப்பப்பட்டனர். தண்டனைக் குடியிருப்பின் மிகக் கொடுமையான வாழ்க்கை, பணிச் சூழலைத் தாங்கயியலாது பெரும்பான்மையானோர் அங்கேயே மரித்துப்போயினர். கடல் / காடு வழியே தப்பிக்க முயன்றோரும் அந்த வீண்முயற்சியில் உயிரிழந்தனர். 

பிந்தைய காலக்கட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகளையும் தீவாந்தரத் தண்டனைக்காக அந்தமானுக்கு அனுப்பினர். இவ்வாறு தம் இன்னுயிரை இழந்த இந்த சுதந்திரப் போராளிகளின் நினைவாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், 1957 ஆகஸ்ட் 15ந்தேதியன்று போர்ட் பிளேயர் நகரில் தியாகிகள் தூண் நிறுவப்பட்டது.

image


ஏன் செல்லுலார் சிறை?

தாயகத்தின் சிறைக்கூடங்களிலேயே இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை அடைத்துவைப்பது அத்துணை உசிதமல்ல என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கருதினர். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு – அவ்வாறு ஒரே சிறையில் அடைத்தால் அவர்களுக்குள் தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவாக இருக்கும் என்பதுடன் இதர கைதிகள் மத்தியில் சுதந்திரப் புரட்சிக் கருத்துகளைப் பரப்பவும் இயலும் என்று ஆங்கிலேயர் அஞ்சினர். எனவே, தொலைதூரப் பகுதியில், தீவாந்தரத் தண்டனையுடன் தனித்தனி அறையில் அடைத்திட எண்ணி அவர்களைக்கொண்டே உருவாக்கியதே செல்லுலார் சிறைக்கூடம். 

1906ல் திறக்கப்பட்ட இந்த சிறைக்கூடத்தில் இறுதியில் மொத்தம் 693 தனித்தனி அறைகள் (Cells) இருந்தன. 1889ல் சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றபோது பூனாவிலிருந்து 80 புரட்சியாளர்கள் கைதியாக அந்தமான் வந்தடைந்தனர். 1909-1921 காலத்தில் போராட்ட அலை மீண்டும் எழும்பியபோது 132 பேர் தீவாந்தரத் தண்டனைக்காக இங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1932-38க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மேலும் 379 போராட்டத் தியாகிகள் கைதிகளாக இங்கு வந்து சேர்ந்தனர்.

இவர்கள் பல்வேறு ‘சதித் திட்டங்களில்’ ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்தமான் தண்டனைக் குடியிருப்பிற்கு கப்பலேற்றப்பட்டனர். அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு (மணிக்டோலா சதித்திட்டம் என்றும் குறிப்பிடுவர்), நாசிக் சதித்திட்டம், லாகூர் சதித்திட்டம் (கதர் கட்சிப் போராளிகள்), பனாரஸ் சதித்திட்டம், சிட்டகாங் ஆயுதக்கிடங்கு வழக்கு, டல்ஹவுஸி சதுக்க வெடிகுண்டு வழக்கு, டாக்கா சதித்திட்டம், ராஜேந்திரபுர் ரயில் கொள்ளை வழக்கு, கயா சதித்திட்டம், பர்மா சதித்திட்டம் என்று பல்வேறு வழக்குகள்.

வாஹாபி புரட்சியாளர்கள், மலபார் கரையின் மோப்ளா கிளர்ச்சியாளர்கள், ஆந்திராவின் தம்பா போராட்டக்காரர்கள், மணிப்பூர் சுதந்திரப் போராளிகள், பர்மாவின் தார்வாடி பகுதியில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் என்று மேலும் பலர் அந்தமானுக்கு தண்டனைக் கைதிகளாக அனுப்பப்பட்டனர்.

சிறை வாழ்க்கை

செல்லுலார் சிறையில் அன்றாட வாழ்க்கை மிகவும் கொடூரமானதாக இருந்தது. பணிச் சூழல் குறித்து கேட்கவே வேண்டாம், அதிலும் குறிப்பாக முதன்முதலில் வந்தவர்கள் பட்டபாடு நமது கண்களில் உதிரத்தை வரவழைக்கும். குறைந்த அளவில் உணவும் உடையும், ஆனால் வேலையோ மிகக் கடினமானது. அத்தகையக் கடின வேலைகளுக்குப் பழக்கமில்லாதோர் தமது அன்றாட இலக்கைப் பூர்த்தி செய்யாவிட்டாலோ மேலும் கொடுந்தண்டனைகளுக்கு ஆளானர்.

போராளிகளை அவமானப்படுத்துவதன் மூலம் அவர்தம் மனவுறுதியைத் தகர்ப்பதே சிறை அதிகாரிகளின் நோக்கமாகும். எண்ணை பிழிவதற்காக செக்கில் கைதிகளைப் பிணைத்து இயக்குவது, தேங்காய் மட்டை உரித்து கயிறு திரிப்பது, மலையைத் தகர்த்து சாலை அமைப்பது, சதுப்பு நிலங்களை நிரப்புவது, காடு அழித்து சீராக்குதல், செங்கல் சூளை, கட்டிட வேலை போன்ற கடினமானப் பணிகள். அவற்றுள் மிகக் கொடுமையானது அமிலத்தன்மை அதிகம் கொண்ட ‘ராம்பன்’ என்ற புல்வகையிலிருந்து கயிறு திரிப்பதாகும். 

அமிலத் துளி உடலில் பட்டவுடன் இடைவிடாது அரிக்கத் தொடங்கி இறுதியில் ரத்தக்கசிவில் கொண்டுபோய் விட்டுவிடும். உண்ணாவிரதம்- 1937 ஜூலையில் பாரதத்தின் ஏழு பிரதேசங்களில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன்கு, அந்தமான் செலுலர் சிறையில் உள்ள சுதந்திரப் போராட்டக் கைதிகளை தாயகத்திற்கு திருப்பி கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. தமது இந்தக் கோரிக்கை மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் செலுலர் சிறையில் இருந்த சுதந்திரப் போராட்டக் கைதிகள் 1937 ஜுலை 27 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது 37 நாட்களுக்குத் தொடர்ந்தது. அவர்களுடைய இந்தப் போராட்டம் தாயகத்திலும் எதிரொலித்தது; நாடெங்கிலும் ஆதரவுப் போராட்டங்கள் நிகழ்ந்தன. தாயகச் சிறைகளிலுள்ள கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர். வேறு வழியின்றி இறுதியில் ஆதிக்க அரசு பணிந்து போனது. அந்தமானிலிருந்து 1937 செப்டம்பர் 22ந் தேதியன்று புறப்பட்ட கப்பலில் முதல் குழு தாயகத்திற்குப் பயணப்பட்டது.

அந்தமான் செல்லுலார் ஜெயில் உட்பகுதி

அந்தமான் செல்லுலார் ஜெயில் உட்பகுதி


கடைசியாக அடுத்த ஆண்டு (1938) ஜனவரி 18 அன்று மீதமிருந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளும் அந்தமானிலிருந்து தாயகம் நோக்கிப் புறப்பட்டனர். எனினும் கிரிமினல் குற்றவாளிகளை அங்கு அனுப்புவது 1946 வரை தொடர்ந்தது. அதன் பின்னர் தண்டனைக் குடியிருப்பு என்பதே வழக்கொழிந்தது.

தேசிய நினைவுச் சின்னம்-

பெருந் தியாகிகள் பலர் செல்லுலார் சிறையில் சொல்லொண்ணாத் துயர் அனுபவித்துள்ளனர் – சாவர்க்கர் சகோதரர்கள், பாபு ராம் ஹரி (தொடக்கத்தில் உள்ள கவிதையை எழுதியவர்), மோதிலால் வர்மா, பாய் பரமானந்த, பிருத்வி சிங் ஆசாத், குர்முக் சிங் என்று எண்ணற்றவர்கள். அவர்களின் மதிப்பிடவியலாத் தியாகத்தைப் போற்றும் விதமாக செல்லுலார் சிறைக்கூடத்தை தேசிய நினைவுச் சின்னமாக கடந்த 1979 ஆம் ஆண்ட பிப்ரவரி 11 அன்று அன்றைய பாரதப் பிரதமர் திரு, மொரார்ஜி தேசாய் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அங்குள்ள அருங்காட்சியகமும் மாலையில் நடைபெறும் ஒலி-ஒளிக் காட்சியும், நமது தாய்நாடு சுதந்திரமாகத் திகழ்வதற்காக அவர்களின் தியாகத்தையும் பட்ட வேதனையையும் மனமுருக எடுத்துரைக்கின்றன. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்காக செல்லுலார் சிறைக்கூடத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பெயரைக் கேட்டாலே குலைநடுங்கச் செய்த செல்லுலார் சிறை, இப்போது தியாகத்தின் திருஉருவாகத் திகழ்கிறது – சும்மா வந்திடாது சுதந்திரம் என்பதை நினைவூட்டியபடி!

கட்டுரையாசிரியர்- எஸ். பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அரசு அலுவலர். 

Add to
Shares
49
Comments
Share This
Add to
Shares
49
Comments
Share
Report an issue
Authors

Related Tags