பதிப்புகளில்

கார் கேராஜில் தொடங்கி, இன்று மூன்று பொடிக்குகளின் உரிமையாளராக வளர்ச்சி அடைந்துள்ள ஃபேஷன் டிசைனர் ரூபி!

Induja Raghunathan
10th Feb 2018
Add to
Shares
27
Comments
Share This
Add to
Shares
27
Comments
Share
”நம் கனவுகளை மெய்பிக்க நாம் முயற்சிக்கவில்லை என்றால், பிறருடைய கனவு நினைவாக நாம் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருப்போம்...” 

என்ற வாக்கியத்தை தீவிரமாக நம்பும் இந்த பெண் தொழில்முனைவர், சிறுவயது முதல் வண்ணங்கள், டிசைன்கள் மீது, தான் கொண்ட காதலை சரியான வழியில் செலுத்தியதில், இன்று சென்னையில் 3 பொடிக்குகளின் உரிமையாளராக வலம்வருகிறார். 

சேலத்தில் பிறந்து, வளர்ந்த ரூபி லெனின், திருமணத்துக்குப் பின் சென்னையில் குடிபெயர்ந்து தன் தொழில்முனைவுக் கனவை தனக்கு பிடித்தத் துறையான ஃபேஷன் டிசைனிங்கில் கால் பதித்து இன்று வளர்ச்சி அடைந்தும் வருகிறார். ’ஏகாந்தா’ என்ற பெயரிலான பொடிக் கடைகளை நடத்தி வரும் இவர், பெண்கள், குழந்தைகளுக்கான பிரத்யேக டிசைனிங் மற்றும் ஆடைகளை தயார் செய்து தருகிறார். 

image


ரூபி வளர்ந்த சூழலும் வண்ணங்களை ரசித்த காலமும்

சேலத்தில் வளர்ந்த ரூபிக்கு சிறுவயது முதலே ஃபேஷன் மீது மோகம். அம்மா, அப்பா, மூத்த சகோதரி மற்றும் தம்பியுடன் வளர்ந்த அவருக்கு அழகிய வண்ணங்கள் மீது அதீத ஆர்வம் என்கிறார். மூன்றாம் வகுப்பு முதலே ஓவியம் வரைய ஆரம்பித்துள்ளார். படிப்பில் ஆர்வம் குறைவாக இருந்தாலும் தனக்கான திறமை கலையில் உள்ளதாக அப்போதே தெரிந்து கொண்டதாகவும் கூறுகிறார் ரூபி. 

“என் குடும்பத்தினர் ட்ரெஸ் எடுக்கச்செல்லும் போது நான் தான் அவர்களுக்கு செலக்ட் செய்வேன். அது மிகவும் அழகாக இருப்பதாக எல்லாருமே சொல்வார்கள். அதே போல் பரிட்சை பேப்பரில் தெரிந்த பதிலை எழுதிவிட்டு, பேப்பர் ஓரங்களை அழகாக வரைந்து அலங்கரிப்பேன். கலர் அடித்து தேர்வு பேப்பரை அழகுப்படுத்திவிடுவேன்,” என்கிறார். 

படிப்பை விட கலையில் ஆர்வம் இருந்ததை உணர்ந்த ரூபியின் பெற்றோர் அவரை சென்னை NIFT-ல் ஃபேஷன் டிசைனிங் படிக்க சென்னை அனுப்பினர். அதில் பட்டம் பெற்றபின் ரூபியின் தந்தை அவருக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுத்து ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னார். 

“மேற்படிப்பா? அல்லது வேலைக்கு போகிறாயா? எனக் கேட்டார். இரண்டு ஆண்டுகள் அதை முடித்ததும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னார். சிறுவயது முதலே சுயமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்ததால் வேலைக்கு சேர முடிவெடுத்தேன்,” என்றார். 

NIFT-ல் கேம்பஸ் ப்ளேஸ்மெண்டில் பிரபல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கே ஆறு மாதம் டிசைனராக பணிபுரிந்தார் ரூபி. ஆனால் அத்தனை பெரிய நிறுவனத்தில் தன் தனித்துவத்தை வெளிப்படுத்த முடியாது போனதால் அந்த வேலையை விட்டுவிட்டு மீண்டும் தன் சொந்த ஊரான சேலத்துக்கே திரும்பினார். கரூரில் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மனதுக்கு திருப்தியாகவும், பல புதியவற்றை கற்கும் வாய்ப்பும் கிடைத்ததால் அங்கே 2 ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்றார்.

வாழ்க்கையின் அடுத்தக் கட்டமும், தொழில்முனைவின் ஆரம்பமும்

2009-ல் திருமணம் ஆகி மீண்டும் சென்னை வந்தார் ரூபி. கணவரும் தொழில்முனைவர் என்பதால் அவருக்கு துணையாக பணிபுரிந்தார். ஆனால் சில நாட்களில் அது தனக்கான வழி இல்லை என்று புரிந்து தன் கலை ஆர்வத்தை, டிசைனிங் அனுபவத்தை சுயதொழில் மூலம் மட்டுமே வெளிக்கொண்டுவர முடியும் என்று தீர்மானித்தார். 

“நான் என் சொந்த பொடிக் வைக்கவேண்டும் என்று யோசித்தபோது, ஸ்டார்ட்-அப் என்ற சொல் கூட எனக்கு தெரியாது. ஆனால் என் குடும்பத்தில் பலர் பிசினஸ் செய்பவர்களே என்பதால் சுயதொழிலுக்கான உந்துதல் என் ரத்தத்திலேயே இருந்தது,” என்கிறார் ரூபி.
image


என் அப்பாவின் தொழிலில் ஏற்ற இறக்கங்களும், லாப-நஷ்டங்களும் பார்த்திருக்கிறேன். அதை அவரும் என் அம்மாவும் கையாண்ட விதத்தையும் அறிந்துள்ளேன். தொழில் செய்யும் போதும் வரும் சவாலை எதிர்க்கொண்டு வெற்றி அடையவேண்டும் என்று முடிவெடுத்தே பிசினசில் இறங்கினேன் என்றார். 

”குறைவாக சம்பாதித்தாலும் அது என் சுயதொழில் மூலம் இருக்கவேண்டும் என்றே எண்ணினேன்.” 

கார் கேராஜில் உதித்த ’ஏகாந்தா’ 

வண்ணங்கள் மீதும் ட்ரெஸ்கள் மீதும் ரூபி கொண்டிருந்த காதலால் பிறந்ததே ‘ஏகாந்தா’. சிறுவயது முதலே தான் செலக்ட் செய்யும் ட்ரெஸ்களுக்கு பாராட்டுகளை பெற்ற அவருக்கும் இந்த தொழில் முயற்சி மனதோடு ஒட்டிய ஒன்றாக இருந்தது. 

“என் திருமண பிளவுசுகளை நானே டிசைன் செய்து எம்பிராய்டரி செய்து அணிந்திருந்தேன். அப்போது அதை பாராட்டாதவர்களே கிடையாது. அதே சமயம் அதன் விலையைக் கேட்டு மலிவாக செலவழித்ததை என் கணவர் வீட்டாரால் நம்பவே முடியவில்லை.” 

சேலத்தில் இருப்பது போல் சென்னையில் தைத்துப் போடும் ஆடைகள் மலிவாக இல்லை என்றும் இங்கே குறைந்த விலையில் நல்ல டிசைன்களுக்கான தேவை இருப்பதையும் அப்போதே புரிந்துகொண்டார் ரூபி. 

சென்னையில் தையல் கடைகள், பொடிக்குகளில் அதிக விலைக்கே ஆடைகள் தைக்க முடிகின்றது. நல்ல டிசைன் ஆடைகளுக்கான தேவையும், ஓரளவு நியாயமான விலையில் அளித்தால் அதற்கு சந்தை வாய்ப்புகள் இருப்பதை புரிந்து கொண்டு, ‘ஏகாந்தா’ பொடிக் தொடங்கினார். 

“என் மாமியாரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி, வீட்டில் இருந்தபடியே டிசைன் செய்து, எம்பிராய்டரி வேலைக்கு ஒரு நபரை மட்டும் பணி அமர்த்தினேன். டெய்லரிங் பணியை வெளியே கொடுத்தேன். நண்பர்களும், குடும்பத்தினரும் என் வாடிக்கையாளர்கள் ஆனார்கள்.”

ஓர் ஆண்டு இப்படியே போன நிலையில், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்க, தனக்கென ஒரு பொடிக் இடம் தேவை என ரூபி உணர்ந்தார். வங்கியில் 2 லட்ச ரூபாய் லோன் வாங்கி தன் வீட்டின் கராஜில் கடையை அமைத்து, சகோதரர் பரிசாகக் கொடுத்த டெய்லரிங் மெஷின் கொண்டு, மேலும் சில ஆட்களை பணியில் அமர்த்தி 2010-ல் ‘ஏகாந்தா’ பொடிக்கை தொடங்கினார் ரூபி.

இடையில் குழந்தை பிறந்து, அவளை கவனித்துக் கொண்டு தன் கனவு பொடிக்கையும் செவ்வனே கவனித்ததன் பயனாக வாடிக்கையாளர்களும் ரூபியின் டிசைனில் திருப்தி அடைந்து மீண்டும் மீண்டும் ஆர்டர்களை தந்துள்ளனர். 

”நான் வாங்கிய வங்கிக்கடனை என் வருவாய் கொண்டு அடைத்தேன். பின்னர், பெரிய இடத்தில் பொடிக்கை விரிவாக்கம் செய்ய அடையார் மற்றும் மந்தைவெளியில் கடையை திறந்தேன். இப்போது என்னிடம் 40 பேர் பணிபுரிகின்றனர்,” என்கிறார். 

குழந்தைகள், பெண்களுக்கான டிரஸ், சல்வார், குர்தா, பிளவுஸ் மற்றும் அதில் வேலைபாடுகள் போன்ற பல சேவைகளை ஏகாந்தா பொடிக் அளிக்கிறது. மேலும் தன்னிடம் முதன்முதலில் சேர்ந்த பணியாளர் இன்றளவும் தன் நிறுவனத்தில் இருப்பதை பெருமிதத்துடன் கூறுகிறார். 

image


கற்றதும், பெற்றதும்

ஒரு பெண் தொழில்முனைவராக குறிப்பாக ஒரு குழந்தையின் தாயாக தொழிலில் ஈடுபடுவது அவ்வளவு சுலபமில்லை. அதிலும் ரூபி தன் மகளுக்கும், பொடிக்கில் கழிக்கும் நேரத்தையும் சமமாக வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். அதேபோல் பிசினசிலும் தான் சில தவறுகளை செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட நஷ்டம் எல்லாம் ஒரு படிப்பினையே என்கிறார். 

“குடும்பத்தின் ஒத்துழைப்பு இருந்தாலும், சிலசமயம் அவர்களும் தொழிலில் நஷ்டம் ஏற்படும் போது நேரத்தை நான் வீணாக்குவதாக கூறியதுண்டு. ஆனால் எனக்கு என் கலையின் மீதுள்ள ஆர்வத்தால் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் பொறுமையாக இருந்துள்ளேன்.”

எத்தனை சவால்கள் வந்தாலும், தாங்கள் வாக்கு கொடுத்த தேதியில் ஆர்டர்களை முடித்துத் தருவதில் கவனமாக இருப்பதாக கூறுகிறார். சென்னை வெள்ளம் வந்த சமயத்திலும் கூட ஆட்களை வரவழித்து வேலையை முடித்ததாக சொன்னார் ரூபி. 

வருங்காலமும், விரிவாக்கமும்

“நான் எப்போதும் எது சரியாக நடக்கும் என்றே சிந்திப்பேன், தவறு நடந்துவிடுமே என்று கவலைப்பட்டதில்லை. நேர்மறையாக சிந்திப்பதும், நாம் தீவிரமாக எண்ணுவதுமே செயலாக மாறும் என்று நம்புவேன்.” 
ரூபி டிசைனில் உருவான ஆடைகளை அணிந்துள்ள மாடல்கள்

ரூபி டிசைனில் உருவான ஆடைகளை அணிந்துள்ள மாடல்கள்


இந்திய ஆடைத்துறை பொறுத்தவரை, பெண்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்துகொண்டே தான் இருக்கும். அதேபோல் நம் பெண்கள் பல எடைகளில், வெவ்வேறு உடலமைப்போடு இருப்பதால், அவர்களுக்கேற்ற ஆடையை தைத்து கொடுக்கும் சந்தை வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த இடத்தை ஏகாந்தா நிரப்பும் என்றும் நம்புவதாக சொல்கிறார் ரூபி. 

தற்போது மூன்று பொடிக்குகளுடன் இயங்கும் ஏகாந்தா, இந்த ஆண்டிற்குள் ஐந்து கடைகளை நிறுவும் என்றும் விரைவில் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் எடுத்து வீட்டுவாசலுக்கு டெலிவரி செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றார். 

வாடிக்கையாளர்கள் நன்மதிப்புடன் வளர்ந்து வரும் ரூபி லெனின் மற்றும் அவரின் கனவு, மெல்ல மெல்ல ஒரு நாள் உயர்ந்த இடத்தை அடையும் என்பது அவரின் உற்சாகம், ஈடுபாட்டில் இருந்து தெரிந்தது. 

”நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோமோ, அதனால் ஈர்க்கப்பட்டு அந்த இலக்கை விரைவில் அடைவோம்,” 

என்று நம்பிக்கையுடன் விடைப்பெற்றார் ரூபி லெனின். 

Add to
Shares
27
Comments
Share This
Add to
Shares
27
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக