இயற்கை வளங்களை பாதுகாக்கும் அசாமின் ஆரண்யக் அமைப்பு

41 CLAPS
0

சமீபத்தில் அசாம் பகுதி காடுகளில் சிறு கேமராக்கள் மூலம் காண்டாமிருக தந்த கடத்தல்காரர்கள் பிடிபட்ட செய்தி பெருமளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். சட்டவிரோதமாக காண்டாமிருகங்களை வேட்டையாடிய 2 கடத்தல்காரர்களை, கேமரா வலை மூலம் அசாம் மாநில மாங்கல்தாய் என்ற இடத்திலிருக்கும் ராஜீவ் காந்தி ஓரங் தேசிய பூங்காவில் பிடித்துள்ளுனர். ஹரேன் தைமரி மற்றும் தார்மேஷ் பசுமத்தரி என்ற இவர்கள் இருவருக்கும் கடுங்காவல் தண்டனை மட்டுமல்லாமல், 25000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல மிருகங்கள் வேட்டையாடப்படுவது இங்கு ஒரு வாடிக்கையாக இருந்தமையால், தடுக்க வழியில்லாத சூழலும் உருவானது. இதற்கான தீர்வு ஆரண்யக் மூலம் உருவாகியுள்ளது.


1989ம் ஆண்டில் சில இளைஞர்களின் முயற்சியால் இயற்கை குழுவாக 'ஆரண்யக்' என்ற கிளப் ஆரம்பிக்கப்பட்டது. இயற்கையின் வளங்களை கச்சிதமாக காக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுவிற்கு அமைந்த முதல் வேலை, வெள்ளை இறகுள்ள வாத்துகளை அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இவர்களை அடைந்தது. காடுகளில் இருக்கும் புல்களை சேகரிப்பதை போல கடத்தல்காரர்கள் இவ்வகையான அரிதான பறவை வகைகளை வேட்டையாடுவதுண்டு. தங்களின் குறிக்கோளை சரியாக செய்துமுடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தின் அடிப்படையில் ஆரண்யக் குழு அரசாங்கத்திற்கு வனங்களை பாதுகாக்க கோரி ஒரு மனுவையும் அளித்தது. அந்த முதல் முயற்சி வெற்றியில் முடியவே, பல நற்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல முயற்சிகள், திட்டங்களுக்கு பிறகு வெறும் ஆர்வாலர்களின் கிளப்பாக இருந்த ஆரண்யக், மெதுவாக ஒரு நம்பகமான, சர்வதேச அமைப்பாக மாறியது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் (IUCN) ஒரு அங்கமாக தற்போது ஆரண்யக் இருப்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை வளங்களை பாதுகாப்பதில் சர்வதேச அளவில் இது பெரும்பான்மையான குழுவும் கூட.


இயற்கை வளத்தை காக்கும் அடிகள்

வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 28 இடங்களில் இது போன்ற வன பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுள்ளது. தகவல்களை சேகரிப்பது மட்டுமல்லாமல், அரசாங்கத்துடன் இணைந்து சட்டவிரோதமாக கையகப்படுத்திய பொருட்களையும் மீட்கும் முயற்சியில் ஆரண்யக் குழு ஈடுபடுகின்றது. கிழக்கு இமய மலைகளில் இருக்கும் வன சீரழிவு சம்பந்தமான குற்றங்களையும் இந்த குழு கண்காணித்துவருகின்றது. தவிர, GIS மற்றும் தொலை உணர்வு கருவிகளை கொண்டு, ஈரமான நிலங்கள் மற்றும் வாழ்விடங்கள் பற்றின ஆய்வுகளும் பயிற்சிகளும் இந்த குழுவின் மூலம் அளிக்கப்படுகின்றது. இங்கு மட்டுமல்லாமல், நேபால், பூட்டான் போன்ற நாடுகளிலிருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் இத்தகைய பயிற்சிகள் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஓரங் தேசிய பூங்காவில் பிடிபட்ட கடத்தல்காரர்கள் செய்தி பெரும் மகிழ்ச்சியை எற்படுத்தியதிற்கு ஆரண்யக் குழுவின் பங்கும் உண்டு. ஆரம்பத்திலிருந்தே பூங்காவின் சில பகுதிகளில் ரகசிய கேமராக்களை பொருத்தி, அதன் மூலம் ஆள் நடமாட்டங்களை துல்லியமாக கண்காணித்து வந்தனர். கிட்டத்தட்ட 60 கேமராக்களின் மூலம் 2011ம் ஆண்டின் முதல் ஈடுபட்ட முயற்சியின் பேரில் முன்று கடத்தல்காரர்கள் கச்சிதமாக பிடிபட்டனர். துப்பாக்கியுடன் அவர்கள் தொடர்ந்து வனத்திற்கு வந்ததை கண்டறிந்தபின் அவர்களின் புகைப்படங்கள் இரகசிய கேமராக்களின் மூலம் கண்டறியப்பட்டது.

உடனே, வனவிலங்கு துறை அதிகாரியான சுஷில் டைலா, புடைப்படங்களை அறிவிப்பு பலகைகளாக மாற்றி கடத்தல்காரர்களை பிடித்து தடுமாறு கிராமத்து வாசிகளுக்கு அறிவித்தார். இதற்கான சன்மானம் ரூ 25,000 என்றும் அந்த அறிவிப்பில் குறிபிடபட்டிருந்தது. இதன் மூலம், கடத்தல்காரர்கள் தங்களுடைய ஆயுதங்களுடன் சரணும் அடைந்தனர்.

கடத்தல்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அவர்கள் பிடிபட்ட அளவு மிகவும் குறைவே. இந்த நிலையில் ஓரங் தேசிய பூங்காவில் நடைபெற்ற சம்பவத்தால், ஆரண்யக் குழுவும் ஆசாம் மாநிலமும் பெரிய நிலையை அடைந்தது என்றே சொல்லலாம். இரகசிய கேமராக்கள் மூலம் எடுத்த புகைப்படங்கள், சரியான ஆதாரமாக இருந்தமையால், கடத்தல்காரர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. "இது போன்று எடுக்கப்படும் புகைப்படங்கள் முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கப்படும். அதன் பின், அவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது." என்று பகிர்ந்துக்கொள்கிறார் புலி பாதுகாப்பு மற்றும் ஆய்வின் திட்டத்தை மேற்கொள்ளும் டாக்டர். ஃபிரோஸ் அஹமத்.

தொழில்நுட்பத்தின் பங்கு

இந்த குறிப்பிட்ட கேமராக்கள் நியூ யார்க் நகரின் பான்தேரா (Panthera) மற்றும் இங்கிலாந்தின், டேவிட் ஷெபர்ட் வனத்துறை ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளதாக அஹமத் விளக்குகிறார். "இந்த கேமரா வலைகளின் மூலம் விலங்குகள் மற்றும் மனிதர்களுடைய நடமாட்டத்தை கண்டறிந்து புகைப்படங்களாக எடுத்துக்கொள்ளும். விலங்குகள் நடமாடும் சாலை, குட்டை போன்ற இடத்தில் இருக்கும் மரங்கள் அல்லது கம்பங்களில் இதை கட்டிவைத்துவிடுவதுண்டு. இது போன்ற கேமரா வலைகள் பான்தேரா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, புலி மற்றும் அதன் குடும்பத்தை சார்ந்த விலங்குகள் சம்பந்தமான ஆராய்ச்சிகளை செய்யும் அமைப்புகளுக்கு அளிக்கப்படுகின்றது." என்று விளக்குகிறார் அஹமத்.

2012ம் ஆண்டு முதல் ஆரண்யக் மற்றும் பான்தேரா நிறுவனம் இணைந்து புலி பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் ஆய்வுகளுக்காக வடகிழக்கு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மனாஸ் தேசிய பூங்கா, கஸிரங்கா தேசிய பூங்கா, நம்தபா தேசிய பூங்கா மற்றும் கர்பி அங்க்லாங் மலை பகுதிகளிலிருக்கும் விலங்குகளை பாதுகாக்கும் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (அதாவது 2012 முதல் 2019 வரை) மனாஸ் தேசிய பூங்காவில் மட்டுமே கவனம் செலுத்தியும் வருவதாக அஹமத் தெரிவிக்கிறார். பாந்த்ரா மூலம் ஒரு புது திட்டமும் இங்கு அமல்படுத்த இருப்பதாகவும் கூறுகிறார். வேட்டைக்காரர்களுடைய நடமாட்டத்தை கேமராக்களின் மூலம் புகைப்படங்களாக எடுத்து, கணினி அல்லது ஸ்மார்ட்ஃ போன்களுக்கு உடனே அனுப்பப்படும். இது ரோந்து பணிகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு உடன் தகவல் பரிமாற்றமும், சரியான நடவடிக்கைகளை உடனே எடுக்கவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற கேமராக்கள் மட்டுமல்லாமல், ஆரண்யக் குழு அசாம் மாநில வனத்துறைக்கு சிறப்பு மோப்ப நாய் குழு மூலம் வனத்துறை பாதுகாப்பு பணிகளுக்கு பெருமளவில் உதவுகிறது. 'K9' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்பு மோப்ப நாய் குழு கஸிரங்கா தேசிய பூங்காவில் இருக்கும் காண்டாமிருகங்களை வேட்டையாடுபவர்களை பிடிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றது. பெல்ஜியம் நாட்டின் வகையான மெலினாய்ஸ் என்ற நாய்கள் இரண்டு இதற்காக வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கஸிரங்கா பகுதியில் கிட்டத்தட்ட 10 வேட்டைக்காரர்கள் பிடிபட்டுள்ளனர் என்பதை அஹமத் தெரிவிக்கின்றனர்.

ஆரண்யக் குழுவின் அடுத்தகட்ட முயற்சிகள்

பூங்காவிற்கு அக்கம் பக்கத்திலிருக்கும் குடும்பங்களை கொண்டு பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுத்த திட்டங்கள் இருப்பதாக அஹமத் குறிப்பிடுகிறார். தங்களுடைய தினசரி தேவைகளுக்கு காடுகளை உபயோகிக்கும் மக்கள் அதற்கேற்ப வேறு இடத்தை தேர்ந்தெடுத்து கொள்ள இந்த திட்டம் உதவியாக இருக்கும் கூட. வனங்களை பாதுகாப்பத்தில் இருக்கும் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்குவது மட்டுமல்லாமல், அவர்களுடைய ஆதரவையும் பெறும் நோக்கமும் இதில் அடங்கும். ஆரண்யக் குழுவின் கங்கை பகுதியில் இருக்கும் முக்கிய வாழ்வாதரங்களை திரும்ப மீட்கும் திட்டத்திற்கு அதிகப்படியான இணையத்தள ஓட்டுகளும் சேர்ந்துள்ளது. (Restoration of Important Habitats of Gangetic Dolphins). இந்த இணையத்தள ஆதரவு ஒட்டு முயற்சி சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் ஐரோப்பிய வெளிப்புற பாதுகாப்பு சங்கம் (EOCA) என்ற அமைப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், 30,000 யூரோ மதிப்பில் இந்த திட்டத்திற்கு உதவியும் EOCA மூலம் பெறப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நிறைவடைந்த பின்பும் வடகிழக்கு மாநிலங்களில் வனங்களின் பாதுகாப்பு, விலங்குகளின் வாழ்வாதரங்களை சிறந்த வகையில் அமைப்பது, அவற்றிற்கு பாதுகாப்பு அளிப்பது என்ற தன்னுடைய குறிக்கோளை மேலும் செம்மைப்படுத்தி அதற்கேற்ப முயற்சிகளை தொடர்ந்து ஆரண்யக் குழு எடுத்துவருகின்றது. ஆய்வுகள், சுற்றுப்புற சூழல் பற்றி மக்களுக்கு சரியான விழிப்புணர்வு, சட்டத்திருத்தங்கள், அனைத்தையும் கொண்டு ஒரு புதுவித சுற்றுப்புற பாதுகாப்பு அமைக்க வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வை இந்த குழுவிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. "எல்லோருக்கும் பாதுகாப்பு என்பதே எங்களுடைய நோக்கம்." என்கிறார் டாக்டர். அஹமத்.

Latest

Updates from around the world