ரூ.14.62 கோடி மதிப்புள்ள 600 கார்களை ஊழியர்களுக்கு பண்டிகைப் பரிசாக அளித்த வைர வியாபாரி!
பண்டிகையை முன்னிட்டு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் மற்றும் குடியிருப்புகளை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய வைர வியாபாரி சவ்ஜி தோலக்கியா!
பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பரிசுகளை பகிர்வது வழக்கம். அவரவரின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு பரிசுகளை வழங்கி மகிழ்வதே ஓர் தனி நிம்மதி தான். அந்த வகையில் சூரத் வைர வியாபாரி சவ்ஜி தோலக்கியா ஒவ்வொரு தீபாவளிக்கும் விலை உயர்ந்த பரிசுகளை தனது ஊழியர்களுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதே போல் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 600 கார்களை தனது ஹரே கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனத்தின் தொழிளார்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அதோடு மற்ற தொழிலாளர்களுக்கு வீடுகளும், ரொக்கத் தொகையும் பரிசாக வழங்கியுள்ளார் சவ்ஜி தோலக்கியா.
பரிசு வழங்கும் நிகழ்வை “ஸ்கில் இந்தியா இன்சென்டிவ் செரிமோனி” என்று பெரும் விழாவாக கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி கோலாகலமாக நடத்தினார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது 4 ஊழியர்களுக்கு கார் சாவிகளை தன் கைகளாலே கொடுத்துள்ளார்; அதில் ஒருவர் மாற்றுத் திறனாளி பெண்.
“1,700 வைரக் கலைஞர்கள் மற்றும் வைர பொறியாளர்களுக்கு எங்கள் ஊழியர்களுக்கான விசுவாசப் போனஸ் திட்டத்தின் கீழ் ஊக்கப் பரிசு வழங்கியுள்ளோம்,” என தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சிவாஜி.
இந்த பரிசுத்தொகை போக இவர் பரிசாக அளித்த ரெனால்ட் மற்றும் மாருத்தி சுசூகி கார்களின் மொத்த விலை ரூபாய் 14.62 கோடி ஆகும். அதாவது ஒரு காரின் விலை ரூ. 4.4 லட்சம் மற்றும் ரூ. 5.38 லட்சம் ஆகும்.
5500 தொழிலாளர்கள் வரைப் பணிப்புரியும் இந்நிறுவனத்தில் இவ்விழாவில் பரிசுப் பெற்றவர்கள் போக மற்ற 4000 தொழிலாளர்களுக்கு வியக்கும் வகையில் தீபாவளிப் பரிசுகளை முன்னதே வழங்கியுள்ளார் சவ்ஜி.
திபாவளிக்கு முன்பு தனது நிறுவனத்தில் 25 வருடம் பணிப்புரிந்த மூன்று மூத்த ஊழியர்களுக்கு மெர்சிடீஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார்; பரிசாக வழங்கிய Mercedes-Benz GLS 350d SUV காரின் மதிப்பு குறைந்தது 1 கோடி ரூபாய் ஆகும்.
சில வருடங்களாகவே விழாக்களுக்கு மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு பரிசுகள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சவ்ஜி, 2017 புத்தாண்டிற்கு 1200 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளார். அதற்கு முந்தைய ஆண்டு தீபாவளிக்கு 51 கோடி ரூபாய் போனஸ் தொகையை மொத்த தொழிலாளர்களுக்கும் வழங்கியுள்ளார். அத்துடன் 1260 கார்கள் மற்றும் 400 குடியிருப்புகளையும் பரிசாக வழங்கியுள்ளார்.
சவ்ராஷ்ட்ராவை சேர்ந்த இவர் தனது மாமாவிடம் இருந்து கடன் உதவிப்பெற்று இந்நிறுவனத்தை துவங்கியுள்ளார். 1977ல் 12.50 ரூபாய் உடன் சூரத் வந்த சவ்ஜி, இன்று ஆண்டிற்கு 6000 கோடி வருவாய் ஈட்டும் வைர வியாபாரியாக உயர்ந்துள்ளார். இவருக்கு இப்பொழுது 3000 ஃபாலோவர்களுடன் ரசிகர் முகநூல் பக்கமும் உண்டு.
"