பெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்: ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 5 கருவிகள்!
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 2வது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய். வீட்டில் இருந்தபடியே அந்நோயை எளிதில் கண்டறிய சில கருவிகள் உள்ளன. அதைப் பற்றி பெண்கள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆகட்டும், வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவிகள் ஆகட்டும், பெரும்பாலும் தங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலும் நோய் முற்றிய நிலையில் தான் அவர்கள் சிகிச்சைக்காகவே செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களை பெரிதும் தாக்கும் நோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய்.
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய் தான். இந்தியாவில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களில் 60 சதவீதம் பேர் நோய் முற்றிய நிலையில் தான் அதனை தெரிந்து கொள்கிறார்கள். இதனாலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது கடினமாகிவிடுகிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் 2018ம் ஆண்டு மட்டும் 1, 62,468 பேருக்கு புதிதாக மார்பகப் புற்று நோய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்ளில் 87,090 பேர் மார்பக புற்றுநோயால் மரணமடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு புதிதாக மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மார்பக புற்றுநோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அதன் ஆரம்பகால அறிகுறிகள் பற்றி சரியாகத் தெரிந்து கொண்டால், ஆரம்பத்திலேயே அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்று, எளிதில் குணமடைய முடியும். அதனால் தான் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயுடன் போராடுபவர்களை நினைவு கூறும் வகையில் பிங்க் நிற ரிப்பன் அணியப்படுகிறது.
மார்பக புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மருத்துவமனைக்கு சென்று தான் செய்து கொள்ள வேண்டும் என்றில்லை. சில எளிய கருவிகளின் மூலம் பெண்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து மார்பக புற்றுநோய் குறித்து அறிந்துகொள்ள முடியும். மார்பக புற்றுநோய் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்வதன் மூலம் அதனை குணப்படுத்துவது இன்னும் எளிதாகும்.
மார்பக புற்றுநோயைக் கண்டறியும் 5 முக்கிய கருவிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
பிராஸ்டர் புரோ - மார்பக ஆய்வு முறை (Braster Pro-Breast Examination System)
பிராஸ்டர் புரோ எனும் இந்த கருவி வைஃபை மூலம் இயங்கக் கூடியது. தன்னுள் இருக்கும் கேமரா மற்றும் சேமிப்புக் கருவிகளை கொண்டு சம்மந்தப்பட்ட இடத்தை மட்டும் புகைப்படம் எடுத்து சேமித்துக் கொள்ளும். 15 படங்கள் வரை சேமித்துக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. மொபைல் செயலி வழியாக செயல்படக்கூடிய இந்த கருவியால் தானாக இயங்கவோ அல்லது படத்தை டிரான்ஸ்பர் செய்யவோ முடியாது. இதற்காக பிராஸ்டர் கேர் எனும் பிரத்கேய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் எடுக்கும் புகைப்படங்களை கொண்டு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் இருக்கிறதா இல்லையா என்பதை இந்தக் கருவி கண்டறிந்து தெரிவிக்கும்.
பிரஸ்ட்லைட் (Breastlight )
பிரஸ்ட்லைட் எனும் இந்த கருவியை பெண்கள் தங்கள் வீட்டிலேயே பயன்படுத்தலாம். சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும் இந்த கருவி, ஒரு சிகப்பு நிற லைட்டின் மூலம் நோய் அறிகுறிகளைக் கண்டறிந்து சொல்லும். ஒருவேளை மார்பகத்தில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அந்த பகுதியில் மட்டும் சிவப்பு நிற வெளிச்சம் ஹைலைட் செய்து காட்டப்படும். இந்த ஒளியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
பிங்க் லூமினஸ் (Pink Luminous)
பிங்க் லூமினஸ் எனும் இந்த கருவி, அதன் பயனாளர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வையும், மன அமைதியையும், நம்பிக்கையையும் தரக்கூடியது. பிங்க் லூமினஸ் கருவி பெண்களுக்கு ஒரு புதுமையான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கருவியாகும். இதன் மூலம் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தடியே சுயபரிசோனை செய்துகொள்ளலாம். இந்த கருவியின் மூலம் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் அசாதாரண விஷயங்கள் இருந்தால் அதனை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதனால் மிக விரைவாக அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள பிங்க் லூமினஸ் பெரிதும் உதவுகிறது.
இன்ப்ராரெட் மார்பக புற்றுநோய் சுயபரிசோதனை மசாஜர் கருவி
இது ஒரு புதுமையான நம் கைகளால் பயன்படுத்தக்கூடிய சுயபரிசோதனை மற்றும் சுய மசாஜ் கருவி. இதில் உள்ள சிகப்பு நிற பீம், மார்பகத்தில் உள்ள கட்டிகள், அசாதாரண சதைகள் ஆகியவற்றை கண்டறிய உதவும். மேலும், இதில் உள்ள மசாஜ் கருவி, மார்பக நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவும். இதில் இருந்து வெளியேறும் சிகப்பு ஒளி, மார்பகத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும். இதில் உள்ள 'கேர்' மோட் சிகப்பு ஒளி மற்றும் மசாஜ் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தி மார்பகம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும். ரேடியேஷன் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத, 100 சதவீதம் பாதுகாப்பான கருவியாக உலக அளவில் சிறந்த கருவி என போற்றப்படும் இக்கருவி மார்பகம் நோய்களை தடுக்கிறது.
ஐபிரஷ்ட் எக்சாம் ( iBreastExam )
மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான வசதி வாய்ப்புகள் குறைவாக உள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கருவி தான் இந்த ஐபிரஷ்ட் எக்சாம். மார்பகத்தில் உள்ள சதைகளில் புற்று நோய் பாதிக்கப்பட்ட சதைகள் மற்றும் பாதிப்பில்லாத சதைகளை தனித்தனியே கண்டறிவதற்கு இந்த கருவி உதவும். இதனை மார்பகத்தின் மேல் பயன்படுத்தும் போது, இரண்டு சதைகளின் இடையே உள்ள வித்தியாசத்தை துல்லியமாக கண்டறியும்.