பதிப்புகளில்

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதுமையான நினைவூட்டல் சேவை!

14th Feb 2016
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

டாமி ரெய்சுக்கு முதலில் ஒரு பூங்கொத்து கொடுக்க வேண்டும்!இல்லை அவர் பூங்கொத்தை விரும்ப மாட்டார். ரெய்ச்சுக்கு ஒரு கைகுலுக்கல் மூலமே பாராட்டைத் தெரிவிக்கலாம்.

சைரஸ் இன்னவேஷன் எனும் சாப்ட்வேர் நிறுவனத்தைச் சேர்ந்த ரெய்ஸ் தனது குழுவினருடன் இணைந்து அறிமுகம் செய்திருக்கும் புதுமையான ஜிமெயில் நினைவூட்டல் சேவைக்காகத் தான் அவரை பாராட்ட வேண்டும். குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பாக அறிமுகமாகி இருக்கும் இந்த நினைவூட்டல் சேவை புதுமையானது மட்டும் அல்ல; லட்சிய நோக்கமும் கொண்டது- பெண்கள் உறுதியுடனும், நம்பிக்கையுடனும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தை அவர்களுக்கு வலியுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சேவை இது.

image


பெண்கள் மன்னிப்பு கேட்கும் நோக்கிலான வார்த்தைகளை தேவையில்லாமல் தகவல் பரிமாற்றத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதை பெண்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

சமத்துவத்திற்கான போராட்டத்தில் பெண்கள் பல படி முன்னேறி வந்து விட்டனர். ஆணுக்கு பெண் சமம் என்பதெல்லாம் ஒரு காலம். இன்று ஆணுக்கு பெண் சவால்விடாத துறைகளே கிடையாது. எல்லாத்துறையிலும் பெண்கள் சாதித்துக்கொண்டிருக்கின்றனர். தலைமை பதவிகளிலும்,வழிகாட்டி பொறுப்புகளிலும் பெண்கள் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றனர்.

இவற்றில் எல்லாம் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சில நேரங்களில் பெண்களின் அணுகுமுறை தான் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றதாக அமைவதில்லை என்று குறைபட்டுக்கொள்கிறார் ரெய்ஸ். இந்த குறையை போக்கும் வகையில் தான் 'ஜஸ்ட் நாட் சாரி’ (Just Not Sorry) சேவையை உருவாக்கி இருக்கிறார்.

இந்த குரோம் நீட்டிப்புச் சேவையை டவுண்லோடு செய்து கொண்டால் அதன் ஜிமெயிலுக்கான பிளக்கினாக செயல்படுகிறது. அதன் பிறகு இமெயில் மூலம் செய்திகளை அனுப்பும் போது, அதன் வாசகங்களில். "மன்னிக்க வேண்டும், ஆனால்’, ( I’am soorry but,), "அதாவது" (Just), "மற்றும் ’நான் வல்லுனர் இல்லை, ஆனால்" (I’ am not an expert,but ) போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டால் அவற்றை பிழையாக அடையாளம் காட்டுகிறது. வாக்கியங்களை டைப் செய்யும் போது ஏதேனும் தவறாக இருந்தால் பிழை செய்தி தோன்றுவது போல இந்தச் செய்தி தோன்றுகிறது. இந்த எச்சரிக்கையின் மீது மவுசை கொண்டு சென்றால், அது தொடர்பான விளக்கம் முன்வைக்கப்படுகிறது. அதாவது, பெண்கள் தங்கள் அலுவல் நோக்கிலான தகவல் தொடர்பில் இந்த வார்த்தைகளை ஏன் பயன்படுத்தக்கூடாது? எனும் விளக்கம் அளிக்கப்படுகிறது. பெண்கள் குறிப்பாக, உயர் பதவியில் இருக்கும் பெண்கள் இந்த வார்த்தைகளை தங்கள் மெயிலில் பயன்படுத்தாமல் இருக்கலாம்.

பெண்கள் ஏன் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டு? ஏனெனில், ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்தும் போது மன்னிப்பு கோரும் வார்த்தைகளை கையாள்வது அவர் மீதான நம்பிக்கை மற்றும் அவரது தலைமைப் பண்பை பாதிக்கும் வகையில் அமைந்து விடுகிறது.

image


மற்றவர்கள் முன், தனது கருத்தை முன்வைத்து பேசும் போது அதில் தெளிவும், நம்பிக்கையும் வேண்டும். பேசும் விதத்தில் துணிச்சலும், நம்பிக்கையும் வெளிப்பட்டால் மட்டும் போதாது, கருத்தை விவரிக்க தேர்வு செய்யும் வார்த்தைகளும் அதை பிரதிபலிக்க வேண்டும். இது எனது கருத்து எனும் உறுதியுடன் பேச வேண்டும். மேடைப் பேச்சு முதல் நிறுவன ஆலோசனை கூட்டங்கள் வரை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இந்த கருத்து இரு பாலருக்கும் பொதுவானது தான்.

ஆக, உறுதியாக நின்று நம்பிக்கையுடன் பேச வேண்டிய இடங்களில் மன்னிப்பு கோரும் சொற்களை பயன்படுத்தும் தேவை எங்கிருந்து வருகிறது? தயக்கம் நிறைந்த சொற்களை ஏன் நாட வேண்டும்?

ஆனால் தலைமை பதவியில் இருக்கும் பெண்கள் உரை நிகழ்த்தும் போது தங்களை அறியாமலேயே இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இமெயில் மூலம் கருத்துக்களை பகிரும் போதும் இது நிகழ்கிறது.

உதாரணமாக, "கடந்த மெயிலில் குறிப்பிட்டத் தகவல் குறித்து விவாதிக்க விரும்புகிறேன். மன்னிக்கவும், அது குறித்து நம்மால் உரையாட முடியவில்லை” என்பது போல அமையும் இமெயில் வாசகத்தை எடுத்துக்கொள்வோம். இதில், மன்னிக்கவும் எனும் வார்த்தையை ஏன் தேவையின்றி பயன்படுத்த வேண்டும். நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடலாமே?

'அதேப் போல நான் என்ன நினைக்கிறேன் என்றால் ...’ என தயக்கத்துடன் ஏன் கருத்தை முன் வைக்க வேண்டும். இது என் கருத்து, அதன் சாரம்சம் இது என உறுதியாக சொல்வது தானே சரியாக இருக்கும். இப்படி எண்ணற்ற உதாரணங்களை கூறலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மன்னிப்பு போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவறு என்பதல்ல! மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லாத இடங்களில் அவற்றை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டியது என்பது தான் விஷயம். நிச்சயமாக அலுவலகக் கூட்டம், மாநாடு போன்றவற்றில் பேசும் போது இத்தகைய வார்த்தைகள் தேவையில்லாதவை.

ஆனால், தலைமைப் பதவியில் இருக்கும் பெண்கள் பேசும் போது பெரும்பாலும் இது போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதாக கருதப்படுகிறது. அவர்கள் இவ்வாறு பேசும் நிலைக்கு கலாச்சார நோக்கில் பழக்கப்பட்டிருக்கின்றனர். பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி தலைமை பொறுப்புகளுக்கு வந்துவிட்ட நிலையிலும், அவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதத்தில் மட்டும் இன்னமும் கட்டுப்பெட்டித்தனம் மறைந்திருப்பது சரியில்லை அல்லவா?

டாமி ரெய்ஸ், இந்த சேவைக்கான விளக்கம் அளிக்கும் வகையில் எழுதியுள்ள மீடியம் வலைப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள ஒரு கட்டுரை இதை மிக அழகாக விளக்குகிறது. கூட்டங்களில் பெண்கள் பயன்படுத்தும் மேற்கோள்கள் பற்றி விவாதிக்கும் அந்த கட்டுரையில் அதை எழுதியவர், பொதுவாக ஆண்கள் பேசிய பிரபலமான சொற்றொடர்களை பெண்கள் பேச நேர்ந்தால் எப்படி இருக்கும் என சுட்டிக்காட்டுகிறார்.

"எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்பது மார்டின் லூதர் கிங்கின் பிரபலமான முழக்கம்.

இதையே ஒரு பெண் பேச நேர்ந்தால், ” என்னை மன்னிக்கவும், எனக்கு ஒரு எண்ணம் இருக்கிறது- இது விசித்திரமானது என எனக்குத்தெரியும், ஆனால்...”.

என்பது போல அமைந்திருக்கும் என்கிறார் கட்டுரை ஆசிரியர்.

இதே போல, ”திருவாளர் கோர்பசேவ், இந்தச் சுவற்றை தகர்த்தெறியுங்கள்” என அமெரிக்க அதிபரால் கூறப்பட்ட கருத்தை ஒரு பெண் பேச நேரும் போது, "என்னை மன்னிக்கவும் கோர்பசேவ், இதை இடித்து தள்ள வேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் இந்த சுவர் அது உண்டாக்கப்பட்டதற்கான பணியை செய்யவில்லை என நினைக்கிறேன்..” 

என்பது போல இருக்கும் என மற்றொரு உதாரணத்தில் சுட்டிக்காட்டுகிறார்.

மிக அழகான உதாரணங்கள், ஆனால் பெண்கள் பேச்சிலும், தகவல் தொடர்பிலும் வெளிப்படும் தயக்கத்தை வலுவாக உணர்த்தும் உதாரணங்கள். ஒரு பெண் தலைவர் ஏன் தனது கருத்தை நேரடியாக கூறாமல் சுற்றி வளைத்து கூறும் நிலை ஏற்படவேண்டும். ஏனெனில் அவர் அவ்வாறு தான் பேச வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்கின்றனர் நவீன பெண்ணியவாதிகள்.

image


பல தடைகளைத் தாண்டி வந்திருக்கும் பெண்கள், பேச்சில் மறைந்திருக்கும் இந்த தடையையும் கடந்து வர வேண்டும் என்பது தான் நவீன சிந்தனையாக இருக்கிறது. ஆகவே தான், அலுவல் நோக்கிலான தகவல் தொடர்பில் அவர்களின் அதிகாரத்தையும், உறுதியையும் பாதிக்கக் கூடிய சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இப்படி பெண் அதிகாரிகளில் இமெயில் பரிமாற்றத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பலவீனமான சொற்களை அடையாளம் காட்டி அவற்றை தவிர்க்கும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, ஜஸ்ட் நாட் சாரி குரோம் நீட்டிப்புச் சேவை உருவானதாக டாமி ரெய்ஸ் சொல்கிறார்.

பெண்களுக்கு தங்கள் மொழி பற்றிய விழிப்புணர்வை இந்த சேவை உண்டாக்கும் என்கிறார் அவர்.

உண்மை தான். ஒருவர் இமெயிலில், தனது எண்ணத்தை விவரிக்கும் போது, "ஆனால் நான் வல்லுனர் இல்லை” என்பது போன்ற வாசகத்தை இடம்பெறச்செய்யும் போது, "வல்லுனர் இல்லை எனச் சொல்வது உங்கள் எண்ணத்தை ஆற்றலை பலவீனமாக்கி, உங்கள் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும்” என்று சுட்டிக்காட்டப்படுவது கண்களை திறந்துவிட்டது போல தானே இருக்கும். அதை தான் இந்த சேவை செய்கிறது.

இணைய உலகில் இந்தச் சேவை பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரெய்ஸ் விரும்பிய படி ஆயிரக்கணக்கான பெண்கள் இந்தச் சேவையின் மைய கருத்தை பின்பற்றி நடப்பதை தங்கள் புத்தாண்டு உறுதிமொழியாக மேற்கொண்டுள்ளனர். இதற்கு எதிர் கருத்தும் இல்லாமல் இல்லை. ஒரு சிலர் ஏன் பெண்களும் ஆண்கள் போலவே அதிகார நோக்கில் பேசினால் தான் உறுதியாக இருப்பதாக பொருளா எனும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

ஆனால் பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதம் பலவீனமானதாக, தயக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டியதில்லை என்ற கருத்து வரவேற்கத்தக்கது தான். அதோடு நாம் பேசும் விதங்களில் தேவையான நுட்பமான மாற்றங்களை நினைவில் நிறுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை எத்தனை அழகாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான உதாரணமாகவும் இருக்கிறது.

யோசித்துப்பார்த்தால் நம் கலாச்சார சூழலில் நாம் தவிர்க்க வேண்டிய வார்த்தைகளையும், நாம் பேச வேண்டிய விதத்தையும் நினைவூட்டும் பல நீட்டிப்பு சேவைகளை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உடன்படுகிறீர்களா? எனில் நாம் உருவாக்கக் கூடிய பிரவுசர் நீட்டிப்பு சேவைகளுக்கான கருப்பொருள்கள் என்னவாக இருக்கும்?

டாமி ரெய்சின் மீடியம் வலைப்பதிவு விளக்கம்

ஜஸ்ட் நாட் சாரி சேவைக்கான இணையதளம்

கட்டுரையாளர்- சைபர்சிம்மன் (பத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர், இணையம் தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர்)

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற இணையம் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கட்டுரைகள்:

அவர் பாடகர் மட்டும் அல்ல; இணைய முன்னோடியும் தான்!

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக