பதிப்புகளில்

'ஸ்டார்ட் அப்' - அரசின் வரையறைகளும், ஐ.டி துறை சார்ந்த வாய்ப்புகளும்!

Sivarajah Ramanathan
17th Jul 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போவது என்ன?

1. ஸ்டார்ட் அப் என்ற வார்த்தையின் பொதுவான புரிதல்.

2. ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான மத்திய அரசின் வரையறை.

3. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில் நுட்பங்களின் (Information & Communication Technology) அடிப்படையிலான ஸ்டார்ட் அப் ஐடியாக்களுக்கு வாய்ப்புள்ள பல்வேறு வணிகப் பிரிவுகள் (ICT Sub Verticals) 

நன்றி: Shutterstock

நன்றி: Shutterstock


ஸ்டார்ட் அப் - பொதுவான புரிதலும் அரசின் வரையறைகளும்  

'ஸ்டார்ட் அப்' என்ற வார்த்தை சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட ஆரம்ப நிலை நிறுவனங்களையோ அல்லது அதற்கு முந்தைய நிலையில் முறையாக பதிவு செய்யப்படாமல் ஒரு தொழில் முனைவு ஐடியாவின் பரிசோதனை கட்டத்திலோ இருக்கும் ஒரு முயற்சியைக் குறிப்பதாகும். ஸ்டார்ட் அப் என்ற சொல்லாடல் முதன் முதலாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டாட்காம் தொழில்கள் புற்றீசல் போல தொடங்கப்பட்ட போது பயன்படுத்தப்பட்டது. அதே காரணத்தினால் ஸ்டார்ட் அப் என்ற வார்த்தை ஐ.டி தொழில்முனைவுகளை மட்டுமே குறிப்பிடும் ஒரு சொல்லாக்கம் என்ற தோற்றமும் உருவானது. ஆனால் இன்றைய சூழலில் ஸ்டார்ட் அப் முயற்சிகள் ஐ.டி தாண்டி பல்வேறு துறைகளையும் தொட்டு விரிவடைந்து சென்று கொண்டிருக்கிறது.

இன்றைய சூழலில் ஸ்டார்ட் அப் என்றால் அது எந்த துறையையும் சார்ந்த ஒரு ஆரம்ப கட்ட தொழில் முனைவை குறிக்கும். புதுமையான ஐடியாக்களின் அடிப்படையில் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களை கிரியா ஊக்கியாக பயன்படுத்தி வேகமாக வளரும் தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்ட எந்த தொழில்முனைவும் ஒரு புதுயுக ஸ்டார்ட் அப்புக்கான தகுதியை பெறுகிறது. ஒரு ஸ்டார்ட் அப் என்றால் என்ன என்பதற்கான இந்த பொதுவான புரிதல் ஒருபுறமிருக்க நமது மத்திய அரசு எப்படி வரையறை செய்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தின் படி ஒரு ஸ்டார்ட் அப் என்பது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

1). தொடங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

2). கடந்த ஐந்து வருடங்களில் வருட விற்று-வரவு (turnover) 25 கோடி ரூபாய்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3). இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தொழில்நுட்பம் அல்லது அறிவுசார் ஆக்கத்தின் அடிப்படையிலான புதுமையான பொருட்கள் (products), சேவைகள் (services) அல்லது செயல்முறைககளை (process) உருவாக்கி, மேம்படுத்தி அதை வியாபார ரீதியாக அமல் படுத்த வேண்டும்.

தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் முயற்சிகள்!

இந்த அத்தியாயத்தில் தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பங்களின் (Information & Communication Technology - ICT) பயன் பாட்டில் புதுயுக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வாய்ப்புள்ள வணிகத்துறைகள் பற்றி ஓரளவு பார்க்கலாம்.

புதுயுக தொழில்முனைவுகளில் மின் வணிகம் அல்லது இணைய வணிகம் (e-commerce) மிக பிரபலமான ஒரு பிரிவு. ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல், பெப்பர் பிரை என பொது சந்தையில் விற்ற பொருட்களையும் சேவைகளையும் தொழில் நுட்ப உதவியுடன் இணையவெளியில் எடுத்துச்சென்று லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை நொடி நேரத்தில் சென்றடையும் இந்த தொழில் முனைவுகள் வியக்கத்தக்க பொருளாதார மதிப்பீடுகளை பெற்றுள்ளன. உதாரணமாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பீடு சுமார் 9.40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது நீண்ட வருடங்கள் நிலைபெற்று தொழில் செய்துவரும் பல பழம்பெரும் நிறுவனங்களை விட மிக அதிகமானது. ஆனால் அபரிமிதமான இந்த புதுயுக மாயம் நிலைத்து நிற்குமா அல்லது நீர்த்துப் போகுமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

அலைபேசி (மொபைல்), ICT துறையில் மற்றுமொரு வாய்ப்புள்ள பிரிவாகும். வேகமாக பெருகி வரும் ஸ்மார்ட் போன்களின் சக்தியையும் எண்ணிக்கையையும் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படும் புதுமையான மொபைல் செயலிகள் (mobile app) பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றன. இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான செயலிகள் தினமும் வெளிப்பட்டாலும் அவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துபவை ஒரு சில மட்டுமே. டெய்லிஹன்ட்(dailyhunt.com), பிரீ சார்ஜ்(freecharge.com) போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த உதாரணங்கள்.

தொழில் வணிக நிறுவனங்களின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள் என்டர்பிரைஸ் டெக் (Enterprise Tech) என்று சொல்லப்படுகிறது.

நிதி மேலாண்மை துறையில் தொழில்நுட்பங்களின் பயன் பாட்டினால் உருவாகும் முயற்சிகளை பின்டெக் (Fintech) ஸ்டார்ட் அப்ஸ் என்று அழைக்கிறார்கள். இத்துறையை சேர்ந்த பேடிஎம் (Paytm.com), பாலிசி பஜார் (Policybazaar.com) போன்ற நிறுவனங்களின் புதுமையான தொழில் முறைகளை ஆராய்ந்து பார்க்கும் படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

கல்வித் துறை சேவைகளோடு தொழில்நுட்பம் சங்கமிப்பதால் உருவாகும் தொழில் வாய்ப்புகளை எடுடெக் (Ed-Tech) ஸ்டார்ட் அப்ஸ் என்கிறார்கள். சிம்ப்ளி லேர்ன் (simplilearn.com), ஹாஷ்லேர்ன் (now.hashlearn.com), டாப்ர் (toppr.com) இந்த பிரிவில் செயல்படும் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.

அதே போல மருத்துவத்துறை சேவைகளை தகவல் தொழில்நுட்பத்தோடு இணைப்பதனால் உருவாகும் நிறுவனங்கள் ஹெல்த் டெக் (health-tech) ஸ்டார்ட் அப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. ப்ரக்டோ (practo.com) மற்றும் போர்டீ (portea.com) போன்றவை பிரபலமான ஹெல்த் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாகும்.

தகவல் மற்றும் இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒவ்வொரு தொழில் துறைகளிலும் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்த வாய்ப்புகள் புதுயுக ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக உருமாறுகின்றன. மேலே குறிப்பிட்ட தொழில் வணிக துறைகள் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும் தொழில்நுட்ப இணைப்பு, புதிய சந்தைத் தளங்களை உருவாக்கியுள்ளது. போக்குவரத்த்து துறையில் ரெட்பஸ் (redbus.in), டிக்கட்கூஸ் (ticketghoose.com) மேக் மை டிரிப் (makemytrip.com). உணவு சேவைகளுக்கான பிரிவில் ஃபுட் பாண்டா (foodpanda.com), ஸொமாட்டோ (zomato.com ), பர்ப் (burrp.com). மளிகை பொருட்கள் வாங்க பிக்பகாஸ்கட் (bigbasket.com) என்று இன்னும் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பட்டியலிடலாம். இங்கே தரப்பட்ட பல உதாரணங்கள் புதுயுக தொழில் முனைவுக்கு அறிமுகமில்லாத வாசகர்களையும் கருத்தில் கொண்டு தரப்பட்டிருக்கிறது. 

தொழில்நுட்பத்தை விட ஐடியாவே முக்கியம்! 

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொழில்முறைகளை ஆராய்ந்து பார்த்தால் ஒரு சுவாரசியமான உண்மையை அறியலாம். இவற்றில் தொழில்நுட்பம் ஒரு கிரியா ஊக்கி மட்டுமே தவிர அந்த தொழில்முனைவுக்கான உயிர் நாடியாக பெரும்பாலும் இருக்காது. மாறாக தொழில்முனைவின் உயிர்நாடி ஒரு சக்தி வாய்ந்த புதுமையான ஐடியாவாக இருப்பதை பார்க்கலாம். 

அந்த ஐடியாவை எப்படி தொழில் நுட்பங்களுடன் இணைத்து குறிப்பிட்ட துறை சார்ந்த ஒரு பொருளையோ சேவையையோ புதுமையாக வாடிக்கையாளர்களுக்கு வடிவமைக்கலாம் என்ற அறிவுசார் வியூகமே இத்தகைய புதுயுக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றிக்கான தாரக மந்திரம் என்றால் அது மிகையல்ல.

ஐ.டி துறையை தாண்டியும் புதுயுக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் விரிவடைந்து செல்கிறது என்று பார்த்தோம். விவசாயம், கல்வி, சுற்றுச்சூழல் தூய்மை, சமூக தொழில்முனைவுகள், உயர் தொழில்நுட்ப கருவிகள் என வேறு பல துறைகளில் எந்த மாதிரியான ஸ்டார்ட் அப் முயற்சிகள் நடந்திருக்கின்றன என்பதையும் இப்படியான வேறு துறைகளில் உள்ள புதிய வாய்ப்புகள் மற்றும் சவால்களையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

கட்டுரையாளர்: சிவராஜா இராமநாதன், தலைமை நிர்வாகி, நேட்டிவ்லீட் பவுண்டேஷன் மற்றும் நேட்டிவ் ஏஞ்செல்ஸ் நெட்வொர்க்

கடந்த வார கட்டுரை:

'புதுயுக தொழில் முனைவு'- சரித்திரமும், பரிமாணங்களும்!

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக