பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக தீர்வளிக்கும் 5 ஸ்டார்ட் அப்கள்!
பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக செயல்படும் ஐந்து ஸ்டார்ட் அப்களின் தொகுப்பு இது.
2019ம் ஆண்டில் உலகளவில் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான சந்தை 74 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது. 2027ம் ஆண்டில் 4.62 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் இந்த சந்தை மதிப்பானது 108 பில்லியன் டாலரை எட்டும் என மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் மின்வணிக வளர்ச்சி, முறையான டெலிவரி அமைப்பு, கட்டண சலுகைகள் போன்ற காரணிகள் பாலியல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளையும் தீர்வுகளையும் பயனர்கள் எளிதாக அணுக உதவுகிறது. இந்தப் பிரிவில் வளர்ச்சி கண்டுள்ள ஐந்து ஸ்டார்ட் அப்களை யுவர்ஸ்டோரி தொகுத்துள்ளது.
Bold Care
ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் போல்ட் கேர் ஸ்டார்ட் அப் 2020ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. ரஜத் ஜாதவ், ராகுல் கிருஷ்ணன், ஹர்ஷ் சிங், மோகித் யாதவ் ஆகிய நான்கு நண்பர்களும் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட, பாலியல் ஆரோக்கியம் தொடர்பான தயாரிப்புகள், கூந்தல் பராமரிப்பு, அன்றாட ஊட்டச்சத்து தயாரிப்புகள் போன்றவற்றை வழங்குகிறது.
இந்த டி2சி ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப் மருத்துவர்களிடம் இலவசமாக டிஜிட்டல் முறையில் ஆலோசனைகள் பெற உதவுகிறது. இந்நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்படும் தயாரிப்புகள் இரண்டு நாட்களில் டெலிவரி செய்யப்படும் என உறுதியளிக்கிறது.
ஆரம்பத்தில் 100 வாடிக்கையாளர்கள் இருந்தனர். 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தின்படி, 25,000க்கும் மேற்பட்ட மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கையுடன் விரிவடைந்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் பாலியல் ஆரோக்கியம், கூந்தல் பராமரிப்பு, அன்றாட ஊட்டச்சத்து என மூன்று பிரிவுகளில் 20 எஸ்கேயூ-க்களுடன் செயல்படுகிறது. தினமும் 900 முதல் 1,000 ஆர்டர்கள் வரை பூர்த்தி செய்வதாகத் தெரிவிக்கிறது.
இந்த ‘ஸ்டார்ட் அப்’பின் வலைதளம் மட்டுமல்லாது அமேசான், ஃப்ளிப்கார்ட், நைகா, CRED போன்ற பிரபல மின்வணிக தளங்களிலும் இ-ஃபார்மசிக்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் தயாரிப்புகள் 350 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை கிடைக்கின்றன. 2021 நிதியாண்டில் இந்நிறுவனம் 2.24 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 2022 நிதியாண்டில் 9 கோடி ரூபாய் வருவாய் ஈட்டத் திட்டமிட்டுள்ளது.
2022 பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படாத தொகையை நிதியாகத் திரட்டியுள்ளது. ஏற்கெனவே இந்நிறுவத்தின் முதலீட்டாளர்களாக உள்ள NB Ventures, Huddle ஆகிய நிறுவனங்களுடன் Sharrp Ventures, Anthill Ventures, Stanford Angels and Entrepreneurs, ShipRocket ஆகிய நிறுவனங்கள் இதில் பங்களித்துள்ளன. பிராடக்ட் உருவாக்கத்திற்கு இந்த நிதித்தொகை பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் சீரிஸ் ஏ நிதிச்சுற்றை எதிர்நோக்கி உள்ளது.
ThatMate
ThatMate 2020ம் ஆண்டு மாதவி ஜாதவ், நிஷாந்த் நீரஜ் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இது பதின்மவயதில் தகவல்களை முறையாகத் தெரிந்துகொண்டு தீர்மானம் எடுக்க உதவும் செயலி.
பருவமடைதல், உறவுமுறைகள், சுய பிம்பம் பற்றிய கவலைகள், சகவயதினரின் அழுத்தம், மன அழுத்தம் போன்ற சிக்கல்களைக் கடந்து செல்ல உதவுகிறது.
புனேவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் பாலியல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இடையே இருக்கும் இடைவெளியைப் போக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
காமிக்ஸ், விளையாட்டு, புதிர்கள் என பயனரின் வயதிற்கேற்ப தகவல்கள் வழங்கப்படுவதாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர். 8,000-க்கும் மேற்பட்ட பதின்ம வயதினர் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். மூன்று மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இந்த செயலி இணைந்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த ஆண்டு Rebalance Angel Community நிறுவனம் மற்றும் சில ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மூலம் 140000 டாலர் நிதி திரட்டியுள்ளது.
Janani
2020-ம் ஆண்டு நிலய் மெஹ்ரோத்ரா நிறுவிய நிறுவனம் Janani.ai இந்நிறுவனம் பாலியல் மற்றும் இனப்பெருக்க நலன் தொடர்பாக தீர்வளிக்கிறது.
2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ஸ்டார்ட் அப் புதிய வலைதளம் மற்றும் இதர சேவைகளை அறிமுகப்படுத்தியது.
கருவுறுதலில் சிக்கல்களை ஏற்படுத்தும் விந்து ஆரோக்கிய குறைபாடு, கருமுட்டை அளவு குறைவு, பிசிஓடி, மன அழுத்தம், வாழ்க்கைமுறை சார்ந்த நாள்பட்ட குறைபாடுகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
இந்நிறுவனம் தனிநபர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் கொண்டு ஆன்லைனில் ஆலோசனை வழங்குகிறது.
கூடுதலாக Janani ஹோம் டயாக்னாஸ்டிக் டெஸ்ட் வழங்குகிறது. இந்த சேவை தற்சமயம் பெங்களூரு, மும்பை ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் இந்தியாவின் மற்ற நகரங்களில் கிடைக்க உள்ளது.
Mosaic Wellness
இந்நிறுவனம் டிஜிட்டல் சுகாதார கிளினிக் நடத்துகிறது. இந்திய மக்களின் முழுமையான நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. தற்சமயம் ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் நலனிற்காக Man Matters என்கிற கிளினிக்கும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நலனிற்காக Bodywise என்கிற கிளினிக்கும் இயங்கி வருகிறது.
வெவ்வேறு பிரிவுகளின்கீழ் ஒரு மாதத்திற்கு 1,00,000 மேற்பட்ட டெலிமருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் 1,50,000-க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு தயாரிப்புகளும் சேவைகளும் வழங்கப்படுவதாகவும் இந்தத் தளம் தெரிவிக்கிறது.
2020ம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்ட இந்த ஸ்டார்ட் அப்பில் Sequoia Capital, Elevation Capital, Matrix Partners India போன்ற பிரபல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் Sequoia Capital India தலைமையில் 24 மில்லியன் டாலர் சீரிஸ் ஏ நிதி திரட்டப்பட்டிருப்பதாக இந்நிறுவனம் அறிவித்திருந்தது.
மும்பையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 மில்லியன் டாலர் சீட் நிதி திரட்டியது. ரேவந்த் பாட்டே, தியானேஷ் ஷா இருவரும் இணைந்து Mosaic Wellness நிறுவியுள்ளனர்.
Gynoveda
தம்பதிகளான ராச்னா, விஷால் குப்தா இருவரும் சேர்ந்து 2019-ம் ஆண்டு Gynoveda நிறுவியுள்ளனர். இது ஆயுர்வேத முறையில் சிகிச்சையளிக்கும் நிறுவனம். இந்திய பெண்களின் இனப்பெருக்கம் மற்றும் அந்தரங்க சுகாதார பராமரிப்பு சார்ந்த தீர்வுகளை வழங்குகிறது.
இந்தியாவில் பத்தில் ஒரு பெண்ணுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு என பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாக இந்த ஸ்டார்ட் அப் சுட்டிக்காட்டுகிறது.
பிசிஓஎஸ் காரணமாக மலட்டுத்தன்மையும் ஏற்படுகிறது. இந்தியாவில் சுமார் 11 சதவீத பெண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு Gynoveda தொடங்கப்பட்டுள்ளது.
பிசிஓஎஸ், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் வலி, பிறப்புறுப்பில் கசிவு மற்றும் அரிப்பு, மலட்டுத்தன்மை, மாதவிடாய் நிற்றல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்குகிறது. இந்நிறுவனம் 2019-ம் ஆண்டு 1 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
இனப்பெருக்க ஆரோக்கியம் மட்டுமல்லாது பெண்களின் சருமப் பிரச்சனைகளுக்கும் ஃபிட்னெஸ் பிரச்சனைகளுக்கும்கூட இந்த ஸ்டார்ட் அப் தீர்வளிக்கிறது.
Gynoveda பெண்களின் அந்தரங்க நலன் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் Circle of Sisterhood என்கிற தளத்தையும் தொடங்கியுள்ளது. பெண்கள் தங்கள் மாதவிடாய் பற்றியும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றியும் வெளிப்படையாக பேச ஊக்குவிக்கும் இந்தத் தளத்திற்கு 22 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில கட்டுரையாளர்: மீனாட்சி சங்வன் | தமிழில்: ஸ்ரீவித்யா