ஐஐடி, ஐஐஎம் கல்வி இல்லாமல் ஐடி துறையில் சாதித்த 5 இந்திய தொழில் முனைவோர்கள்!

ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் படிக்காமல் தகவல் தொழுல்நுட்பத்துறையில் சாதித்துள்ள தொழில்முனைவோர்களை இந்தியா அதிகம் பெற்றுள்ளது. இவர்களில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து பேர் பற்றிய அறிமுகம்.
8 CLAPS
0

ஐஐடி பட்டதாரிகளின் வெற்றி பற்றி பேசும் போது, நாராயண மூர்த்தி, நந்தன் நிலேகனி (இன்போசிஸ்), சச்சின் பன்சல் ( ஃபிளிப்கார்ட்), வினோத் கோஸ்லா (சன் மைக்ரோசிஸ்டம்ஸ்), ஆகியோரது ஊக்கம் அளிக்கும் வெற்றிக்கதைகள் தவறாமல் பேசப்படுகின்றன.

ஐஐஎம் வெற்றிக்கதைகள் என வரும் போது சஞ்ஜீவ் பிக்சந்தானி (நவ்கரி), தீப் கல்ரா (மேக்மைடிரிப்), அஜீத் பாலகிருஷ்னன் (ரெடிப்), ஆகியோரது வெற்றிகள் பேசப்படுகின்றன.

இருப்பினும், ஐஐடி- ஐஐஎம் குழுவில் இல்லாமல், மிகச்சிறந்த தொழில்முனைவுப் பண்பை வெளிப்படுத்தியுள்ள வர்த்தக வெற்றியாளர்கள் பலர் இருக்கின்றனர்.

ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் படிக்காமல் தகவல் தொழுல்நுட்பத்துறையில் சாதித்துள்ள தொழில்முனைவோர்களை இந்தியா அதிகம் பெற்றுள்ளது. இவர்களில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து பேர் பற்றிய அறிமுகம்.

பியூஷ் சோமனி  - ESDS Software Solution

2003ல் புனே பல்கலைக்கழக பட்டதாரியான பியூஷ் சோமனி மற்றும் ஏழு நண்பர்கள் சிறிய அளவில் வெப் ஹோஸ்டிங் வர்த்தகத்தை துவக்கினர். ஆனால் அவர்களால் அலுவலகத்தை வாடகைக்கு எடுக்க முடியவில்லை.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, நகரில் மழலையர் மையம் நடத்திக்கொண்டிருந்த நண்பரின் அம்மா, குழந்தைகள் சென்ற பிறகு தனது இடத்தை இவர்களுக்கு அளிக்க முன்வந்தார். பியூஷும் அதை ஏற்றுக்கொண்டார்.

வீட்டில் இருந்து சில கம்ப்யூட்டர்களை எடுத்து வந்து மழலையர் மையத்தில் நிறுவி வர்த்தகத்தை துவக்கினர். இன்று இது இ.எஸ்.டி.எஸ் சாப்ட்வேர் சொல்யூஷன் (ESDS Software Solution) நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

நிறுவனம் 160 கோடி வருவாய் ஈட்டும் டேட்டா மையம் மற்றும் கிளவுட் சேவை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. 850 ஊழியர்களுக்கு மேல் பணிபுரிகின்றனர்.

ராம் சுகுமார்  - Indium Software

பிர்லா தொழில்நுட்பக் கழக பட்டதாரியான ராம் சுகுமார், தொழில்நுட்பம் மீது இருந்த ஈடுபாடு காரணமாக சொந்த மென்பொருள் நிறுவனத்தை துவக்க விரும்பினார். ஆனால் அமெரிக்காவில் நிறுவனம் துவக்குவது செலவு மிக்கதாக இருந்தது.

இந்தியா திரும்பியவர், இண்டியம் (Indium) எனும் வர்த்தகப் பயிற்சி மற்றும் மென்பொருள் சோதனை நிறுவனத்தை துவக்கினார். ராம் மற்றும் அவரது சகோதரர் விஜய் பாலாஜி தங்கள் சேமிப்பை முதலீடு செய்து நிறுவனத்தை துவக்கினர்.

“தோல்வி அச்சம் இல்லாமல் செயல்பட விரும்பினோம். எனினும் பெரிய அளவில் மூலதனம் இல்லை. 8 முதல் 10 பேரை நியமித்துக்கொண்டு, செயலி உருவாக்கம் மற்றும் வர்த்தகப் பயிற்சியைத் துவக்கினோம்,” என்கிறார் அவர்.

எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் ராம், தனது நிறுவனத்தை பெரிய அளவிலான தொழில்நுட்ப சேவை நிறுவனமாக உருவாக்கியிருக்கிறார். இந்த ஆண்டு ரூ.221 கோடி வருவாயை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

அருண் நதானி - Cybage Software

ஜிபி பந்த பல்கலைக்கழக பட்டதாரியான அருண் நதானி வெற்றிக்கதை 1987ல் துவங்குகிறது. அப்போது அவர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். ஆனால், அவர் அங்கு மகிழ்ச்சியாக இல்லை.

இந்தியா திரும்பி வர்த்தக நிறுவனத்தை உருவாக்க விரும்பினார். இன்று அருண், புனேவைச் சேர்ந்த சைபேஜ் சாப்ட்வேர் நிறுவன சி.இ.ஓவாக இருக்கிறார். நிறுவனம் தொழில்நுட்பச் சேவைகளை வழங்கி வருகிறது.

சர்வதேச அளவிலான மென்பொருள் வெண்டர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் தொழில்முறை சேவைகளை வழங்கும் நிறுவனம், 2019ல் ரூ.1,106 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கிறிஸ்டோபர் ரிச்சர்டு - G7CR Technologies

சிறுவயதிலேயே தந்தையை இழந்த கிறிஸ்டோபர், 12ம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டார். பின்னர் மூன்று மாத கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். அங்கிருந்து அவரது ஐடி பயணம் துவங்கியது.

வர்த்தக ஆலோசகராக உருவாகியவர், வாடிக்கையாளர் ஒருவர் பரிந்துரையின் பேரில், ஜி7 எனும் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப ஆலோசகர் தேவைப்படுவதை உணர்ந்தார்.

“ஜி 7 டெக் சொல்யூஷன் நிறுவனத்தின் ஆலோசகராக செயல்பட்டேன். பின்னர் அந்த நிறுவனத்தை வாங்கி என் நிறுவனத்துடன் இணைத்துக்கொண்டேன்,” என்கிறார்.

இதன் பயனாக ஜி7ஜிஆர் டெக்னாலஜிஸ் நிறுவனம் உருவானது. மூன்று ஆண்டுகளில் கிளவுட் கம்ப்யூட்டிங் வர்த்தகத்தில் ரூ.100 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

சத்யா பிராபகர் - Sulekha

சென்னையைச்சேர்ந்த என்.ஐ.டி பட்டதாரியான சத்யா பிராபகர், இணையத்தின் வளர்ச்சி காரணமாக டைக்ரடரிகள் தேவை குறையும் என உணர்ந்தார்.

"2015க்கு முன்னதாக ஆன்லைன் பட்டியல் நிறுவனத்தை நடத்தினேன். இது ஆன்லைன் யெல்லோபேஜஸ் போல இருந்தது. இந்தியா மற்றும் அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளூர் வர்த்தகத்தை கண்டறிய இது உதவியது,” என்கிறார் அவர்.

இந்த வர்த்தகம் 2015ல் சுலேகா நிறுவனமாக உருவானது. உள்ளூர் சேவைகளுக்கான டிஜிட்டல் மேடையாக அமைந்து வளர்ச்சி பெற்றது.

ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்