பதிப்புகளில்

விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான ஆதரவை அளிக்கும் கோவை நிறுவனம்!

YS TEAM TAMIL
2nd Mar 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

ஸ்போர்ட்டிவ் (SPORTIV) நிறுவனம் கீதா கார்த்திக் மற்றும் கார்த்திக் கிருஷ்ணசாமியால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. விளையாட்டுப் பிரிவில் செயல்படும் கோயமுத்தூரைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் விளையாட்டு வீரர்கள், ஸ்பான்சர்ஸ், க்ளப், அகாடமி போன்றோர் பரஸ்பரம் பயனடையும் விதத்தில் ஒன்றிணைக்கும் ஆன்லைன் தளமாக செயல்படுகிறது. இந்த ஸ்டார்ட் அப் சுயநிதியில் இயங்கி வருகிறது.

நம் நாட்டில் கிரிக்கெட் தொடர்ந்து முன்னணி விளையாட்டாக இருந்து வருகிறது என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளும் குறிப்பிடத்தக்க வகையில் கவனத்தை ஈர்க்கத் துவங்கியுள்ளது. ஆனால் இந்தத் துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது.

“இந்தியாவில் விளையாட்டுத் துறை முக்கியத்துவம் பெற்று வருகிறது. விளையாட்டில் வலுவான நாடாகத் திகழ மேலும் அதிக பணிகளை இத்துறையில் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது,”

என்றார் ஸ்போர்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கீதா கார்த்திக். பல்வேறு தொழில்முறை விளையாட்டு லீக் காரணமாக பார்வையாளர்கள் அதிகரித்து வருவதால் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்ட உலகளவிலான தளம் தற்போது உருவாகியுள்ளது.

விளையாட்டு வீரருக்கு கிடைக்கும் மிகச்சிறந்த பரிசு அவருக்கான அங்கீகாரம்தான். இதுவே அவர் ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட ஊக்கமளிக்கும் என்பதை உணர்ந்தார் கீதா. இந்தப் புரிதல் காரணமாகவே கீதா தனது கணவருடன் விளையாட்டுத் துறையில் ’ஸ்போர்டிவ்’ என்கிற பெயரில் ஸ்டார்ட் அப் துவங்கினார்.

ஸ்போர்டிவ் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கான விரிவான மொபைல் மற்றும் வலைதளம் சார்ந்த தொழில்நுட்பத் தளம். இந்தத் தளம் விளையாட்டில் சாதனை படைக்கும் ஆர்வத்துடன் செயல்பட்டு சாதனையாளர்களாகும் வீரர்களுக்கான மையமாகும்.

தற்போது கோயமுத்தூரின் பிஎஸ்ஜி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்காவில் (PSG-STEP) இன்குபேட் செய்யப்பட்டுள்ள ஸ்போர்டிவ் தளத்தில் 500-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் உள்ளனர். வலைதளம் மற்றும் மொபைல் சார்ந்த இந்த ஸ்போர்டிவ் செயலியை ஆண்ட்ராய்ட் பயனர்கள் ப்ளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஸ்போர்டிவ் எவ்வாறு உதவ விரும்புகிறது?

அடையாளம் : ஸ்போர்டிவ் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டில் சாதிக்கும் ஆர்வம் உள்ளோரின் சுயவிவரங்களை உருவாக்க உதவுகிறது. அவர்கள் பங்கேற்ற நிகழ்வுகள், விளையாடிய நிலைகள், விளையாட்டில் அடைந்த இடங்கள், செயல்திறன் அளவீடுகள் போன்ற விவரங்கள் இதில் அடங்கும். இந்த டிஜிட்டல் அடையாளமானது விளையாட்டு வீரர்கள் இதுவரை கண்டிறாத அனுபவமாகும். அத்துடன் உலகிற்கு தங்களது அடையாளத்தை சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள மிகப்பெரிய வாய்ப்பளிக்கிறது.

செயல்திறன் மதிப்பீடு : ஸ்போர்டிவ் தளத்தினுள் அமைக்கப்பட்ட வழிமுறைகள் விளையாட்டு வீரரின் செயல்திறனை மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்தோரை அளவுகோலாகக் கொண்டு மதிப்பிடுகிறது. இதனால் வீரர்கள் தங்களது நிலையை உணர்ந்து கொள்ளவும் அடுத்த நிலையை எட்டுவதற்கு தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும். இந்த அமைப்பானது பயிற்சியாளர்களின் கருத்துக்களுடன் வீரர்கள் தங்களது பயிற்சிகளை எவ்வாறு மெருகேற்றுக்கொள்ளலாம் என்பது குறித்த ஆழ்ந்த நுண்ணறிவையும் வழங்குகிறது. 

image


விளையாட்டு வீரர்களை ஸ்பான்சர்களுடன் இணைக்கிறது : விளையாட்டு வீரரையும் அவர்களது பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கார்ப்பரேட் ஸ்பான்சர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக ஸ்போர்டிவ் செயல்படுகிறது.

க்ளப்/அகாடமி மற்றும் மெடல் டேஷ்போர்ட் : குழு உறுப்பினர்களின் மெடல் டேஷ்போர்டுடன் ஒரு க்ளப் அல்லது அகாடமி பக்கத்தை நிர்வகிக்கலாம். இது மற்றவர்களுக்கு உந்துதலளிக்கவும் சக வீரர்களைக் கண்டு உந்துதல் பெறவும் உதவும்.

க்ளப் / பயிற்சி மையங்கள் எங்களது போர்டல் வாயிலாக தங்களது வீரர்களுக்கு தொடர்ந்து கருத்துக்களை வழங்க சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவர்கள் தளத்தில் பயிற்சி வகுப்புகளையும் திட்டமிட்டு செயல்முறையை தன்னிச்சையாக இயங்கவைக்கலாம். க்ளப்புடன் இணைந்திருக்கும் விளையாட்டு வீரர்கள் தங்களை சிறப்பாக மேம்படுத்திக்கொள்ள இந்த போர்டல் உதவுகிறது,” என்றார் கீதா.

ஸ்போர்டிவ் பின்னணி

கீதாவும் அவரது கணவர் கார்த்திக் கிருஷ்ணசாமியும் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தனர். நிபுணத்தும் பெறாத பயிற்சி நிலையில் இருக்கும் விளையாட்டு வீரர்களை ஒன்றிணைக்கும் தளத்தை உருவாக்க விரும்பினர்.

நாங்கள் விடுமுறைக்கு இந்தியா வந்திருந்தபோது மாவட்ட அளவிலான விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை எங்களது நகரின் மைதானத்தில் கண்டோம். விளையாட்டு வீரர்கள் கிழிந்த ஷூக்களுடனும், ஷூக்களை பரிமாறிக்கொண்டும், ஷூ அணியாமல் வெறும் காலுடனும் ஓடியதைக் கண்டோம்,” என்று நினைவுகூர்ந்தார் கீதா.

தொழில்முறை விளையாட்டு வீரகளுக்கு வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருப்பதை இருவரும் உணர்ந்தனர். விளையாட்டை விருப்பத் தேர்வாக பார்க்காமல் அதையே வாழ்க்கையின் பேரார்வமான விஷயமாக பார்க்கும் மன உறுதி கொண்ட விளையாட்டு வீரர்கள் பலர் நாட்டில் உள்ளனர்.

இந்தியாவில் விளையாட்டு ஒரு பிரிவாக சிறப்புற்று வரும்போதும் அனைத்தும் நெறிப்படுத்தப்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. சிறப்பான ஆதரவு அமைப்புகளும் கொள்கைகளும் உள்ளபோதும் அவை முறையாக மக்களை சென்றடைவதில்லை. தொழில்முறை விளையாட்டு வீரர்களை துறையின் மற்ற முக்கிய பங்குதாரர்களுடன் இணைக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தபட்ட முயற்சிதான் ஸ்போர்டிவ்.

image


34 வயதான கீதா ஸ்போர்டிவ் துவங்குவதற்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் துறையில் 13 ஆண்டுகள் பணியாற்றினார். பொறியியல் படிப்பை முடித்ததும் எம்பிஏ முடித்தார். தொழில்நுட்ப நிபுணர் மற்றும் இணை நிறுவனரான 36 வயது கார்த்திக் கிருஷ்ணசாமி தகவல் தொழில்நுட்பத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவமிக்கவர். மென்பொருள் பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்.

விளையாட்டுப் பிரிவிற்கான சந்தை உலகளவில் 750 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுவதாக கேபிஎம்ஜி தெரிவிக்கிறது. மேலும் இந்தியாவில் 29.3 சதவீத மக்கள்தொகை 0-14 வயது வரையுள்ள பிரிவில் அடங்குவர். 2005-ம் ஆண்டு 4 சதவீதமாக இருந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள்தொகை 2025-ம் ஆண்டு 41 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்படுகிறது. வருடாந்திர கல்வி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான சராசரி வீட்டுச் செலவு 2005-ம் ஆண்டு 5 சதவீதமாக இருந்து 2025-ம் ஆண்டில் 9 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்படுகிறது.

கடந்த இரண்டாண்டுகளில் பெங்களூருவைச் சேர்ந்த ப்ளேயோ Playo, Sportobuddy, டெல்லியைச் சேர்ந்த GoSporto உள்ளிட்ட பல்வேறு ஸ்டார்ட் அப்கள் இந்திய விளையாட்டுச் சந்தையில் புதுமையான திட்டங்களுடன் செயல்படத் துவங்கியுள்ளது.

ஸ்போர்டிவ் இதுவரை இல்லாத முதல் முயற்சியாகும். இந்தத் தளம் விளையாட்டில் சாதிக்க ஆர்வம் கொண்டவர்கள் சாதனை படைக்க முழுமையான ஆதரவளிக்கிறது.

”விளையாட்டு வீரர்கள் டிஜிட்டல் வாயிலாக சுயவிவரங்களை உருவாக்கி தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும் தங்களது வளர்ச்சியையும் சாதனைகளையும் தொடர்ந்து கண்காணிக்கவும் எங்களது தளம் உதவுகிறது. வீரர்களின் தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் சரியான ஸ்பான்சரை கண்டறியவும் நாங்கள் உதவுகிறோம்,” என்றார் கீதா.

எதிர்கால திட்டம்

தற்போது ஆறு உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் செயல்படும் ஸ்போர்டிவ் சுயநிதியில் இயங்கி வருகிறது. இந்த ஸ்டார்ட் அப் நிதி உயர்த்த திட்டமிடவில்லை.

தற்சமயம் தடகளம் (athletics), கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, மோட்டார்ஸ்போர்ட் போன்ற விளையாட்டுகள் சார்ந்து ஸ்போர்டிவ் அறிமுகமாகியுள்ளது. அடுத்த கட்டமாக இந்தத் தளம் நீச்சல், சைக்கிளிங், கைப்பந்து, டென்னிஸ், பேட்மிட்டன், ஸ்குவாஷ், டேபிள் டென்னில், கிரிக்கெட் போன்ற பிற விளையாட்டுகளையும் இணைக்க திட்டமிட்டுள்ளது.

ஸ்போர்டிவ் தடகள விளையாட்டுகளுக்கான ஆழ்ந்த பகுப்பாய்வு குறித்து ஆராய்ந்து வருகிறது. மற்ற விளையாட்டுகளையும் இணைத்துகொள்ள திட்டமிட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களின் முக்கிய செயல்திறன்களை சுட்டிக்காட்டும் (KPI) அளவீடுகளைக் கொண்டு செயல்திறன் மேலாண்மை அமைப்பை உருவாக்க IoT மற்றும் அணியக்கூடிய சாதனங்களின் வலிமையை பயன்படுத்திக்கொள்ள ஸ்போர்டிவ் திட்டமிட்டுவருகிறது. இது சுய பகுப்பாய்விற்கும் செயல்திறன் மேம்பாட்டிற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்டார்ட் அப் பல்வேறு நிலைகளைக் கொண்ட வருவாய் மாதிரியைக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும், சக வீரர்களுடன் இணையவும், நிகழ்வுகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் இலவச பதிப்பை வழங்குகிறது. 

அதன் ப்ரீமியம் பதிப்பு வாயிலாகவே முக்கிய வருவாய் ஈட்டப்படுகிறது. இதில் செயல்திறன் மேலாண்மையுடன் சுயவிவரங்கள் விரிவாக இருக்க உதவுகிறது. அத்துடன் விவரங்கள் எண்ணற்ற ஸ்பான்சர்களின் பார்வையில் படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறைக்கு தொடர்பான இணையதளங்களுடன் இணைந்து மார்கெட்டிங் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : லிப்சா மன்னன் | தமிழில் : ஸ்ரீ வித்யா

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags