பதிப்புகளில்

கமலின் ’மய்யம்விசில்’ செயலி எப்படி இருக்கும்?

cyber simman
7th Nov 2017
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

அரசியல் பிரவேசம் குறித்து கமல் ஏமாற்றவில்லை; ஆனால் முழுவதுமாக எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் இல்லை. தெளிவான சமிஞ்சைகளை வெளியிட்டாலும், இன்னும் பல யூகங்களை தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவாரா? எனும் கேள்வியை வைத்துக்கொண்டு ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டிருக்காமல், அரசியலுக்கு வந்துவிட்டேன் எனச்சொல்லி ஆர்வத்தை தூண்டியிருக்கிறார். ஆனால், கட்சியின் பெயர், அதன் கொள்கை, எப்போது ஆரம்பம் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் உடனடி பதில் சொல்லாமல், கட்சி அமைப்புக்கான தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக மட்டும் கூறியிருக்கிறார்.

image


பிறந்த நாளை முன்னிட்டி செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், எதிர்பார்த்தபடியே அரசியல் பிரவசத்தை உறுதிப்படுத்திவிட்டு, கட்சி துவங்கும் முன் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்யப்போவதாக கூறியிருக்கிறார். இது நல்ல உத்தி மட்டும் அல்ல, சரியான செயலும் தான். உலக நாயகன் உள்ளூர் மக்களின் கருத்துக்களை நேரில் கேட்டறியட்டும்!

கமல் அறிவிப்பில் கவனத்தை ஈர்த்து விவாதிக்கும் வகையில் பல அம்சங்கள் இருந்தாலும், கட்சிக்கான பிரத்யேக செயலி அறிவிப்பும், இயக்கத்திற்கான பிரத்யேக ஹேஷ்டேகுகள் வெளியிட்டிருப்பதும் கூடுதலாக கவனத்தை ஈர்க்கின்றன. #theditheerpomvaa, #virtuouscycles, #maiamwhistle ஆகிய மூன்று ஹேஷ்டேகுகளை கமல் அறிவித்திருக்கிறார். இதில் ’மய்யம்விசில் ஏற்கனவே டிவிட்டரில் டிரெண்டிங் ஆகத்துவங்கிவிட்டது. இணையத்தில் ஹேஷ்டேக் என்பது முக்கியமான ஆயுதங்கள் அல்லது கருவிகள். பொருத்தமான ஹேஷ்டேக் மூலம் ஒத்த கருத்துக்களை சமூக ஊடக வெளியில் திரட்டுவதோடு, அர்த்தமுள்ள உரையாடலையும் சாத்தியமாக்கலாம். அந்த வகையில் தனக்கான ஹேஷ்டேகுகளை கமலே தேர்வு செய்து வெளியிட்டுள்ளது சரியான டிஜிட்டல் உத்தி தான். ஆனால் இந்த ஹேஷ்டேகுகள் சார்ந்த அர்த்தமுள்ள விவாதம் நடைபெறுவதை உறுதி செய்வது கமலின் கைகளில் தான் இருக்கிறது. அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்தே இதை செய்யலாம். பொருத்திருந்து பார்க்கலாம் என்ன செய்கிறார் என!

அவரது சுற்றுப்பயணத்திற்கான முன்னேற்பாடாக கூட இந்த பகிர்வுகள் அமையலாம்.

ஹேஷ்டேக் தவிர ’maiamwhistle’ எனும் பெயரிலான செயலியை அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த செயலி பீட்டா வடிவில் இருப்பதாக கூறியவர், ஜனவரியில் தான் இது அறிமுகமாகும் என கூறிவிட்டார். செயலியின் அம்சங்கள் குறித்தும் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. கதை திருட்டு போல செயலி திருட்டும் நடைபெறலாம் என அஞ்சுகிறார் போலும்!

செயலியின் முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால் கமலின் அரசியல் திட்டம் குறித்து அலசியிருக்கலாம். ஆனால் இந்த செயலி ஊழல் குறித்த தகவல்களை பகிர்வதற்கான வழியாக இருக்கும் என்று மட்டுமே கமல் கூறியிருக்கிறார். தன் மீதான தவறுகளையும் சுட்டிக்காட்டலாம் என கூறியிருக்கிறார். மேலதிக விவரங்கள் இல்லை. ஆனால், இந்த செயலி எப்படி இருக்கக் கூடும் என்று அனுமானிப்பதைவிட, இந்த செயலி எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்துப்பார்க்கலாம்.

அதற்கு முன்னர், ஒரு புதிய அரசியல் கட்சிக்கு செயலியால் என்ன பயன்? எனும் கேள்வியை கேட்டுக்கொள்ளலாம். ஸ்மார்ட்போன்கள் மூலம், உலகம் உண்மையிலேயே உள்ளங்கையில் வந்திருக்கும் காலகட்டத்தில் மொபைல் செயலிகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. வர்த்தகம் உள்பட எல்லாத்துறைகளிலும் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசியலிலும் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கும் செயலி ஒரு அருமையான கருவி தான். ஆனால் ஒன்று, கட்சியின் செயலி என்பது வேறுபட்டதாக இருக்க வேண்டும். அதாவது, ஏற்கனவே உள்ள பிரச்சார சங்கதிகளின் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட வடிவமாக செயலி இருப்பதால் அதிக பயன் இல்லை. அவை அலுப்பையே ஏற்படுத்தும். டிஜிட்டல் தலைமுறையை விலகிச்செல்ல செய்துவிடும். மாறாக ஒரு செயலி துடிப்புடன் இருக்க வேண்டும். தொழில்நுட்ப மொழியில் சொல்வதனால் டைனமிக்காக இருக்க வேண்டும்.

image


டிஜிட்டல் யுகத்தில் அரசியல் கட்சிகள் செயலிகளை நாடுவதற்கான முக்கியக் காரணங்கள் என டெக்யுகோ வலைப்பதிவில் வெளியான கட்டுரை ஒன்று கீழ் கண்டவற்றை பட்டியலிடுகிறது...

• விழிப்புணர்வு- பொதுமக்கள் மத்தியில் அரசியல் கட்சியின் நோக்கம் பற்றி தெளிவாக உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

• நிதி – செயலி நிதி திரட்டுவதற்கான மேடையாக அமையலாம்.

• செய்தி- செயலி தகவல் தெரிவிப்பதற்கான சிறந்த வழி.

• தொடர்பு- செய்தி என்பது ஒருவழிப்பாதையாக இல்லாமல், உரையாடலாக இருக்க வேண்டும்.

• மீடியா- செய்திகளை வெளியிடுவதற்கான வாகனம்

• கல்வி- மக்கள் பிரச்சனைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

• சமூக ஊடகம்- சமூக ஊடக பகிர்வுகள்

• சர்வே- மக்கள் கருத்துக்களை சர்வேக்கள் மூலம் அறியலாம்.

விதிவிலக்கான சந்தர்பங்கள் தவிர பொதுவாக அரசியல் கட்சிகள் ஒரு வழிப்பாதை தகவல் தொடர்பையே பயன்படுத்துகின்றன. மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படும் அளவிற்கு அவர்கள் கருத்துக்களை அறிய முயற்சி மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் செயலி மூலம் இதை மாற்றலாம். மக்களுடன் வெளிப்படையாக தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துக்களை அறியலாம். அரசியல் கட்சிகள் பெரும்பாலும் நிர்வாகிகளின் ஜால்ரா கருத்துக்களையே கேட்க நேரிடுகிறது. செயலி மூலம் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை பட்டவர்த்தனமாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு பதிலும் அளிக்கத்துவங்கினால் இரு தரப்பினருக்குமே அது நலன் பயக்கும்.

முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கட்சி கருத்தை மட்டும் திணிக்காமல் முதலில் மக்கள் மன ஓட்டத்தை அறிந்து அதற்கேற்க கட்சி நிலைப்பாட்டை வகுப்பது ஜனநாயகமயமானதாக இருக்கும். முக்கிய பிரச்சனைகளை மக்களையே பரிந்துரைக்க செய்யலாம்.

வெளிப்படையாக தொடர்பு கொள்வது மூலம் மக்களிடம் நம்பகத்தன்மையை அதிகமாக்கி கொள்ளலாம். நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய கருத்துக்களையும் அறியலாம். இது கட்சியையை ஜனநாயகபூர்வமாக வைத்திருக்கும்.

செயலி மூலம் இன்னும் பல விஷயங்களை செய்யலாம். ஆனால் ஒன்று பயணர் இடைமுகம் முக்கியம். அது நட்பானதாக இருக்க வேண்டும். எதையும் வெளிப்படையாக பகிர முடிய வேண்டும். அதைவிட முக்கியமாக கருத்துக்கள் ஒரு வழிப்பாதையாக நின்றுவிடாமல் அவற்றுக்கு முறையாக பதில் அளிக்கப்பட வேண்டும்.

சமூக ஊடக பகிர்வு வசதி, ஃபேஸ்புக் வைவ் வசதி, அரட்டை வசதி, அறிக்கை வெளியீடு உள்ளிட்ட அம்சங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இவை எல்லாவற்றையும் விட, மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துக்களை அறிந்து செயல்படும் வழியில் செயலி இருக்க வேண்டும். நிதி திரட்டுவது பற்றி கமல் பேசியது, எல்லாவற்றையும் பதிவு செய்யும் முறையை சுட்டிக்காட்டுகிறது.

கமல் செயலி பற்றி தனியே பேசாமல் மக்கள் தொடர்புக்கான டிஜிட்டல் அரங்கின் ஒரு அம்சமாக இதை சொல்லியிருப்பது நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. தொழில்நுட்ப போக்குகளை நன்கறிந்த கமல், டிஜிட்டல் உலக சாத்தியங்களை தனது இயக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் மேடையை உருவாக்கினார் என்றால் அது நிச்சயம் ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும்.

செயலி, டிஜிட்டல் அரங்கம் எல்லாம் நவீன உத்திகள் தான். ஆனால் இவை மட்டும் போதாது. களத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை கொண்டே இந்த உத்திகள் பயன் தரும்.

கமல் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதை தக்க வைத்துக்கொள்கிறாரா என்பது தான் முக்கியமான கேள்வி!

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக